ஒரு வழியா ஊருக்குப் போனேன்

வலையுலகில் மேய்ந்துகொண்டிருக்கும்போது சில நேரங்களில் ஓரங்களில் வரும் கிளப் மகிந்த்ரா அல்லது வேறு ஏதாவது டூர் விளம்பரத்தைப் பார்ப்பேன். நமக்கு மட்டும் ஏன் இது மாதிரி சுற்றுலா செல்ல வாய்ப்பு அமைவதில்லை என எண்ணியதில்லை. இப்போதுதான் புரிகிறது. வீட்டிலிருப்பவர்கள்தான் வெளியே செல்ல திட்டமிட வசதியாய் இருக்கும். வெளியே இருக்கும் நமக்கு விடுமுறை கிடைத்தால் வீட்டிற்குச் செல்லத்தான் திட்டமிடத்தோன்றுகிறது. வீட்டைவிட்டு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன, திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன, ஆனால் நான் மாறவேயில்லை. இப்போதும் விடுமுறை வந்தால் பெற்றோர் இருக்கும் இடத்திற்குத்தான் செல்லத்தோன்றுகிறது.

சென்னையில் ஐந்து வருடங்களுக்கு மேல் குப்பை கொட்டியாகிவிட்டது. இப்போது பெஙளூரிலிருந்து. சென்னையிலிருந்து ஊருக்குச் செல்வது எவ்வளவு சுலபமென்று இப்போதுதான் தெரிகிறது. இங்கு வந்தும் இரு முறை சென்று வந்துவிட்டேன். ஆனால், இந்த முறை பல சிரமங்கங்களுக்கிடையே செல்ல நேர்ந்தது.



Share/Bookmark
Read More!

நான், அட்டக்கத்தி மற்றும் சில

வழக்கமாக தமிழ்ப் படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. தேவையில்லாமல் நூறு ரூபாயையும், மூன்று மணி நேரத்தையும் வீணடிக்கும் அளவுக்கு வேலை இல்லாமல் இல்லாததால், தேர்ந்தெடுத்த படங்களை மட்டுமே சென்று பார்ப்பேன். சமீப காலமாக நிறைய தம்ழ்ப்படங்களைப் பார்ப்பது போன்று தோன்றுகிறது. நல்லதுதான்.
இவைதான் சமீபத்தில் பார்த்த படங்கள்.





Share/Bookmark
Read More!

அலுப்பே நெருங்காதே

முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பின், அதை ஓட்டுவது எப்படி இருந்தது? முதன் முதலில் வாங்கிய நோக்கியா 1100 தொலைத்த தூக்கங்கள் எத்தனை? முதன் முதலில் குடித்த பாதி பாட்டில் பீர், கால் டம்ளர் ரம் - இவைகள் தந்த போதை இப்போது எதிலும் கிடைக்காதது ஏன்? பள்ளி நண்பர்களுடனான முதல் சுற்றுலா, கல்லூரி நண்பர்களுடனான கடைசி சுற்றுலா ஏக்கம் தருவது ஏன்? முதல் பணியில் வெற்றிகரமாக செய்த சிறு வேலை தந்த மகிழ்ச்சி எங்கே? முதல் பதிவு, முதல் பின்னூட்டம் தந்த கிளுகிளுப்பு இப்போது எப்படிக் கிடைக்கும்?

எந்த ஒரு விசயத்திலும், முதலில் இருக்கும் சுவாரஸ்யம் கடைசி வரை இருப்பதில்லை. எனது வீட்டில் மொத்தம் நான்கு அறைகள். எனது ஒரு வயது குழந்தை, நாள் முழுதும் அதற்குள்தான் சுற்றிச் சுற்றி வருகிறாள். திங்கள் முதல் வெள்ளி வரை அந்த அறைகள்தான். நடக்கிறாள், ஓடுகிறாள், விழுகிறாள், அழுகிறாள், பாடல் கேட்கிறாள், பார்க்கிறாள், என்னுடன் விளையாடுகிறாள், சிரிக்கிறாள். சில நேரங்களில், ஒரு பொருளை கைகளில் வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பல கோணங்களில் பார்க்கிறாள். வீட்டுச் சாவியைக் கொடுத்தால், ஒரு மணி நேரம் வரை அந்த ஆராய்ச்சி நடக்கும். சிறு வயதில் நானும் இப்படித்தான் ஒரே இடத்தில் உட்கார்ந்து அலுக்காமல் சிறு செயல்களைச் செய்துகொண்டு இருந்திருப்பேன், என்பதை எண்ணிப் பார்க்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.



Share/Bookmark
Read More!

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை பதிவு எழுத முயற்சி செய்யலாம் எனத் தோன்றியது. ஏன் எழுதுவது நின்று போனது என்று யோசித்துப் பார்க்கிறேன், சரியாகத் தெரியவில்லை, அதைப் பற்றி மேலும் யோசித்து அறிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்.

திருமணத்திற்குப் பிறகு எழுதுவது சிறிது குறைந்தது. குழந்தை பிறந்த பிறகு படிப்பதும் குறைந்தது. குழந்தையைப் பற்றி சொல்லிக்கொண்டெ போகலாம். வெர்னிகா. ஒரு குழந்தை பிறந்தது முதல், வளர்வதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும், அவள் நடந்து கொள்ளும் விதம், புதிது புதிதாக அவள் பார்ப்பது, கற்றுக்கொள்வது, பிரதிபலிப்பது என்று ரசித்துக்கொண்டே இருக்கலாம். இப்போது நடக்க ஆரம்பித்துவிட்டாள். காலையில் எங்காவது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பரப்பி வைப்பதுதான் இப்போது பிரதான வேலை. பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது. திரும்பவும் எடுத்து அடுக்கி வைப்பது நமது வேலைகளில் ஒன்றாகிவிட்டது. சென்ற வாரம் வேளாங்கண்ணி சென்று மொட்டை போட்டு காதி குத்தி வந்தோம்.

வேளாங்கண்ணி இப்போது எனது பார்வையில் புதிதாகத் தெரிகிறது. மற்றவர்கள், அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள். ஒருவேளை எனக்கு சில அகக் கண்கள் திறந்திருக்கலாம். கடைகளில் எல்லாம் அதிக விலை. ஒரு தண்ணீர் பாக்கட் 3 ரூபாய்க்கு பேருந்து நிலையம் அருகில் வாங்கினேன். விலைக்குத் தகுந்த தரமான உணவை எங்கும் பார்க்கவில்லை. பேருந்து நிலையத்தின் உள்ளேயே டாஸ்மாக். பயணிகள் காத்திருக்கும் இடம்தான் பாராக இருக்கிறது. கோவிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டேபோகலாம். சுருக்கமாகச் சொல்கிறேன். ஒரு அரசு அலுவலகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. இதைக் கவனிக்கவேண்டிய பாதிரியார்கள் என்ன சேவை செய்கிறார்களோ தெரியவில்லை. வேளாங்கண்ணி பற்றி தனியாக ஒரு பதிவு எழுதினால் நல்ல விசயங்களை விட கெட்ட விசயங்கள்தான் அதிகமாக இருக்கும். புனிதப் பயணம் என்று சென்று மனத்தாங்களோடுதான் திரும்பி வரவேண்டியிருக்கிறது.

சமீபத்தில் பார்த்த படங்களைப் பற்றிச் சொல்லவேண்டும். ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் கலகலப்பு திரையரங்கில் பார்த்தேன். ஓகே ஓகே ஆரம்பம் முதல் கடைசி வரை தொய்வு இல்லாமல் சென்றது. சந்தானம்தான் காரணம். கலகலப்பு ஆரம்பத்தில் தொங்கியது. ஆனால் பின்பாதி சேர்த்து வைத்து சமன் செய்தது. ஆனால் சந்தானம் ஒருவரே காரணம் என்று சொல்ல முடியாது. இரண்டையும் ஒப்பிட்டால் கலகலப்பில்தான் வயிறு வலிக்க சிரித்தேன். ஆனால் நல்ல படம் என்று பார்த்தால் அது ஓகேஓகேதான்.

அடுத்து சில ஆங்கிலப் படங்கள் பற்றி. கடைசியாகப் பார்த்த படங்கள்: Avengers, Safe House மற்றும்  Prometheus. Avengers பற்றிச் சொல்லவே வேண்டாம், அட்டகாசம். ஆனால் அது பற்றிய கருந்தேள் கண்ணாயிரம் எழுதிய தொடர் பதிவுகள் அதை விட அட்டகாசம். Safe House: சமீபத்தில் இதைப் போன்ற மிகசிறந்த விருவிருப்பான திரைக்கதை மிகுந்த படத்தைப் பார்த்ததே இல்லை என்ற உணர்வைக் கொடுத்த படம். The Bourne வகையறா என்றாலும் புதிதாக இருந்தது. Prometheus பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. சுத்த போர். ஒரு வேளை தமிழில் பாத்ததால் அப்படி இருக்கலாம். ஆங்கிலத்தில் மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும்.

மேலும் சில படங்கள் பற்றி: Contraband, இதில் அப்படி என்ன பெரிதாக இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் தொய்வில்லாத படம். The Divide என்ற படம் ஒன்று பாத்தேன். தூக்கத்தைக் கெடுத்த படம். Blindness வகையறா... உலகம் அழிந்த நிலை. தப்பித்த சில பேரின் மன நிலைகளைப் பிரதிபலிக்கும் படம். The Awakening என்று ஒரு படம். The Sixth Sense வகைப் படம். கடைசி இடத்தில் அவிழ்க்கப்படும் முடிச்சு, திரும்பவும் படத்தை ஆரம்பத்தில் இருந்து நம்மைப் பார்க்க வைக்கும், நன்றாகத்தான் இருந்தது.

என்னதான், நா ரொம்ப பிசி, என்று ஒப்புக்குச் சொன்னாலும், சிலருடைய பதிவுகளை எப்போதுமே படிக்கத் தவறுவது இல்லை. கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன் மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் ஆகியோரது பதிவுகளை எப்போதுமே படிப்பதுண்டு. கூகுள் பிளஸ் ஒரு நாளைக்கு சில வேளைகள் சென்று நாட்டு நடப்பதைத் தெரிந்துகொள்கிறேன். ஆனால் எதையும் எழுதுவது இல்லை, எதற்கும் பதிலிடுவதும் இல்லை. எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்!

-பெஸ்கி.


Share/Bookmark
Read More!