தென்மேற்குப் பருவக்காற்று

நேற்று தென்மேற்குப் பருவக்காற்று பார்க்கச் சென்றிருந்தேன். பதிவர் வண்ணத்துப்பூச்சி சூர்யா அழைத்தார். பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்புக் காட்சி என்றும், பதிவர்களை அழைத்திருப்பதாகவும் சொன்னார். Four Frames எனது அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்ததால் வசதியாகப் போயிற்று. கிளம்பும் வேளையில் தூறல் ஆரம்பித்தது. இருந்தாலும் படம் பார்க்கும் ஆர்வத்திலும், பதிவர்களை சந்திக்கும் ஆர்வத்திலும் கிளம்பிவிட்டேன். பலர் தூறல் காரணமாக வரவில்லை. இருப்பினும், பிரபல பதிவர்கள் கேபிள் சங்கர் மற்றும் ஜாக்கிசேகர், சூர்யா, காவேரி கணேஷ், சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட சுரேகா ஆகியோர் வந்திருந்தனர். மற்ற அனைவரும் பத்திரிக்கையாளர்கள் என்று நினைக்கிறேன், எனக்கு யாரையும் தெரியவில்லை. சூர்யாதான் ஒவ்வொருவர் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார்.
டைட்டில் சாங் அருமை. பாடல் மட்டுமல்ல, காட்சிகளும்தான். “கள்ளிக்காட்டில் பொறந்த தாயே...”, கிராமத்து தாய்மார்களின் ஸ்டில் படங்களுடன் வந்தது அருமையாகவும் வித்தியசமாகவும் இருந்தது. அது முதலே திரை முழுவதும் தேனி மாவட்டத்தில் செந்நிறம். அந்த நிறமே என்னை கிராமத்தில் இருப்பது போன்று உணர்வைத் தந்தது. பல தாய்மார்களின் படங்களுடன் கடைசியில் படத்தின் முதல் நாயகி சரண்யாவின் படத்துடன் பாடல் முடிகிறது. பாடலும் படங்களுமே இது ஒரு அம்மாவைப் பற்றிய படம் என்பதைச் சொல்லியது.

படம் ஆரம்பித்த முதல் அரைமணி நேரம் கலங்கிப் போனேன். மிக மிக நாடகத்தனமான காட்சிகள், ஒன்றுக்கொன்று ஒட்டாத காட்சிகள். தெரியாத்தனமா வந்துட்டோமோ என்று எனக்கு பயம். இருந்தாலும் அந்த பயம் போனதே தெரியாமல் காட்சிகளைக் கொண்டுசென்றிருப்பது ஆச்சர்யம்.

இளம் வயதிலேயே விதவையான தாய், தனது மகனைப் பாடுபட்டு வளர்க்கிறாள். மகன் மீது அவ்வளவு பாசம். மகன் வழக்கம்போல வெட்டியாக ஊர் சுற்றும் பிள்ளையாக இல்லாமல், ஆடு மேய்த்துக்கொண்டும் சிறிது சேட்டை செய்துகொண்டும் இருக்கிறான். பூச்சில்லாமல் செங்கல் சுவருடன் நிற்கும் வீடு. அதை மகன் கல்யாணத்திற்காக வாங்கும் பணத்தில் பூசி விடலாம் என்ற எண்ணம் அம்மாவுக்கு. தனது தூரத்து உறவில் அம்மா இல்லாத பெண்ணுக்குப் பேசி வைக்கிறாள்.

ஆடி திருடும் கும்பல் ஒன்று இரவு நேரங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு பல்வேறு ஆடுகளைத் திருடிக்கொண்டிருக்கிறது. படம் ஆரம்பிப்பதே ஆடு திருவதில்தான். வெயில் பட ஆரம்பம்போல ஒரு உணர்வு. அந்த கும்பல் ஒரு முறை நமது கதாநாயகன் பாதுகாக்கும் ஆட்டு மந்தையில் திருடுகிறது. இருவர் குழுவுக்குமான சண்டையில் கதாநாயகன் கும்பலில் ஒருவரைப் பிடித்துவிட, மறைப்பை விலக்கி முகத்தைப் பார்த்தால் பெண், கதாநாயகி. அதிர்ச்சியில் உறைந்துபோன நாயகன் அவளை விட்டுவிடுகிறான். இந்த நேரத்தில்தான் வழக்கம்போல காதல் வந்து நுழைகிறது.

இவளை அவன் தேட, அதே சமயம் அவளுடைய அடிதடி அண்ணன்கள் இவனைக் குறிவைக்க, பின்பு அண்ணன்கள் சிறைக்குச் செல்ல, பின்பு இவர்களுக்குள் காதல் வளர, பேசி வைத்த கல்யாணம் நிற்க, அன்னை மகனின் காதலை எதிர்க்க, வெளிவரும் அண்ணன்மார்களும் நாயகன்மேல் கொலைவெறியுடன் எதிர்க்க, திருட்டுக் கல்யாணத்திற்கு நாயகன் ஏற்பாடு செய்ய, கடைசியில் என்ன ஆனது என்பதே கதை.

படத்தின் சிறப்பம்சங்கள் பல. அதிலும் கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் தேர்வும் அவர்களின் நடிப்பும். முதலில் அம்மா சரண்யா. சில காட்சிகள் மூலம் அருமையாக அவரது குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வெகுளி, மகன் மீதுள்ள பாசம், உழைப்பு, கோபம் என ஒவ்வொன்றும் நமக்குப் புரியவைக்கப்பட்டிருக்கிறது.

கதாநாயன், கதாநாயகி கதாப்பாத்திரங்களும் அழகாகப் பொருந்திப்போகின்றன. கதாநாயகனின் நண்பன் கதாப்பாத்திரம் அருமையோ அருமை, நகைச்சுவைக்காக. பல இடங்களில் அவனின் வசனங்கள் சிரிக்கவும் கைதட்டவும் வைக்கின்றன. கதாநாயகியின் அண்ணனும் டெர்ரராக நமது மனதில் இடம் பிடிக்கிறார். சில காட்சிகள் வந்தாலும் அந்த பெண் போலீஸ் அதிகாரி கூட மனதில் ஒட்டிக்கொள்கிறார். கதாநாயகனுக்காக முதலில் பேசி முடிக்கப்படும் பெண், என் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டாள், அவளது பேச்சு அருமை அருமை... இன்னும் மனதில் நிற்கிறது. அவளிடைய அப்பாவும் மனதில் நிற்கிறார். கதாப்பாத்திரங்களைக் காட்சிப்படுத்துவதில் சிறந்த படமாக இது எனக்குப் பிடித்திருக்கிறது.

ஒளிப்பதிவு அருமை, முன்பே சொன்னதுபோல கரிசல் நிறம் திரை முழுதும் அழகாக விரிக்கப்பட்டிருக்கிறது. சிலப்பல பிற நாட்டுப் படங்களைத் திருடிப் படம் எடுக்கும் சூழலில் இப்படி சொந்த சரக்கை அளித்திருப்பது மகிழ்ச்சி. இசை அருமை, கள்ளிக்காட்டில் பொறந்த தாயே மற்றும் ஏடி கள்ளச்சி மனதில் நிற்கிறது. இன்னொரு பாடல் அருமையாக இருந்தாலும், ரிதம் படத்தின் தனியே தன்னந்தனியே பாடலின் தழுவலாக இருப்பதால் பிடிக்காமல் போயிற்று.

கற்பனையாக ஆடிப்பாடும் பாடல் காட்சிகள் ஒன்றும் படத்தில் கிடையாது. மற்றும் தேவையில்லாத குத்துப்பாடல்களும் கிடையாது. இயக்குனருக்கு இதற்காக மிகப்பெரிய நன்றி. மேலும் இப்போது வரும் பல கிராமத்துப் படங்கள் பருத்திவீரனையோ அல்லது சுப்ரமணியபுரத்தையோ ஞாபகப்படுத்துவதாகவே இருக்கின்றன. ஆனால் இந்தப் படம் அப்படியில்லாமல் இருப்பது இயக்குனர் மேல் மேலும் நம்பிக்கையைத் தந்துள்ளது. இனி வரும் கிராமத்துப் படங்களில் சில இந்தப் படத்தை ஞாபகப்’படுத்தலாம்’.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் படத்தின் பலங்களாகக் கருதலாம். படத்தின் பெரும் குறைகளாக நான் கருதுவது, முதலில் வரும் அந்த நாடகத்தனமான காட்சிகள். பெரும் அயர்ச்சியையும் பயத்தையும் தருகின்றன. அடுத்து சில கதாப்பாத்திரங்கள் பேசும் வசனங்கள். வாயசைப்பு ஒரு விதமாகவும் வசனங்கள் வேறு விதமாகவும் இருக்கின்றன, அதுவும் க்ளோசப் காட்சிகளில். ஏதோ டப்பிங் படம் பார்க்கும் உணர்வைப் பல இடங்களில் தருகின்றன. அடுத்து சில லாஜிக் ஓட்டைகள். இப்படி இந்தப் படத்தில் ப்ளஸ் மற்றும் மைனஸ்கள் சரி சமமாக இருக்கின்றன. ஆனால் அருமையான காட்சிகளுக்காகவும், கதாப்பாத்திர வடிவமைப்புகளுக்காகவும், சினிமாத்தனமில்லாத சிறந்த முடிவுக்காகவும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

(2) வீட்டு புரோக்கர்

வீடு தேடுதல் (1) ன் தொடர்ச்சி...

அடுத்து புரோக்கர்கள். இவர்களை நான் விரும்புவதே இல்லை. நான் பார்த்த பல புரோக்கர்களில் இருவரைத்தான் மனிதர்களாகப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இவர்கள் வாயைத் திறந்தால் வார்த்தைக்குப் பதிலாக பொய்தான் வந்து விழும். அதிலும் ஒரு மாத வாடகையை கமிசனாகக் கேட்பார்கள். அதற்குத் தகுந்த உழைப்பு இருக்கிறதா என்றால், இல்லை. மனதிற்குப் பிடித்தமான சரியான வீட்டைக் காண்பித்து, நல்ல விலைக்கு முடித்துக் கொடுத்தால் இவர்கள் கேட்கும் விலை நியாயமானதுதான். ஆனால் இவர்கள் செய்வதோ தலைகீழ். நமது தேவைக்கேற்ற வீட்டைக் காட்டவும் மாட்டார்கள், விலையையும் நன்றாக ஏற்றிவிடுவார்கள். பின் எதற்குத்தான் இந்த பெருந்தொகைக் கமிசனோ தெரியவில்லை.
இவர்களிடம் முதல் பிரச்சனை, நமது தேவைக்கேற்ற வீட்டைக் காட்டமாட்டார்கள். பார்க்கிங், தண்ணி வசதி, எத்தனை அறைகள், அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என அரை மணி நேரம் மூச்சு விடாமல் சொல்லியிருப்போம். இருந்தாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அவர்கள் கையில் இருக்கும் அனைத்து வீட்டிற்கும் ஊர்வலம் கூட்டிச் செல்வார்கள். நாமோ ஆபீஸில் பெர்மிசனோ, லீவோ போட்டு வந்திருப்போம். தேவையில்லாமல் நமது நேரத்தை வீணடிப்பார்கள். இரண்டாவது வீட்டுக்குப் போன பின் நமக்கே கண்ணைக் கட்டும். ”நான் சொன்ன மாதிரி வீடு இருக்கா இல்லையா?” என்று கொஞ்சம் முகம் கடுப்பாகும் நமக்கு. “அடுத்த வீடு கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் சார்”, என்று மனசாட்சியே இல்லாமல், திரும்பவும் மொக்கையாக ஒரு வீட்டைக் காட்டுவார் பாருங்கள், அப்படியே அந்த வீட்டு நிலையில் முட்டிக்கலாம் போலத் தோனும்.

சிலர் இதற்குக் கூட கமிசன் கேட்பார்கள். இவ்வளவுக்கும் நமது வண்டியில்தான் வந்திருப்பார். முதலில், சொந்தமாக ஒரு வண்டியில்லாமல் நமது வண்டியில் தொற்றிக்கொள்ளும் புரோக்கரை நம்பவே வேண்டாம். பின், முதலிலேயே கண்டிப்பாக சொல்லிவிடனும், லீவு போட்டுட்டு வரேன், நான் சொன்ன மாதிரி வீடு காட்டலைனா நீதான் என் சம்பளத்தைத் தரனும் என்று. அவ்வாறு தர மாட்டார் என்றாலும் தேவையில்லாத அலைச்சலைத் தவிர்க்கலாம். வீடு முடிந்தால்தான் கமிசன் என்பதையும் முதலிலேயே பேசிவிடவேண்டும். இதெல்லாம் சரிவராது சார், வேற ஆளப் பாத்துக்க சார் என்றெல்லாம் படம் காட்டுவார்கள். யோசிக்கவேண்டாம், தாராளமாக வேறு ஆளைப் பார்க்கலாம். அந்த ஏரியாவில் யாரைப் பார்த்தாலும் இவரும் கூட வருவார்.

மேலும் கமிசன் தொகை ஒரு மாத வாடகை என வழக்கமாகச் சொல்வார்கள். அதை நாம் குறைத்துப் பேசலாம். சிலர் மட்டுமே அதற்கு ஒத்துப்போவார்கள். சிலர் குழுவாக அமைந்து வீடுகளைப் பார்த்துவைத்துக்கொண்டு நமக்குக் காட்டுவார்கள். சில புரோக்கர்கள் இப்படிக் குழுவாகச் செயல்படாமல் தனித்து இருப்பர். இந்த மாதிரி இருப்பவர்கள் விலையைக் குறைத்துக்கொள்வார்கள். இவர்கள் நேர்மையாகவும்ம், சரியான வீட்டைக் காட்டும் வாய்ப்பும் அதிகம்.
பெரும்பாலான புரோக்கர்கள் பகுதி நேரமாக இதைச் செய்வார்கள். சிலர் முழு நேரமாகச் செய்தாலும் அலுவலகம் என்றெல்லாம் எதுவும் இருக்காது. ஆனால், சில ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர்கள் அவர்களுக்கென ஒரு அலுவலகம் வைத்திருப்பார்கள். இடம், வீடு வாங்குவது மற்றும் விற்பது முதன்மையாக இருந்தாலும் வாடகை வீடு பிடித்துக் கொடுப்பதும் சிறிய அளவில் செய்வார்கள். நான் பார்த்தவரையில் இவர்களை நம்பலாம். தேவைக்கேற்ற வீட்டைக் காட்டுவார்கள், கமிசனும் பேசிக்கொள்ளலாம். ஆனால், இவர்கள் யாரையாவது கைகாட்டி அனுப்பினால் நம்ப இயலாது.

பெரும்பாலும் புரோக்கர்களைத் தவிர்த்துவிடவேண்டும். முந்தைய பதிவில் சொன்ன வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடித்தாலே வீடு கிடைத்துவிடும். அப்படிக் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அவசரமான சூழ்நிலையில் மட்டுமே புரோக்கர்களை நாடிச் செல்லலாம்.

இப்போது நாம் பார்க்கும் வீடுகளில் ஒன்று பிடித்துப் போகிறது. அதன்பின்பு என்னவெல்லாம் கவனிக்கவேண்டும் என்பதை அடுத்து பார்க்கலாம்.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

மதுரை அனுபவங்கள்

சென்ற வாரம் மதுரைக்குச் சென்றிருந்தேன். பெரிதாக மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை. முன்பு, 2006ல் ஒரு ஆறு மாதங்கள் அண்ணாநகரில் இருக்கும் சுகுணா ஸ்டாப்புக்கு அருகில் தங்கியிருந்தேன். ஓட்டல் சாப்பாடாக இருந்தாலும், அங்கிருந்த நாட்கள் சுக அனுபவமாக இருந்தது. அவ்வளவு அருமையான ஓட்டல் சாப்பாடு, சென்னை வந்த பிறகுதான் தெரிகிறது. இப்போது ஆரப்பாளையம் அருகே உள்ள, தங்கமணியின் அண்ணன் ஒருவருடைய கல்யாணம். அவர் உறவினர்கள் வீட்டில் தங்கச் சென்றுவிட்டார், எனக்கு அவர்களிடத்தில் அவ்வளவு பழக்கம் இல்லாததால் ஆரப்பாளையம் அருகிலிருக்கும் லாட்ஜ் ஒன்றில் தங்கினேன்.
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகிலிருந்தது அந்த சிவபாக்யா லாட்ஜ். அந்த சுற்று வட்டாரத்தில் அது ஒன்றுதான் இருக்கிறது போல! மிக மிக அதிக விலை, மிகச் சிறிய அறைகள். சுத்தம், கேட்டால் கூடக் கிடைக்கவில்லை. மதுரை மக்கள் ரொம்ப நல்லவர்கள் என்று எல்லோரிடமும் சொல்வேன், அங்கேதான் இதுபோன்ற வியாபாரிகளும் இருக்கிறார்கள். ரூம் சர்வீஸ் பரவாயில்லை. அவ்வப்போது எதுவும் வேண்டுமா என அவர்களே வந்து வந்து கேட்டுக்கொள்கிறார்கள். எது சொன்னாலும் உடனுக்குடன் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

அடுத்து மதுரை ரோடு. பாதாளச் சாக்கடைக்காக தோண்டிப் போட்டிருக்கிறார்கள். இதில் அதிக மழை வேறு. எங்கும் சகதி, குண்டு, குழி. நடக்கவும் சிரமம், வண்டியில் போகவும் சிரமம். ஆனால் எங்கும் போக்குவரத்து நெரிசல் இல்லவே இல்லை. இத்தனை வருடங்களுக்குப் பின்பும் அதே டிராபிக் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது. மதுரை வளரவே இல்லையா? வரும்போது கோரிப்பாளையம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் நெரிசல். ஆரப்பாளையம் பக்கம் அவ்வளவாக இல்லை. பல இடங்களில் சிக்னல் எரியவே இல்லை. ஆனாலும் முட்டல் முனகல் இல்லாமல் மக்கள் சென்றார்கள். சென்னையைப் போல வலதுபுறம் ஏறிச் சென்று எதிரே வருபவரையும் மறித்து யாரையும் போக விடாமல் செய்யும் போக்கு இங்கு இல்லை.
அடுத்து சரக்கு. மதுரையில் ஒரு கடையில் கூட ஒரிஜினல் சரக்கு இல்லை போலிருக்கிறது. பீர் எல்லாமே டூப்ளிகேட். ஏதோ புளித்தண்ணீரைக் குடித்தது போல இருக்கிறது. இதற்கு சென்னை டூப்ளிகேட் சரக்கு எவ்வளவோ பரவாயில்லை, குடிக்கும் அளவுக்காவது இருக்கும். இங்கு மிகவும் மோசம், வேறு ஏதேனும் தொழிற்சாலை உற்பத்தி போலிருக்கிறது. இன்னொரு முக்கியமான விசயம். ஆரப்பாளையம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் பார்கள் கண்டு அசந்துவிட்டேன். அவ்வளவு சுத்தம். லாட்ஜில் இருந்த அறையை விட இங்கு சுத்தம் அதிகம் என்றால் பாருங்கள். ஏசி பார் அருமை. உள்ளே புகை பிடிக்கக் கூடாது. அதற்காக, ஏசி அறை கதவுக்கு வெளியே, வரிசையாக நாற்காலிகளும், ஒவ்வொன்றிற்கும் முன்னால் ஒரு ஸ்டூலும் போடப்பட்டிருக்கின்றன. ஒவ்வோரு ஸ்டூலிலும் ஒரு ஆஷ் ட்ரே, ஏசி அறையிலிருந்து வந்து அமர்ந்து அடிப்பதற்காக. அருமை அருமை. நல்ல கவனிப்பு, சரக்கைத் தவிர அனைத்தும் அருமை.

குரு தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றிருந்தேன். வெளியிலிருந்து பார்க்க பழைய தியேட்டர் போலிருந்தது. நார்நியா 3டியில், டிக்கட் விலை 80, 100 என்றார்கள். சென்னை கமலா தியேட்டரில் கூட இந்த அளவு விலை இல்லை. இங்கு தாறுமாறாக இருப்பது கண்டு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் டிக்கட் கொடுக்கும் கருவியெல்லாம் நன்றாக இருந்தது, அதிலிருந்து வந்த டிக்கட்டும் சதயம், கமலா டிக்கட் போன்ற தாளில், அதே போல, அட, சீட் நம்பர் கூட இருந்தது. அதையெல்லாம் யார் கண்டுகொள்ளப் போகிறார் என்று உள்ளே சென்றால் ஆச்சர்யம். அருமையான அரங்க சீரமைப்பு. சிறப்பான சீட்கள், சீட்டில் இருக்கும் எண் முறைப்படி அமரவைக்கப்படுகிறார்கள். அருமையான ஏசி. சென்று உட்கார்ந்தவுடன் மெனுவுடன் நம்மை அனுகும் வாலிபர்கள். ஆர்டர் செய்தால் நமது சீட்டுக்கே சாப்ப்பிடும் பொருட்கள் வந்து சேரும். சென்னையை விடக் கூடுதலான வசதியாகத் தெரிந்தது எனக்கு இது. டிஜிட்டல் அது இது என்று படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரே விளம்பரம். பரவாயில்லை, நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அரங்கின் நீளம் அதிகமாக இருந்ததால் படம்தான் மிக மிகச் சிறியதாகத் தெரிந்ததாகத் தோன்றியது. குரு திரையரங்கம் இப்போது சென்னை திரையரங்குகள் தரத்தில் இருப்பது குறித்து மகிழ்ச்சி.

மதுரையில் நான் கண்ட மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த விசயம், கண்வலி. பாதிப்பேர் கண்கள் ரத்தச் சிவப்பாக இருக்கின்றன, ரத்தசரித்திரம் பட விளம்பரத்திற்காக யாரோ செய்த சதியோ எனத் தோன்றியது, அல்லது அனைவரும் அதைப் பார்த்திருக்கலாம். பயந்து ஒதுங்கினால் சாதாரணமாகச் சொல்கிறார்கள், “அதெல்லாம் சரியாப்போச்சு, கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும், பயப்படாதீங்க”.

மதுரையிலிருந்து சிவகாசி சென்றேன் பேருந்தில். அது ஒரு தனியார் பேருந்து. ஏறி, மூன்று பேர் இருக்கும் இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன். இன்னொரு புறம் ஒருவர் வந்து அமர்ந்தார். கண்ணில் ஒரு கூலிங்கிலாஸ். அப்போதே உசாராயிருக்கவேண்டும். ஓரளவு பேருந்து நிறைந்துகொண்டிருந்தது. எங்களது இருக்கைக்கு ஒருவர் வந்து, ஓரத்தில் இருந்தவரிடம் கேட்டார்.
“கொஞ்சம் தள்ளி உக்காருங்க”
ஓரத்திலிருந்தவர் கண்ணாடியைக் கழற்றி,
“கண்ணுவலி எனக்கு, வேற இடத்துக ஒக்காந்துக்குறிங்களா”
“எனக்கும் கண்ணுவலிதான், பராவால்ல தள்ளுங்க”
நான்,
“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”.

மதுரையில் திருமணத்தைப் பதிவு செய்யவென இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்திருந்தேன். வேலை நடக்கவே இல்லை. அதைப் பற்றிய தனி சிறப்புப் பதிவு அடுத்து வரும்.

குறிப்பு: முன்பு போல படங்களுடன் எழுத முடியவில்லை. சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எதையாவது வித்தியாசமாகப் பார்த்து, படம் எடுக்க மொபைலை எடுத்தாலே நம்மை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார் தங்கமணி. அதனால் மதுரையில் எடுத்த ஏதோ சில படங்களி இணைத்துள்ளேன்.
படம் எடுக்க முடியவில்லையே என மிகவும் வருந்திய விசயம். தலதளபதி போல “கேப்டனின் விஜய்” என்ற டீக்கடை பெயர்ப் பலகை.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

Despicable Me (2010)

ஒரு ஊர்ல ஒரு பலே திருடன் இருந்தானாம். அவந்தான் உலகத்துலயே பெரிய திருடன். அவனை மிஞ்ச ஆளே கிடையாதாம். ஒரு நாள், அவனையும் மிஞ்சுற அளவுக்குப் பெரிய திருடன் ஒருத்தன் முளைச்சானாம். நம்ம பலே கில்லாடி பண்ணின திருட்டுக்களையெல்லாம் மிஞ்சுற அளவுக்கு ஒரு திருட்டு பண்ணினானாம். அப்படி என்னத்த திருடினான் தெரியுமா? பிரமிடு ஒன்ன திருடிட்டானாம்.

அதக் கேள்விப்பட்ட நம்ம மெகா திருடன் இத விட பெருசா ஒன்ன திருடி, நாமதான் பெரிய திருடன்னு நிரூபிக்கத் திட்டம் போட்டானாம். இவன் அப்படி என்னத்த திருடப்போறான் தெரியுமா? அந்த நிலாவ! உண்மையாத்தான். துப்பாக்கி மாதிரி ஒரு மிசின் இருக்கு. அத வச்சி எது மேல சுட்டாலும் சின்னதாயிடும். அந்த சுருக்குற மிசின மொதல்ல திருடி, அத வச்சி, ராக்கெட்டுல போயி, நிலா மேல அடிச்சு, சுருக்கி, பைல போட்டு எடுத்துட்டு வரலாம்னு திட்டம் போட்டானாம்.


கதை நல்லா இருக்குல்ல? அதுதான் இந்தப் படம். என்னடா கதைய முழுசா சொல்லிட்டானே, அப்றம் எப்படி இண்ட்ரஸ்டிங்கா பாக்குறதுன்னு கேக்குறீங்களா? இது சைடு கதைதான். மெயின் இன்னும் நான் சொல்லல. அப்படியே சொன்னாலும் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கத்தக்க காட்சிகள். இன்னோரு விசயம், அந்தத் துப்பாக்கியால சுட்டு சின்னதாக்குற எல்லாம் திரும்பவும் பழைய அளவுக்கு வந்துரும். அப்போ பாத்துக்குங்க, பூமிக்குக் கொண்டு வந்த நிலா திரும்பவும் பெருசானா என்ன ஆகும்? ஓ, இதையும் சொல்லிட்டேனோ?

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!