தூக்கமில்லா நோயும் சில உண்மைக் கனவுகளும்


இந்தப் படத்துக்கும் நமக்கும் ரொம்ப நாளா ஒரு கனெக்சன். சில பல ஆண்டுகளுக்கு முன்னாடி நம்ம நண்பன் நம்மல சைடு போஸ்ல பாத்துட்டு, நீ அந்தப் போஸ்டர்ல இருக்குற மாதிரியே இருக்கன்னு ஒரு பிட்டப் போட்டான். போதாக்குறைக்கு அவன் ஒரு ஹாண்ட் தேர்ந்த கணினிக் கலைஞன் வேற. நம்மல அபப்டி நில்லு, இப்படித் திரும்பு, கொஞ்சம் குனி அப்டின்னு ஆங்கிள் ஆங்கிளா போட்டோ எடுத்து அப்படியே ஒரு வேலை பண்ணிக் காட்டினான். அதான் இது...
அப்பவே சொன்னான், இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் அப்டின்னு. அப்பல்லாம் நமக்கு படம் பாக்குறதுல ஆர்வம் இருந்தாலும், புடிச்சது என்னவோ ஒரு ஓபனிங் சாங், கொஞ்சம் பைட்டு, அஞ்சு பாட்டு, அதுல ஒன்னு குத்து (படம் முடியிறதுக்கு முன்னாடி), ஒன்னு மெலொடின்னு இருக்குற தூயத் தமிழ் படங்கள் மட்டுமே. தமிழ் மேல அவ்ளோ பற்று. அப்படியே இன்கிலீசுப் படம் பாத்தாலும், ஒன்னு ஜாக்கிசானுக்காக இருக்கும். இல்லைனா ஏதாவது பெரிய மிருகம் வரனும். அப்பத்தான் பாப்பேன். அப்படி இருந்த காலத்துல அவன் சொன்னத அவ்வளவா கண்டுக்கல. ஏன்னா, ஹீரோ தெரியலன்னா அந்தப் படத்தப் பாக்குறது தெய்வக்குத்தமா இருந்துச்சு.

அப்றம் கொஞ்ச நாள் கழிச்சு, அதே போஸ்டர ஒரு தமிழ்ப் படத்துக்குக் காப்பி அடிச்சிருக்குறதாச் சொன்னான். நம்ம ஆளு பண்ண அளவுக்கு பெர்பெக்ட்டா அது இல்ல. இதுல நம்ம ஆளுக்கு ஒரு பெரும. அப்பவும் இந்த படத்தப் பத்தி சொன்னான். நமக்கு லேசா ஒரு ஆச. சரி, பாக்கலாமேன்னு அவன் கிட்ட கேட்டேன். தேடிப் பாத்துட்டு அந்த டிவிடி தொலைஞ்சு போச்சுன்னு சொல்லிட்டான். சரின்னு விட்டுட்டேன்.

திரும்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு படம் வந்துச்சு, மந்திரப் புன்னகை. படம் இன்னும் பாக்கல. ஆனா அதோட கதை இந்த கதைய ஞாபகப்படுத்துச்சு. இப்ப முன்னாடி மாதிரி இல்ல. மகா மொக்க படம் கிடச்சாலும் சப் டைட்டிலோட இருந்தா உக்காந்து பாக்குற பக்குவம் வந்துருச்சு. ஏற்கனவே டிசம்பர்ல இந்தப் படம் டிவிடி வாங்கிப் பாத்ததுல பாதிதான் பாக்க முடிஞ்சது. அந்த வெறி வேற, ஒரு வழியா வேற ஒரு வழியா எடுத்து, நேத்துதான் பாத்தேன். தேடுனது வீண் போகல. இதுவும் ஒரு வித்தியாசமான படம்தான்.

ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் கதாநாயகன், இன்னும் கொஞ்சம் மெலிந்தால் காணாமல் போய்விடும் அளவுக்கு எழும்பும் தோலுமாக. தூங்காத வியாதி, ஒரு வருடமாகத் தூங்கவில்லை. அதனால் ஏற்படும் விளைவுகளே காட்சிகள். அதே தொழிற்சாலையில் வேலை செய்யும் இன்னொருவனால் பிரச்சனை வருகிறது. சொன்னால் யாரும் ஏற்கவில்லை, தொழிற்சாலையில் அப்படி ஒருவன் வேலை செய்ததற்கான ரெக்கார்டே இல்லை. அடிக்கடி சந்திக்கும் அவனால் வரும் தொல்லைகள். அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் எனத் தேடிப்போகும்போது வரும் திருப்பங்கள். இதுதான் படம்.



கதாநாயகன் கிறிஸ்டியன் பேல். இதற்கு முன்னால் காஸ்ட் அவே (Cast Away) படத்தில் டாம் ஹாங்க்ஸ் உடம்பை கூட்டிக் குறைத்து நடித்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஆனால் இதில் அதற்கும் மேல், இப்படி உடம்பைக் குறைக்க முடியுமா என்று நம்பவே முடியவில்லை.சில நேரங்களில் அந்த உடம்பைப் பார்த்தால் பயமாகக் கூட இருக்கிறது. எப்படித்தான் இப்படியெல்லாம் நினைத்த மாதிரி கூட்டி/குறைக்கிறாரோ தெரியவில்லை.

படத்தோட வெற்றியே, வித்தியாசமான படம்னு தெரிஞ்சு உக்காத்தாலும், ஒவ்வொரு காட்சிக்குப் பின்னாடி ட்விஸ்ட் இருக்குன்னு தெரிஞ்சிருந்தும், கடைசியில எல்லாத்துக்கும் விடை இருக்கும்னு தெரிஞ்சிருந்தும் நான் எதிர்பாக்காத முடிவுகள், ஆச்சர்யப்படவைத்த முடிவுகள் கொண்ட, வித்தியாசமான, கணிப்புக்கு வெளியே இருக்கும் திரைக்கதைதான். அதற்கும் மேல், படம் முடிந்த பின்னாலும், ஒவொரு காட்சிக்கும் முடிச்சுப் போட்டு சிந்திக்கும் (வழக்கம்போல) ஒரு மனநிலையை ஏற்படுத்துகிறது படம், முக்கியமாக அந்த ஹேங்மேன் விளையாட்டு, காப்பி ஷாப், சில கதாப்பாத்திரங்கள்.

பார்க்கவேண்டிய படம்.

-பெஸ்கி.


Share/Bookmark
Read More!