ஒரு சோறு - ஒரு பார்வை

கோடம்பாக்கம் மஹாலிங்கபுரம் பிரதான சாலையில், புதிய மேம்பாலத்திற்கு ஒரு புறத்தில் இருக்கிறது ஒரு சோறு - அசைவ உணவகம். லயோலா கல்லூரியிலிருந்து கோடம்பாக்கம் வரும்போது, பாலத்திற்கு இடதுபுறம் இருக்கிறது, முழுவதும் குளிரூட்டப்பட்ட உணவகம். சென்ற வாரம் ஒரு மதியம் சென்றேன், நண்பனுடன்.சாதாரணமாக சாலையில் செல்லும்போது அவ்வளவாகத் தெரியாது; சற்று உள்வாங்கி இருக்கும். அகலம் குறைவான வாசல், உள்ளே சென்றதும் ஐந்து, நால்வர் உட்காரும் மேசைகள். என்னடா இது! இவ்வளவு சிறிய இடமா இருக்கே? இல்லை. உள்ளே சென்றால், மங்கலான ஒளி, இன்னும் அகலமான, 10 மேசைகளுக்கு மேல் போடக்கூடிய பரந்த இடம். நன்றாகத்தான் இருக்கிறது. சீருடை அணிந்த பணியாளர்கள், இரு மேற்பார்வையாளர்கள் சீருடை இன்றி. பின்னனியில் தமிழ்ப் பாடல்கள்.

நாங்கள் வெளியே அமர்ந்தோம்.இங்கு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று உணவுப் பட்டியல் அட்டை (மெனு கார்டு). முதல் பக்கமும் கடைசி பக்கமும் பார்த்தவுடனேயே பிடித்துப் போயிற்று.
 
உள்ளே பலப்பல ரகங்கள். அதையெல்லாம் சாப்பிட ஒரு வயிறு போதாது என்றே தோன்றியது. ஒவ்வோரு நாளும் ஒரு சிறப்பு மதிய உணவுக் கலவை.நாங்கள் சென்ற அன்று நெய்சோறும், கோழிக் கறிக் குழம்பும். கூடவே இரு சைவ கூட்டுக்கள், பருப்பு மற்றும் கத்தரிக்காய், கூடவே தயிர் வெங்காயம். அருமையான சுவை, இதன் விலை 79 ரூபாய்.மேலும் சில படங்கள் மெனுவிலிருந்து
தோசை வகைகள்...ஒரு சோறு சிறப்பு உணவு வகைகள் மற்றும் சைனீஸ் வகைகள்
 


அருமையான இடம், அசைவ உணவுப் பிரியர்களுக்குக் கொழுத்த வேட்டை.

---
இதை அறிமுகம் செய்த கேபிள்ஜிக்கு நன்றி.
-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

தயக்கம், வியப்பு, உற்சாகம், மழை

நான் எழுத ஆரம்பித்த நேரமோ என்னவோ, மூன்று மாதங்களாகப் பதிவர் சந்திப்பே நடைபெறவில்லை. ஒரு வழியாக நேற்று நடந்தது.

சந்திப்பு ஐந்து மணிக்கு, மெரினாவில், காந்தி சிலை முன்பு. நான்கு மணிக்கு கேபிள்ஜி சொன்னபடி பதிவர் வெங்கி ராஜாவை அசோக் பில்லரில் கோர்த்துக்கொண்டு மெரினா நோக்கிச் சென்றேன்.

காந்தி சிலை அடையும்போது மணி 4.45, ஆங்காங்கே மக்கள் கூட்டம். ‘அங்க பாருங்க, கேமராவும் கையுமா நாலு பேரு நிக்கிறாங்க, நம்ம சங்கத்து ஆளுங்களாத்தான் இருக்கும்’, என்றார் வெங்கி. அவர்கள் யாரையும் அடையாளம் தெரியவில்லை. ஏற்கனவே சிறுகதைப் பட்டறை சென்றிருந்ததால் ஒரு நாலைந்து பேரைத் தெரியும். நம்ம மச்சி அடலேறுவுக்குப் போன் செய்தேன்.
‘சிங்கமே, எங்க இருக்கீங்க?’
‘மச்சி, பீச் கிட்ட இருக்கோம், நானும் நிலாரசிகனும். இங்க வாங்க’
’அஞ்சு மணி ஆகப் போகுதுங்க, ஆரம்பிச்சிரப் போறாங்க’
’அட, 5 மணின்னா ஐ.எஸ்டி.ப்படி கொறஞ்சது 5.30ஆவது ஆகும், இங்க வாங்க’
அவர் சொல்றதும் சரிதான் என்று, கடற்கரையில் சென்று சிறு கூட்டம் ஒன்றைப் போட்டோம்.

நிலாரசிகன், அடலேறு, வெங்கி மூவரும் சில புத்தகங்கள் பற்றியும், பதிவுகள் மற்றும் பதிவர்கள் பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டனர். நமக்குத்தான் ஒன்னும் தெரியாதே. பே... என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ’நீ இன்னும் படிக்க வேண்டியது நெறையா இருக்குடா ஏனாஓனா’, ன்னு மனசுல அசரீரி.

நிலாரசிகன் - 2004ல் பிலாக் எழுத ஆரம்பித்தாராம், அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போதெல்லாம் பிலாக் என்றால் என்ன, ஏன் எழுதுகிறோம் என்றெல்லாம் அவருக்குத் தெரியவில்லையாம். புதிதாய்ப் பதிவு போட்டதும், பழைய பதிவு கீழே சென்றுவிடுவது கண்டு குழம்பிப் போனதை விவரித்தார், சரியான காமெடி.

மழை வரும்போல் இருந்தது. 5.30க்குக் கிளம்பி காந்தி சிலை அருகே சென்றோம். நமக்கோ தயக்கம். மூத்த பதிவர்கள் பலர் நின்றிருந்தனர். கேபிள் சங்கர், நர்சிம், அதிஷா, லக்கிலுக், முரளி கண்ணன் ஆகியோர் தெரிந்திருந்தனர். நம்மையெல்லாம் கண்டுக்குவாங்களோ என்ற சந்தேகத்துடனேயே முதலில் அனுகினேன். ’ஹலோ, நான் எவனோ ஒருவன்’, என்றேன். ‘ஓ, அது நீங்கதானா?’, என்றார்கள் எல்லோரும் சொல்லிவைத்தார்போல. நம்ம பேரு தெரிஞ்சிருக்கே! ஒரு வேளை சும்மா பேச்சுக்கு சொல்றாங்க போல என்றவாறு நின்றிருந்தேன். ரொம்ப நேரம் அருகிலேயே நின்ற ஒருவர் வெகு நேரம் கழித்து அறிமுகம் செய்துகொண்டார்.
நான் சுதந்திர இலவச மென்பொருள்’ என்றார்.
‘ஓ, அது நீங்கதானா?’, இப்போது நான்.

இடையில் ஒருவர் கேட்டார், ’உங்க புரொபைல் போட்டோல உங்க முகம் சரியா தெரியலிங்க, போட்டவ மாத்திருங்களேன்’. நான் ‘சரியா தெரியக்கூடாதுன்னுதான் அத வச்சிருக்கேன்’, என்றேன். அவர் பார்த்த பார்வைக்கு அர்த்தம் தெரியவில்லை. அடி விழவில்லை என்பது மட்டும் உறுதி.

வித்தியாசமான அனுபவம். பின்னூட்டத்திலேயே பேசிக்கொண்டிருந்த மிகவும் தெரிந்த, பிடித்த ஒருவர் நமக்கு அருகிலேயே இருப்பார். தயங்கித் தயங்கி அறிமுகமானால், ‘ஓ, அது நீங்கதானா?’தான் எல்லோரிடமிருந்தும் வந்தது, நம்மிடமும்தான். அதிலும் கே.ரவிசங்கர், இவரா அவர் என்றிருந்தது. காரணம் அவரது அனுபவம் அப்படி. பின்னூட்டத்தில், ’நன்றிமச்சான்’ என இவரிடம் சொன்னது நினைத்து சிரிப்புத்தான் வந்தது. முதன் முதலில் இப்படிப் பார்ப்பது மிகச் சிறந்த அனுபவம். நமது கற்பனையில் ஒருவருடைய உருவம் ஒருவாறு இருக்கும், நேரில் பார்த்தால்?! பதிவர்கள் வந்துதான் பாருங்களேன்.

கொஞ்சம் கொஞ்சமாக தயக்கம் விலகியது, மேகங்கள்தான் கூடிக்கொண்டிருந்தன. ஊர்சுற்றி, டம்பி மேவீ, ஜனா, சரவணன் ஆகியோர் அறிமுகம் பகிர்ந்துகொண்டனர். பின்பு, தண்டோரா, வண்ணத்துப்பூச்சி சூர்யா, அகநாழிகை வாசுதேவன், வளர்மதி ஆகியோர் ஏதோ மணம் சூழ வந்து கலந்தனர். பைத்தியக்காரன் வந்தார், உற்சாகமூட்டுவதில் இவரைப் போல் வராது, தும்மினால் கூட ‘நல்லா தும்முறீங்க’ என்று கட்டிப்பிடித்துப் பாராட்டும் நல்லமனம் கொண்டவர்.

ஒரு வழியாக கதகதைப்பு அடங்கி, அனைவரும் அமர்ந்தனர், அமர வைக்கப்பட்டனர். முரளி கண்ணன் பேசத் தொடங்கினார். ‘இங்கு வந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்’. அவ்வளவுதான், கிழிந்தது வானம், கொட்டோ கொட்டென்று கொட்டியது. அனைவரும் அருகிலிருக்கும் மரத்தடியில் தஞ்சம் புகுந்தோம். ‘முரளி கண்ணனை ராம்நாடு பக்கம் அனுப்பி வைங்கய்யா...’ கூட்டத்தில் யாரோ சொன்னது.

கொஞ்ச நேரத்தில் மழை நிற்கவே, மறுபடி கூடினோம், மீண்டும் ஆரம்பித்தார் முரளி கண்ணன். முதலில் சிலருக்கு வாழ்த்துக்கள். பின், புதியவர்களுக்கு வரவேற்பு. புதியவர்கள் ஒவ்வொருவராக முன்னே வந்து அறிமுகம் செய்துகொள்ள அழைக்கப்பட்டனர். வெங்கி ராஜா, ஜனா, நான், நிலா ரசிகன், டம்பி மேவீ, ஊர்சுற்றி, அடலேறு, அமுதா கிருஷ்ணா... பின்னால் நின்று விசிலடித்து, கைதட்டி உற்சாகமூட்டும் பணியை அதிஷாவும், முன்னால் நின்று புதியவர்களை ராகிங் செய்யும் பணியைக் கேபிள்ஜியும் கண்ணும் கருத்துமாகச் செய்தனர். பின் தண்டோரா, அகநாழிகை வாசுதேவன்... பின் சரவணன் - இவர் ஆரம்பித்ததும் முன்பை விட நல்ல மழை. இவர் மற்றும் முரளி கண்ணன் இருவர் பற்றியும் வீரத்தளபதி அறிந்தால் ராம்நாடுக்குக் கடத்தப்படும் வாய்ப்பிருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. மீண்டும் மரத்தடி, ஒதுங்கியும் பிரயோஜனம் இல்லை. முழுவதும் நனைத்தது மழை. பின்பு, டோண்டு ராகவன், சுகுணாதிவாகர் மற்றும் ஆதி ஆகியோர் தனித்தனியே வந்து சேர்ந்தனர்.

டோண்டு அவர்களுக்கு கடலில் கால் நனைக்க அலாதி பிரியம் போல! யாராவது கூட வருவார்களா என அழைத்துப் பார்த்தார். ஒருவரும் உடன் செல்லாததால் தனியே சென்று வந்தார்.

ஆதி ஹெல்மட்டுக்குள் ஒரு டிபன் பாக்ஸ் வைத்திருந்தார். ஏதோ சாப்பிட இருக்குமென்று, ’என்னண்ணே அது’, என்று உள்ளே எட்டிப் பார்த்தேன். ‘ஒன்னுமில்ல சும்மா’, என விரைவாய் மறைத்துக்கொண்டார். ஒரு வேளை, இவர் காமன் மேனாகி, டிபன்பாக்ஸ் குண்டு ஏதும் கொண்டு செல்கிறாரோ என்று நமக்கு சந்தேகம் எழுந்ததற்கும், உ.போ.ஒ.க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள்.

மரத்தடியிலேயே ஆங்காங்கே கதைப்புகள் நடந்தன. மழை வெறித்ததும் அனைவரும் டீக்கடை நோக்கிச் சென்றனர். நாம் ஸ்பெசல் டீக்கடைக்குச் சென்றுவிட்டபடியால் அங்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. பின்பு டாக்டர்.புருனோ வந்ததாகவும், உ.போ.ஒ., கந்தசாமி, லினக்ஸ், ரத்த தானம், புதிய தலைமுறை (இதழ்) ஆகியவை பற்றி பேச்சுகள் நடந்ததாகவும், அடுத்த முறை சந்திப்பு கூரைக்கடியில் இருக்குமாறு ஏற்பாடு செய்யவேண்டுமென்று பேசியதாகவும், நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்னைப் பொறுத்தவரை இந்த சந்திப்பு சிறிது ஏமாற்றமே அளித்தது, காரணம் மழை. விரும்பிய சிலருடன் சரியாகப் பேச இயலவில்லை, சில பேர் பெயர்களை இங்கு விட்டுவிட்டேன். ஆதலால், சென்னையில் கூரைக்கடியில் கூடுமாறு ஏதும் இடம் இருக்கிறதா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

யார் குருடன்?

ஆதவன் அணையும் அந்தி வேளை


அழகாக இருந்தது ஆகாயக காட்சி பறவைகளின் அணிவரிசை


பார்த்தேன் பரவசமாய்

மாலை நேரத்து மழையை வரவேற்க்கும் வானவில்
\

மகிழ்ந்தேன் அதைக்கண்டு

சற்றே திரும்பினேன்

என்னை கடந்து சென்றனர்

சில கண் தெரியாதவர்கள்


நான் கண்ட ரசித்தவற்றை


இவர்கள் கண்டு ரசிக்க முடியாதே

என்று கண் கலங்கினேன்


திடீரென ஒரு அசரிரீ

என் முன்னால் கேட்டது

“ஏண்டா சாவு கிராக்கி கண்னு தெரியாதா உனக்கு


காயப் போட்டிருக்க கருவாடு மேல நடக்கிற”


அப்போதுதான் புரிந்தது யார் குருடன் என்று?...கி.கி.


Share/Bookmark
Read More!

சந்தர்ப்பவாதக் கொள்ளைகள் - 2

நண்பர் ஒருவர் தனது அலுவலகத்திற்குப் புதிதாக இணைய இணைப்பு வாங்க எண்ணினார். ஏற்கனவெ அவரது வீட்டில் 512kbps unlimited வைத்திருக்கிறார், ஏர்டெல். அதன்மீது அவருக்குத் தனி மதிப்பு உண்டு, எனக்கும்தான். அதன் சேவைதான் அவரறிந்தவரை மிகவும் சிறந்ததாம். எப்பொதும் முதல் தேர்வு அதுதானாம். வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டார்.

அதைப் பற்றிப் பேசிய பிறகு, சிறிது மற்ற விசயங்களைப் பற்றியும் பேசினார். அப்படியே விசாரித்துக்கொண்டிருக்கையில் அவர் கேள்விப்பட்ட விசயம் ஒன்றால் ஆடிப்போய்விட்டார். 512kbps unlimitedன் மாத வாடகை 1099 ரூபாயாம். அதிலென்ன இருக்கிறது? அவர் சொன்னது கேட்டு எனக்கும் அதிர்ச்சி. அவர் செலுத்திக்கொண்டிருப்பது மாதம் 1600 + வரி, மொத்தம் 1800 ரூபாய் வருகிறது.

நடந்தது என்ன்வென்றால், நண்பர் இணைப்பு வாங்கும்போது இருந்த திட்டம் அதுதான். இப்போது மாற்றியிருக்கிறார்கள் (எப்போது என்பது தெரியவில்லை, 8 மாதங்களுக்கு முன்பு என்பது எனது கணிப்பு). பின்பு ஆரம்பித்த வேலையை விட்டுவிட்டு, தனது வீட்டிலுள்ள இணைப்பின் திட்டத்தை 1099+வரிக்கு மாற்றுவதற்குப் பேச ஆரம்பித்துவிட்டார். இப்போது, அதே சேவை 1800லிருந்து 1200 ரூபாய்க்கு மாற்றியாயிற்று. மாற்றாமல் இருந்திருந்தால்?

ஏர்டெல் வெகுநாட்களாக வைத்திருப்பவர்கள், நீங்கள் வைத்திருக்கும் திட்டத்தை, தற்போதிருக்கும் திட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். யாருக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் அதிகம் பணம் செலுத்திகொண்டிருக்கலாம். ஆனால், இது ஏர்டெல்லுக்குத் தெரியுமா என்பதுதான் தெரியவில்லை.
---
-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

கதையின் சுதந்திரம்

மாப்ள, நேத்து உன்னைப் போல் ஒருவன் படம் பாத்தேன்டா. இதெல்லாம் ஒரு படமா? பிடிக்கவேயில்லடா எனக்கு. தீவிரவாதத்தை தீவிரவாதத்தாலயே அழிக்கிற மாதிரி ஒரு கதை. தீவிரவாதின்னாலே முஸ்லிமாத்தான் காட்டனுமா? ஏன், இந்துத் தீவிரவாதியக் காட்டி, அவன அழிக்கிற மாதிரி காட்டக் கூடாதா?

அப்போ தீவிரவாதின்னாலே இந்துதானான்னு கேக்க மாட்டியா?

அப்போ ரெண்டு இந்து, ரெண்டு முஸ்லிம்னு காட்டிருக்கலாம். சரி சமமா போய்ருக்கும்.

அப்போ கமல் இந்து முஸ்லிம் பிரச்சனையக் கிளப்புறார்னு ஒன்னு கண்டுபிடிக்க மாட்டீங்களா?

இல்ல மாப்ள. இப்படி பல பேர நேரடியா போய் சேர்ற ஊடகத்துல, இப்படியெல்லாம் மக்கள் மனசுல தப்பான எண்ணங்கள்லாம் பதிஞ்சுறாது?

இதுக்கு முன்னாடி அரசியல்வாதிங்க பன்ற தப்பு பத்தி படமே வரலியா? அதான் அரசியல்வாதிகள யாரும் தட்டிக் கேக்க மாட்டேங்குறாங்களா? அட போடா, படம் முடிஞ்சவொடனே விட்ட பைக்கு ஒழுங்கா இருக்குமோ இருக்காதோ, நைட்டு என்ன சாப்பிடலாம், நம்ம ஆளுட்ட இருந்து மெசேஜே வரலியே, பஸ் கெடைக்குமோ கெடைக்காதோ, நைட்டு சரக்குக்கு எவன் கிட்ட ஆட்டயப் போடலாம் இப்டி நினைக்க அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு. இதெல்லாம் மூளையில ஏத்த மனுசனுக்கு ஏதுடா எடம்? அண்ணன் தம்பி கல்யாணத்துக்குக் கூட ஊருக்குப் போக முடியாம வேல வேலன்னு கெடக்குறானுக, இதுல சிந்திச்சிட்டாலும்.

நீ என்ன வேணா சொல்லு, இது மனசுக்குள்ள பதிஞ்சு கிடக்கும், ஏதாவது கலவரம் வரும்போதுதான் எபக்டு தெரியும்.

ஆமா, நீ சிறுகதைப் பட்டறைக்கு வந்தல்ல?

ஆமா.

எழுத்தாளனுக்கு முழு சுதந்திரம் உண்டு, எதப் பத்தி வேணா எழுதலாம், உண்மை சம்பவத்த எழுதலாம், கற்பனைய எழுதலாம், உண்மையும் கற்பனையும் கலந்து எழுதலாம், என்னோட எழுத்து அவனுக்குப் பிடிக்கலன்னா என்ன? போட்டுட்டுப் போய்கிட்டே இருக்கட்டும், பிடிக்கிறவன் படிச்சாப் போதும்னு யுவன் சொன்னதுக்கெல்லாம் தலயத் தலய ஆட்டுனல்ல?

அதுக்கு என்ன இப்போ?

அதே மாதிரி ஒருத்தன் ஒரு கதைய சொல்லிருக்கான். பிடிக்கலன்னா போ கழுதன்னு பாதியிலயே எந்திரிச்சுப் போக வேண்டியதான? இவ்வளவுக்கும் கத முன்னாடியே தெரியும். அத வுட்டுட்டு, முழுசா வொக்காந்து பாத்துட்டு அது சரியில்ல இது சரியில்லன்னு பொலம்பிட்டு இருக்க!

ரூவா குடுத்து டிக்கட்டு வாங்கிருக்கேன்ல?

பொக்கிஷம் படத்துக்குக் கூடத்தான் ரூவா குடுத்து டிக்கட் வாங்கின. கடைசி வர இருந்தியா என்ன?

...

அது உனக்குப் பிடிக்கல. இது உன்ன கடைசி வர வொக்காந்து பாக்க வச்சுதுல்ல?

படம் நல்லாத்தான் இருக்கு. அதுக்காக இந்த மாதிரி மதக்கலவரத்தத் தூண்டுற மாதிலாம் எடுக்குறத ஒத்துக்க முடியாது.

டேய்! மதக்கலவரம்னு சொல்லி நீயா ஏதாவது தூண்டி விட்டுறாதடா. நாட்டப் பத்தி இவ்வளவு அக்கறையா பேசுறியே, இன்கம்டாக்ஸ் ஒழுங்கா கட்டுனியா நீயி?

...

சரி விடு. இந்தமாதிரியாவது கொஞ்சம் நாட்டு மேல அக்கறை இருக்குற மாதிரி பேசுறியே! அது வரை சந்தோசம்.

எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்குல்ல?

கதை சுதந்திரத்தையே கட்டையில ஏத்துறீங்க, உங்க கருத்து சுதந்திரம் வெளங்கிரும்.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

சிறுகதைப் பட்டறையில் பா.ரா.

சிறுகதைப் பட்டறை - எனது பார்வையில் - இதற்கு முன்னால் எழுதியது.

சிறுகதைப் பட்டறையில் பா.ராகவன் அவர்களுடைய பகுதி இதோ. பவர் பாயிண்டில் அவர் அளித்ததை முடிந்த அளவு குறிப்பு எடுத்து இங்கு அளித்திருக்கிறேன். பத்திரிக்கைகளுக்கு எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது கண்டிப்பாகப் பயன்தரும்.

---

சிறுகதை நன்கு பிடிபட்ட, நவீன இலக்கியப் பரிச்சயமுள்ள, சிற்றிதழ் வாசிப்பு அனுபவமுள்ள நண்பர்களுக்கு இது உதவாது, வார இதழ்களில்/பத்திரிக்கைகளில் எழுத விருப்பம் உள்ளவர்களுக்கே இது.

நல்ல சிறுகதைக்கு இலக்கணம் கிடையாது
 • உண்மையை எழுதுங்கள்
 • பாசாங்கின்றி எழுதுங்கள்
 • எளிமையாக எழுதுங்கள்
 • உங்களுக்கென்று ஒரு மொழி முக்கியம்

என்ன வேண்டும்? ஏன் பத்திரிக்கை?
 • பெயர் அச்சில் வரனும்
 • புகழ் வேண்டும்; பிரபலமாக வேண்டும்
 • எழுதி சம்பாதிக்க வேண்டும்
 • ஆத்ம திருப்தி
 • பகிர்ந்துகொள்ளும் சந்தோசம்
(பா.ரா. இதைப் பற்றி கேட்டதற்கு, முதல் இரண்டுக்குத்தான் அமோக ஆதரவு. சம்பாதிக்க வேண்டும் என்பதற்கு நிறைய பேர் தயங்கினார்கள், பா.ரா. இதில் தயக்கம் கூடாது என்றார், முதலில் எதற்காக எழுதுகிறோம் என்பதை நாமே அறிந்துகொள்வது முக்கியமாம், அது பணத்துக்காகக் கூட இருக்கலாம். நமக்கு கடைசி இரண்டு காரணங்கள், இதற்கும் கொஞ்சம் ஆதரவு இருந்தது)

பத்திரிக்கைகளைப் புரிந்துகொள்ளுதல்
 • நம்மை விட வயது, அனுபவம் அதிகம்
 • லட்சக்கனக்கான மக்களிடம் நேரடியாகச் செல்கிறது
 • விமர்சனம் இன்றி அனுகுங்கள்
 • முன்னுக்கு வர பத்திரிக்கை ஒரு படிக்கட்டு

யார் வாசகர்கள்?
 • பெண்கள் அதிகம்
 • வயதானவர்கள் அதிகம்
 • சராசரிகள் அதிகம்
 • பொழுதுபோக்காகப் படிக்கிறவர்கள்
 • தேர்ந்தெடுக்கும்போது ஆசிரியர்களுக்கு இது மனதில் நிற்கும்
(நம் கதையை யார் படிப்பார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்)

உதவி ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள்
 • பெரும்பாலும் அடிபடவர்கள், கஷ்டஜீவிகள்
 • பெரும்பாலும் இரக்க சுபாவம் உடையவர்கள்
 • பெரும்பாலும் நல்லவர்கள்
 • பெரும்பாலும் விரக்தி கொண்டவர்கள்
 • பெரும்பாலும் குடும்ப கதையை விரும்புபவர்கள்
 • பெரும்பாலும் நல்ல முடிவுகளை விரும்புபவர்கள்
 • பெரும்பாலும் நல்ல எழுத்தாளரைக் கண்டுபிடிக்க மாட்டோமா என ஏங்குபவர்கள்

எப்படிப்பட்ட கதைகள் வரும்
 • வடிவமற்ற கதைகள்
 • காலப் பிரக்ஞையற்ற கதைகள்
 • பேரா பிரிக்கத் தெரியாதவர்களின் கதைகள்
 • நாவல்களின் சுருக்கங்கள்
 • நீதி சொல்லும் கதைகள்
 • அர்த்தமற்ற திடீர் திருப்பமுள்ள கதைகள்
(இப்படிப்பட்ட கதைகளைப் படித்துப் படித்து நொந்துபோய் இருப்பார்கள். நம்ம கதை நல்லாயில்லைனு நமக்கே தோனுச்சுன்னா கண்டிப்பா அனுப்ப வேண்டாம். கண்டிப்பா அடுத்த கதைக்குப் போயிடுவாங்க.)

அனைத்தையும் படிப்பர்களா?
 • அனேகமாக 100 கதைகள் வரும் தினமும்
 • அனைத்தையும் பார்ப்பார்கள்
 • முதல் பாராவைப் படிப்பார்கள்
 • ஆர்வம் தூண்டினால் மட்டுமே மேலே படிப்பார்கள்
(ஆக, முதல் பாராதான் முக்கியம், அது எப்படி இருக்கவேண்டுமென்பது இனி)

முதல் வரி முக்கியம்
 • பளிச்சென்று இருக்க வேண்டும்
 • புதிதாக இருக்க வேண்டும்
 • ஆர்வம் தூண்டும் விதமாக இருக்க வேண்டும்
 • கட்டிப்போடும் விதமாக இருக்க வேண்டும்
 • எளிமையாக, கூர்மையாக, அர்த்தம் பொதிந்து இருக்க வேண்டும்
 • மையக்கருவுக்கு தொடர்புடையதாக இருக்க வேண்டும்
(மேலே கூறிய வொவ்வொன்றுக்கும் ஒரு உதாரணம் தரப்பட்டது, முழுவதும் சேகரிக்க இயலவில்லை)

பளிச்சென்று இருக்க வேண்டும்
“தீக்குழி இறங்குவது, அலகு குத்தி ஆடுவது, கத்தி போடுவது இவற்றுக்குச் சமமான ஒரு புனிதப் பணிதான் தினசரி செய்தித்தாள் படிப்பதும் என்பது இஸ்மாயிலின் அபிப்ராயம். தன்னைத்தான் துன்புறுத்திக்கொண்டு இன்புறும் காரியம்”. (யுவன் எழுதியது)

புதிதாக இருக்க வேண்டும்
“கடவுளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். விசயம் ஒன்றும் பிரமாதமில்லை. தம்பி மலையாளத் திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறான். நான் தாய்லாந்தில் வறுத்த மீன் விற்றுப் பணம் அனுப்புகிறேன்”
(இரா. முருகன் எழுதியது)

கதை எழுதும் கலை
 • எழுதும் முன் சொல்லிப் பாருங்கள், சொல்லும் முறையிலேயே எழுதுங்கள்
 • கதையில் அதிக பட்சம் மூன்று பாத்திரங்களுக்கு மேல் வேண்டாம்
 • பிரச்சனை என்ன என்பதை முதலில் சொல்லுங்கள், யாருக்கு என்பது அடுத்து, பின் தீர்வை நோக்கிச் செல்லுங்கள்.
 • வர்ணனை முக்கியம். விவரணை அவசியம். அதிக வர்ணனை வேண்டாம், தேவை - குறைந்த சொற்கள், தெளிவான படம்.
 • நுணுக்கமான விவரங்கள் மனம் சேர்க்கும். ஆனால் விவரங்களோடு நிற்கக் கூடாது.
 • கருத்தைத் திணிக்காதீர்கள், காட்சியில் புரிய வையுங்கள். (உதாரணத்திற்கு: அவர் ரொம்ப நல்லவர் என்றெல்லாம் சொல்ல வேண்டாம், உணர்த்தினால் போதும்.)
 • சிறுகதை என்பது வசனங்கள் அல்ல. குறைவாகப் பேச விடுங்கள். கூர்மை முக்கியம்.
 • நீதி சொல்லாதீர்கள், நீதிக்கதைகள் எழுதாதீர்கள்
 • அன்றாடப் பிரச்சனைகளில் இருந்து கதைகளை எடுக்கவும்.
 • தீர்வு சொல்வது சிறுகதையின் வாலையில்லை (கடைசி பாராவில் ஆகவே என ஆரம்பித்து ஒரு கருத்து சொல்வது... நல்லா இருந்த முதல் பாரா கூட, இப்படிப்பட்ட கடைசி பாராவால் விழுங்கப்பட்டுவிடும்)
 • பத்திரிக்கைகளில் பிரசுரமாக இதெல்லாம் அவசியம். இந்த அம்சங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல கதையில் இருக்கும்.
 • ஆனால், நல்ல கதை என்பது இவற்றைக் கடந்தது. 
 (புரிகிறதா? இந்த குறிப்புகளெல்லாம் பத்திரிக்கைகளுக்கு அனுப்ப ஆர்வமுள்ளவர்களுக்குத்தான், கொஞ்சம் வளர்ந்துவிட்டால் இதெல்லாம் உங்களை விட்டு ஓடிப்போய்விடும், கதை எழுதும் கலை தானாக வளர்ந்துவிடும்)

ஆளுக்கொரு விதம்?
 • ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு உண்டு
 • குமுதம் - திருப்பம் நிறைந்த கதைகள்
 • மங்கையர்மலர் - பெண்கள் கண்ணீர் வடிக்கும் கதைகள்
 • (இப்படி ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒவ்வொரு விதம் உண்டு, அதற்கேற்றார்போல எழுதி அனுப்பினால் தேர்வாக வாய்ப்பு அதிகம் என்ற அபிப்ராயம்)
 • மேலே சொன்னவை எல்லாம் பிரமை
 • எந்த பத்திரிக்கையும் இப்படியான வரையரை வைத்துக்கொள்வதில்லை.
 • படித்தால் கவர வேண்டும். முடிந்ததும் ‘அட’ என்று சொல்லவைக்கவேண்டும். அவ்வளவுதான்

அடிப்படை ஒழுக்கங்கள்
 • கையில் கிடைக்கும் அனைத்தையும் படியுங்கள், நல்ல கதைகளைப் படியுங்கள்
 • அதிகம் பாதித்த கதையை எடுத்து அலச வேண்டும்
 • வாழ்வையும், வாசிப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்
 • ஒருமுறை எழுதியது நல்லா இருந்தாலும், வேறு வடிவத்தில் எழுதிப் பாருங்கள். 3 முறையாவது மாற்றி எழுதிப் பார்க்காமல் நல்ல கதை உருவாகாது
 • கவரிங் லெட்டரில் காவியம் (வேண்டாம்)
 • தெளிவாக, போதிய இடைவெளி விட்டு எழுதுங்கள்
 • இருபுறமும் எழுதப்பட்ட தாள்களை யாரும் வாசிப்பதில்லை
 • 4, 5 பக்கங்களுக்கு மேல் போகக் கூடாது (தோராயமாக 900 சொற்கள்)
 • ஒரே கதையை பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பாதீர்கள், திரும்பி வந்தாலொழிய. 
(ஒரு வேளை இரு பத்திரிக்கைகளிலும் உங்களுடைய ஒரே கதை பிரசுரமானால், அதன்பின் உங்கள் கதைகளை அந்தப் பத்திரிக்கைகள் எப்போதும் நிராகரித்துவிடுவார்கள். ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பி மூன்று மாதம் பொறுத்துப் பாருங்கள், பிரசுரமாகவில்லையென்றால் பதில் வரும். பதில் ஏதும் இல்லையென்றால், அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு வேறு பத்திரிக்கைக்கு அனுப்பவும்)

இறுதியாக
 • நிபந்தனைக்குட்பட்ட சிறுகதைகள் எழுதுவது நல்ல பயிற்சி
 • 50 படித்து, 1 எழுதுவது பலன் தரும் (நிறைய வாசிக்க வேண்டும்)
 • தினசரி எழுதுவது நல்லது, 4 பக்கங்களாவது. (பா.ரா. தினமும் நாலு பக்கமாவது, எதையாவது எழுதிவிடுவாராம்)
 • பத்திரிக்கை இறுதி இலக்கல்ல, ஒரு நல்ல தொடக்கம்
 • அனுபவமே இலக்கியமாகிறது
 • எனவே, அடிபடுவது பற்றிக் கவலை வேண்டாம்

---

பா.ராகவன் அவர்களுக்கு நன்றி.
 -ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

கொலைகள்

கொல் என்றேன்
கொல்லென்று சிரித்தாள்
கொல்லாமல் கொன்றாள்
கொன்றேயிருக்கலாம் அவளென்னை
கொன்றால் பாவமாகுமோ?
கொல்லாமல் கொன்றால்?
கொலைகூடக் காதலாகுமோ?
கொன்றிருக்கலாம் அவளை
கொல்வதற்கு முந்திவிட்டாள்
கொன்றிருந்தால் சிறையறையில்
கொல்லப்பட்டதால் மணவறையில்

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் - செப்18

தகவல்கள்

* Gmail ல ஏற்கனவே பல தீம்கள் வந்திருப்பது நமக்குத் தெரிந்ததே... இப்போது Random Themes வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு Theme ல் gmail உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் இங்கு, உங்களுக்குப் பிடித்தமான Theme கலை மட்டும் தேர்வு செய்யும் வசதி இல்லை.

* அடுத்து மிகவும் நான் எதிர்பார்த்த ஒன்று. Wordpress ல் மிகவும் நீளமான பதிவிற்கு Read More கொடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. இதன் மூலம், முகப்புப் பக்கம் நீளமாக இருப்பதைத் தவிர்க்க முடியும். இந்த வசதி இப்போது நமது Blogger லும் வந்துவிட்டது.  இது போல...


Share/Bookmark
Read More!

கேரளாக்காரர்கள் கேனையர்களா?

13/9/09 அன்று தொலைகாட்சியின் சானல்களை புரட்டிக்கொண்டிருந்த போது ஏஷியா நெட் சானல் வந்ததும் நமது குப்பைத்தொட்டி - ஆதவன் சொன்னது போல் சுவராசியமாக ஏதாவது கிடைக்குமா என்று பார்தேன் நான் பார்த்தது மதிய நேரம் என்பதால் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது படத்தின் பெயர் ”பாண்டிப்படை” படத்தின் பெயரில் என்ன இருக்கிறது என்கிறீர்களா. 400 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் நாடாகவே இருந்து,தற்போதும் நமது உதவியால் வயிற்றைக் கழுவும் கேரள நாட்டவர் அழைப்பது ”பாண்டிகள்” என்று ஆனால் அவர்களுக்கு இங்கு சிவப்புக் கம்பள வரவேற்பு.

அந்த திரைப்படத்தில் ஒரு காட்சி தமிழ் நாட்டில் உள்ள ஒரு இடத்தில் 30 ஏக்கர் நிலத்தை ஒருவர் விற்க தமிழ்நாடு முழுவதிலிருந்தும்,மற்றும் கர்நாடகா,ஆந்திராவிலிருந்தும் ஆள் கொண்டு வருவார்.ஆனால் இங்குள்ள ஒரு தாதா அவர்களையெல்லாம் கொன்று விடுவார். பின் அந்த இடத்தின் சொந்தக்காரர் தன் வேலையாளிடம் இனி கேரளாவிலிருந்துதான் ஆள் கொண்டு வர வேண்டும் என்பார்.உடனே வேலையாள் சொல்வான் கேரளாக்காரர்கள் புத்திசாலிகள் அவர்கள் வர மாட்டார்கள் என புகழ்வார். அந்த புகழ்ச்சியில் தப்பில்லை எனதான் நான் நினைக்கிறேன்.கேரளக்காரர்கள் புத்திசாலிகள் தான் உதாரணத்துக்கு சில.

நான் கடந்த மாதம் நண்பன் ஒருவனுடைய திருமணத்திற்க்கு எர்ணாக்குளத்திற்கு இரயிலில் சென்றுகொண்டிருந்தேன்.பாலக்காடு தாண்டி வடகஞ்சேரி எனும் இடத்திற்க்கு முன்பாக இரயில் என்ன காரணத்தினாலோ வேகம் குறைந்து நின்றது.அப்போது வெளியே 20-25 போலீஸ்காரர்கள் சேர்ந்து 10-15 பேரை பிடித்து வைத்திருந்தார்கள் வெளியே நின்ற ஒருவரிடம் என்ன என்று விசாரித்ததற்கு சாக்கு மூட்டையில் மணல் அள்ளி செல்கிறார்கள் அதனால் போலீஸை வரவைத்து பிடித்தோம் என்றார்கள்.ஆம் அவர்கள் மண்வளத்தை காத்தால் தான் நீர் வளம் நிலைக்கும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

நம் தமிழ் நாட்டிலோ லாரி,லாரியாக அள்ளினாலும் கேட்க ஆளில்லை.அதையும் மீறி கேட்டால் அடி பொடி அரசியல் வாதியிலிருந்து ஆட்சியில் இருப்பவர்கள் வரை நம்மை தட்டுவார்கள்.இப்படி திருடி நம் தமிழ் நாட்டிலேயே விற்றால் பரவாயில்லை,இதனை இங்கிருந்து ஆறுகள் நிறைந்த கேரளாவுக்கே கடத்தி விற்ப்பார்கள்.

அடுத்து ரேஷன் அரிசி நம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் 2 ரூபாய்க்கும்,1 ரூபாய்க்கும் அரிசி வழங்கினால் நம்மை விட சந்தோஷிப்பவர்கள் கேரளத்தவரே.இங்கு அரிசி விலை குறைந்தால் அங்கும் விலை குறையுமோ கட்ததலும் அதிகரிக்கும்.இதற்கு முதல் முக்கிய காரணம்,நம் மக்களோ விலை குறைவாக கிடைக்கும் அரிசி என்பதால் இந்த அரிசியை சமைத்தால் எங்க வீட்டு நாய் கூட சாப்பிடல என்று பெருமை பேசுபவர்களாகவே இருக்கிறார்கள் எனவே கேரள நாட்டாவர் புத்திசாலிகளே.

அடுத்து தண்ணி பிரச்சனை,நம் தமிழ் நாட்டில் விவசாயம் நன்றாக நடந்தால்தான் அவர்களுக்கு அரிசி முதலான தானியங்களும்,காய் கறிகளும் கிடைக்கும்.ஆனால் பெரியார் அணையிலிருந்து கொள்ளளவை உயர்த்த அனுமதிக்க மாட்டார்கள்.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் வந்துவிடும் என்று.அதெல்லாம் நமக்கு உறைக்காது கர்நாடகாவில் நிறைய தமிழர்கள் வாழ்வதால் நாமும் அதிகம் முரண்டு பண்ணமுடியாது என நினைத்து கொண்டாலும்,கேரள நாட்டவர் 20% பேர் தமிழ் நாட்டில் தான் வேலை செய்கிறார்கள்.65% மாணவர் தொழில்கல்வி பயில தமிழ் நாட்டிற்க்குதான் வருகிறார்கள்.இருந்தாலும் நாம் இன்னும் பல்லிளித்துக் கொண்டு சுயலாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாக நம்மை நாமே சுரண்டி அவர்களுக்களிக்கிறோம்.எனவே அவர்களின் வளம் கெடாமல், நம் வளத்தால் வாழும் அவர்கள் புத்திசாலிகளே.

---கி.கி

(இன்னும் வரும் இதன் தொடர்ச்சி)

Share/Bookmark
Read More!

நட்பல்ல நயவஞ்சகம்

நட்பிற்காக எதையும் இழக்கலாம்

எதற்காகவும் நட்பை இழக்கலாகாது.

நல்ல வரிகள், இதை கோபிசெட்டிப்பாளையத்தில் ஒரு ஆட்டோவின் பின்புறத்திலிருந்து சுட்டது. என்னுடைய சுய, மற்றும் நண்பர்களின் சில நட்பு அனுபவங்களால் மேற்கண்ட வரிகளுக்கு தொடர்ச்சியாக நான் கிறுக்கியது

நட்பிற்காக எதையும் இழக்கலாம்

எதற்காகவும் நட்பை இழக்கலாகாது

ஆனால்..

நீ இழப்பதற்காகவே ஒரு நட்பு இருந்தால்

அந்த நட்பை இழப்பது நலம்.

ஏனென்றால்..

அது நட்பல்ல நயவஞ்சகம்.


பி.கு.:-

1996 ஜனவரி மாதம் கிறுக்கிய கிறுக்கல் இது.
தற்போதும் சில தீய நய வஞ்சக நட்புகளால் இழப்பை சந்திக்கும் நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் புரிந்தால் சரி.

---கி.கி


Share/Bookmark
Read More!

சிறுகதைப் பட்டறை - எனது பார்வையில்

நான் மிகவும் எதிர்பார்த்த சிறுகதைப் பட்டறை, 13-09-2009 (ஞாயிற்றுக்கிழமை) இனிதே நடந்தது. இதைப் பற்றி சில பதிவுகள் வந்துவிட்டன. இருப்பினும் எனது பார்வையில் உங்களுக்கு சிறிது கிடைக்கலாம் என்பதற்காக இந்தப் பதிவு. சொன்னதுபோல மொத்தம் 4 எழுத்தாளர்கள் பேசினார்கள்.

முதலில் பாஸ்கர் சக்தி அவர்கள்
இவருடைய பேச்சிலிருந்து நான் அறிந்துகொண்டது:
* நிறைய படிக்கனும்
* ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். அதையே தொடரலாம். நல்லா இருக்குன்னு பிறர் சொன்னதற்காக, நமது மண்டையில் ஏறாதவற்றை திணிக்க முயல வேண்டாம்.
* கதையில் சுவாரஸ்யம் முக்கியம்.
* கதையில் ஒரு செய்தி(Message)சொல்லவேண்டுமென்ற அவசியம் கிடையாது.
* இப்படித்தான் எழுதனும்னு எதுவுமே கிடையாது, எழுத்தாளனுக்கு முழு சுதந்திரம் உண்டு. (பெரும்பாலான கேள்விகளுக்கு இதுவே பதிலாக இருந்தது. ஆனால் அது அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கே, புதியவர்களுக்குத் தேவை பா.ரா. அவர்களுடைய பேச்சே எனப் பின்பே புரிந்தது)
இவர் தனது அனுபவங்களைப் பற்றிப் பேசினார். தன்னுடைய வாழ்வில் எப்படி சம்பவங்கள், தாக்கங்கள் கதைகளாக மாறியது என்பது குறித்துப் பேசியது நல்ல பகிர்வுகள்.

அடுத்து யுவன் சந்திரசேகர் அவர்கள்
* கதையில் சுவாரஸ்யம் முக்கியம்
* கதை எழுத கற்றுக்கொடுக்க முடியாது, அதை நாமேதான் கற்றுக்கொள்ளவேண்டும், நமக்குள் இருப்பதைக் க்ண்டுபிடிக்க வேண்டும், சமையல் மாதிரி.
* முன்பு இப்படித்தான் கதை இருக்க வேண்டும் என்றெல்லாம் இருந்தது (உதா: எடுப்பு, தொடுப்பு, முடிப்பு - என்பது மாதிரி) இப்போது அப்படியெல்லாம் இல்லை, நமக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.
இவர் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். Magical Realism, நவீனத்துவம், பின்னவீனத்துவம், செவ்வியல் என்பதைப் பற்றியெல்லாம் பேசினார். நமக்குத்தான் அதெல்லாம் புரியவில்லை. மொத்தத்தில் இவர் சொன்னது - இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற தடையெல்லாம் இப்போது இல்லை, முழு சுதந்திரம் இருக்கிறது, ஆனால் சுவாரஸ்யம் மிகவும் முக்கியம். நம்ப முடியாத நிகழ்வுகள் கொண்ட கதை கூட எழுதலாம், ஆனால் தொடர்ந்து படிக்கத் தூண்டும்படி அது இருக்க வேண்டும். முக்கியமாக இவருடைய கலந்துரையாடல் பகுதி மிகவும் சுவாரஸ்யமாகவும், வாய்விட்டுச் சிரிக்கும்படியும், கலகலப்பாகவும் இருந்தது.

அடுத்து தேவதாஸ் அவர்கள்
இவர் மொழி பெயர்ப்புக் கதைகள் பற்றிப் பேசினார். பிற நாட்டு மக்களுடைய கலாச்சாரத்தைப் பற்றி அறிந்துகொள்ள இம்மொழிபெயர்ப்புக் கதைகள் மிகவும் உதவும் என்றார். மேலும் சில வெளிநாட்டுக்கதைகள் பற்றியும் சொன்னார். இவர் பேசியதிலும், கலந்துரையாடலிலும் தகவல்கள் அதிகம் இருந்தன.
கலந்துரையாடலில், மொழிபெயர்ப்பில் இருக்கும் கஷ்டங்களைப் பற்றி சொன்னார். மொழிபெயர்ப்பு என்பது சரியாக நூறு சதவீதம் அப்படியே கொண்டுவரமுடியாத காரியம். அந்த மொழிபெயர்ப்பின் நோக்கத்தைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடலாம் (நோக்கம் என்பது, பிற மொழியின் கலாச்சார அறிமுகமாகவோ, வித்தியாசமான கதையைச் சொல்லவேண்டும் என்பதாகவோ, பிற மொழியின் மாறுபட்ட நடையைச் சொல்ல வேண்டும் என்பதாகவோ இருக்கலாம்).

இறுதியாக பா.ராகவன் அவர்கள்
இவர் பத்திரிக்கைகளுக்கு சிறுகதை எழுதுவது என்பது எப்படி என்பதைப் பற்றி ஒரு பெரிய பாடமே நடத்தினார், சுவாரஸ்யமான பல தகவல்கள் மற்றும் அனுபவப் பகிர்வுகளுடன். இவர்தான் தெளிவுபடுத்தினார், உங்கள் இஷ்டம்போல எழுதலாம் என்பது ஓரளவு களத்தில் நின்ற பிறகே, ஆரம்ப எழுத்தாளன் செய்யவேண்டியது இவைகளே என்று.
* எதற்காக எழுதுகிறோம் எனப் புரிந்துகொள்ளுதல்
* பத்திரிக்கைகளைப் பற்றிப் புரிந்துகொள்ளுதல்
* வாசகர்கள் யார்
* நமது கதையைத் தேர்வு செய்யும் உதவி ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள்
* அவர்களுக்கு எப்படிப்பட்ட கதைகளெல்லாம் வரும்
* அதிலிருந்து எப்படித் தேர்வு செய்கிறார்கள்
* நமது கதை தேர்வாக அதில் இருக்கவேண்டிய அம்சங்கள் என்னென்ன
* கதை எழுதும் கலையை நம்முள் வளர்ப்பது எப்படி
* அடிப்படை ஒழுக்கங்கள் என்னென்ன
என மிகவும் தேவையான பல தகவல்களை அள்ளிக் கொட்டிவிட்டார். இடையிடையே நகைச்சுவை வெடிகள் அட்டகாசம்.

இதோ அவருடைய முதல் பக்கம்:
சிறுகதை நன்கு பிடிபட்ட, நவீன இலக்கியப் பரிச்சயமுள்ள, சிற்றிதழ் வாசிப்பு அனுபவமுள்ள நண்பர்களுக்கு இது உதவாது...
புரிகிறதா? ஆகவே, பா.ராகவன் அவர்களுடைய உரை பற்றி பின்பு விரிவாக எழுதுகிறேன். தேவையானவர்கள் மட்டும் படித்துக்கொள்ளவும்.

இவர்கள் நால்வருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இவர்களுடைய அனுபவப் பகிர்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

---

மேலும், பல பதிவர்களை இங்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேசவேண்டும் என எண்ணியிருந்த சிலருடன் அதிகம் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை, எதிர்பாராமல் சந்தித்த பதிவர்களிடம் அதிகம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தத்தில் இந்த சந்திப்பு இன்ப அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந்த அருமையான நாளை நான் பெறக் காரணமான பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர் மற்றும் நர்சிம், பத்ரி அவர்களுக்கு நன்றிகள் பல.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

ஈஃபெல் கோபுரத்தின் உருவாக்கம் அன்றும், இன்றும்


தற்போதைய தோற்றம்
நீங்கள் இங்கே பார்க்கும் ஈஃபிள் கோபுரத்தைப்பற்றி ஏற்கனவே நிறைய தெரிந்து வைத்திருப்பீர்கள். இருப்பினும் எனக்குத்தெரிந்த சில விஷயங்களையும்,இதன் உருவாக்கத்தின் போது எடுத்த சில அரிய புகைப்படங்களையும்., உங்களுடன் பகிர்கிறேன்.

பொறியாளர் (Gustave Eiffel) கஸ்ற்றேவ் ஈஃபிள் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, ஃப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில்(Seine)ஸெயின் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த உலோக கோபுரம்.உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோபுரம் இதன் பொறியாளரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் அதுவும் நம் தமிழ் நாட்டில் நமது வரிப்பணத்தில் ஒரு பேருந்து நிலையம் கட்டப்பட்டால், அது யாருடைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதோ அவரால் கட்டப்பட்டது என அறிவிக்கும் ஒரு சிமெண்ட் பலகை சுமார் 1.5 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும். அதன் பின் ஆட்சி மாறினால் இவரால் புனரமைக்கப்பட்டது என அறிவிக்கும் ஒரு சிமெண்ட் பலகை சுமார் 3 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும். ஒரு வேளை இனி ஆட்சி மாறினால் மீண்டும் புனரமைக்கப்பட்டது என அறிவிக்கும் ஒரு சிமெண்ட் பலகை சுமார் 6 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் . அப்படியில்லாமல் பொறியாளரின் பெயர் பத்திரிகை செய்தியில் வந்தால் அது 8-வது அதிசயம்.சரி சரி அதெல்லாம் நமக்கெதற்கு நாம் ஈஃபிள் கோபுரத்தின் கட்டுமான தகவல்களைக் குறித்து பார்ப்போம்.

1887 தொடக்கம் 1889 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889,மார்ச் 31 ஆம் தேதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில், உயர்த்திகளைப் (lift)பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

1888ஏப்ரல்

இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 டன்னுக்கும் கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்டபோது, உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவேயாகும். இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 டன் கடும் மண்ணிறப் பூச்சு மை(paint) பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சென்டி மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது.

இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இராதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.

ஆரம்பத்தில், இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈஃபெல் அநுமதி பெற்றிருந்தார், எனினும், தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இது இருந்ததனால், அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும், கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது.

(என்ன அநியாயம் இது 20 ஆண்டுகள் என்று சொல்லி 120 ஆண்டுகள் ஒன்றும் ஆகாமல் இருப்பதெல்லாம் கட்டுமானக்கலையா?! நம் டெல்லி மேம்பாலம் போல் கட்டும்போதே இடிந்து வீழ்வது அல்லவா கட்டுமானக்கலை)

ஜனவரி 12, 1908 ல், முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது.

1929 ல், கிறிஸ்லெர் கட்டிடம் நியூ யோர்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது, ஈபெல் கோபுரம், உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது.

அடொல்ப் ஹிட்லர், [[இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர். அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார்.

ஜனவரி 3, 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது
1888 டிசம்பர்1889மேய்


நான் இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போது என் மனைவி பார்த்துக்கொண்டிருந்தாள். அவங்களுக்கு ஈஃபெல் கோபுரத்தைப்பற்றி விளக்கினேன் பின் கூகுள் மேப் ஓப்பன் பண்ணி street view-ல் கோபுரத்தின் அட்டகாசமான கட்டுமானத்தைக் காட்டினேன். பின் இது போல் பிரதிகள்(மாடல்) வேறு இடங்களில் இருப்பதைக் குறித்தும் கூறினேன்.

அதுதான் பிரச்சினை ஆகிவிட்டது. எனக்கு ஒரு பிரதி கோபுரத்தையாவது காட்டித்தாருங்கள் என கேட்கத்தொடங்கினாள். வேறு வழியில்லை என்பதைத்தெரிந்து, உடனே விமானம் எதுவும் கிடைக்காததால் என்னுடைய 2 சக்கர விமானத்தில் புறப்பட்டு கோவை ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள ஈஃபெல் கோபுரத்தைக் கான்பித்தேன்.

அந்த கோபுரம் உங்கள் பார்வைக்கு


அதோடு நின்றுவிடவில்லை “இதமாதிரி ரொம்ப சின்னதா ஒண்ணு நமக்கு வாங்கினால் நல்லாயிருக்கும்” என இழுத்தாள். உடனே நான் ஒண்ணு என்ன 2-டாக கட்டி விடுவோம் எனக்கூறினேன். அப்புறம் சும்மா விடமாட்டங்களே. நச்சரிப்பு தொடர்ந்தது. வேறு வழியில்லாமல் அதற்கான தளவாடங்கள் வாங்கினேன் . மொத்தம் 0.000000001 டன் எடை இருந்த்தது. விலை 0.000000015 மில்லியன் ஆனது ,அதை வைத்து பணிகளை துவங்கினேன்.பணிகளை துவங்கியது 02.09.09 அன்று. அன்றே முடித்துவிட்டேன் தனி ஆளாக.

தளவாடங்கள்
படிப்படியாக

நேர் பார்வையில்

கட்டி முசிந்த பின்

கட்டும்போது மேல் பார்வையில்
என் வேலை முடிந்த பின் என் சகதர்மிணியை அருகில் விட்டு ஒரு போட்டோ எடுத்தேன்

அதன்பின் அவைகளை எடுத்து கையில் 2-ம் உனக்குத்தான் என கொடுத்தபோது
முகத்தில் தெரிந்த புன்சிரிப்பு ஒரு க்ளிக்


---கி.கி

பி.கு:-
இன்னும் சில ஒரிஜினல் படங்களும் சில விஷயங்களும் கைவ்சம் உள்ளன .

உபயம்:-

ஒரிஜினலுக்கு விக்கிப்பீடியா

பிரதிகளுக்கு சுட்டி விகடன்

Share/Bookmark
Read More!