வீடு தேடுதல் (1)

ஏதோ ஒரு காரணத்துக்காக வீடு மாத்தனும்னு முடிவு பண்ணிருவோம். அடுத்து வீடு தேடனும். எப்படியெல்லாம் தேடலாம்? பேப்பர் விளம்பரம், இணையம், தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தல் மற்றும் புரோக்கர்கள்.

வழக்கமான பேப்பர்களில் வாடகை வீடு பற்றிய விளம்பரம் குறைவாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளுக்கு ஃப்ரீ ஆட்ஸ்தான்(Free Ads) சரி. சென்னையில் வியாழன்தோறும் கடைகளில் கிடைக்கும். இப்போது இங்கும் புரோக்கர்கள் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். விளம்பரம் பார்த்து போன் செய்தால் பத்துக்கு எட்டு புரோக்கர்கள் கொடுத்த விளம்பரமாகத்தான் இருக்கின்றன. அதனாலென்ன என்கிறீர்களா? புரோக்கர் மூலம் வரும் பிரச்சனைகள் அடுத்து பார்க்கலாம். முடிந்தவரை வீட்டு உரிமையாளர் கொடுத்த விளம்பரமாகப் பார்த்து போன் செய்யவேண்டும், விளம்பரத்திலேயே போட்டிருக்கும் புரோக்கர்கள் வேண்டாமென்று.

முதலில் நமக்கு தேவையான ஏரியாவில் வந்திருக்கும் விளம்பரங்கள் அனைத்தையும் அலச வேண்டும். ஏதாவது விளம்பரம் நமக்குத் தோதாக இருக்கும்பட்சத்தில் அதை பேனா கொண்டு வட்டமிட்டுக்கொண்டே வரவேண்டும். தேர்ந்தெடுத்தல் முடிந்த பின் ஒவ்வொருவருக்காக போன் செய்ய வேண்டும். பேசும்போது நமது பெயரைச் சொல்லி அறிமுகம் செய்துவிட்டு, அவர் கொடுத்த விளம்பரம் பற்றிச் சொல்லிப் பேச ஆரம்பிப்பது நல்லது. சிலர் பல இடங்களில் விளம்பரம் கொடுத்திருப்பர். சிலர் வீட்டு போன் நம்பரைக் கொடுத்திருப்பார்கள், வீட்டில் விளம்பரம் கொடுத்ததே தெரியாத மனைவியோ (அல்லது கணவனோ) போன் எடுத்தால், தலையும் புரியாமல் காலும் புரியாமல் ஒரு கால் வீணாகும் வாய்ப்பு உள்ளது.
சரியான புரிதலுக்குப் பின் வீட்டைப் பற்றிப் பேச ஆரம்க்கலாம். வீடு காலியாக இருக்கும்பட்சத்தில் நமது தேவைகள் அனைத்தையும் சொல்லி அதற்கேற்றார்போல வீடு இருக்கிறதா என உறுதி செய்துகொண்டு பின் நேரில் சென்று பார்க்க நேரம் கேட்கவேண்டும். சில நேரம் போனிலேயே தெரிந்துவிடும் நமக்கு இந்த வீடு ஒத்துவராது என்று. உதாரணத்திற்கு, பார்க்கிங் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்று பதில் வரும். போய்ப் பார்த்தால் வீட்டிற்கு வெளியே தெருவில்தான் விடவேண்டியது இருக்கும். தண்ணி வசதி பற்றி கேட்டால், காலை மாலை வரும் என்று பதில் வரும். போய்ப் பார்த்தால் வீடு இரண்டாம் தளத்திலும் தண்ணீர் குழாய் முதல் தளத்திலும் இருக்கும். தண்ணீர் காலை 5 மணிக்கு வரும். ஆகவே எல்லாவற்றையும் தெளிவாகக் கேட்கவேண்டும்.

தேவைகள் சரியாக இருந்தால் நேரில் சென்று பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஒத்துவரவில்லையென்றால் வட்டம் போடு வைத்திருப்பதை அடித்து வைத்துக்கொள்ளவேண்டும். திரும்பத் திரும்ப ஒரே ஆளுக்கு போன் செய்வதைத் தவிர்க்கலாம். ஒரே விளம்பரம் வாரா வாரம் வரும். அதையும் கவனிக்க வேண்டும். சில நேரங்களில் முதலிலேயே சொல்லி விடுவார்கள், காலி இல்லை என்று. அப்போதும் அடித்துக்கொள்ளவேண்டும். நல்ல வீடு உடனேயே போய்விடும், அதற்கு எனது நண்பர்கள் போன்ற ஆட்கள்தான் காரணம்.

எனது நண்பர் ஒருவர் வீடு தேடும் அனுபவம் பற்றி சொன்னார். வியாழன் காலை 6 மணிக்கு பேப்பருடன் அந்த ஏரியாவுக்குச் சென்றுவிடுவார். இந்த மாதிரி ஓனர் கொடுத்த விளம்பரங்களுக்கு ஒவ்வொன்றாகப் போன் செய்து அப்போதே வந்து பார்க்க நேரம் கேட்பார். காலை என்பதால் எப்படியும் கிடைத்துவிடும். பெரும்பாலும் வீட்டு உரிமையாளர்கள் விரும்புவதும் காலை அலுவலகம் செல்லுவதற்கு முந்தைய நேரத்தைத்தான். சரியாக அமைந்துவிட்டால் அப்போதே முன்பணம் கொடுத்து வந்துவிடுவார். விளம்பரம் வந்த சூட்டோடு சூடாக வீடுகள் நிரம்பும் சூட்சுமம் இதுதான். அவரது நண்பர்களுக்கும் இப்படித்தான் பிடித்துக்கொடுக்கிறாராம். பின்பு நமக்கு எப்படி கிடைக்கும்?

இப்போது சில இணைய தளங்களும் இதுபோன்ற சேவையை அளிக்கின்றன. 99acres.com, indiaproperties.com, magicbricks.com, makaan.com, sulekha.com போன்றவை பயனளிக்கும் தளங்கள். இங்கும் புரோக்கர், ஓனர் விளம்பரங்கள் என்று தனித்தனியாக இருக்கும். நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து வாய்வழி விளம்பரம். நமக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி வைக்கலாம். அப்படியே வாய்வழியாகவே பரவி வீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நல்ல வீடுகள் கிடைக்காமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். பெரும்பாலும் நல்ல அபார்ட்மெண்டுகளில் பக்கத்துவீடு காலியாவது தெரிந்தால் மற்ற பக்கத்துவீட்டுக்காரர்கள் தமக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி, அந்த வீடு காலியாவதற்கு முன்பே பேசி முடித்துவிடுவார்கள். வீடு காலியாவதற்கு முன்னமே அது அடுத்தவர் வருவதற்கு ஏற்பாடாகிவிடும். அதனால் நண்பர்கள், தெரிந்தவர்கள், உடன் வேலை செய்பவர்கள் அனைவரிடம் சொல்வதால் ஒன்றும் குறைந்துபோய்விடாது. முடிந்தால் புலம்பலாம், அது பார்த்து நமது நண்பர்கள் கொஞ்சம் கூடுதல் முயற்சி செய்து வீடு கிடைக்க ஏற்பாடு செய்யலாம். வலைப்பூ இருந்தால் அங்கு விளம்பரமாகப் போடலாம். பதிவர்கள் யாரும் பார்த்து உதவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

-பெஸ்கி.

புரோக்கர் - இந்தப் புண்ணியவான் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். மேலும், பின்வரும் விசயங்கள் பற்றியெல்லாம் இந்தத் தொடரில் சொல்லலாம் என்றிருக்கிறேன். உங்கள் அனுபவங்கள் வைத்து மேலும் ஏதாவது சேர்க்கவேண்டுமா எனத் தெரியப்படுத்தவும்.

புரோக்கர் பிரச்சனைகள்
தெரு - பார்க்கிங்
தண்ணீர்
இணைப்புகள்
கடை வசதிகள்
அக்கம்பக்கம்
வீட்டின் தன்மை
வசதிகள் - துணி உலர்த்த, பார்க்கிங், ஏசி, மீட்டர், ஜன்னல், சமையலறை ஜன்னல், ஆணிகள், குளியலறை வசதிகள்
வீட்டு ஓனர்
முகவரி மாற்றங்கள்
வீட்டில் தேவையில்லாமல் சேரும் பொருட்கள்


Share/Bookmark
Read More!

சொந்த வீடும் வாடகை வீடும்

வாடகை வீட்டுல இருக்குறதுனால நன்மைகளும் இருக்கு, கஷ்டங்களும் இருக்கு. வீடு நமக்குப் பிடிக்கலைனாலோ, பக்கத்து வீட்டுக்காரங்களப் பிடிக்கலன்னாலோ, தெருவைப் பிடிக்கலைனாலோ, வாசப்படி பிடிக்கலைனாலோ வீட்ட மாத்த முயற்சி பண்ணலாம். அல்லது வேற நல்ல வீடு கிடைச்சா வீட்ட மாத்திக்கலாம். வேற நல்ல வேலை, வேற ஊர்ல கிடைச்சாலோ, இந்த வீட்டுல தண்ணி வரல, அல்லது தண்ணி சரியா போகல (இது தண்ணி வரலங்கறத விட பெரிய பிரச்சனை) அப்டி இப்டின்னு பல காரணங்களுக்காக வாடகை வீட்டுல இருக்குறவங்க மாத்திக்கலாம். ஆனா சொந்த வீடுன்னா? அப்படியே பேத்து எடுத்துட்டுப் போகவா முடியும்? சொந்த வீட்ட விட்டுப் போக முடியலங்கிறதுக்காகவே பல வாய்ப்புகளை இழந்தவர்கள் பலர். அப்படியே விட்டுப் போகவேண்டிய சூழ்நிலை வந்தால் வீட்டை வாடகைக்கு விடனும், அதப் பாக்கனும், வர்றவங்க சரியா வச்சுக்குவாங்களான்னு கவலைப் படனும், இன்னும் எவ்வளவோ இருக்கு. அப்படி இல்லைனா, மத்தவங்களை வீட்டுல விட்டுட்டு நாம மட்டும் தனியா வாழனும். ஆனாலும் பாருங்க, வாடகை வீடா சொந்த வீடான்னு கேக்கும்போது “சொந்த வீடு”ன்னு சொல்லிறதுல ஒரு கெத்து இருக்கத்தான் செய்யிது.

இருந்தாலும் வாடகை வீட்டுல இருக்குறவங்க ரொம்ப சந்தோசமானவங்கன்னு நினைச்சுடக்கூடாது. எங்க கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். வாடகை வீட்டுல இருக்குறவனோட மொத குறிக்கோள் ஒரு சொந்த வீடு வாங்கனும் என்பதாகத்தான் இருக்கும். அதுவும் தங்கமணி ஆசை அதுவாகத்தான் இருக்கும். நமக்கு ”யாதும் ஊரே, எங்கேயும் வீடே”ன்னு வாடகை வீட்டுல இருக்குறதுதான் பிடிச்சிருக்கு. ஆனா தங்கமணி அப்பப்ப சொந்த வீட்டப் பத்திப் பேசி அடிக்கிற தம்ம விட்டுடலாமான்னு உள் மனச யோசிக்க வைப்பாங்க. அதுலயும் சில நேரம், “அவங்க சொந்த வீடு வாங்கப் போறாங்களாம்” அப்படின்னு சொல்லும்போது காதையே கழட்டி வச்சுடலாம் போல இருக்கும். இருந்தாலும் கேக்குற மாதிரியே ஹ்க்கும் போட்டுக்கனும். இந்தப் பாயிண்ட மட்டும் நல்லா நோட் பண்ணிக்கனும், இல்லன்னா வாடகை வீடோ சொந்த வீடோ, எந்த வீட்டுலயும் நிம்மதியா இருக்க முடியாது.


பிடிக்கலைனா வீட்ட மாத்திக்கலாம். ஆனா வீட்ட மாத்தும்போது எவ்வளவு விசயங்களைக் கவனிக்கவேண்டியது இருக்கு தெரியுமா? சரியா விசாரிக்காம வந்துட்டோம்னா அவ்வளவுதான், உடனே மாத்திகிட்டெல்லாம் போக முடியாது. பின்ன? சாமான் சட்டியை எல்லாம் ஏத்தி எறக்குற கொடுமை எங்களுக்குல்ல தெரியும். இப்பல்லாம் பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் அப்டின்னு நிறைய கம்பெனிகள் வந்துடுச்சாம். நாம இது வரைக்கும் இப்படி யாரு கிட்டயும் போனது இல்ல. ”தம்பிகள் உடையான் வீடு மாத்த அஞ்சான்”. ஆனா அடுத்த தடவ பேக்கர்ஸ்தான். அதையும் ஒரு தடவ பாத்துடலாம்.

வீடு மாறுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் புதிதாகப் போகும் வீடு நம் மனதிற்குப் பிடித்ததாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வீடு கிடைப்பது மிகவும் கடினம். அவ்வாறான வீட்டைத் தேடுவதும் மிகவும் கடினம். அவ்வாறு தேடும்போது எனக்கு வந்த பல பிரச்சனைகள், அனுபவங்களில் இருந்து இந்தத் தொடரை எழுதுகிறேன். வாடகை வீடு மாறும்போது என்னென்ன பிரச்சனைகள் வரலாம், என்னென்ன விசயங்களை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதே இந்தத் தொடர். முதலில் வீட்டு புரோக்கரிடம் இருந்து ஆரம்பிக்கலாம்...

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!

சத்தம் போடாதே, நிசப்தம் கூடாதே!

வழக்கமாக வீட்டிற்கு வந்தவுடன், நேரமிருப்பின் ஏதாவதொரு படத்தைப் போட்டுப் பார்ப்பது வழக்கம். நல்ல தெளிவான சப்தம், ஆக்சன் மற்றும் த்ரில்லர் காட்சிகளில் வீடே அதிரும். இதுநாள் வரை எனக்கு அதில் பிரச்சனை இல்லை, இப்போது தங்கமணி. வழக்கமாக இந்த நேரங்களில் தங்கமணி சமையலறையில் இருப்பார். இங்கே சரவுண்டு சவுண்டு அதிகமாகும்போதெல்லாம் அங்கிருந்து டிடிஎஸ் எபெக்டில் வரும். “ஏங்க இப்படி சத்தமா வைக்கிறீங்க, கொஞ்சம் கொறச்சு வச்சுப் பாத்தா ஆவாதா? எத்தன வாட்டிதான் சொல்றது?”.

நான் என்ன வேண்டுமென்றா இப்படிச் செய்கிறேன். பேசும்போது சரியாகத்தான் இருக்கிறது, சண்டை வருபோதுதான் அதிகமாகிறது. கிட்டத்தட்ட எல்லா படத்தின் சவுண்டு எபக்ட்டுகளும் இப்படித்தான் இருக்கின்றன. சரி, சத்தத்தைக் குறைத்து வைத்துப் பார்க்கலாம் என்றால் பேசுவது கேட்காது. சண்டை வரும்போது மட்டும் எழுந்து சத்தத்தைக் குறைப்பது படத்தின் மீது படிந்திருக்கும் ஊடுருவலைக் குறைக்கிறது. டிவியில் பார்த்தால் பரவாயில்லை, ரிமோட் உபயோகித்து மாற்றிக்கொள்ளலாம், இது கம்ப்யூட்டர். படத்தில் சண்டை வரும்போதெல்லாம் வீட்டிற்குள்ளும் சண்டை வரும் அபாயம் இருந்தது.

இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. இதற்கு மாற்று வழி என்ன செய்யலாமென யோசித்தேன். கீபோர்டு வேறு பழையதாகி மாற்றும் தருவாயில் இருந்தது. ஒரு யோசனை! வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் வாங்கி விடலாம் என யோசித்தேன். ஏனெனில், மவுசையோ கீபோர்டையோ படம் பார்க்கும்போது மடியில் வைத்துக்கொள்ளலாம். சத்தம் கூடும்போது குறைத்துக்கொள்ளலாம் என்பது யோசனை.

ஒரு வழியாக பட்ஜெட் போட்டு வயர்லெஸ் கீபோர்டு, மவுஸ் வாங்கியாச்சு. அப்புறம் படம் பார்க்கும்போது சத்தத்தைக் குறைப்பது ஒன்றும் பெரிய விசயமாகத் தெரியவில்லை. ஆனால் திருப்தியில்லை. சில நேரங்களில் சத்தத்தைக் குறைக்க மறந்துவிடுகிறேன். சத்தத்தைக் குறைக்கும் மனநிலை கொண்டால் படத்தில் ஒன்ற முடியவில்லை. எல்லாம் சரியாகச் செய்தாலும் சண்டை வருபோது அதிராமல் இருப்பது என்னவோ இழந்ததைப் போன்ற உணர்வைத் தந்தது. “திட்டம் ஆ” பற்றி மனது யோசிக்கத்தொடங்கியது.

திட்டம் ஆ, திட்டம் அ வை விட அதிக பட்ஜெட்டில் வரும்போலத் தோன்றியது. ஏற்கனவே இதற்கு பட்ஜெட் போட்டு தங்கமணியிடம் வாங்கிக் கட்டியிருப்பது அவ்வப்போது திட்டம் ஆ வை குழிக்குள் தள்ளும். இருந்தாலும் அடுத்தது தயார். வயர்லெஸ் ஹெட்போன். அதை வாங்குவதற்குத் திட்டமிட்டபோது இன்னோரு யோசனை. திட்டம் ஆ, திட்டம் ஆ-2 ஆக மாறியது. வயர்லெஸ் ஹெட்போன் வாங்கினால் இதற்கு மட்டும்தான் உபயோகிக்க முடியும். அதுவே ப்ளூடூத் ஸ்டீரியோ ஹெட்செட் வாங்கினால் மொபைலுக்கும் உபயோகிக்கலாம். அப்படியே ஒரு ப்ளூடூத் டாக்கில் வாங்கி கம்ப்யுட்டரில் பொருத்தி, இரண்டையும் இணைத்து படமும் பார்க்கலாம்.

இதைப் பற்றி நண்பர்களிடம் விசாரித்தேன். எவரும் மொபைலுக்கு வாங்கிய ப்ளூடூத் ஹெட்செட்டை கம்ப்யூட்டருடன் இணைத்த அமைப்பை செய்து பார்த்ததாகத் தெரியவில்லை. நாம்தான் முதன்முதலாக முயற்சி செய்ய வேண்டுமா? பரவாயில்லை, முயன்று பார்க்கலாம் என அடுத்த மாதத்துக்கான பட்ஜெட்டில் திட்டம் போட்டு வைத்தேன். ஈபேயில் வாங்கிக் கொண்டிருக்கும்போதே பார்த்த தங்கமணி கேட்டார், கண்டிப்பாக இதற்காக் நீ என்னைப் பாராட்டுவாய் என்று ஒரு பிட்டையும் போட்டு வைத்தேன், என்னவென்று சொல்லவில்லை.

திட்டத்தைச் முதன்முதலாய்ச் செயல்படுத்தும் நாள் வந்தது. வழக்கம்போல தங்கமணி சமையலறையில் இருந்தார். அனைத்தையும் அமைத்து சோதித்துப் பார்த்தேன். நன்றாக வேலை செய்தது. மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி. தங்கமணியிடம் சொல்லி பெருமைபட்டுக்கொள்ளலாம். அமைதியாகப் படத்தை ஆரம்பித்தேன்.
”சத்தம் போடாம அப்படி என்னதான் பண்றீங்க?”, தங்கமணி.
நான் படத்தை நிறுத்திவிட்டு, “பாத்தியா, இந்த ப்ளூடூத் ஹெட்செட்ட கம்ப்யூட்டரோட கனெக்ட் பண்ணிருக்கேன், நா நல்லா சத்தத்தோட படம் பாப்பேன், சத்தம் வெளியவும் கேக்காது, அப்படியே இத போனுக்கும் யூஸ் பண்ணிக்கலாம், எப்டி ஐடியா?”, என்றேன் பெருமையாக.
வித்தியாசமாகப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார். நான் மீண்டும் படத்தில் ஆழ்ந்தேன். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார் தங்கமணி,
“என்னங்க, சத்தமே இல்லாம என்னமோ மாதிரி இருக்குங்க, நீங்க சத்தமா வச்சே படம் பாருங்க. வீடு அமைதியா நல்லாவே இல்ல, சரியா?”, என ஹெட்செட்டைக் கழட்டிவிட்டு மீண்டும் சமையலைறைக்குள் சென்றார்.

அடுத்து, திட்டம் இ.

-பெஸ்கி.

Share/Bookmark
Read More!