தந்தை, மகன் மற்றும் பயணம்


இரண்டும் சமீபத்தில் பார்த்த படங்கள், அடுத்தடுத்து. அதெப்படி இந்த இரு படங்களும் இவ்வாறு பார்க்க நேர்ந்ததென்று தெரியவில்லை. அந்த அளவுக்கு இரண்டுக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன.இரண்டிலும் ஒரு தந்தை, ஒரு மகன், ஒரு பயணம். இரண்டுமே மனதைப் பாதித்த காட்சிகள், முடிவுகள். ஆனால் ஒவ்வொரு கதைக்களமும் முழுதும் வெவ்வேறு, நோக்கம் ஒன்று.

முதலில் தி ரோடு. கற்பனைக் களம். உலகம் அழியும் தருவாயில் என்னவெல்லாம் நடக்குமென்கிற கற்பனை. திடீர் திடீரென்று காட்டுத்தீ,  நிலநடுக்கம், மழை என மிரட்டும் உலகம். தாவரங்களெல்லாம் அழிந்த நிலை. உணவு என்பதே கிடையாது. மனித இனத்தையே பார்க்க முடியாத நிலை. அப்படியே மனிதர் யாரேனும் எதிர்பட்டால்? ஒன்று அவரது வயிற்றுப் பசிக்கு உணவாகும் நிலை, அல்லது உடல் பசிக்கு, இங்கு ஆண் பெண் என்ற பேதம் கிடையாது. இந்த நிலையில் தனது மகனுடன் பயணப்படும் ஒரு தந்தை. மகனைக் கொடிய மனிதர்களிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் செல்லும் காட்சிகள் தந்தையுணர்வை கூட்டிக் காட்டுகின்றன. மனைவியின் நினைவுகள் வழியே அழிவின் பயங்கரத்தை, பயங்கரமில்லாமல் உணர முடிகிறது.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஆயிரத்தில் ஒருவன் குறித்த ஒரு கேள்விதான் ஞாபகத்திற்கு வருகிறது. ”அப்படி வாழ்ந்த சோழர்கள் இப்படி மாமிசத்திற்காகவா அடித்துக்கொள்வார்கள்?”- இந்தப் படம் பார்க்கும்போது அது போன்ற கேள்விகள் எழவில்லை. உணவில்லாத யுகத்தில் இப்படித்தான் எதிர்படும் மனிதர்களும் இரையாவார்கள் என்பது விளக்காமலேயே விளங்குகிறது. ஒருவேளை ஆ.ஒ. இயக்குனர் பார்வையாளனுக்குப் புரியவைப்பதில் தோற்றுப்போயிருக்கலாம்.

அடுத்து, லாஸ்ட் ரைட். இதுவும் அதேபோல, ஒரு தந்தை தனது மகனுடன் ஒரு பயணம். காட்சிகள் அவனைப் பற்றியும் அவனது குணங்கள் பற்றியும் விளக்காமலேயே விளக்குகின்றன. சரியான போக்கிரி, காட்டுமிராண்டி, கோபம் வந்தால் தனது மகனை ரத்தம் வருமளவு கூட அடிப்பவன். பின்பு பாசத்தால் வருத்தப்படுபவன். கையில் காசில்லாமல் இப்படி ஏன் அலையவேண்டுமென்ற கேள்விக்கு பதில் தெரியும்போது எனக்குள்ளே ஒரு பதபதைப்பு. அந்தக் காரணம் புரியாமல் மகன் பேசுவது தந்தை மீது பரிதாபம். முக்கியமாக இந்தப் படத்தில் ஈர்த்த இன்னொரு விசயம், அந்த பின்னணி சப்தம். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தெரிந்த அது, படத்துடன் செல்லச் செல்ல மனதை ஏதோ செய்தது ஏனென்று தெரியவில்லை. மெதுவாக நகரும் காட்சிகளாக இருந்தாலும் ஏனோ தொடர்ந்து பார்க்கச் செய்தது.

இரு படங்களுமே தந்தையுணர்வை அள்ளிக் கொட்டி மனதைக் கரையவைக்கும் படங்கள். ஒன்று பயங்கரமாக, கோடாரி கொண்டு இதயத்தைக் கிழித்தது, இன்னொறு மெதுவாகக் கத்தியை நெஞ்சத்தில் இறக்கியது.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

ஆறு கேள்விகள் ஏழு பதில்கள்

ஒருவனுக்கு ஒருத்தி
என்றான்
ஏனென்றேன்
ஒழுக்கமென்றான்
ஒருத்தி இறந்தால்
என்றேன்
இன்னொருத்தியென்றான்
ஒருவன் இறந்தால்
என்றேன்
ஒருத்திதானென்றான்
சமனில்லை என்றேன்
ஒழுக்கமென்றான்.

ஒருவனுக்கு ஒருத்தி
என்றாள்
ஏனென்றேன்
விருப்பமென்றாள்
ஒருத்தி வெறுத்தால்
என்றேன்
இன்னொருத்தனென்றாள்
விரும்பினாலும் கூட
சேர்த்துக்கொண்டாள்
ஒருத்தியின் அவனுக்கு
என்றேன்
அவன் விருப்பம்
என்றால்
சமநிலையோ?

சமநி(ல்)லை.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!