சென்னையைப் போன்று பேருந்து வசதி வேறெங்கும் இல்லையென்ற நினைப்பு எனக்கு. சென்னையை விட்டால் பெங்களூர்தான் தெரியும். இங்கு அதிகம் பேருந்தில் செல்வதில்லை. பொதுவாக, எங்குமே செல்வதில்லை. பிறகு எப்படித் தெரியும்? ஆனாலும், ஊருக்குச் செல்லும்போது, தொடர்வண்டி நிலையம் செல்ல பேருந்துவசதி போதுமானதாக இல்லை. எப்படியும் இரு பேருந்துகள் மாறிச்செல்லவேண்டும். குழந்தை குட்டி வைத்துக்கொண்டு இதெல்லாம் எதற்கு என டாக்சிதான். ஆட்டோவெல்லாம் நமது பட்ஜெட்டுக்கு ஒத்துவராது!
டாக்சி சொல்லி, அது நேரத்திற்கு வந்து, பெங்களூர் டிராபிக்கிற்குள் புகுந்து ட்ரெயினைப் பிடித்து... அது தனி வேட்டை. இப்போது விசயம் பெங்களூர் பற்றியதல்ல. சென்னையப் பற்றி. கொஞ்ச நாட்களுக்கு முன்பு, மாமா செங்குன்றம் பகுதியிலிருந்தார். 114தான் நமக்கு ரெகுலர். அங்கிருந்து நேரே அசோக்பில்லர் அந்து இறங்கிவிடலாம். டிக்கட் 17 அல்லது 20 இருக்கலாம், சரியாக ஞாபகம் இல்லை. ஏசி பஸ் என்றால் 45 என நினைக்கிறேன்.
அதில் ஒரு குறிப்பிட்ட விசயம். செங்குன்றத்திலிருந்து கோயம்பேடு வர 17 ரூபாய், வடபழனி வழி செல்லும் பேருந்தில் வந்தால். அதுவே கோயம்பேடு பேருந்து என்றால் 12 தான். அதான் எப்படி என்று புரியவில்லை. வடபழனி வழி செல்லும் பேருந்தில் கோயம்பேடு என்று டிக்கட் எடுத்தாலும் MMDA வரை கொடுக்கப்படுகிறது. என்ன கணக்கோ!
இதேபோல, செங்குன்றத்திலிருந்து பிராட்வேக்கும் ஒரு பேருந்து உண்டு, 252. பர்மா பசாருக்குச் செல்ல இதில் செல்வதுண்டு. இதுவும் இருபது ரூபாய்க்குள்தான் இருக்குமென்ற ஞாபகம். இப்போது மாமா ஒரகடத்திற்கு வந்துவிட்டார்.
தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் போகும் வழியில், முதலில் படப்பை வரும். பிறகு ஒரகடம் சந்திப்பு, அதன்பின் வாலஜாபாத் வருவதற்கு முன்பு, வாரனவாசி என்றொரு நிறுத்தம் உண்டு. அங்கிருந்து வடக்கே சில கிலோமீட்டர்கள் சென்றால் ஒரு டவுன்சிப் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்திற்கு முதலில் குடிவந்தவர் எனது மாமாவாகத்தான் இருக்கும். சுற்றிலும் காடு, ஆங்காங்கே சில கிராமங்கள். நடுவே இந்த டவுண்.
தனித்தனி வீடுகள். சிலபல தெருக்களை முடித்திருக்கிறார்கள். ஆனால் மாமாவும், எதிர்வீட்டில் ஒருவர் மற்றும் பக்கத்து வீட்டில் ஒருவர் என மூன்று குடும்பங்கள்தான். முதல் தெருவில் ஒருவர் இருக்கிறார். சிலர், வார இறுதியில் வந்து தங்கிச் செல்வதாகக் கேள்வி. இன்னும் உள்ளே கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாதுகாப்பு பரவாயில்லை, எப்போதும் காவலர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
சென்ற முறை அங்கு சென்று, தங்கி, சுற்றவேண்டியிருந்தது. பெங்களூரில் இருந்து ட்ரெயின், செண்ட்ரல் வரை. அரக்கோணத்தில் இறங்கி, காஞ்சிபுரம் வந்து, வாரனவாசி வந்திருக்கலாம். செண்ட்ரல் செல்லும் அதே நேரம் வீட்டில் இருந்திருக்கலாம். ஆனால், காலை 4 மணிக்கு எழ முடியவில்லை. நேரே செண்ட்ரல்தான்.
அங்கிருந்து நடந்து பார்க் ஸ்டேசன். 10 ரூபாய் தாம்பரத்திற்கு. அங்கிருந்து காஞ்சிபுரம் பஸ். 21 ரூபாய் டிக்கட், முப்பது கிலோமீட்டர் இருக்கும், வாரனவாசிக்கு. அங்கு இறங்கி டவுன்ஷிப் ஷட்டில் வண்டியில் சென்றுவிடலாம். ஷட்டில் 24 மணி நேரமும் இயங்கும்.
ஒரு நாள் அங்கிருந்து அனகாபுத்தூர் வரவேண்டியிருந்தது. திங்கட்கிழமை. காலை ஒன்பது மணிக்கு, வரும் பேருந்து அனைத்தும் கூட்டம்தான். வேறு வழியில்லை, கூட்டத்தோடு கூட்டமாக கலந்தாயிற்று. தாம்பரம் 21 ரூபாய். அங்கிருந்து பல்லாவரம் 6 ரூபாய். பல்லாவரத்தில் இறங்கி, பம்மல் சாலையில் ஒரு பேருந்து நிறுத்தம் உண்டு. அங்கிருந்து வரிசையாக ஆட்டோக்கள் பம்மல் செல்லுகின்றன. 10 ரூபாய் தலைக்கு.
மீண்டும் அங்கிருந்து அண்ணாநகர் செல்லவேண்டியிருந்தது. பல்லாவரத்திலிருந்து ஆவடி பேருந்தில் திருமங்கலம், 12 ரூபாய் என ஞாபகம். அங்கிருந்து ஷேர் ஆட்டோ 7 ரூபாய்.
மீண்டும், அண்ணாநகர் முதல் திருமங்கலம் 7 ரூபாய். திருமங்கலம் முதல் தாம்பரம் சானடோரியம் 12 ரூபாய். அங்கிருந்துதான் காஞ்சிபுரம் பேருந்து எல்லாம் புறப்படும். அங்கிருந்து வாரனவாசி 21 ரூபாய். பேருந்தில் செல்வதால் நேரம் அதிகமாக செலவழிப்பதுபோல தோன்றும். ஆனால் உட்கார இடம் கிடைத்துவிட்டால் அதைப்பற்றியெல்லாம் யோசிக்கத்தோன்றாது.
-பெஸ்கி
Read More!