தென்மேற்குப் பருவக்காற்று

நேற்று தென்மேற்குப் பருவக்காற்று பார்க்கச் சென்றிருந்தேன். பதிவர் வண்ணத்துப்பூச்சி சூர்யா அழைத்தார். பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்புக் காட்சி என்றும், பதிவர்களை அழைத்திருப்பதாகவும் சொன்னார். Four Frames எனது அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்ததால் வசதியாகப் போயிற்று. கிளம்பும் வேளையில் தூறல் ஆரம்பித்தது. இருந்தாலும் படம் பார்க்கும் ஆர்வத்திலும், பதிவர்களை சந்திக்கும் ஆர்வத்திலும் கிளம்பிவிட்டேன். பலர் தூறல் காரணமாக வரவில்லை. இருப்பினும், பிரபல பதிவர்கள் கேபிள் சங்கர் மற்றும் ஜாக்கிசேகர், சூர்யா, காவேரி கணேஷ், சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட சுரேகா ஆகியோர் வந்திருந்தனர். மற்ற அனைவரும் பத்திரிக்கையாளர்கள் என்று நினைக்கிறேன், எனக்கு யாரையும் தெரியவில்லை. சூர்யாதான் ஒவ்வொருவர் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார்.
டைட்டில் சாங் அருமை. பாடல் மட்டுமல்ல, காட்சிகளும்தான். “கள்ளிக்காட்டில் பொறந்த தாயே...”, கிராமத்து தாய்மார்களின் ஸ்டில் படங்களுடன் வந்தது அருமையாகவும் வித்தியசமாகவும் இருந்தது. அது முதலே திரை முழுவதும் தேனி மாவட்டத்தில் செந்நிறம். அந்த நிறமே என்னை கிராமத்தில் இருப்பது போன்று உணர்வைத் தந்தது. பல தாய்மார்களின் படங்களுடன் கடைசியில் படத்தின் முதல் நாயகி சரண்யாவின் படத்துடன் பாடல் முடிகிறது. பாடலும் படங்களுமே இது ஒரு அம்மாவைப் பற்றிய படம் என்பதைச் சொல்லியது.

படம் ஆரம்பித்த முதல் அரைமணி நேரம் கலங்கிப் போனேன். மிக மிக நாடகத்தனமான காட்சிகள், ஒன்றுக்கொன்று ஒட்டாத காட்சிகள். தெரியாத்தனமா வந்துட்டோமோ என்று எனக்கு பயம். இருந்தாலும் அந்த பயம் போனதே தெரியாமல் காட்சிகளைக் கொண்டுசென்றிருப்பது ஆச்சர்யம்.

இளம் வயதிலேயே விதவையான தாய், தனது மகனைப் பாடுபட்டு வளர்க்கிறாள். மகன் மீது அவ்வளவு பாசம். மகன் வழக்கம்போல வெட்டியாக ஊர் சுற்றும் பிள்ளையாக இல்லாமல், ஆடு மேய்த்துக்கொண்டும் சிறிது சேட்டை செய்துகொண்டும் இருக்கிறான். பூச்சில்லாமல் செங்கல் சுவருடன் நிற்கும் வீடு. அதை மகன் கல்யாணத்திற்காக வாங்கும் பணத்தில் பூசி விடலாம் என்ற எண்ணம் அம்மாவுக்கு. தனது தூரத்து உறவில் அம்மா இல்லாத பெண்ணுக்குப் பேசி வைக்கிறாள்.

ஆடி திருடும் கும்பல் ஒன்று இரவு நேரங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு பல்வேறு ஆடுகளைத் திருடிக்கொண்டிருக்கிறது. படம் ஆரம்பிப்பதே ஆடு திருவதில்தான். வெயில் பட ஆரம்பம்போல ஒரு உணர்வு. அந்த கும்பல் ஒரு முறை நமது கதாநாயகன் பாதுகாக்கும் ஆட்டு மந்தையில் திருடுகிறது. இருவர் குழுவுக்குமான சண்டையில் கதாநாயகன் கும்பலில் ஒருவரைப் பிடித்துவிட, மறைப்பை விலக்கி முகத்தைப் பார்த்தால் பெண், கதாநாயகி. அதிர்ச்சியில் உறைந்துபோன நாயகன் அவளை விட்டுவிடுகிறான். இந்த நேரத்தில்தான் வழக்கம்போல காதல் வந்து நுழைகிறது.

இவளை அவன் தேட, அதே சமயம் அவளுடைய அடிதடி அண்ணன்கள் இவனைக் குறிவைக்க, பின்பு அண்ணன்கள் சிறைக்குச் செல்ல, பின்பு இவர்களுக்குள் காதல் வளர, பேசி வைத்த கல்யாணம் நிற்க, அன்னை மகனின் காதலை எதிர்க்க, வெளிவரும் அண்ணன்மார்களும் நாயகன்மேல் கொலைவெறியுடன் எதிர்க்க, திருட்டுக் கல்யாணத்திற்கு நாயகன் ஏற்பாடு செய்ய, கடைசியில் என்ன ஆனது என்பதே கதை.

படத்தின் சிறப்பம்சங்கள் பல. அதிலும் கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் தேர்வும் அவர்களின் நடிப்பும். முதலில் அம்மா சரண்யா. சில காட்சிகள் மூலம் அருமையாக அவரது குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வெகுளி, மகன் மீதுள்ள பாசம், உழைப்பு, கோபம் என ஒவ்வொன்றும் நமக்குப் புரியவைக்கப்பட்டிருக்கிறது.

கதாநாயன், கதாநாயகி கதாப்பாத்திரங்களும் அழகாகப் பொருந்திப்போகின்றன. கதாநாயகனின் நண்பன் கதாப்பாத்திரம் அருமையோ அருமை, நகைச்சுவைக்காக. பல இடங்களில் அவனின் வசனங்கள் சிரிக்கவும் கைதட்டவும் வைக்கின்றன. கதாநாயகியின் அண்ணனும் டெர்ரராக நமது மனதில் இடம் பிடிக்கிறார். சில காட்சிகள் வந்தாலும் அந்த பெண் போலீஸ் அதிகாரி கூட மனதில் ஒட்டிக்கொள்கிறார். கதாநாயகனுக்காக முதலில் பேசி முடிக்கப்படும் பெண், என் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டாள், அவளது பேச்சு அருமை அருமை... இன்னும் மனதில் நிற்கிறது. அவளிடைய அப்பாவும் மனதில் நிற்கிறார். கதாப்பாத்திரங்களைக் காட்சிப்படுத்துவதில் சிறந்த படமாக இது எனக்குப் பிடித்திருக்கிறது.

ஒளிப்பதிவு அருமை, முன்பே சொன்னதுபோல கரிசல் நிறம் திரை முழுதும் அழகாக விரிக்கப்பட்டிருக்கிறது. சிலப்பல பிற நாட்டுப் படங்களைத் திருடிப் படம் எடுக்கும் சூழலில் இப்படி சொந்த சரக்கை அளித்திருப்பது மகிழ்ச்சி. இசை அருமை, கள்ளிக்காட்டில் பொறந்த தாயே மற்றும் ஏடி கள்ளச்சி மனதில் நிற்கிறது. இன்னொரு பாடல் அருமையாக இருந்தாலும், ரிதம் படத்தின் தனியே தன்னந்தனியே பாடலின் தழுவலாக இருப்பதால் பிடிக்காமல் போயிற்று.

கற்பனையாக ஆடிப்பாடும் பாடல் காட்சிகள் ஒன்றும் படத்தில் கிடையாது. மற்றும் தேவையில்லாத குத்துப்பாடல்களும் கிடையாது. இயக்குனருக்கு இதற்காக மிகப்பெரிய நன்றி. மேலும் இப்போது வரும் பல கிராமத்துப் படங்கள் பருத்திவீரனையோ அல்லது சுப்ரமணியபுரத்தையோ ஞாபகப்படுத்துவதாகவே இருக்கின்றன. ஆனால் இந்தப் படம் அப்படியில்லாமல் இருப்பது இயக்குனர் மேல் மேலும் நம்பிக்கையைத் தந்துள்ளது. இனி வரும் கிராமத்துப் படங்களில் சில இந்தப் படத்தை ஞாபகப்’படுத்தலாம்’.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் படத்தின் பலங்களாகக் கருதலாம். படத்தின் பெரும் குறைகளாக நான் கருதுவது, முதலில் வரும் அந்த நாடகத்தனமான காட்சிகள். பெரும் அயர்ச்சியையும் பயத்தையும் தருகின்றன. அடுத்து சில கதாப்பாத்திரங்கள் பேசும் வசனங்கள். வாயசைப்பு ஒரு விதமாகவும் வசனங்கள் வேறு விதமாகவும் இருக்கின்றன, அதுவும் க்ளோசப் காட்சிகளில். ஏதோ டப்பிங் படம் பார்க்கும் உணர்வைப் பல இடங்களில் தருகின்றன. அடுத்து சில லாஜிக் ஓட்டைகள். இப்படி இந்தப் படத்தில் ப்ளஸ் மற்றும் மைனஸ்கள் சரி சமமாக இருக்கின்றன. ஆனால் அருமையான காட்சிகளுக்காகவும், கதாப்பாத்திர வடிவமைப்புகளுக்காகவும், சினிமாத்தனமில்லாத சிறந்த முடிவுக்காகவும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

(2) வீட்டு புரோக்கர்

வீடு தேடுதல் (1) ன் தொடர்ச்சி...

அடுத்து புரோக்கர்கள். இவர்களை நான் விரும்புவதே இல்லை. நான் பார்த்த பல புரோக்கர்களில் இருவரைத்தான் மனிதர்களாகப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இவர்கள் வாயைத் திறந்தால் வார்த்தைக்குப் பதிலாக பொய்தான் வந்து விழும். அதிலும் ஒரு மாத வாடகையை கமிசனாகக் கேட்பார்கள். அதற்குத் தகுந்த உழைப்பு இருக்கிறதா என்றால், இல்லை. மனதிற்குப் பிடித்தமான சரியான வீட்டைக் காண்பித்து, நல்ல விலைக்கு முடித்துக் கொடுத்தால் இவர்கள் கேட்கும் விலை நியாயமானதுதான். ஆனால் இவர்கள் செய்வதோ தலைகீழ். நமது தேவைக்கேற்ற வீட்டைக் காட்டவும் மாட்டார்கள், விலையையும் நன்றாக ஏற்றிவிடுவார்கள். பின் எதற்குத்தான் இந்த பெருந்தொகைக் கமிசனோ தெரியவில்லை.
இவர்களிடம் முதல் பிரச்சனை, நமது தேவைக்கேற்ற வீட்டைக் காட்டமாட்டார்கள். பார்க்கிங், தண்ணி வசதி, எத்தனை அறைகள், அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என அரை மணி நேரம் மூச்சு விடாமல் சொல்லியிருப்போம். இருந்தாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அவர்கள் கையில் இருக்கும் அனைத்து வீட்டிற்கும் ஊர்வலம் கூட்டிச் செல்வார்கள். நாமோ ஆபீஸில் பெர்மிசனோ, லீவோ போட்டு வந்திருப்போம். தேவையில்லாமல் நமது நேரத்தை வீணடிப்பார்கள். இரண்டாவது வீட்டுக்குப் போன பின் நமக்கே கண்ணைக் கட்டும். ”நான் சொன்ன மாதிரி வீடு இருக்கா இல்லையா?” என்று கொஞ்சம் முகம் கடுப்பாகும் நமக்கு. “அடுத்த வீடு கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் சார்”, என்று மனசாட்சியே இல்லாமல், திரும்பவும் மொக்கையாக ஒரு வீட்டைக் காட்டுவார் பாருங்கள், அப்படியே அந்த வீட்டு நிலையில் முட்டிக்கலாம் போலத் தோனும்.

சிலர் இதற்குக் கூட கமிசன் கேட்பார்கள். இவ்வளவுக்கும் நமது வண்டியில்தான் வந்திருப்பார். முதலில், சொந்தமாக ஒரு வண்டியில்லாமல் நமது வண்டியில் தொற்றிக்கொள்ளும் புரோக்கரை நம்பவே வேண்டாம். பின், முதலிலேயே கண்டிப்பாக சொல்லிவிடனும், லீவு போட்டுட்டு வரேன், நான் சொன்ன மாதிரி வீடு காட்டலைனா நீதான் என் சம்பளத்தைத் தரனும் என்று. அவ்வாறு தர மாட்டார் என்றாலும் தேவையில்லாத அலைச்சலைத் தவிர்க்கலாம். வீடு முடிந்தால்தான் கமிசன் என்பதையும் முதலிலேயே பேசிவிடவேண்டும். இதெல்லாம் சரிவராது சார், வேற ஆளப் பாத்துக்க சார் என்றெல்லாம் படம் காட்டுவார்கள். யோசிக்கவேண்டாம், தாராளமாக வேறு ஆளைப் பார்க்கலாம். அந்த ஏரியாவில் யாரைப் பார்த்தாலும் இவரும் கூட வருவார்.

மேலும் கமிசன் தொகை ஒரு மாத வாடகை என வழக்கமாகச் சொல்வார்கள். அதை நாம் குறைத்துப் பேசலாம். சிலர் மட்டுமே அதற்கு ஒத்துப்போவார்கள். சிலர் குழுவாக அமைந்து வீடுகளைப் பார்த்துவைத்துக்கொண்டு நமக்குக் காட்டுவார்கள். சில புரோக்கர்கள் இப்படிக் குழுவாகச் செயல்படாமல் தனித்து இருப்பர். இந்த மாதிரி இருப்பவர்கள் விலையைக் குறைத்துக்கொள்வார்கள். இவர்கள் நேர்மையாகவும்ம், சரியான வீட்டைக் காட்டும் வாய்ப்பும் அதிகம்.
பெரும்பாலான புரோக்கர்கள் பகுதி நேரமாக இதைச் செய்வார்கள். சிலர் முழு நேரமாகச் செய்தாலும் அலுவலகம் என்றெல்லாம் எதுவும் இருக்காது. ஆனால், சில ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர்கள் அவர்களுக்கென ஒரு அலுவலகம் வைத்திருப்பார்கள். இடம், வீடு வாங்குவது மற்றும் விற்பது முதன்மையாக இருந்தாலும் வாடகை வீடு பிடித்துக் கொடுப்பதும் சிறிய அளவில் செய்வார்கள். நான் பார்த்தவரையில் இவர்களை நம்பலாம். தேவைக்கேற்ற வீட்டைக் காட்டுவார்கள், கமிசனும் பேசிக்கொள்ளலாம். ஆனால், இவர்கள் யாரையாவது கைகாட்டி அனுப்பினால் நம்ப இயலாது.

பெரும்பாலும் புரோக்கர்களைத் தவிர்த்துவிடவேண்டும். முந்தைய பதிவில் சொன்ன வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடித்தாலே வீடு கிடைத்துவிடும். அப்படிக் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அவசரமான சூழ்நிலையில் மட்டுமே புரோக்கர்களை நாடிச் செல்லலாம்.

இப்போது நாம் பார்க்கும் வீடுகளில் ஒன்று பிடித்துப் போகிறது. அதன்பின்பு என்னவெல்லாம் கவனிக்கவேண்டும் என்பதை அடுத்து பார்க்கலாம்.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

மதுரை அனுபவங்கள்

சென்ற வாரம் மதுரைக்குச் சென்றிருந்தேன். பெரிதாக மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை. முன்பு, 2006ல் ஒரு ஆறு மாதங்கள் அண்ணாநகரில் இருக்கும் சுகுணா ஸ்டாப்புக்கு அருகில் தங்கியிருந்தேன். ஓட்டல் சாப்பாடாக இருந்தாலும், அங்கிருந்த நாட்கள் சுக அனுபவமாக இருந்தது. அவ்வளவு அருமையான ஓட்டல் சாப்பாடு, சென்னை வந்த பிறகுதான் தெரிகிறது. இப்போது ஆரப்பாளையம் அருகே உள்ள, தங்கமணியின் அண்ணன் ஒருவருடைய கல்யாணம். அவர் உறவினர்கள் வீட்டில் தங்கச் சென்றுவிட்டார், எனக்கு அவர்களிடத்தில் அவ்வளவு பழக்கம் இல்லாததால் ஆரப்பாளையம் அருகிலிருக்கும் லாட்ஜ் ஒன்றில் தங்கினேன்.
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகிலிருந்தது அந்த சிவபாக்யா லாட்ஜ். அந்த சுற்று வட்டாரத்தில் அது ஒன்றுதான் இருக்கிறது போல! மிக மிக அதிக விலை, மிகச் சிறிய அறைகள். சுத்தம், கேட்டால் கூடக் கிடைக்கவில்லை. மதுரை மக்கள் ரொம்ப நல்லவர்கள் என்று எல்லோரிடமும் சொல்வேன், அங்கேதான் இதுபோன்ற வியாபாரிகளும் இருக்கிறார்கள். ரூம் சர்வீஸ் பரவாயில்லை. அவ்வப்போது எதுவும் வேண்டுமா என அவர்களே வந்து வந்து கேட்டுக்கொள்கிறார்கள். எது சொன்னாலும் உடனுக்குடன் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

அடுத்து மதுரை ரோடு. பாதாளச் சாக்கடைக்காக தோண்டிப் போட்டிருக்கிறார்கள். இதில் அதிக மழை வேறு. எங்கும் சகதி, குண்டு, குழி. நடக்கவும் சிரமம், வண்டியில் போகவும் சிரமம். ஆனால் எங்கும் போக்குவரத்து நெரிசல் இல்லவே இல்லை. இத்தனை வருடங்களுக்குப் பின்பும் அதே டிராபிக் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது. மதுரை வளரவே இல்லையா? வரும்போது கோரிப்பாளையம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் நெரிசல். ஆரப்பாளையம் பக்கம் அவ்வளவாக இல்லை. பல இடங்களில் சிக்னல் எரியவே இல்லை. ஆனாலும் முட்டல் முனகல் இல்லாமல் மக்கள் சென்றார்கள். சென்னையைப் போல வலதுபுறம் ஏறிச் சென்று எதிரே வருபவரையும் மறித்து யாரையும் போக விடாமல் செய்யும் போக்கு இங்கு இல்லை.
அடுத்து சரக்கு. மதுரையில் ஒரு கடையில் கூட ஒரிஜினல் சரக்கு இல்லை போலிருக்கிறது. பீர் எல்லாமே டூப்ளிகேட். ஏதோ புளித்தண்ணீரைக் குடித்தது போல இருக்கிறது. இதற்கு சென்னை டூப்ளிகேட் சரக்கு எவ்வளவோ பரவாயில்லை, குடிக்கும் அளவுக்காவது இருக்கும். இங்கு மிகவும் மோசம், வேறு ஏதேனும் தொழிற்சாலை உற்பத்தி போலிருக்கிறது. இன்னொரு முக்கியமான விசயம். ஆரப்பாளையம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் பார்கள் கண்டு அசந்துவிட்டேன். அவ்வளவு சுத்தம். லாட்ஜில் இருந்த அறையை விட இங்கு சுத்தம் அதிகம் என்றால் பாருங்கள். ஏசி பார் அருமை. உள்ளே புகை பிடிக்கக் கூடாது. அதற்காக, ஏசி அறை கதவுக்கு வெளியே, வரிசையாக நாற்காலிகளும், ஒவ்வொன்றிற்கும் முன்னால் ஒரு ஸ்டூலும் போடப்பட்டிருக்கின்றன. ஒவ்வோரு ஸ்டூலிலும் ஒரு ஆஷ் ட்ரே, ஏசி அறையிலிருந்து வந்து அமர்ந்து அடிப்பதற்காக. அருமை அருமை. நல்ல கவனிப்பு, சரக்கைத் தவிர அனைத்தும் அருமை.

குரு தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றிருந்தேன். வெளியிலிருந்து பார்க்க பழைய தியேட்டர் போலிருந்தது. நார்நியா 3டியில், டிக்கட் விலை 80, 100 என்றார்கள். சென்னை கமலா தியேட்டரில் கூட இந்த அளவு விலை இல்லை. இங்கு தாறுமாறாக இருப்பது கண்டு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் டிக்கட் கொடுக்கும் கருவியெல்லாம் நன்றாக இருந்தது, அதிலிருந்து வந்த டிக்கட்டும் சதயம், கமலா டிக்கட் போன்ற தாளில், அதே போல, அட, சீட் நம்பர் கூட இருந்தது. அதையெல்லாம் யார் கண்டுகொள்ளப் போகிறார் என்று உள்ளே சென்றால் ஆச்சர்யம். அருமையான அரங்க சீரமைப்பு. சிறப்பான சீட்கள், சீட்டில் இருக்கும் எண் முறைப்படி அமரவைக்கப்படுகிறார்கள். அருமையான ஏசி. சென்று உட்கார்ந்தவுடன் மெனுவுடன் நம்மை அனுகும் வாலிபர்கள். ஆர்டர் செய்தால் நமது சீட்டுக்கே சாப்ப்பிடும் பொருட்கள் வந்து சேரும். சென்னையை விடக் கூடுதலான வசதியாகத் தெரிந்தது எனக்கு இது. டிஜிட்டல் அது இது என்று படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரே விளம்பரம். பரவாயில்லை, நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அரங்கின் நீளம் அதிகமாக இருந்ததால் படம்தான் மிக மிகச் சிறியதாகத் தெரிந்ததாகத் தோன்றியது. குரு திரையரங்கம் இப்போது சென்னை திரையரங்குகள் தரத்தில் இருப்பது குறித்து மகிழ்ச்சி.

மதுரையில் நான் கண்ட மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த விசயம், கண்வலி. பாதிப்பேர் கண்கள் ரத்தச் சிவப்பாக இருக்கின்றன, ரத்தசரித்திரம் பட விளம்பரத்திற்காக யாரோ செய்த சதியோ எனத் தோன்றியது, அல்லது அனைவரும் அதைப் பார்த்திருக்கலாம். பயந்து ஒதுங்கினால் சாதாரணமாகச் சொல்கிறார்கள், “அதெல்லாம் சரியாப்போச்சு, கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும், பயப்படாதீங்க”.

மதுரையிலிருந்து சிவகாசி சென்றேன் பேருந்தில். அது ஒரு தனியார் பேருந்து. ஏறி, மூன்று பேர் இருக்கும் இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன். இன்னொரு புறம் ஒருவர் வந்து அமர்ந்தார். கண்ணில் ஒரு கூலிங்கிலாஸ். அப்போதே உசாராயிருக்கவேண்டும். ஓரளவு பேருந்து நிறைந்துகொண்டிருந்தது. எங்களது இருக்கைக்கு ஒருவர் வந்து, ஓரத்தில் இருந்தவரிடம் கேட்டார்.
“கொஞ்சம் தள்ளி உக்காருங்க”
ஓரத்திலிருந்தவர் கண்ணாடியைக் கழற்றி,
“கண்ணுவலி எனக்கு, வேற இடத்துக ஒக்காந்துக்குறிங்களா”
“எனக்கும் கண்ணுவலிதான், பராவால்ல தள்ளுங்க”
நான்,
“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”.

மதுரையில் திருமணத்தைப் பதிவு செய்யவென இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்திருந்தேன். வேலை நடக்கவே இல்லை. அதைப் பற்றிய தனி சிறப்புப் பதிவு அடுத்து வரும்.

குறிப்பு: முன்பு போல படங்களுடன் எழுத முடியவில்லை. சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எதையாவது வித்தியாசமாகப் பார்த்து, படம் எடுக்க மொபைலை எடுத்தாலே நம்மை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார் தங்கமணி. அதனால் மதுரையில் எடுத்த ஏதோ சில படங்களி இணைத்துள்ளேன்.
படம் எடுக்க முடியவில்லையே என மிகவும் வருந்திய விசயம். தலதளபதி போல “கேப்டனின் விஜய்” என்ற டீக்கடை பெயர்ப் பலகை.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

Despicable Me (2010)

ஒரு ஊர்ல ஒரு பலே திருடன் இருந்தானாம். அவந்தான் உலகத்துலயே பெரிய திருடன். அவனை மிஞ்ச ஆளே கிடையாதாம். ஒரு நாள், அவனையும் மிஞ்சுற அளவுக்குப் பெரிய திருடன் ஒருத்தன் முளைச்சானாம். நம்ம பலே கில்லாடி பண்ணின திருட்டுக்களையெல்லாம் மிஞ்சுற அளவுக்கு ஒரு திருட்டு பண்ணினானாம். அப்படி என்னத்த திருடினான் தெரியுமா? பிரமிடு ஒன்ன திருடிட்டானாம்.

அதக் கேள்விப்பட்ட நம்ம மெகா திருடன் இத விட பெருசா ஒன்ன திருடி, நாமதான் பெரிய திருடன்னு நிரூபிக்கத் திட்டம் போட்டானாம். இவன் அப்படி என்னத்த திருடப்போறான் தெரியுமா? அந்த நிலாவ! உண்மையாத்தான். துப்பாக்கி மாதிரி ஒரு மிசின் இருக்கு. அத வச்சி எது மேல சுட்டாலும் சின்னதாயிடும். அந்த சுருக்குற மிசின மொதல்ல திருடி, அத வச்சி, ராக்கெட்டுல போயி, நிலா மேல அடிச்சு, சுருக்கி, பைல போட்டு எடுத்துட்டு வரலாம்னு திட்டம் போட்டானாம்.


கதை நல்லா இருக்குல்ல? அதுதான் இந்தப் படம். என்னடா கதைய முழுசா சொல்லிட்டானே, அப்றம் எப்படி இண்ட்ரஸ்டிங்கா பாக்குறதுன்னு கேக்குறீங்களா? இது சைடு கதைதான். மெயின் இன்னும் நான் சொல்லல. அப்படியே சொன்னாலும் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கத்தக்க காட்சிகள். இன்னோரு விசயம், அந்தத் துப்பாக்கியால சுட்டு சின்னதாக்குற எல்லாம் திரும்பவும் பழைய அளவுக்கு வந்துரும். அப்போ பாத்துக்குங்க, பூமிக்குக் கொண்டு வந்த நிலா திரும்பவும் பெருசானா என்ன ஆகும்? ஓ, இதையும் சொல்லிட்டேனோ?

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

வீடு தேடுதல் (1)

ஏதோ ஒரு காரணத்துக்காக வீடு மாத்தனும்னு முடிவு பண்ணிருவோம். அடுத்து வீடு தேடனும். எப்படியெல்லாம் தேடலாம்? பேப்பர் விளம்பரம், இணையம், தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தல் மற்றும் புரோக்கர்கள்.

வழக்கமான பேப்பர்களில் வாடகை வீடு பற்றிய விளம்பரம் குறைவாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளுக்கு ஃப்ரீ ஆட்ஸ்தான்(Free Ads) சரி. சென்னையில் வியாழன்தோறும் கடைகளில் கிடைக்கும். இப்போது இங்கும் புரோக்கர்கள் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். விளம்பரம் பார்த்து போன் செய்தால் பத்துக்கு எட்டு புரோக்கர்கள் கொடுத்த விளம்பரமாகத்தான் இருக்கின்றன. அதனாலென்ன என்கிறீர்களா? புரோக்கர் மூலம் வரும் பிரச்சனைகள் அடுத்து பார்க்கலாம். முடிந்தவரை வீட்டு உரிமையாளர் கொடுத்த விளம்பரமாகப் பார்த்து போன் செய்யவேண்டும், விளம்பரத்திலேயே போட்டிருக்கும் புரோக்கர்கள் வேண்டாமென்று.

முதலில் நமக்கு தேவையான ஏரியாவில் வந்திருக்கும் விளம்பரங்கள் அனைத்தையும் அலச வேண்டும். ஏதாவது விளம்பரம் நமக்குத் தோதாக இருக்கும்பட்சத்தில் அதை பேனா கொண்டு வட்டமிட்டுக்கொண்டே வரவேண்டும். தேர்ந்தெடுத்தல் முடிந்த பின் ஒவ்வொருவருக்காக போன் செய்ய வேண்டும். பேசும்போது நமது பெயரைச் சொல்லி அறிமுகம் செய்துவிட்டு, அவர் கொடுத்த விளம்பரம் பற்றிச் சொல்லிப் பேச ஆரம்பிப்பது நல்லது. சிலர் பல இடங்களில் விளம்பரம் கொடுத்திருப்பர். சிலர் வீட்டு போன் நம்பரைக் கொடுத்திருப்பார்கள், வீட்டில் விளம்பரம் கொடுத்ததே தெரியாத மனைவியோ (அல்லது கணவனோ) போன் எடுத்தால், தலையும் புரியாமல் காலும் புரியாமல் ஒரு கால் வீணாகும் வாய்ப்பு உள்ளது.
சரியான புரிதலுக்குப் பின் வீட்டைப் பற்றிப் பேச ஆரம்க்கலாம். வீடு காலியாக இருக்கும்பட்சத்தில் நமது தேவைகள் அனைத்தையும் சொல்லி அதற்கேற்றார்போல வீடு இருக்கிறதா என உறுதி செய்துகொண்டு பின் நேரில் சென்று பார்க்க நேரம் கேட்கவேண்டும். சில நேரம் போனிலேயே தெரிந்துவிடும் நமக்கு இந்த வீடு ஒத்துவராது என்று. உதாரணத்திற்கு, பார்க்கிங் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்று பதில் வரும். போய்ப் பார்த்தால் வீட்டிற்கு வெளியே தெருவில்தான் விடவேண்டியது இருக்கும். தண்ணி வசதி பற்றி கேட்டால், காலை மாலை வரும் என்று பதில் வரும். போய்ப் பார்த்தால் வீடு இரண்டாம் தளத்திலும் தண்ணீர் குழாய் முதல் தளத்திலும் இருக்கும். தண்ணீர் காலை 5 மணிக்கு வரும். ஆகவே எல்லாவற்றையும் தெளிவாகக் கேட்கவேண்டும்.

தேவைகள் சரியாக இருந்தால் நேரில் சென்று பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஒத்துவரவில்லையென்றால் வட்டம் போடு வைத்திருப்பதை அடித்து வைத்துக்கொள்ளவேண்டும். திரும்பத் திரும்ப ஒரே ஆளுக்கு போன் செய்வதைத் தவிர்க்கலாம். ஒரே விளம்பரம் வாரா வாரம் வரும். அதையும் கவனிக்க வேண்டும். சில நேரங்களில் முதலிலேயே சொல்லி விடுவார்கள், காலி இல்லை என்று. அப்போதும் அடித்துக்கொள்ளவேண்டும். நல்ல வீடு உடனேயே போய்விடும், அதற்கு எனது நண்பர்கள் போன்ற ஆட்கள்தான் காரணம்.

எனது நண்பர் ஒருவர் வீடு தேடும் அனுபவம் பற்றி சொன்னார். வியாழன் காலை 6 மணிக்கு பேப்பருடன் அந்த ஏரியாவுக்குச் சென்றுவிடுவார். இந்த மாதிரி ஓனர் கொடுத்த விளம்பரங்களுக்கு ஒவ்வொன்றாகப் போன் செய்து அப்போதே வந்து பார்க்க நேரம் கேட்பார். காலை என்பதால் எப்படியும் கிடைத்துவிடும். பெரும்பாலும் வீட்டு உரிமையாளர்கள் விரும்புவதும் காலை அலுவலகம் செல்லுவதற்கு முந்தைய நேரத்தைத்தான். சரியாக அமைந்துவிட்டால் அப்போதே முன்பணம் கொடுத்து வந்துவிடுவார். விளம்பரம் வந்த சூட்டோடு சூடாக வீடுகள் நிரம்பும் சூட்சுமம் இதுதான். அவரது நண்பர்களுக்கும் இப்படித்தான் பிடித்துக்கொடுக்கிறாராம். பின்பு நமக்கு எப்படி கிடைக்கும்?

இப்போது சில இணைய தளங்களும் இதுபோன்ற சேவையை அளிக்கின்றன. 99acres.com, indiaproperties.com, magicbricks.com, makaan.com, sulekha.com போன்றவை பயனளிக்கும் தளங்கள். இங்கும் புரோக்கர், ஓனர் விளம்பரங்கள் என்று தனித்தனியாக இருக்கும். நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து வாய்வழி விளம்பரம். நமக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி வைக்கலாம். அப்படியே வாய்வழியாகவே பரவி வீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நல்ல வீடுகள் கிடைக்காமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். பெரும்பாலும் நல்ல அபார்ட்மெண்டுகளில் பக்கத்துவீடு காலியாவது தெரிந்தால் மற்ற பக்கத்துவீட்டுக்காரர்கள் தமக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி, அந்த வீடு காலியாவதற்கு முன்பே பேசி முடித்துவிடுவார்கள். வீடு காலியாவதற்கு முன்னமே அது அடுத்தவர் வருவதற்கு ஏற்பாடாகிவிடும். அதனால் நண்பர்கள், தெரிந்தவர்கள், உடன் வேலை செய்பவர்கள் அனைவரிடம் சொல்வதால் ஒன்றும் குறைந்துபோய்விடாது. முடிந்தால் புலம்பலாம், அது பார்த்து நமது நண்பர்கள் கொஞ்சம் கூடுதல் முயற்சி செய்து வீடு கிடைக்க ஏற்பாடு செய்யலாம். வலைப்பூ இருந்தால் அங்கு விளம்பரமாகப் போடலாம். பதிவர்கள் யாரும் பார்த்து உதவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

-பெஸ்கி.

புரோக்கர் - இந்தப் புண்ணியவான் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். மேலும், பின்வரும் விசயங்கள் பற்றியெல்லாம் இந்தத் தொடரில் சொல்லலாம் என்றிருக்கிறேன். உங்கள் அனுபவங்கள் வைத்து மேலும் ஏதாவது சேர்க்கவேண்டுமா எனத் தெரியப்படுத்தவும்.

புரோக்கர் பிரச்சனைகள்
தெரு - பார்க்கிங்
தண்ணீர்
இணைப்புகள்
கடை வசதிகள்
அக்கம்பக்கம்
வீட்டின் தன்மை
வசதிகள் - துணி உலர்த்த, பார்க்கிங், ஏசி, மீட்டர், ஜன்னல், சமையலறை ஜன்னல், ஆணிகள், குளியலறை வசதிகள்
வீட்டு ஓனர்
முகவரி மாற்றங்கள்
வீட்டில் தேவையில்லாமல் சேரும் பொருட்கள்


Share/Bookmark
Read More!

சொந்த வீடும் வாடகை வீடும்

வாடகை வீட்டுல இருக்குறதுனால நன்மைகளும் இருக்கு, கஷ்டங்களும் இருக்கு. வீடு நமக்குப் பிடிக்கலைனாலோ, பக்கத்து வீட்டுக்காரங்களப் பிடிக்கலன்னாலோ, தெருவைப் பிடிக்கலைனாலோ, வாசப்படி பிடிக்கலைனாலோ வீட்ட மாத்த முயற்சி பண்ணலாம். அல்லது வேற நல்ல வீடு கிடைச்சா வீட்ட மாத்திக்கலாம். வேற நல்ல வேலை, வேற ஊர்ல கிடைச்சாலோ, இந்த வீட்டுல தண்ணி வரல, அல்லது தண்ணி சரியா போகல (இது தண்ணி வரலங்கறத விட பெரிய பிரச்சனை) அப்டி இப்டின்னு பல காரணங்களுக்காக வாடகை வீட்டுல இருக்குறவங்க மாத்திக்கலாம். ஆனா சொந்த வீடுன்னா? அப்படியே பேத்து எடுத்துட்டுப் போகவா முடியும்? சொந்த வீட்ட விட்டுப் போக முடியலங்கிறதுக்காகவே பல வாய்ப்புகளை இழந்தவர்கள் பலர். அப்படியே விட்டுப் போகவேண்டிய சூழ்நிலை வந்தால் வீட்டை வாடகைக்கு விடனும், அதப் பாக்கனும், வர்றவங்க சரியா வச்சுக்குவாங்களான்னு கவலைப் படனும், இன்னும் எவ்வளவோ இருக்கு. அப்படி இல்லைனா, மத்தவங்களை வீட்டுல விட்டுட்டு நாம மட்டும் தனியா வாழனும். ஆனாலும் பாருங்க, வாடகை வீடா சொந்த வீடான்னு கேக்கும்போது “சொந்த வீடு”ன்னு சொல்லிறதுல ஒரு கெத்து இருக்கத்தான் செய்யிது.

இருந்தாலும் வாடகை வீட்டுல இருக்குறவங்க ரொம்ப சந்தோசமானவங்கன்னு நினைச்சுடக்கூடாது. எங்க கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். வாடகை வீட்டுல இருக்குறவனோட மொத குறிக்கோள் ஒரு சொந்த வீடு வாங்கனும் என்பதாகத்தான் இருக்கும். அதுவும் தங்கமணி ஆசை அதுவாகத்தான் இருக்கும். நமக்கு ”யாதும் ஊரே, எங்கேயும் வீடே”ன்னு வாடகை வீட்டுல இருக்குறதுதான் பிடிச்சிருக்கு. ஆனா தங்கமணி அப்பப்ப சொந்த வீட்டப் பத்திப் பேசி அடிக்கிற தம்ம விட்டுடலாமான்னு உள் மனச யோசிக்க வைப்பாங்க. அதுலயும் சில நேரம், “அவங்க சொந்த வீடு வாங்கப் போறாங்களாம்” அப்படின்னு சொல்லும்போது காதையே கழட்டி வச்சுடலாம் போல இருக்கும். இருந்தாலும் கேக்குற மாதிரியே ஹ்க்கும் போட்டுக்கனும். இந்தப் பாயிண்ட மட்டும் நல்லா நோட் பண்ணிக்கனும், இல்லன்னா வாடகை வீடோ சொந்த வீடோ, எந்த வீட்டுலயும் நிம்மதியா இருக்க முடியாது.


பிடிக்கலைனா வீட்ட மாத்திக்கலாம். ஆனா வீட்ட மாத்தும்போது எவ்வளவு விசயங்களைக் கவனிக்கவேண்டியது இருக்கு தெரியுமா? சரியா விசாரிக்காம வந்துட்டோம்னா அவ்வளவுதான், உடனே மாத்திகிட்டெல்லாம் போக முடியாது. பின்ன? சாமான் சட்டியை எல்லாம் ஏத்தி எறக்குற கொடுமை எங்களுக்குல்ல தெரியும். இப்பல்லாம் பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் அப்டின்னு நிறைய கம்பெனிகள் வந்துடுச்சாம். நாம இது வரைக்கும் இப்படி யாரு கிட்டயும் போனது இல்ல. ”தம்பிகள் உடையான் வீடு மாத்த அஞ்சான்”. ஆனா அடுத்த தடவ பேக்கர்ஸ்தான். அதையும் ஒரு தடவ பாத்துடலாம்.

வீடு மாறுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் புதிதாகப் போகும் வீடு நம் மனதிற்குப் பிடித்ததாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வீடு கிடைப்பது மிகவும் கடினம். அவ்வாறான வீட்டைத் தேடுவதும் மிகவும் கடினம். அவ்வாறு தேடும்போது எனக்கு வந்த பல பிரச்சனைகள், அனுபவங்களில் இருந்து இந்தத் தொடரை எழுதுகிறேன். வாடகை வீடு மாறும்போது என்னென்ன பிரச்சனைகள் வரலாம், என்னென்ன விசயங்களை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதே இந்தத் தொடர். முதலில் வீட்டு புரோக்கரிடம் இருந்து ஆரம்பிக்கலாம்...

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

சத்தம் போடாதே, நிசப்தம் கூடாதே!

வழக்கமாக வீட்டிற்கு வந்தவுடன், நேரமிருப்பின் ஏதாவதொரு படத்தைப் போட்டுப் பார்ப்பது வழக்கம். நல்ல தெளிவான சப்தம், ஆக்சன் மற்றும் த்ரில்லர் காட்சிகளில் வீடே அதிரும். இதுநாள் வரை எனக்கு அதில் பிரச்சனை இல்லை, இப்போது தங்கமணி. வழக்கமாக இந்த நேரங்களில் தங்கமணி சமையலறையில் இருப்பார். இங்கே சரவுண்டு சவுண்டு அதிகமாகும்போதெல்லாம் அங்கிருந்து டிடிஎஸ் எபெக்டில் வரும். “ஏங்க இப்படி சத்தமா வைக்கிறீங்க, கொஞ்சம் கொறச்சு வச்சுப் பாத்தா ஆவாதா? எத்தன வாட்டிதான் சொல்றது?”.

நான் என்ன வேண்டுமென்றா இப்படிச் செய்கிறேன். பேசும்போது சரியாகத்தான் இருக்கிறது, சண்டை வருபோதுதான் அதிகமாகிறது. கிட்டத்தட்ட எல்லா படத்தின் சவுண்டு எபக்ட்டுகளும் இப்படித்தான் இருக்கின்றன. சரி, சத்தத்தைக் குறைத்து வைத்துப் பார்க்கலாம் என்றால் பேசுவது கேட்காது. சண்டை வரும்போது மட்டும் எழுந்து சத்தத்தைக் குறைப்பது படத்தின் மீது படிந்திருக்கும் ஊடுருவலைக் குறைக்கிறது. டிவியில் பார்த்தால் பரவாயில்லை, ரிமோட் உபயோகித்து மாற்றிக்கொள்ளலாம், இது கம்ப்யூட்டர். படத்தில் சண்டை வரும்போதெல்லாம் வீட்டிற்குள்ளும் சண்டை வரும் அபாயம் இருந்தது.

இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. இதற்கு மாற்று வழி என்ன செய்யலாமென யோசித்தேன். கீபோர்டு வேறு பழையதாகி மாற்றும் தருவாயில் இருந்தது. ஒரு யோசனை! வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் வாங்கி விடலாம் என யோசித்தேன். ஏனெனில், மவுசையோ கீபோர்டையோ படம் பார்க்கும்போது மடியில் வைத்துக்கொள்ளலாம். சத்தம் கூடும்போது குறைத்துக்கொள்ளலாம் என்பது யோசனை.

ஒரு வழியாக பட்ஜெட் போட்டு வயர்லெஸ் கீபோர்டு, மவுஸ் வாங்கியாச்சு. அப்புறம் படம் பார்க்கும்போது சத்தத்தைக் குறைப்பது ஒன்றும் பெரிய விசயமாகத் தெரியவில்லை. ஆனால் திருப்தியில்லை. சில நேரங்களில் சத்தத்தைக் குறைக்க மறந்துவிடுகிறேன். சத்தத்தைக் குறைக்கும் மனநிலை கொண்டால் படத்தில் ஒன்ற முடியவில்லை. எல்லாம் சரியாகச் செய்தாலும் சண்டை வருபோது அதிராமல் இருப்பது என்னவோ இழந்ததைப் போன்ற உணர்வைத் தந்தது. “திட்டம் ஆ” பற்றி மனது யோசிக்கத்தொடங்கியது.

திட்டம் ஆ, திட்டம் அ வை விட அதிக பட்ஜெட்டில் வரும்போலத் தோன்றியது. ஏற்கனவே இதற்கு பட்ஜெட் போட்டு தங்கமணியிடம் வாங்கிக் கட்டியிருப்பது அவ்வப்போது திட்டம் ஆ வை குழிக்குள் தள்ளும். இருந்தாலும் அடுத்தது தயார். வயர்லெஸ் ஹெட்போன். அதை வாங்குவதற்குத் திட்டமிட்டபோது இன்னோரு யோசனை. திட்டம் ஆ, திட்டம் ஆ-2 ஆக மாறியது. வயர்லெஸ் ஹெட்போன் வாங்கினால் இதற்கு மட்டும்தான் உபயோகிக்க முடியும். அதுவே ப்ளூடூத் ஸ்டீரியோ ஹெட்செட் வாங்கினால் மொபைலுக்கும் உபயோகிக்கலாம். அப்படியே ஒரு ப்ளூடூத் டாக்கில் வாங்கி கம்ப்யுட்டரில் பொருத்தி, இரண்டையும் இணைத்து படமும் பார்க்கலாம்.

இதைப் பற்றி நண்பர்களிடம் விசாரித்தேன். எவரும் மொபைலுக்கு வாங்கிய ப்ளூடூத் ஹெட்செட்டை கம்ப்யூட்டருடன் இணைத்த அமைப்பை செய்து பார்த்ததாகத் தெரியவில்லை. நாம்தான் முதன்முதலாக முயற்சி செய்ய வேண்டுமா? பரவாயில்லை, முயன்று பார்க்கலாம் என அடுத்த மாதத்துக்கான பட்ஜெட்டில் திட்டம் போட்டு வைத்தேன். ஈபேயில் வாங்கிக் கொண்டிருக்கும்போதே பார்த்த தங்கமணி கேட்டார், கண்டிப்பாக இதற்காக் நீ என்னைப் பாராட்டுவாய் என்று ஒரு பிட்டையும் போட்டு வைத்தேன், என்னவென்று சொல்லவில்லை.

திட்டத்தைச் முதன்முதலாய்ச் செயல்படுத்தும் நாள் வந்தது. வழக்கம்போல தங்கமணி சமையலறையில் இருந்தார். அனைத்தையும் அமைத்து சோதித்துப் பார்த்தேன். நன்றாக வேலை செய்தது. மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி. தங்கமணியிடம் சொல்லி பெருமைபட்டுக்கொள்ளலாம். அமைதியாகப் படத்தை ஆரம்பித்தேன்.
”சத்தம் போடாம அப்படி என்னதான் பண்றீங்க?”, தங்கமணி.
நான் படத்தை நிறுத்திவிட்டு, “பாத்தியா, இந்த ப்ளூடூத் ஹெட்செட்ட கம்ப்யூட்டரோட கனெக்ட் பண்ணிருக்கேன், நா நல்லா சத்தத்தோட படம் பாப்பேன், சத்தம் வெளியவும் கேக்காது, அப்படியே இத போனுக்கும் யூஸ் பண்ணிக்கலாம், எப்டி ஐடியா?”, என்றேன் பெருமையாக.
வித்தியாசமாகப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார். நான் மீண்டும் படத்தில் ஆழ்ந்தேன். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார் தங்கமணி,
“என்னங்க, சத்தமே இல்லாம என்னமோ மாதிரி இருக்குங்க, நீங்க சத்தமா வச்சே படம் பாருங்க. வீடு அமைதியா நல்லாவே இல்ல, சரியா?”, என ஹெட்செட்டைக் கழட்டிவிட்டு மீண்டும் சமையலைறைக்குள் சென்றார்.

அடுத்து, திட்டம் இ.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

எந்திரனும் எனது பார்வைகளும்


எந்திரன் எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்த படம். எதிர்பார்ப்பா, அப்படி என்ன எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம்? ஒரு சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக, சினிமா விரும்பியாக, இயக்குனர் ஷங்கரின் ரசிகனாக? அல்லது இப்படி, ரஜினி படம் சொதப்பவேண்டும் என்ற எண்ணத்துடன்? கேப்புக்கு கேப்பு விளம்பரம் போட்ட சன் பிக்சர்ஸ் மேல் உள்ள வெறுப்பில் கவுந்து போகட்டும் என்ற எதிர்பார்ப்பில்? இருக்கலாம். அனைத்தும் ஒரு எதிர்பார்ப்பே. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சன் பிச்சர்ஸின் எதிர்பார்ப்பு மட்டும் நன்றாக ஈடேறியிருக்கிறது. மற்ற எல்லாம் அவுட்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் துவக்கினார்கள் ரஜினி ரசிகர்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்னமே அபிஷேகம், வெடி, குத்தாட்டம் என களை கட்டியது திரையரங்கு. கதவைத் திறந்து விட்டதும் ஒரே தள்ளுமுள்ளு, கூட்டத்தை அடக்கப் பாடுபட்ட போலீசை நினைத்தால் பாவமாக இருந்தது. ரசிகர்கள் வரிசையில் வர அவ்வளவு அடம் பிடித்தனர். ஒரு வழியாக உள்ளே சென்று படத்தை ஆரம்பித்தாயிற்று. ரஜினி வரும் நேரத்தில் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் தியேட்டரே அதிர்ந்தது. மேலும் பாடல்களுக்குக் கூட ஆட்டங்கள் அவ்வளவாக இல்லை, காரணம் இவை அந்த மாதிரிப் பாடல்கள் இல்லை.

ஹீரோ ரஜினி - நிச்சயமாக ஒரு ரசிகன் எதிர்பார்த்து வந்த தலைவர் இவர் இல்லை. என்ன செய்வது என்றிருந்த வேளையில் கலாபவன் மணியைக் கண்டு ஓடும் ஹீரோ. நிச்சயம் வெறுத்திருப்பார்கள். ஏதோ, உடைந்த மனதையெல்லாம் ஒட்டிச் சரிசெய்தார் ச்சிட்டி. வில்லன் ரஜினி மட்டும் இல்லையென்றால் திரையரங்கு காலியாகியிருக்கும் என்றே தோன்றியது. வில்லன் குறும்புகள் அட்டகாசம். இதேபோல்தான் சந்திரமுகியும் இருந்ததாக உணர்கிறேன். ரஜினி பாதி படத்திற்கு மேல் இருக்கவே மாட்டார். நம்ம ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு ஆக்கம் அது. ஆனால் கடைசியில் வந்த வேட்டையன் மொத்தத்திற்குத் திருப்திப்படுத்தியதால் ரசிகர்கள் மனது குளிர்ந்தது. அதுபோலதான் இதுவும். மேலும் சிவாஜியில் வில்லத்தனமான மொட்டை ரஜினியையும் மறக்க முடியாது. இதுதான் உண்மை, ரஜினியை ஹீரோவாக இரண்டு மணி நேரம் பார்ப்பது, வில்லனாக அரை மணி நேரம் பார்பதற்குச் சமம். என்னாஆஆ வில்லத்தனம்?

அடுத்து இயகுனர் ஷங்கர். முந்தைய படங்களில் பொதுநல வாக்கில் கருத்துக்களைப் புதைக்கும் போக்கு இப்படத்தில் குறைவாகவே தெரிகிறது. ஒரு சாதாரண சினிமா விரும்பியும் விரும்புவது இதுதான். ஒரு பொழுதுபோக்கு. சில லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றனதான். ஆனால் ஒட்டுமொத்த படத்தின் ஆக்கத்தையும் ஒப்பிடும்போது, விலகியே இருக்கின்றன. கிராபிக்ஸ் அமைப்பில் தமிழ் சினிமா அடுத்த கட்டத்தை எட்டிவிட்டது என சொல்ல வைத்திருக்கிறார். இது வழக்கமான ஷங்கர் படம் மாதிரியும் தெரியவில்லை, அவருக்கான ஒரு புதிய கதவாக இந்தப் படம் இருக்கிறது. அவருக்கு மட்டுமல்ல, தமிழ்/இந்திய சினிமாவுக்கே இது ஒரு புதிய கதவு. இனி வரும் படங்களில் ஹாலிவுட் கிராபிக்ஸ் குழுவின் உதவியோடு பல பிரம்மாண்ட படைப்புகளைக் காணலாம் என எதிர்பார்க்கிறேன். இந்தப் படம், சில ஷங்கர் ரசிகர்களை கொஞ்சம் அதிகமாகவே திருப்திப்படுத்தும் என்பது எனது கணிப்பு.

சன் பிச்சர்ஸ், வென்றுவிட்டார்கள் என்றே சொல்லலாம். வழக்கமாக அதிருப்தியை ஏற்படுத்தும் விளம்பர உத்தியை இதிலும் கையாள்கின்றனர் என்று எல்லோராலும் பேசப்பட்டது. எந்திரன் இசை வெளியீட்டு விழா, அதன் ஆக்கம் என மற்ற விசயங்களிலேயே கணிசமான கல்லா கட்டுகிறது. இது கொஞ்சம் ஓவர் என்று பலர் சொன்னாலும், இது வழக்கமான சன் பிச்சர்ஸின் விளம்பர உத்திதான். முதலில் இடைவேளைக்கு இடைவேளை விளம்பரம் காட்டப்பட்டது. பின்பு படக்குழுவினர் பேட்டி என்று போனது. கடைசியாக தில்லாலங்கடி இசை வெளியீடு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்படி ஒவ்வொரு படத்திற்கும் புதுப்புது விளம்பரப் பாணியைக் கையாள்வது சன் டிவியின் வழக்கம்தான். அதையும் ஒரு நிகழ்ச்சியாகப் போட்டு, படத்திற்கும் விளம்பரமும் ஆச்சு, அதில் வரும் விளம்பரங்களுக்கு காசும் ஆச்சு என முயற்சிகள் தொடர்கின்றன.

இந்த விளம்பர முயற்சிகளில் எந்திரனில் அடுத்த படிக்கு ஏறியிருக்கின்றனர். பிரமாண்ட இசை வெளியீட்டு விழா, அதன் ஒளிபரப்பு, அதன் ஆக்கம், டிரைலர் வெளியீட்டு விழா - இப்படி புதுப்புது விளம்பரங்கள். வழக்கம்போல நம் மக்கள் அடுத்து போஸ்டர் வெளியீட்டு விழா என்று கிண்டலடித்தார்கள். ஆனால் சன், இசை வெளியீட்டு விழா மறு ஒளிபரப்பு என்று நம் மக்கள் யோசிக்காத ஒன்றைத் தூக்கி வைத்தார்கள். இதுதான் சன், நாம் யோசிக்கும் அடுத்த படிக்குச் சென்று விடுவார்கள். இதேபோல, சன் தலைப்புச் செய்திகள் என பஸ்ஸில் ஒரு லிஸ்ட் போட்டேன். “எந்திரன் திருட்டு விசிடி விற்றவர் கைது” என்பது அதில் ஒன்று. அவர்கள் ஒரு படி மேலே போய், “திருட்டு விசிடி விற்ற கடை ரசிகர்களால் சூறையாடப்பட்டது” என்றே சொல்லிவிட்டார்கள், இதை செய்தியாகவும் கொள்ளலாம்...

இப்படி அடித்து ஆடினால் எந்தப் படம்தான் ஓடாது? ஆனால், எந்திரன் இதனால்தான் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது. ஏன், இதெல்லாம் இல்லாமல் சந்திரமுகி ஓடவில்லையா? இந்த விளம்பர யுத்திகளிம் தாக்கம் இந்தப் படத்தைப் பொறுத்தவரை யூகிக்க முடியாததாகவே தோன்றுகிறது. சன் பிச்சர்ஸைப் பொறுத்தவரை லாபம், லாபம், லாபம்.

மொத்தத்தில் ஷங்கர் வென்றிருக்கிறார், சூப்பர் ஸ்டாரின் உதவியுடன். இந்த வில்லன் கதாப்பாத்திரத்தின் வெளிப்பாடு வேறு நடிகர்கள் நடித்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். படம் பப்படமாகும் என்றவர்களின் எண்ணத்தில் புழுதிப் புயல். வசூல் ரீதியாக மட்டுமல்ல, மக்களின் விருப்பத்திலும் வெற்றிபெரும் இந்தப் படம்.

Share/Bookmark
Read More!

தாதர் எக்ஸ்பிரசும் குழம்(/ப்)பிய ரயில்வேயும்


மும்பையிலிருந்து நான் மட்டும் தனியே வந்துகொண்டிருந்தேன். தாதர்-சென்னை எக்ஸ்பிரஸ், கிட்டத்தட்ட 24 மணி நேரப் பயணம். சென்னையிலிருந்து அதிகபட்சம் 12 மணி நேரம் மட்டுமே பயணம் செய்து பழக்கப்பட்டிருந்த நமக்கு இந்தப் பயணம் புதுசு. அதுவும் தெற்கு நோக்கி மட்டுமே பயணம், இரவு தூங்கி எழுந்தால் ஊர் வந்திருக்கும். ஆனால் இங்கு மூன்று வேளைச் சாப்பாட்டைப் பார்க்கவேண்டியது இருக்கும். அதாவது பரவாயில்லை, மும்பை போகும்போது பகலில் நிம்மதியாகப் பயணம் செய்யவே முடியாது, அதுவும் ஆணாக இருந்தால் முதல் பயணம் விழி பிதுங்கி விடும்.

பிச்சைக்காரர்கள் வரிசையாக வந்துகொண்டே இருப்பார்கள், பிச்சையிடுவதே வெறுத்துவிடும். ஒரு சிலர் பரவாயில்லை, தரையைத் தூய்மை செய்துவிட்டு காசு கேட்பார்கள். அதிலும் கொடுமை ஒன்று இருக்கிறது, நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல, பிடுங்கும் கூட்டம், அரவாணிகள். அவர்கள் வந்தால் தனியே வந்திருக்கும் அல்லது இள வயது ஆண்கள் பாடு திண்டாட்டம்தான். ஐந்து ரூபாய் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். அதுவும் கேட்காமலேயே கொடுத்துவிட்டால் அதிகம் கேட்கும். சில நேரம் சில்லரை இல்லாமல் மாட்டிக்கொண்டால், அங்கே இங்கே கையை வைக்கும், பாவாடையைக் கூட தூக்கும் அபாயம் உண்டு. அடுத்த முறை செல்லும்போது ஒரு 100 ரூபாயை மாற்றி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்துவிட்டேன்.

மேலும், பொது வகுப்புப் பயணிகள், படுக்கை வகுப்புக்குள் வந்து கிடைக்கும் இடத்தில் அமர்ந்துகொள்வர். சிலர் சொல்வது கேட்டு சென்று விடுவர், சிலர் என்ன சொன்னாலும் அசைக்க முடியாது. அவரவர் இஷ்டம்தான். அதிலும் சிலர் குழந்தையுடனும், வயதானவர்களுடனும் வந்தால் நாமாகவே இடம் கொடுக்கும் சூழ்நிலையும் உருவாகும். என்ன ஒன்று, சட்டி பொட்டியைப் பார்த்துக்கொண்டே முழித்திருக்க வேண்டும். இப்படியான பகல் நேரப் பயணத்தில் சாப்பிடுவதற்கு விதவிதமான, என்னவென்றே தெரியாத ஐட்டங்கள் வந்துபோகும். சாப்பிடுவதா வேண்டாமா என்று யோசித்து யோசித்தே நேரம் போய்விடும்.

ஒரு வழியாக சென்று சேர்ந்தாயிற்று. நல்ல மழை. வெளியில் அதிகம் செல்ல முடியவில்லை. ஒரு வழியாக திரும்பும் நாள் வந்தது. வரும்போது பரவாயில்லை, தேர்டு ஏ.சி. யில் டிக்கட் போட்டிருந்தேன். ஏறியது இரவு நேரம். ஒரு குடும்பம் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக என்னையும், என்னருகில் இருந்த இன்னொரு இளைஞரையும் இன்னொரு இடத்திற்குப் பந்தாடியது. நானாவது பரவாயில்லை, அவர் ஏற்கனவே ஒரு இடத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்டவர். ஒரு வழியாக இரவு உணவு முடிந்து அவரவர் இடத்தில் முடங்கிப் படுத்தோம் அடுத்த நாள் நடக்கப்போகும் கூத்துக்கள் தெரியாமலேயே.

பொழுது புலர்ந்து எவ்வளவு நேரம் ஆனது என்பது சத்தத்திலிருந்தும், அங்கு குழுமியிருந்த மணத்திலிருந்தும் தெரிந்தது. காலை உணவு நேரம். நமக்கு எதுக்கு இதெல்லாம், நேராக மதிய உணவில் பார்த்துக்கொள்ளலாம் என அப்படியே இருந்துவிட்டேன். இரவு எட்டு மணிக்குப் போய்ச் சேர்ந்துவிடும். எங்கேயோ நின்றுகொண்டிருந்தது. சிறிது நேரம் தூங்கி எழுந்து பார்த்தேன் அப்போதும் நின்றுகொண்டே இருந்தது. எழுந்து விசாரித்ததும் முதல் இடி விழுந்தது.

இப்போது ரயில் நிற்கும் இடம் குண்டக்கல். அதற்கு மேல் செல்ல முடியாது. ஏனென்றால் சற்று தொலைவில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டுவிட்டது. சில செக்கச்செவேர் என்றிருக்கும் குடும்பங்கள் தங்களது பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தனர். அவர்களெல்லாம் திருப்பதி செல்லும் பக்தர்களாம். வடக்கிலிருந்து இவ்வளவு பேர் திருப்பதி நோக்கிச் செல்வதைப் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் ரேணிகுண்டாவில் இறங்கிச் செல்லவேண்டியவர்களாம். அருகில் இருந்த இளைஞர்தான் சொன்னார்.

அவர் ஒரு முஸ்லீம் இளைஞர். பெயர் XXXகலாம். பேரைக் கேட்பதற்கு முன்பே கணித்துவிடலாம், அந்த முகமும், நிறமும், மீசையில்லாத தாடியும் அப்படி. 24 வயது இருக்கும், ஒல்லியான உருவம். சிரித்த முகம், அனைவரிடமும் சீக்கிரமே பழகி விடுகிறார். துபாயில் வேலை, ஒரு வருடத்திற்குப் பின் வீட்டிற்குச் செல்கிறார். நிறைய பேசிக்கொண்டே வந்தார், நிறைய கதைகள் சொன்னார் அவர், அனைவரிடமும்.

மேலும் சொன்னார், இதற்கு மேல் போக முடியாதாம், ரயில் அப்படியே வந்த வழியே திரும்பிச் சென்று, பின்பு செகுந்திராபாத் சென்று ஒரு வழியாகச் சுற்றி சென்னை சென்று சேருமாம், மறுநாள். எனக்கு கிர்ர்ர்ர் என்று சுற்றியது. 24 மணி நேரத்தை நினைத்தாலே எரிச்சலாய் இருக்கும். இப்போது அதற்கும் மேலேயா? ஏசி வேறு நின்றுவிட்டது, எப்போது கிளம்பும் எனத் தெரியாமல் வெளியே நடந்துகொண்டும், பேசிக்கொண்டும், அவ்வப்போது ஆங்காங்கே அமர்ந்துகொண்டும் பொழுதைக் கழித்தோம். திருப்பதி செல்பவர்கள், தங்களது பொருட்களை பிலாட்பாரத்தில் வைத்து விட்டு, விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

திடீரென திருப்பதி பார்ட்டிகள் மறுபடியும் பொருட்களை உள்ளே அள்ளிப் போட்டனர். விசாரித்தோம். ரயில் கிளம்பப் போகிறதாம், சுற்றிச் செல்லும் வழியில் குடூர் என்ற இடத்தில் இறக்கிவிடுவார்களாம், அங்கிருந்து அவர்கள் திருப்பதி செல்லலாமாம். நிறைய இடங்கள் காலியானதே, கொஞ்சம் ஃப்ரீயாகப் போகலாம் என்றிருந்த எனது எண்ணத்தில் மீண்டும் இடி. மீண்டும் கிளம்பியது, எப்போது சென்று சேருவோம் என்று தெரியாமலேயே.

வண்டி கிளம்பியதும் ஏ.சி. வேலை செய்தது. அதற்குள் நமது தமிழர்கள் ஆங்காங்கே அறிமுகம் ஆகியிருந்தார்கள். நானும் அந்த கலாமும் அனைவரிடமும் அறிமுகம் ஆகியிருந்தோம். ஆளாளுக்கு கதைகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்தோம். புத்தகங்கள், சார்ஜர்கள், நொருக்குத்தீணிகள், எண்ணங்கள் இடம் மாறிக்கொண்டிருந்தன. மதிய சாப்பாட்டை முடித்த பிறகு ஒரு தூக்கம். பின்பு செகுந்திராபாத் வந்து சேர்ந்தோம் இரவு நேரம்.

எதிர்ப் பக்கம் அப்பர் பெர்த்தில் இருந்த மாமிக்கு வயது 50 இருக்கும், அவரது கணவரோடு வந்திருந்தார். இவர் ஒரு மூலையில் அவர் ஒரு மூலையில், அவ்வப்போது வந்து பேசிச் செல்வார். அவர்களது உறவினர் செகுந்திராபாத்தில் இருந்திருக்கிறார், பார்க்க வந்தார் இட்லிகளுடன். அவர்களுக்கு அமர்ந்து பேச எங்களது இடங்களைக் கொடுத்துவிட்டு பிலாட்பாரத்தில் இறங்கி வேடிக்கை பார்த்தோம். பிரியானி வியாபாரம் அமோகமாக நடந்துகொண்டிருந்தது. எனக்குச் சாப்பிடவே பிடிக்கவில்லை. இந்நேரம் போய்ச் சேர்ந்து ஒரு பீரைப் போட்டுவிட்டு படுத்திருக்கலாமே என்ற நிராசைகள் அலைமோதின, இரவு எப்படி தூங்கப்போகிறேன் என்ற பயம் இருந்தது. கலாம் அவர் பங்குக்கு ஏதோ வாங்கி வைத்துக்கொண்டார். நான் பிரெட்டும் தண்ணீரும் வாங்கிக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் வந்த மாமி, எங்களை அழைத்து அவர்கள் வைத்திருந்த இட்லியைச் சாப்பிடச் சொன்னார். முதலில் மறுத்தேன், விடாப்பிடியாக இருந்தார். சரி என சாப்பிடலானோம். அவருக்கு உதவி செய்ததால் எங்களைப் பிடித்துவிட்ட்டதெனத் தோன்றியது. இட்லியும், மிளகாய்ப்பொடியும், ம்ம்ம்ம் அருமை. காய்ந்துபோய்த் தூங்க வேண்டிய நாங்கள் அருமையான இட்லியுடன் இரவை முடித்தோம். மீண்டும் பிலாட்பாரம். பல மணி நேரங்கள் கழித்து மீண்டும் பயணம் துவங்கியது. வாங்கி வைத்திருந்த இதழ்கள் அனைத்தையும் படித்தாயிற்று, மேலும் மூவர் உட்பட. மீண்டும் தூக்கம்.

இரண்டாவது சூரிய உதயம், அதே ரயிலில். ரயில் ஓடிக்கொண்டுதான் இருந்தது. சந்தோசம். ஏதோ ஒரு புதிய உற்சாகம் என்னுள் இருந்ததை உணர்ந்தேன், அதே உற்சாகம் மற்றவர்களிடமும் இருந்தது. காலை உணவு ஏதோ முடிந்தது. மீண்டும் அரட்டை. எப்படியும் மதியம் போய்ச் சேர்ந்துவிடுவோம் எனச் சொன்னார்கள். எதிரே இருந்த கல்லூரி மாணவன் ஒருவன் PSP ஒன்றை வைத்திருந்தான், கேட்டவர்களிடம் அதைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தான். அவன் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன். பூர்வீகம் தமிழ், வளர்ந்தது ஆந்திரா, இப்போது மும்பையிலிருக்கும் அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டு வந்துகொடிடுக்கிறான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்தும் பேசுகிறான். சில ஹிந்திக்காரர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு போன் செய்து லேட்டாகிறது என்பதை சொல்வதற்கும், பதில் பெறுவதற்கும் அவனையே நாடினர், ஏனெனில் எதிர்ப்பக்கம் தெலுங்கில் மட்டுமே பேசியதாம். அன்று காலை கல்லூரிக்குச் செல்லவேண்டிய அவன், இந்தத் தாமத்தால் செல்ல முடியாமல் பயணித்துக்கொண்டிருக்கிறான்.

அந்த உற்சாகத்தைக் குலைக்கும் வகையில் மீண்டும் ஒரு இடி. திடீரென்று ஆங்காங்கே பரபரப்பானார்கள், சன்னல்கள் வழியே வெளியே பார்த்து ஒருவருக்கொருவர் புலம்பினார்கள். திருப்பதி செல்பவர்களை இறக்கி விடுவதாகச் சொன்ன குடூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் தொடர்ந்து ரயில் சென்றுகொண்டிருந்ததே இதற்குக் காரணம். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தார்கள், நாங்களும்தான். சிறிது தூரம் சென்று திடீரென ரயில் நின்றுவிட்டது, யாரோ அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்திருக்கவேண்டும்.

நின்ற இடம் ரயில் நிலையத்திலிருந்து சற்று தொலைவில், சுமார் இரண்டு கிலோமீட்டர் இருக்கும். கற்களும் முட்செடிகளுமாய் இருந்தது. மழை பெய்து பூமியெல்லாம் ஈரம், ஆங்காங்கே தண்ணீர், மந்தமான வெளிச்சம், சிறிது தூரல். திருப்பதி செல்லும் குடும்பங்கள் அவரவர் மொழியில் புலம்பியவாறே பொருட்களுடன் இறங்கினர். பிலாட்பாரம் இல்லாத அந்த இடத்தில், வயதானவர்களும் பெண்களும் இறங்க மிகவும் சிறமப்பட்டனர். நாங்கள் சிலர் அவர்களுக்கு உதவி செய்தோம். சாரை சாரையாக, எல்லா பெட்டிகளில் இருந்தும் மக்கள் இறங்கி ஊருக்குள் நடக்கலாயினர். அந்தத் தூரலில் அழகான பெண்கள் சோகமாக நடந்து செல்வது மனதை ஏதோ செய்தது. நிறிது நேரம் அப்படியே நின்றபின் ரயில் நகரத்தொடங்கியது, பின்னோக்கி.

ரயில் அப்படியே பின்னோக்கிச் சென்று நிற்காமல் சென்ற குடூர் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. வழக்கம்போல் இறங்கி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். ரயில் நிலைய அதிகாரியுடன் ஒரு குடும்ப உறுப்பினர்கள் மிகவும் ஆக்ரோசமாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன். மொழி தெரிந்தவர்கள் அருகே சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

திடீரென சில கேமராக்கள் ஓடி வந்தன. அங்கே வாக்குவாதம் செய்தவர்களுடன் பேசி, பேட்டி எடுத்தனர். சிறிது நேரத்தில் அந்த வாக்குவாதம் செய்த கும்பல் பயங்கரமாக குதூகலித்துக் கொண்டாடியது. இது அடுத்த இடி. அவர்கள் கேட்டுக்கொண்டபடி மீண்டும் சுற்றி ரேனிகுண்டா செல்லுமாம் ரயில். அப்படிச் செல்வதானால் இன்னும் ஒரு நாள் ஆகலாம் சென்னை செல்ல. ஒரு பக்கம் கேமராக்கள் சூழ பரபரப்பான பேட்டிக்கள் ஓடிக்கொண்டிருந்தன, அவரவர் கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தனர். இன்னும் இரண்டு மணி நேர தூரத்தில் சென்னை, என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்போதுதான் அந்தக் கல்லூரி மாணவன் சொன்னான். சென்னைக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இந்த நிலையம் வழியே செல்லுமாம். இப்போது சென்னை செல்லும் மக்கள் அடித்துப் பிடித்து எங்களது பொருட்களை இறக்கினோம். ரயில் நிலைய அதிகாரியிடம் எங்களது டிக்கட்டிகளைக் கொடுத்து கையொப்பமும் சீலும் வாங்கிகொண்டோம். அந்த ரயிலுக்கு டிக்கட் எடுக்கவேண்டியதில்லை.

கொடுமையிலும் கொடுமையாகத் தெரிந்தது. குண்டக்கல்லில் இறங்கிய திருப்பதி செல்பவர்களை, குடூரில் இறக்கி விடுகிறேன் என ஏற்றி வந்து நிறுத்தாமல் சென்றது எப்படி என்றே தெரியவில்லை. அவர்களில் பலர் இறங்கி ஊருக்குள் சென்றுவிட்டனர். அங்கு வாதாடியது ஒரே ஒரு குடும்பம் மட்டுமே. அவர்களுக்காக ஒரு ரயிலையே திருப்பி விடுவதா? இவ்வளவுக்கும் திருப்பதி செல்லும் இன்னோரு ரயில் அடுத்த பிலாட்பாரத்திலேயே நின்றுகொண்டிருந்தது. இருந்த கொஞ்ச பேரை அந்த ரயிலில் ஏற்றி நேரே திருப்பதிக்கே அனுப்பியிருக்கலாம். சில பேருக்காக, சென்னை செல்லவேண்டிய பல பேர் இறங்கி நின்றோம். பெரும்பாலான வெற்றுப் பெட்டிகளுடன் அந்த ரயில் வந்த வழியிலேயே திரும்பிச் சென்றது. அதில் எத்தனை சென்னை செல்பவர்கள் தெரியாமல் சென்றுகொண்டிருந்தார்களோ, அந்த ரயில் எபோது சென்னை வந்து சேர்ந்ததோ தெரியவில்லை.

நாங்கள் ஒரு வழியாக சென்னை செல்லும் அந்த ரயிலைப் பிடித்து ஏறி அமர்ந்தோம். சிறிது நேரம் ஒரு வித அமைதி நிலவியது அனைவரிடமும். பின்பு வழக்கம்போல அரட்டைதான். சென்னை வந்ததும் அனைவர் முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சி இருக்கிறதே, பார்க்கப் பார்க்க நமது மகிழ்ச்சி கூடியது. சரியாக விலக்காத பல்லைக் காட்டிக்கொண்டு சந்தோசமாகக் கை குலுக்கிப் பிரிந்து சென்றோம். எனக்குள் நினைப்பெல்லாம், இன்னொரு முறை இவர்களில் எவரையாவது பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும் அந்த சந்திப்பு?

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

எக்மோர் இரயில் நிலையமும் ஒரு பயண அனுபவமும்

முதன்முறையாக எக்மோர் இரயில் நிலையம் சென்றிருந்தபோது பிரமித்துப் போனேன், எவ்வளவு இரயில்கள், அத்தனையும் சரியாக வருகின்றன போகின்றன, அதற்கான அறிவிப்புகளும் சரியாக வருகின்றன என்று. அதன்பின் பல தடவைகள் சென்றிருந்தபோதும் ஏதும் குறைபாடு கண்டதில்லை.

ஆனால் நேற்று,
மும்பையிலிருந்து வந்த தங்கமணியை அழைத்துவரப் போயிருந்தேன். இரவு 7.45க்கு வரவேண்டிய இரயில். அட்டவணையில் அதே நேரத்திற்கு வரும் என்றிருந்தது. ஆனால் நடைமேடை எண் இல்லை. ஒருவழியாக விசாரித்து, 7வது நடைமேடையில் வரும் என்று அறிந்து அங்கு சென்று நின்றேன் 7.30 க்கு. குறித்த நேரத்திற்கு அறிவிப்பும் இல்லை, இரயிலும் வரவில்லை. 7வது நடைமேடையிலிருந்து, இரயில் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் விசாரணை மேசைக்கு வந்து அங்கிருந்தவரிடம் கேட்டேன், ”தாதர் எக்ஸ்பிரஸ் லேட்டா சார்?”. அவர் சொன்னார், “தாதர் லேட் எல்லாம் இல்லை, இன்னேரம் 7வது பிலாட்பாரத்தில் வந்திருக்கும்”. அவர் சொன்னதை நம்...பி, திரும்பவும் 7வது நடைமேடைக்குச் சென்றேன், இரயில் வந்ததற்கான அறிகுறி இல்லை. திரும்பவும் விசாரணைக்குச் சென்று, “தாதர் இன்னும் வரல சார்”.அதற்கு அவர், “அதெல்லாம் அப்பவே சரியான நேரத்திற்கு வந்துட்டு சார். அனௌன்ஸ்மெண்டும் சொல்லியாச்சு”, என்று எரிந்தார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கொஞ்சம் வயதானவர், ஏதும் கடிந்து சொல்வதற்கும் மனமில்லை. திரும்பவும் 7வது நடைமேடைக்குச் சென்று அங்கு காத்துக்கொண்டிருந்த ஒருவரிடம் தாதர் எக்ஸ்பிரசுக்குத்தான் காத்திருக்கிறார் என்பதை உறுதி செய்துகொண்டு அமர்ந்திருந்தேன். இரயில் 30 நிமிடங்கள் தாமதமாக வந்து சேர்ந்தது, தாமதமாக வந்ததன் அறிவிப்பு ஏதும் இல்லாமல்.

என்ன ஆயிற்று எக்மோர் இரயில் நிலையத்திற்கு? எப்போதாவது ஒரு தடவை இப்படி நடக்கத்தான் செய்யும் என மனம் சமாதானமாகவில்லை. ஏனெனில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகத்தையே கேவலமாக நினைக்கச் செய்திருந்தது...

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

ஒரு கதை பல கோணங்கள்


சமீபத்தில் INCEPTION படம் பார்த்தேன். பிரமித்துப் போனேன். இப்படியொரு இடியாப்பச் சிக்கலான கதையை, கண் முன்னே தெரியும்படி, நம்பும்படி, முக்கியமாக புரியும்படி எடுத்திருக்கும் இப்படக் குழுவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. சிறு நேரம்கூட திரையை விட்டு நம் கவனத்தைத் திருப்பினால் படம் வேறுவிதமாகப் புரிந்துவிடும். நல்ல வேளை பக்கத்தில் இருந்த மனைவி தொந்தரவு செய்யாதது எனது பணத்தை மிச்சப்படுத்தியது. இருந்தாலும் இன்னும் இரண்டு முறை பார்க்கவேண்டும். அது என்ன இரண்டு முறையா? சொல்கிறேன்.

கதைப்படி, ஒரு கனவை உருவாக்கி அதற்குள் ஒருவரை நுழைத்து அவருடைய ஞாபகங்களைத் திருடலாம் (அல்லது ஒரு ஞாபகத்தை ஆழ் மனதில் விதைக்கலாம்).  இதைப் பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது. ஒரு கனவுக்குள் அதே போன்ற இன்னொரு அமைப்பையும் உருவாக்கலாம், கனவுக்குள் கனவு. நிஜ வாழ்வில் கடக்கும் ஐந்து நிமிடத்தில், கனவுக்குள் ஒரு மணி நேரம் வாழ்வு, உண்மையிலேயே அப்படித்தான். கனவுக்குள் இறந்தால் கனவு கலைந்து நிஜ உலகத்திற்குள் வந்துவிடலாம். நாயகனிடம் ஒரு சிறிய பம்பரம் இருக்கிறது. அதை சுற்றிவிட்டு நிகழ்காலம் கனவா இல்லையா என்பதை அறிந்துகொள்வான் நாயகன், விழுந்தால் நிஜ உலகம், விழாமல் சுற்றிக்கொண்டே இருதால் கனவு. (இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கனும்).

இப்படிப்பட்ட சாத்தியங்கள் இருக்கும் பட்சத்தில், நாயகனும் நாயகியும் ஒரு நீண்ட கனவுலகில் வாழ்கின்றனர். நாயகன் அங்கிருந்து மீண்டு வரும் முடிவு செய்து, ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து, செத்து, நிஜ உலகத்திற்கு வருகின்றனர். மீண்டு வந்த பிறகும் தான் இருப்பது ஒரு கனவுலகமே, இங்கு தற்கொலை செய்துகொண்டால் மீண்டு நிஜ உலகில் முழித்துக்கொள்வோம் என நம்பி நாயகி தற்கொலை செய்துகொள்கிறாள். (இதையும் ஞாபகம் வச்சுக்கனும்).இதன் பழி நாயகன் மீது, அவன் நாட்டை விட்டு தப்பியோடி சுற்றிக்கொண்டிருக்கிறான். அடுத்தவர் நினைவுக்குள் புகுந்து திருடுவதே வேலை.

இந்த சூழ்நிலையில் ஒரு மிகப்பெரிய ஒரு நினைவை விதைக்கும் வேலையை முடித்தால் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பிச்சென்று தனது குழந்தைகளுடன் வாழலாம் எனும் வாய்ப்பு வருகிறது. அது ஒரு அசாத்தியமான வேலை, கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள் கனவாக இருக்கும். உள் கனவுக்குள் செத்தால் கோமா நிலைக்கு தள்ளப்பாடு சுய நினைவே வராமல் போகும் வாய்ப்புள்ள ஆபத்தான முயற்சி. பல கட்ட கனவுகளின் காட்சியமைப்பு பிரமிப்பு. ஒரு வழியாக வேலை முடிந்து தனது நாட்டிற்குத் திரும்பி குழந்தைகளைப் பார்க்கிறான். பம்பரத்தைச் சுற்றி விட்டுவிட்டு குழந்தைகளுடம் போகிறான்.

பம்பரம் சுற்றுகிறது... சுற்றுகிறது...லேசாக ஆடுகிறது.. சுற்றுகிறது... அப்படியே படம் முடிந்து விடுகிறது. அது விழுந்ததா இல்லையா என்பதைக்  காட்டவில்லை. அதுவரை அமைதியாகப் படம் பார்த்துக்கொண்டிருந்த மனதும் மூளையும் அபோதிருந்து செயல்படத்துவங்கியது. இதுதான் இயக்குனரின் வெற்றியாகக் கருதுகிறேன். யோசித்துக்கொண்டே இருக்கிறது... பம்பரம் விழுந்துவிட்டால் நிஜ உலகு. அப்படியென்றால் நாயகி தவறாக எண்ணி நிஜமாக இறந்துவிட்டாள். பம்பரம் விழவில்லையென்றால் அது கனவு. ஆனால் எந்தக் கனவு என்பது இன்னொரு கேள்வி. இதற்குள் பல கிளைக் கேள்விகள் முளைக்கின்றன. ஒருவேளை மனைவி சொன்னது உண்மையாக இருக்குமோ? அவள் கீழே குதித்து தற்கொலை செய்து நிஜ உலகுக்குப் போயிருப்பாளோ? இந்தப் பம்பர விசயமே பொய்தானோ? இதில் இன்னொரு கோணம் வேறு வந்து வாட்டுகிறது. மனைவி நிஜ உலகுக்குப் போகிறேன் என்று குதித்தாளே, அவள் போன உலகாவது நிஜமாக இருந்திருக்குமா? அல்லது அதுவும் ஒரு கனவாக இருந்திருக்குமா?



சிந்தனையைப் பல கோணங்களில் சிதறடித்த படம். இதே போன்றதோரு படத்தை, இதறகு சில நாட்களுக்கு முன் பார்த்தேன். Shutter Island. என்ன ஒற்றுமை, அதே நாயகன். துப்பறியும் போலீஸ் அதிகாரியாக ஒரு தீவுக்கு வருகிறான் நாயகன், ஒரு துணை அதிகாரியுடன். அந்தத் சிறிய தீவில், மனநலன் பாதிக்கப்பட்ட கொடிய குற்றவாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை இருக்கிறது. ஒரு கொடிய, தனது மூன்று குழந்தைகளைக் கொன்ற, பெண் குற்றவாளி ஒருவர் தப்பித்ததைப் பற்றி விசாரிக்கவே வருகிறார். ஒவ்வொருவராக விசாரிக்கையில், சில மர்மமான விசயங்கள் பற்றி தெரிய வருகிறார். இவரையும் மனநலன் பாதிக்கப்படவராக அங்கேயே அடைக்க முயற்சி நடக்கிறது. உண்மையைக் கண்டிபிடிக்கப் போராடுகிறார். கடைசியில் தலைமை மருத்துவர் அவருக்குச் சில விசயங்களைச் சொல்கிறார்.... அட போங்கப்பா. நடந்ததெல்லாம் இன்னொரு கோணத்தில் சொல்லும்போது திரும்ப முதலில் இருந்தே பார்க்கவேண்டுமெனத் தோன்றுகிறது. என்னதான் பார்த்தாலும் இரண்டு கோணங்களும் உண்மையாகத்தான் தெரிகின்றன. இது முந்தைய படம் மாதிரி இல்லை. இரண்டு கோணங்கள் மட்டும்தான் தெரிகின்றன.




இவற்றைப் பற்றி எழுதலாம் என்றிருக்கையில் இன்னொரு படம் பார்க்க நேர்ந்தது. The Ghost Writer. பிரிட்டனின் முன்னால் பிரதமரின் சுயசரிதையை எழுதித் தொகுத்துக்கொண்டிருந்த அவருடைய ஆஸ்தான எழுத்தாளர் இறந்துபோகிறார். அந்த இடத்தில் இருந்து அந்த வேலையை முடிக்கச் செல்கிறார் நாயகன். அமெரிக்காவில் இருக்கும் ஒரு தீவில் உள்ள பிரதமரின் கடல் ஒட்டி அமைந்த அழகான வீட்டிற்குச் சென்று வேலையை ஆரம்பிக்கிறார் நாயகன். இறந்த எழுத்தாளர் முடித்து வைத்திருக்கும் கத்தையான தாள்களைத் தொகுத்து, சிறிது மாற்றி, மிகச் சொற்ப காலத்திற்குள்ளாகவே முடிக்கவேண்டிய சூழ்நிலை.

அதே நேரத்தில் முந்தைய, இறந்த எழுத்தாளர் சாவில் மர்மம், இந்தப் பிரதமர் மேல சந்தேகம் என போக்கு மாறுகிறது. அவர் எழுதிவைத்துபோன பக்கங்களில் அவர் கண்டுபிடித்த மர்மங்களை மறைமுகமாகப் பதிவு செய்துள்ளார், கொலை செய்யப்பட்டுவிட்டார், அந்த பக்கங்களில் உள்ள மர்மத்தை விடுவிக்க முயற்சிக்கிறார் நாயகன். அதன் காரணமாக இவரும் துரத்தப்பட, ஒரு சூழ்நிலையில் அந்தப் பிரதமர் கொலை செய்யப்படுகிறார். இவர் கண்டுபிடித்த மர்மங்களை விட்டு விட்டு, அந்தப் புத்தகத்தை முடித்து வெளியீட்டு விழா நடக்கிறது. அந்த கடைசி நேரத்தில் அந்தப் புத்தகத்தில் மறைந்துள்ள உண்மையான மர்மம் அவருக்குத் தெரிகிறது. முடியல... முதலில் இருந்து பார்த்த கோணமே வேறு, திரும்பவும் முதலில் இருந்து இந்த கோணத்தில் பார்த்தால் சரியாக இருக்கிறது. மற்ற படங்களைபோல அல்லாமல், இதில் சரியான கோணம் சொல்லப்படுவதால் அதிகம் மண்டையைப் போட்டுக் குழப்ப வாய்ப்பில்லை.



இதேபோன்ற, முதலில் இருந்து இரு குழப்பமான உண்மையைச் சொல்லக்கூடிய, கடைசியில் கூட எது உண்மை என்று சரியாக உணர முடியாத இன்னொரு படத்தை நேற்று பார்த்தேன். After Life. இந்த படத்தில்... ஹ்ம்ம்ம், ஒரே பதிவில் எத்தனை கதைதான் எழுதுவது, இதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இதில் கடைசி வரை ஒரு தெளிவு கிடைக்கவேயில்லை. கடைசியாக பார்த்த நான்கு படங்களும் ஏன்தான் இப்படி வந்து சேர்ந்ததோ தெரியவில்லை. ஆனால், படம் பார்த்து முடித்த பின்னும் முந்தைய காட்சிகளை அசைபோட வைக்கும் அல்லது திரும்பவும் பார்க்க வைக்கும் படங்கள் இவை. அதிலும் Inception கொஞ்சம் அதிகமாகவே கிறங்கடித்த படம்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

Testing video post

Uploading frm mobile...

Share/Bookmark
Read More!

சுடச்சுட பிளாக்கிங்

இந்த வாரம் வெளிமாநிலத்திற்குச் செல்வதால்  roaming  ல் booster ஏதாவது உள்ளதா என ஏர்டெல் தளத்தை மேய்ந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் அவை கண்களுக்குத் தட்டுப்பட்டன 3G என்ற எழுத்துக்கள். எவ்வளவு நாட்களாக காத்திருந்தேன் இந்த வசதிக்காக. அதன் விலை விபரங்கள் பார்த்ததும் மேலும் மகிழ்ச்சி. என்னால் உபயோகிக்கக்கூடிய விலைதான். ஒரு புறம் மகிழ்ச்சி, ஒரு புறம் கோபம், விளம்பரம் ஏதும் செய்து தெரியப்படுத்தவில்லையே என்று. அப்படி என்ன இருக்கிறது இதில் என்ற எண்ணமா? அதைக் கடைசியில் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டேன், சிறிது சந்தேகத்துடனேயே. கிடைத்த தகவல்கள் இதுதான். ஏர்டெல் 3ஜி சேவையைத் துவக்கிவிட்டார்களாம். ஆனால், சில நகரங்களில் மட்டுமே. இப்போது, சென்னையில் வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகுமாம். பரவாயில்லை, இபோதாவது வருகிறதே என நிம்மதியானேன்.

இப்போது Flashback...
கல்லூரி முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் (2001). வகுப்பில் ஒவ்வொரு மாணவனும் ஏதாவதொரு latest technology பற்றி முன் நின்று பேசவேண்டும். அப்போது நான் தேடிப்பிடித்தது இந்த 3ஜி. அப்போது UMTS எனப்படும் தொழில்நுட்பம் வரை வந்திருந்தது. இபோதோ அதையெல்லாம் தாண்டி எங்கேயோ சென்றுவிட்டது. அப்போது தெரியவில்லை அதன் பயன்பாடு. இந்த flashback ஐ பின்பு எப்போதாவது விரிக்கலாம்.

ஒரு வழியாக 3ஜி வரப்போகிறது. வந்தவுடன் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடவேண்டியதுதான். சும்மாவா, 3.6Mpbs வரை வேகம் இருக்குமாம் (அப்டின்னு படிச்சேன், இவங்க குடுக்குறது எவ்வளவு வேகமா இருக்கும்னு தெரியல). வீட்டில் 256kbps வரை உபயோகித்து இருக்கிறேன். இதை விட 14 மடங்கு கூடுதல் வேகம், கிட்டத்தட்ட அதே விலை. நல்லவேளை, 3ஜி உள்ள மொபைல் வைத்திருக்கிறேன்.

அடுத்து என்னவெல்லாம் நடக்கும்? வீட்டில் wireline இணைப்பு இருந்தால், அதைத் துண்டித்துவிட்டு, மொபைலை கணினியுடன் இணைத்து இணையத்தைப் பெற்றுக்கொள்ளலாம். பின்பு, வெளியே செல்லும்போது காண்பவற்றை படம் பிடித்து அப்படியே சுடச்சுட போட்டோ பதிவு போடலாம். அல்லது ஒரு சம்பவத்தை வீடியோ எடுத்து உடனுக்குடன் youtube ல் ஏற்றலாம், அல்லது பதிவில் போடலாம். இப்போது நடப்பது என்ன? படம் அல்லது வீடியோ எடுத்துவிட்டு, அதன்பின் கணினியில் எடுத்து, upload பண்ணி, பின்பு பதிவிடும் முறையில், சோம்பேறித்தனம் மற்றும் மறதியால் சில விசயங்களைப் பதிவிட முடியாமலேயே போகிறது. இனி அதன் விகிதம் குறையும். முடிந்தால் பதிவுகளையும் வீடியோவகவே பேசி ஏற்றிக்கொள்ளலாம். ம்ம்ம்... பார்க்கலாம். என்ன ஒன்று, இதனால் எழுதுவதுதான் குறைந்துபோகும்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

அவதிப்படும் 100 அடி ரோடு

(படம் beta.thehindu.com லிருந்து எடுக்கபட்டது)

சென்னையில் வாகன நெரிசலைச் குறைக்க மேம்பாலங்கள் ஆங்காங்கே முளைத்துக்கொண்டே இருக்கின்றன. நல்ல விசயம்தான். ஆனால், அது கட்டி முடிக்கப்படும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியில் சில பாதைகள் மறைக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அதனால் ஏற்படும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் சொல்லமுடியாத அயற்சியைத் தருகிறது. என்ன செய்ய? பல காலத்து நன்மைக்காக சில காலம் கஷ்டம் அனுபவிப்பதில் குறையேதுமில்லை. ஆனால் இதுபோன்று ஏற்படும் கூடுதல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்துத் துறை கூடுதல்/சிறப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கிறதா என்றால், சத்தியமாக இல்லை என்றே தோன்றுகிறது.

இப்போது 100 அடி சாலையில் மெட்ரோ ரயிலுக்காக சாலைக்கு நடுவே தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதில் வடபழனி முதல் கோயம்பேடு வரை உள்ள தூரத்தில் நான் கவனிப்பதைப் பற்றி மட்டும் கூறுகிறேன். தூண்கள் சாலைக்கு நடுவே அமைவதால், சாலைக்கு நடுவில் தடுப்புச் சுவர் அமைத்ததால் சாலையின் அகலம் பாதியாகக் குறைந்துவிட்டது. இதனால் காலை, மாலை நேரங்களில் இந்த சாலை நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. காரணம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த எந்த சிறப்பு/கூடுதல் ஏற்பாடும் இல்லை.

கோயம்பேடு பேருந்து நிலையம் - வடபழனிக்கு இடையே மொத்தம் 4 சிக்னல்கள். முதலில் SAF Games Village வாசலில் இருக்கும் சிக்னல். இங்கு இதுவரை தொல்லை ஏதும் பார்த்ததில்லை. சிக்னல் விளக்குகள் வேலை செய்கின்றன. சில நேரங்களில் ஒரு காவலரும் அருகில் இருக்கிறார்.

அடுத்து, MMDA சிக்னல். பாலம் கட்டும் வேலை காரணமாக சிக்னல் விளக்குகள் வேலை செய்வது இரண்டு வாரங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டுவிட்டது. போக்குவரத்துக் காவலர் எப்போதும் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் சில நேரங்களில் ஓரமாக நின்று யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கிறார். சிலர் நெரிசலைச் சரிசெய்ய முயற்சி செய்கின்றனர். ஆனால் பேருக்குத்தான் கைகளை காட்டிக்கொண்டு இருக்கின்றனர். மக்கள் எல்லா பக்கத்திலிருந்தும் வந்து முட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஒரே ஒருவரால் இந்த நான்முக சந்திப்பை சரி செய்வது இயலாத காரியம்.

அடுத்து, திருநகர் சிக்னல். இங்கு இருந்த சிக்னல் விளக்குகளைப் பெயர்த்து இடம் மாற்றி, ஓரமாக வைத்துள்ளனர். இருந்தும் பிரயோசனமில்லை, வாகன ஓட்டிகளின் பார்வைக்கு ஏதுவாக வைக்கப்படவில்லை. போக்குவரத்துக் காவலர் ஒருவரைக்கூட இங்கு பார்த்ததில்லை. மக்கள் தாமாகவே முட்டி மோதி, ஒருவரை ஒருவர் திட்டி, ஒருவழியாகக் கடந்துபோகின்றனர்.

அடுத்து அம்பிகா எம்பயர் முன்பு உள்ள சிக்னல். இங்கும் சிக்னல் விளக்குகள் காலி. இங்கு காவலர்களை விட முனைப்பாக ஒரு பொதுஜனம் போக்குவரத்தைச் சரிசெய்ய உதவி செய்துகொண்டிருப்பார். காவல்துறை நண்பர்கள் போன்ற வகையாக இருப்பாரோ?, தெரியவில்லை. சம்பளம் வாங்கும் காவலர்கள் கூட ஓரமாகத்தான் நிற்பார்கள், இவர் அங்குமிங்கும் ஓடி வேலை செய்துகொண்டிருப்பார். சில நேரங்களில் வாகனங்கள், தான் சொல்வதை மதிக்காமல் செல்வது கண்டு திட்டிக்கொண்டிருப்பார். இப்போது இந்த சிக்னல் மூடப்பாட்டு, சற்று தள்ளி, பாதையின் நடுவே திறக்கப்பட்டுள்ளது.

சிக்னல்களைக் கடப்பதற்குள் இந்தப் பகுதி மக்கள் ஒருவழியாகிவிடுகிறார்கள். காவல்துறை அதிகாரி ஒருவர் கூட இந்தப் பகுதியில் பயணம் செய்ததில்லையா? கூடுதல் காவல்துறை பணியாளர்களை நியமிக்கவேண்டும் என ஒருவருக்குக் கூட தோன்றவில்லையா? அங்கு பணிபுரியும் காவலர்கள் எவரும் மேலதிகாரிக்கு இந்த ஆள் பற்றாக்குறை, விளக்குகள் வேலை செய்யாததைப் பற்றிச் சொல்லவில்லையா? அல்லது பணியாளர் பற்றாக்குறையா? ஒன்றும் புரியவில்லை. அடுத்து மக்கள். ஒரே ஒரு போக்குவரத்துக் காவலர் நின்று கஷ்டப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்கிறாரே, கொஞ்சம் ஒத்துழைபோமே என்று ஏன் ஒருத்தருக்கும் தோன்றவில்லை? எல்லோரும் சென்று முட்டிக்கொண்டு நின்றால் ஒருவரும் போக முடியாது என ஏன் இந்த மரமண்டைகளுக்கு உரைக்கவில்லை? கொஞ்சம் நின்று வழிவிட்டுப் போனால்தான் என்ன? - இப்படி ஒவ்வோரு முறையும் தோன்றிக்கொண்டே இருக்கிறது இந்த MMDA சிக்னலைக் கடக்கும்போது.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

ஏதோ ஒன்னு

படிக்கவும் முடியல, எழுதவும் முடியல. சில நேரம் படிக்காம படுக்கவும் முடியல. ஒரு சில விசயங்களைப் பழகிட்டோம்னா திரும்ப விடுறது எனக்கு கொஞ்சம் கஷ்டம். அது எல்லாமே ஒரே மாதிரியா இருக்காது.

இப்போ காபி குடிக்கிறத எடுத்துக்கலாம். வீட்டுல இருக்குறவரைக்கும் காலைல எந்திரிச்ச உடனே காபி குடிக்கனும்போல இருக்கும். அம்மா கேட்டவொடனே குடுக்கலைனா சண்டையே வரும். அந்த சமயத்துல எங்காவது வெளியூரு போயிருந்தா, காலைல எந்திரிச்சவொடனே எங்கயாவது தேடிப்பிடிச்சாவது குடிக்கிறது பழக்கம். அப்புறம் சென்னை வந்ததுக்கு அப்புறம் பேச்சலர் வாழ்க்கைல அது எப்படி காணாமப் போச்சுன்னே தெரியல. அதப் பத்தி கவலப்படுறதும் கிடையாது. அதே நேரம், காலைல எந்திரிச்ச உடனே கிடைச்சதுனாலும் குடிக்கிறதுதான், அதப் பத்தி அப்பவும் சரி பின்பும் சரி, கவலைப்படுறது இல்லை. இது ஒரு வகையாச்சா?

இப்போ சிகரெட் குடிக்கிறத எடுத்துக்கலாம். பழக்கமாகிப்போச்சு. விடனும்னு தோனுது. சில நாள் விட்டுப்பாக்குறது. அப்றம் ரெண்டு நாள் அடிச்சுப் பாக்குறது. விட்டதும் ஒரு சந்தோசம், அப்றம் ஏக்கம். சரின்னு அடிச்சுப்பாத்தா, ஏதோ ஒரு இழப்பு. இப்படி ஒரு பழக்கம். விட்டாலும் இழுக்கும், பிடிச்சாலும் கவலைப்படவைக்கும்.



இதுல படிக்கிறது, எழுதுறதுன்னு ரெண்டு புதுசா வந்து தொத்திக்கிச்சு. ஆரம்பத்துல படிச்சுட்டு மட்டுமே இருந்தேன். அது காப்பி குடிக்கிற மாதிரி. படிக்க வாய்ப்பு கிடைக்கலைனாலும், கிடைச்சாலும் அவ்வளவா கண்டுக்கிறதே இல்லை. முடிஞ்சா படிப்போம், இல்லன்னா அடுத்த நாள் படுச்சுக்கலாம். அப்றம் வந்தது எழுதுறது, இது சிகரெட் குடிக்கிற மாதிரி ஆகிப்போச்சு. எழுத நேரம் ஒதுக்குனா வேலை சில கெட்டுப்போகும்னு தெரியும். இருந்தாலும் எழுதினேன். அப்றம் கொஞ்ச காலம் நிறுத்திவச்சேன். சில நேரங்கள்ல அப்படியே கை துருதுருன்னு வரும். வேணாம்டா எழுத வேணாம், புடிச்சா திரும்ப விட முடியாதுன்னு மனசு சொல்லும்.

ஆனா பாருங்க, இன்னொரு பக்கம் பல பல தலைப்புகள் மனசுக்குள்ள தோனிக்கிட்டே இருக்கும். மாசத்துக்கு ஒன்னு எழுது, வாரத்துக்கு ஒன்னு எழுது, உன் கண்ட்ரோல்ல வச்சுக்கன்னு இன்னொரு பக்கம் சொல்லும். சில நேரம் எழுத ஆரம்பிச்சு பாதியிலயே டிராப்ட்ல போட்டு வச்சுடுவேன். போட்டது போட்டதுதான் சேந்துகிட்டே இருக்கும். யாருக்குத் தெரியும் இது கூட டிராப்ட்லயே கிடந்தாலும் கிடக்கலாம். அப்படி கிடக்காம இருக்கனும்னா ஒரே வழிதான் இருக்கு. இதுக்கு மேல கொஞ்சம் கூட யோசிக்காம டக்குன்னு PUBLISH POST பட்டன க்ளி

Share/Bookmark
Read More!

கார்கிலில் வெற்றி உனக்கே(MAY - 99)


*எல்லை மீறிய எத்தர்களை அழிக்க
நய வஞ்சக நரிகள் நம் நாட்டில்
புகாமல் இருக்க, இளஞ்சிங்கமே!
எழுந்துவிடு.

டைகள்
இமயம் போன்றதெனிலும்
இடித்து விடு!

தாயகத்தை
இமைபோல் காக்க இன்றே
புறப்படு!

திண்ணமான
தீர்மானங்களை கையில்
கொண்டுவிடு!

தீரத்துடன்
போராட முடிவெடு!


துன்பங்களை
துக்கமென நினைத்துவிடு!


தூக்கம்
இமைகளை அணுகாமல்
இருக்கவிடு!


தென்படும்
எதிரிகளை பந்தாடிவிடு!


தேசத்தை
காக்க விழித்துவிடு!

தைரியத்தை
மற்றவர்க்கு புகட்டிவிடு!

தொல்லையின்றி
தேசத்தை வாழவிடு!

தோட்டாக்களால்
எதிரிகளை அழித்துவிடு!

தெளத்யத்தில்
வெற்றி உனக்கே
புரிந்துவிடு!


*இளஞ்சிங்கமே
இன்றே புறப்பட்டுவிடு
“வந்தே மாதரம்”

பி.கு:-
1999-ம் ஆண்டு கார்கில் போர் ஆரம்பித்த 3-ஆம் நாள்
என் மனதில் தோன்றிய வரிகள்.

---கி.கி


Share/Bookmark
Read More!

வலையில் வந்தவை-2


உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"
பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..

இப்படிக்கு
Spelling
தெரியாமல் சமாளிப்போர் சங்கம்



அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்



காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-
ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்




அனுமதி கேட்க்கவும் இல்லை...

அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்

பிடிவாதமாக ஒரு முத்தம்..

"
கன்னத்தில் கொசுக்கடி"

இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்


கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

நீங்க‌
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்

இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்


Join Only-for-tamil


எப்படியும் படித்து இது மாதிரி யாரும் சிரிக்கப்போவதில்லை,





---கி.கி





Share/Bookmark
Read More!