சந்தர்ப்பவாதக் கொள்ளைகள் - 1

இது சீசன் டைம்

'என்னடா மாப்ள, தீபாவளிக்கு டிக்கட் போட்டியா?'

'இன்னும் இல்லடா'

'என்னடா நீயி, இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு. இப்படி டிக்கட் எடுக்காம இருக்க? ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டல்ல?'

'அதெல்லாம் எடுத்தாச்சு. டிக்கட்டுதான் கெடக்கல. ட்ரெயின் ரெசர்வேசன் ஓபன் பண்ண அஞ்சு நிமிசத்துலயே முடிஞ்சு போச்சாம். இப்ப வெயிட்டிங் லிஸ்ட் பாத்தா 400, 500னு எகுறுது.'

'பஸ் என்னடா ஆச்சு?'

'அத ஏண்டா கேக்குற... போன தடவ மாதிரி விட்டுறக் கூடாதுன்னு, ஒரு மாசத்துக்கு முன்னாடியே போனேன். நம்ம அஜித் ட்ராவல்ஸ்தான். இன்னும் சார்ட் ப்ரிபேர் பண்ணல, அடுத்த வாரம் வாங்கன்னான். அடுத்த வாரம் போனா, அதுக்கு அடுத்த வாரம் வாங்கன்னான். அப்பப் போனா, எல்லாம் ஃபுல்லாயிடுச்சுன்னு சொல்லிட்டாண்டா. தீபாவளி, பொங்கல்னு வந்துட்டா போதும்டா இவனுகளுக்கு, டிக்கட்ட பிலாக் பண்ணி செம கொள்ள அடிக்கிறானுக.
இருக்குற பணத்துக்கெல்லாம் வீட்டுல எல்லாத்துக்கும் துணி எடுத்தாச்சு. வருசத்துல இந்த ஒரு தடவதான் ஏதாவது காசு சேத்து, கடன ஒடன வாங்கி, வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போயி சந்தோசப்படுறேன். இதுல டிக்கட்டுக்குத் தனியா கடன வாங்கனும் போல இருக்கு...'

'சரி விடுறா, அன்னைக்கு நைட்டு பஸ் ஸ்டாண்டுல போயி ஏதாவது கெடைக்குதானு பாக்கலாம்.'

'உனக்கு போன வருசம் நடந்தது மறந்து போச்சா? பஸ் ஸ்டாண்ட் வாசல்லயே நின்னு, திருச்சி, மதுர, தின்னவேலின்னு கூவிக்கிட்டு இருப்பானுக. போய் ரேட்டு கேட்டா 400 ரூபா டிக்கட்ட 600,700னு சொல்லுவானுக. கேட்டா ஸ்பெசல் பஸ்ஸிம்பானுக. கடைசில பாத்தா நாம வழக்கமா போற பஸ்ஸா இருக்கும். பிலாக் பண்ணி வச்சிட்டு ஏமாத்துவானுக. ஒன்னும் பண்ண முடியாது. அதுக்கு, கெடைக்கிற கவர்மெண்ட் பஸ்ஸுல ஏதாவது மூலைல வொக்காந்து போயிரலாம். இதுல இன்னொரு ஸ்பெசல் பஸ் இருக்கு தெரியிமா?'

'என்ன அது? ஸ்பெசலா ஸ்பெசல் பஸ்?'

'ஸ்பேர் பஸ்ஸ எல்லாம் கூட்டம் அதிகமா இருக்குன்னு விடுவானுகளாம். டபுல் ரேட்டு, ஏன்னா ரிட்டன் சும்மா வரனுமாம். ஆட்டோ டெக்னிக்கு. எல்லாம் நம்ம வசதிக்குத்தாங்குற ரேஞ்சுக்கு பில்டப் வேற குடுப்பானுக #@$$#@$%@#. போறவனெல்லாம் ஊர்லயேவா தங்கிறப் போறான்? இல்லன்னா இவனுகதான் ரிட்டன் சும்மா வந்துறப் போறானுகளா? வரும்போதும் இதே கதைய சொல்லி டபுல் ரேட்டு வாங்கிருவானுக $#*^*^#^$%.'

'வுடுறா மாப்ள. கோயம்பேடு போயி பாக்கலாம். எதுவும் கெடைக்கலன்னா, 800 ஆனாலும் பரவாயில்ல. போயித்தான ஆகனும்? என்ன பண்றது, இத ஒரு பயலும் கேக்க மாட்டான். லைசன்ஸ் எங்க, ஆர்சி புக்கு எங்க, ஹெல்மட் எங்க, பைக்ல கண்ணாடி எங்க, நீ ஏன் கண்ணாடி போடலன்னு பிச்ச எடுக்க மட்டும் முக்குக்கு முக்கு நிப்பானுக.'
-
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன், கோயம்பேடு அரசுப் பேருந்து நிலையம். ஆளுக்கொரு பக்கம் அலைந்தோம். எனது மொபைல் சினுங்கியது...
‘மாப்ள, திர்னவேலி பஸ் ஒன்னுல எடம் கெடச்சிட்டிடா.... இந்தப் பக்கம் வா...’
சந்தோசத்தில் அலறினான். போனேன். திருநெல்வேலி - தூத்துக்குடி செல்லும் சாதாரணப் பேருந்து. கூட்டம் அதிகமான காலங்களில் இப்படி சென்னை வரை வந்து செல்லுமாம். டிக்கட் விலை மிகவும் குறைவு. புஸ்பேக் எல்லாம் கிடையாது. எனக்கெல்லாம், முன்னாலிருக்கும் சீட்டில் முட்டி தட்டும். எப்படித்தான் 14 மணி நேரம் இதுல ஒக்காந்து போகப் போறானோன்னு எனக்கு ஒரே குழப்பம். அவனோ முழு சந்தோசத்தில் கையசத்தான். சும்மாவா, பஸ்ஸுக்குள்ள நாலு பேரு தரைல ஒக்காந்திருந்தாங்க.

---

மேலே சொன்னது போன வருட தீபாவளியில் நடந்தது. இந்த வருடம் எப்படி இருக்கும்? ஏதும் மாற்றம்? முன்னேற்றம்? இருக்கும் இருக்கும். இந்தக் கதை ஆன்லைன் வரை முன்னேறியிருக்கும்.

கீழே பார்ப்பது ஆகஸ்ட் 14, கோவைக்கு டிக்கட் தேடும்போது கண்டது...


இது வழக்கமான விலை...

---

ச.கொ. அனுபங்கள் தொடரும்...
-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் - அகஸ்ட்29

Gmail ல் To அட்ரஸ் அடிக்கும் இடத்தில் இப்போது Contact Chooser சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

Wordpress ல் உள்ளது போல இப்போது Blogger லும் TAG Cloud வைத்துக்கொள்ளும் வசதி உள்ளது. தேவையான Label களை மட்டும் தேர்வுசெய்துகொள்வது மேலும் சிறப்பு. மேலும் படிக்க...

Gmail அக்கவுண்டு பெருபவர்களுக்கு, ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் yahoo, aol, hotmail அக்கவுண்டுகளின் தகவல்களை import செய்யும் வசதி இருப்பது தெரிந்ததே... இப்போது பழைய Gmail அக்கவுண்டு வைத்திருப்பவர்களுக்கும் import வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

டோண்டு அவர்கள் இந்தப் பதிவில், இரவு நேரம், சாப்பாடு (அரிசி, சாம்பார், ரசம், தயிர், பொறியல்) வேறு எங்கு கிடைக்கும் எனக் கேட்டிருந்தார். சென்ற ஆண்டு வரை, எழும்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள பழைய வசந்தபவன் மாடியில் கிடைத்தது. இப்போது எப்படியோ தெரியவில்லை.

---

விடுமுறை:
அலுவலக இடமாற்றம் காரணமாக சில நாட்கள் விடுமுறை கிடைத்தது. வெள்ளிக்கிழமை (14-08-2009), கிளம்பி கோவை சென்றேன், கிகி வீட்டிற்கு. அண்ணன் கிகி, சமையல் கலையில் நல்லவர், வல்லவர், நாற்பதிற்கும் மேல் தெரிந்தவர். முதல் நாள் சிக்கனில் 3 வகைகளும், இரண்டாம் நாள் மட்டனில் 2 வகைகளும் செய்து அசத்திவிட்டார்; கொஞ்சம் நானும் கற்றுக்கொண்டேன்.

பின்பு ஞாயிறு கிளம்பி திருச்செந்தூர் சென்றேன். வழக்கம்போல புரோட்டா, இட்லி, சிக்கன், மட்டன் என ஒரு வாரம் இஷ்டம்போல சாப்பாடு.

மீண்டும் சென்னையிலிருந்து அழைப்பு வர (22-08-2009) திரும்பி வந்தேன். வந்த இடத்தில் நெடுநாள் கழித்து வந்த நண்பர் ஒருவருடன் இரண்டு நாட்கள் சுற்றவேண்டியதாகிவிட்டது. அப்பாடா, ஏதாவது எழுதலாமென நினைத்தால், அடுத்த நாள் தம்பி விஜயம். அவனுடன் ஒரு நாள். அவன் கிளம்பியவுடன் பிடித்தது ஒரு கெட்ட தலைவலி + காய்ச்சல். ஒன்றும் செய்ய இயலவில்லை. இன்றுதான் பரவாயில்லை.

ரீடரில் புதிதாக இருக்கும் 400+ பதிவுகளை இப்போதுதான் துடைத்தேன். பாதிக்குப் பாதி படிக்காமலேயே விட்டுவிட்டேன். இனி வழக்கம்போல தொடரவேண்டும். திங்கள் முதல் தொடரும் என நம்புகிறேன்.

---

காய்ச்சல், தலைவலி என்றதும் பன்றி பயம் தொற்றிக்கொண்டது. உங்களுக்கும்? இப்போதுதான் நிம்மதி. அது தொடர்பாக பல SMS கள் வந்தவண்ணம் உள்ளன. அவற்றுள் லேட்டஸ்ட்:

கந்தசாமி ரீமிக்ஸ்-
Feveru
Cough
Cold
Chicken Pox
Cancer
Aids
Sori
Serangu
Small Pox
Thalaivali
Kaivali


இதெல்லாம் டூப்பு,
பன்னிக்கய்ச்சல்தான் டாப்பு.
---

Class போனா வரும்
உயிர் போனா வருமா?

மூடுறா காலேஜ...
-Swin Flu Fans.

---

கடைசியா கண்டுபிடிச்சிட்டாங்க,
பன்னிக்காய்ச்ச்ல்,
சின்ன வயசுல யாரெல்லாம்
பன்னிய கல்லால அடிச்சாங்களோ
அவங்களுக்குத்தான் வருதாம்...

மவனே மாட்னியா?

---

இது வேற:
2009 August Has...
5 Sundays
5 Mondays
5 Saturdays

In Just One Month

It happens only in 823 years.

அட ஆமால்ல!

---

மேலும் கொஞ்சம்...
-
ஒரு பொண்ணு போட்டோவுல தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா
-
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
-
காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்,
நனைந்த பின்பு ஜலதோஷம்.
-
சார்,
டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே...
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

உன்னை கண்ட நாளிலே


உன்னை கண்ட நாளிலே

என் வாழ்வில் ஒரு புதிய மாற்றம்

உன்னிடம் பேசும் போதெல்லாம்

என் மனதில் ஏதோ ஒரு சந்தோசம்

நீ என் வாழ்வில் கிடைத்த

ஒரு இன்ப அதிர்ச்சி

நீ என் மனதில்

நீங்கா இடம் பெற்றிருப்பவள்

உன்னை நான் நினைக்காத

நாளோ நேரமோ இல்லை

நான் உன்னிடமிருந்து ஏதோ ஒரு

வித்தியாசமான அன்பை பெற்றுக்கொண்டேன்

நம் நட்பு காதலை விட புனிதமானது

நாம், நட்புக்கு ஒரு இலக்கணமாக இருப்போம்


பி.கு:-

ஒரு தோழிக்கு எழுதிய ஆட்டோகிராஃப்---கி.கிShare/Bookmark
Read More!

பாதகம்நண்பனே! உன்

தங்கையல்லாத நங்கையை - நீ

தங்கையென அழைக்கும் முன்

சிறிது யோசி

உன்னால்

அண்ணனாக மட்டும்

இருக்கமுடியுமா என்பதை.

ஏனென்று தெரியுமா நண்பனே?!

நண்பி காதலியாக மாறினால் பாதகமில்லை,

தங்கை காதலியாக மாறினால்- அது போல்

பாதகம் வேறில்லை.

ஆகையால்

நட்புடன் பழகு,

நல்லெண்ணத்துடன் பழகு.


பி.கு:-

எனது பாலிடெக்னிக் நண்பன் ஒருவன் சில அழகான பெண்களை கண்டவுடன் நீ என் சிஸ்டர் மாதிரியே இருக்க எனக்கூறி பழகி சிறிது நாட்கள் கழிந்து அவள்தான் என் காதலி என்று கூறுவான். அவனுக்கு நான் கிறுக்கிய ஆட்டோகிராஃப் (1997)---கி.கிShare/Bookmark
Read More!

நம்ம வூட்டு சமையல்-பாகம் 1

காளான் கூட்டு

தேவையான பொருட்கள்

பட்டன் காளான் -200 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாதூள் - ஒரு தேக்கரண்டி(வறுத்து பொடித்தது)
கரம் மசாலா தூள் -அறை தேக்கரண்டி
ஜீரக தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
பச்ச மிளகாய் - ஒன்று(சற்று பெரியது)
கொத்து மல்லி தழை - சிறிது
எண்ணை - 50 மில்லிசெய்முறை

1. பட்டன் காளானை தண்ணீரில் மஞ்சள் பொடி போட்டு கழுவி நறுக்க வேண்டும்.கழுவும் போது காளானின் வெள்ளை பாகங்களில் கருப்பு புள்ளிகள் தெரிந்தால், அதை உபயோகிக்கக்கூடாது

2, வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. ஓரு வாயகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது ஜீரகம் போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கருகாமல் நன்கு பொன் முறுவலாக வதக்கவும்.

4. இஞ்சி பூண்டு வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

5. பிறகு பட்டன் காளானுடன், எல்லா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி குறைந்த தீயில் (சிம்மில்) வேகவிடவும்.

6. நன்கு வெந்து கூட்டானதும் மல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.


அப்புறம் முடிஞ்சா சாப்பிடுங்க. இல்லைன்னா எனக்கு அனுப்பி வைங்க.

குறிப்பு:-

பட்டன் காளானுக்கு பதிலாக ஆட்டு கிட்னி சேர்த்தும் செய்யலாம்


---கி.கிShare/Bookmark
Read More!

தளபதி - ஒரு பார்வை

சிறு வயதில் சூப்பர் ஸ்டார் என்ற மோகம் இருந்ததுண்டு. முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கெல்லாம் அது இருந்ததில்லை, ‘ஸ்டைல்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் மட்டுமே அது அடக்கம். அப்போது பார்த்த படம் - தளபதி. இப்போதோ, திரையில் தெரியும் ஸ்டைல் என்பதையும் தாண்டி, ரஜினி என்ற மனிதனை மிகவும் பிடித்துப் போயிற்று. கடந்த ஞாயிரு மதியம் மீண்டும் தளபதி படம் பார்க்க நேர்ந்தது. அப்போது பார்த்ததற்கும், இப்போது பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்?! தளபதி = நட்பு.

தளபதி - ஒரு பார்வை, என்பது அப்படத்தின் விமர்சனம் அல்ல, அப்படத்தில் வரும் ஒரு சிலரின் பார்வைகளே, எனது பார்வையில். இதைத் தொடர்வதற்கு முன், ரஜினி ஒரு பெரிய நடிகர் என்பதையும், மணிரத்னம் பெரிய இயக்குனர், இளையராஜா மிகப்பெரிய இசைக் கலைஞர் என்பதையெல்லாம் கொஞ்சம் மறந்து விடலாம்.

ரஜினி, மம்முட்டி முதன்முதலில் சந்திக்கும்போது இருவருமே கோபமாகப் பார்த்துக்கொள்வர். பின்பு, ரஜினியை சிறையிலிருந்து மம்முட்டி வெளியே எடுத்தவுடன் ரஜினி சொல்லும் வார்த்தைகள், ‘உள்ளயே செத்துருக்கவேண்டிய அனாதை நான், என்னிடம் இதுக்குப் பதில் கொடுக்க ஒன்னே ஒன்னுதான் இருக்கு, என் உயிர்’, அவரது பார்வையில் தெரியும் நன்றி. இங்கே (2:00லிருந்து, பின்னனி இசையைக் கவனிக்கத் தவற வேண்டாம்)

ரஜினி ஒரு போலீசை நடு ரோட்டில் வெட்டுவார், அதை சோபனா பார்த்துவிடுவார். அதன் பின்பு, படித்துறையில் அவர்களது சந்திப்பு. சோபனா அழுதுகொண்டிருப்பார், ரஜினி ஆவேசமாகப் பேசிக்கொண்டிருப்பார், கடைசியில்,
’என்ன பிடிக்கலையா?’
சோபனா இல்லையெனத் தலையாட்டுவார்,
’அப்புறம் என்ன?’
’பிடிச்சிருக்கு.’
அப்போ இருவரின் முகத்தையும் பாக்கனுமே... அதிலும் ரஜினியோட பார்வை... அதை முழின்னே சொல்லிக்கலாம். அது இங்கே (3:25லிருந்து)

ஜெய்சங்கருக்கு, ரஜினிதான் ஸ்ரீவித்யாவின் மகன் எனத் தெரிந்துவிடும். பின்பு அவரும், ரஜினி மற்றும் தாய் ஒரு கோவில் காட்சியில். ரயில் சப்தம் கேட்கும். தாய் அப்படியே திரும்பிப் பார்ப்பார், குற்றம்+பாசப் பார்வை. அப்படியே காமிரா ரஜினி பக்கம் போகும். அவரும் அது போலவே திரும்பிப் பார்த்துக்கொண்டிருப்பார், ஏக்கம்+தொலைந்து போன்றதொரு பார்வை. இருவருக்குமே பார்வையை கண்ணீர் மறைக்கும். இப்போது ஜெய்சங்கர் பின்னாலிருந்து காமிரா, இருவரையும் காட்டும், இருவரும் சுதாரித்துக்கொள்வார்கள். மிக மிக அருமையான காட்சி. மணிரத்னத்தையும், இளையராஜாவையும் இந்த இடத்தில் மிகவும் பிடித்துப் போயிற்று. அப்போது ஜெய்சங்கரிடம் இருக்கும், உண்மை தெரிந்தும் சொல்ல முடியாத ஒரு பார்வை.


பின் ஜெய்சங்கர், ரஜினியை அழைத்து உண்மையைச் சொல்லுவார், அப்போது முதலில் தாயின்மீது கோபம் கொள்ளும் ரஜினி, பின் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும், தன்னுடைய நிலையையும் எண்ணி வருத்தப்படுவார். அப்போது பின்னனியில் சூரியன் இருக்கும். இதே போல, சோபனாவிடம் கடைசியாகப் பேசும்போதும், தாயைத் தன் வீட்டில் சந்திக்கும்போதும், படம் முடியும்போதும், சூரியனும் ஒரு கதாப்பாத்திரமாய் இருக்கும். படத்தில் ரஜினியிம் பெயர், சூர்யா. கவனித்த இன்னொரு விசயம், ரஜினி இந்தப் படத்தில் சிகரெட் பிடிக்க மாட்டார்.

அடுத்து, ரஜினி தாயைப் பி்ன்தொடர்ந்து பார்ப்பார், கோவிலில். ‘சின்னத் தாயவள் தந்த ரா..சா..வே.....’, மனதை மயக்கும் பாடல். தாய் அழும்போது பின்னாலிருந்து, ‘அம்மா, அழாதீங்கம்மா’, என்பார், தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் பார்வையுடன். தாய் குனியும்போது, தலையிலிருந்து ஒரு பூ விழுவதும், பூவை மிக பக்கத்தில் காண்பிப்பதும், ரஜினி அதை உள்ளங்கையில் எடுத்து வைத்து அழுவதும், அருமையாக படமாக்கப்பட்டிருக்கும்.


கலெக்டருடன் மீட்டிங் காட்சியில் பார்வையில் அணல் தெரிக்கும். குழந்தையுடன் தன் கதையைப் பற்றிப் பேசும்போது பார்வையில் குளிர் வீசும். பானுப்பிரியா மஞ்சள் சால்வையுடன், ரஜினியின் தாயைச் சந்திக்கும்போது, ’என்னடா! இதப் பார்த்தும் இவங்களுக்குத் தெரியலயே’, என ஏமாற்றமாகப் பார்ப்பதும், பின், அடையாளம் கண்டுகொண்டபின், பெரிதாக ஏதோ அடைந்ததைப் போல பார்ப்பதும், அருமையான அமைப்பு.
இவை இங்கே

’காட்டுக்குயிலு மனசுக்குள்ள, பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல...’, இப்படித்தான் ஆரம்பிகிறது அந்த கொண்டாட்டப் பாடல். உள்ளே வருகிற வரிகள்,
உள்ள மட்டும் நானே
உசிரக்கூடத் தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
நண்பன் போட்ட சோறு
தினமும் தின்னேம்பாரு
’நட்பைக்கூட கற்பைப்போல எண்ணுவேன்...’
அவர்களது பார்வைகளில் தெரியும் - நன்றியும், நட்பும்.
இங்கே (3:48ல்)

கடைசியில் மம்முட்டி, நன்றாக சிறையில் அடிவாங்கித் திரும்பி வருவார். வந்து, ‘அந்த கலெக்டர் குடும்பம் சாகனும்’, என்பார். ரஜினி முடியாது என்பார். விவாதம் முற்றி, ரஜினி அது தன் குடும்பம் என்று சொலிவிடுவார். இது தெரிந்துமா என்னுடன் இருக்கிறாய், ஏன்? என்பார் மம்முட்டி, ‘ஏன்னா நீ என் நண்பன்’ என்பார் ரஜினி (ரஜினி நண்பன் எனும்போது வாய் அசைவு கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும்). படம் முழுவதுமே நட்பின் அடையாளங்களாய் காட்சிகள். அப்போது மம்முட்டி, ‘பாத்தீங்களா என் சூர்யாவ, பாத்தீங்களா என் தளபதிய’ என்று பெருமைப்படுவார். அவரது பார்வையில் தெரியும், நட்பின் பெருமிதம்.

இதோ எனது நட்பின் பெருமிதம்

குறை ஒன்றும் இல்லை - ராஜ் கொடுத்தது.

---

கொஞ்சம் ரொம்பவே லேட்டாகிப் போச்சு. இன்னேரம் எல்லாருக்குமே வந்து சேந்துருக்கும். ஆகவே, வாங்கினவங்க, வாங்காதவங்க எல்லாருக்குமே இதக் கொடுத்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன். இந்தப் பதிவிற்கு பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை அளிக்கிறேன், எப்பூடி? (கவுத்திறாதீங்கப்பா, வழக்கம்போல ஏதாவது சொல்லிட்டுப் போங்க.)

---
-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

காலடி தடங்கள்


அதே மாலை நேரம்,
அதே காற்று,
அதே கடல் அலை,
அதே கால் தடங்கள் மணலில்-
என் காதலியினுடையது.

அன்று தொலைவில் கண்ட தடங்கள்
நேற்று அருகில் வந்த தடங்கள்
இன்று என்னை விட்டுச்சென்ற தடங்கள்.

அன்று
உன் காலடி தடங்களாலேயே
உன் வருகையை அறிந்தவன் நான்.
இன்று
பின்தொடர்கிறேன் உன் தடங்களை,
உனக்குத்தெரியாமல்.

சில நாட்கள் காணவில்லை உன் கால் தடங்கள்,-பின்
கண்டடைந்தேன் உன் கால் தடங்களை-நீ
சரணடைந்தவனின் கால் தடத்தோடு.
ஆண்டுகள் பல உருண்டோடின,
மீண்டும் கண்டேன் உன் கால்தடத்தை,
இரு ஜோடி தடத்தின் அருகே
ஒரு ஜோடி குட்டி தடத்தோடு.

..

நெருங்கினேன் அந்த கால் தடங்களை ஆர்வத்தோடு,
நொறுங்கினேன் குட்டி கால்தடத்தை நீ அழைத்தபோது
நான் உன்னை அழைத்து வந்த பெயரால்?!!

இனி உன் தடங்களை தொடரமாட்டேன் துரோகியே!!!!பி.கு:-

ஆம் பெற்றோருக்காக என்னைவிட்டுச்சென்று,நான் அவளை அழைத்து வந்த பெயரை தன்மகளுக்கு வைத்து ,என் நினைவில் கணவனுடன் வாழும் அவள் ஒரு
துரோகியேமீண்டும் பி.கு:-
இது என் அனுபவக் கவிதை அல்ல
---கி.கி

Share/Bookmark
Read More!

வெண்குழல் ஊதுபத்தி --------(1)வெள்ளையாய் ஒரு குழல்- அதில்
விடுகிறான் புகைச் சுழல்- அது
உருவாவதை கண்டு மகிழ்கிறான் -ஆனால் தான்
உருகுவதை அறிய மறுக்கிறான்


நண்பனே !
அதன் மென் புகை போல்
உன் மென்னுயிரும்
தினம் மென்மையாக அழிவதை
ஏன் உணர மறுக்கிறாய்?!நாம் அதனை வேகமாக உறிஞ்சுவதால்
நம்மை அது வேகமாக உறிஞ்சிவிடுகிறது
உலகத்திலிருந்து


விதவை என்று வாழ்வளித்தால்
அவள் விளக்கேற்றுவாள்- இல்லை இல்லை
அவளே விளக்காவாள்- ஆனால்
வாழ்வளித்தவனின் உயிரையே
அணு அணுவாக சுவைத்தளிப்பாள்


பி.கு:-
இவையெல்லாம் நான் 1996-ல் இரவு நேரம் கையில் தம்முடன்,
தம் பிடித்து கிறுக்கியது.---கி.கி
Share/Bookmark
Read More!

அன்று ஓரு இரவில்.........(3)

நண்பர்கள் சொன்ன போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, நடுவில் வெளிச்சத்தை பார்த்து பயந்தாலும் சுடுகாட்டிற்கு சென்று பூவை பறித்து, பின் என்னுடைய அறைக்குச்செல்லலாம் என கிளம்பினேன்.

கிளம்பிய 5 நொடிக்குள் அங்கு சட சடவென வித்தியாசமான சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் எரிந்துக்கொண்டிருந்த பெண்ணின் உடல் எழும்பிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்து நான் பயந்தேன் என யாராவது நினைத்தால் தவறு. உடலை எரிக்கும்போது அப்படி எழும்பும் என்பது எனக்கு தெரியும், அதனால் பயப்படவில்லை.

சுடுகாட்டில் அந்தக்காட்சியை பார்த்துவிட்டு நான் நடக்க தொடங்கினேன்.சுமார் 400 மீட்டர் தூரம் நடந்திருப்பேன் திடீரென எனக்கு தும்மல் வந்தது, தும்மிய பின் கைக்குட்டையால் முகத்தை துடைத்தபடி நடந்தேன். நடக்கும்போது நமது சந்திரமுகியின் ஒரிஜினல் மலையாள படமான "மணிச்சித்ரத்தாழ்” (1994-ல் வெளியானது)காட்சிகளும், அன்று பார்த்த ஹிந்தி திகில் படத்தின் காட்சிகளும் மனதில் வந்துக்கொண்டிருந்தது.

சிறிது தூரம் கூட சென்றிருப்பேன் ஏதோ சத்தம் கேட்பதுபோல் தோன்றியது. மனப்பிரமையென நினைத்து நடந்தேன். ஆனால் சத்தம் கேட்கத்தான் செய்தது. காதை கூர்மையாக்கி கேட்டேன். அது கொலுசுச்சத்தம் போலவே தோன்றியது.காற்றின் ஊளைச்சத்தத்தினிடையே ஜல் ஜல் சத்தம் என்னருகில், மிக அருகில் கேட்டது. மாட்டு வண்டியின் சத்தமாயிருக்கும் என நின்று திரும்பிப் பார்த்தேன் .ஆனால் அங்கே எந்த வண்டியும் வரவில்லை, அந்த சத்தமும் கேட்கவில்லை.சற்று நின்று பின் நடக்க தொடங்கினேன், நான் ந்டக்க நடக்க அந்த சத்தம் என்னை பின் தொடர்ந்தது.என் அடி முதல் முடி வரை வியர்த்தது. இதயம் தெறித்து விழுவது போல் துடித்தது.

கொலுசுப்பிரச்சினையில் இறந்த பெண்ணின் ஆவிதான் என்னை தொடர்கிறது என நினைத்தேன்.இருப்பினும் மனதை திடப்படுத்தி திரும்பிப்பார்த்தேன் யாரையும் காணவுமில்லை, சத்தமுமில்லை. பின்னும் நான் நடக்க தொடங்கினேன், நான் ந்டக்க நடக்க அந்த சத்தம் கேட்டது, நின்றால் கேட்கவில்லை.குலை நடுக்கம் என்பதை அப்போது உணர்ந்தேன்.

எப்படியும் அறைக்கு சென்றுவிடவேண்டுமென வேகமாக நடந்தேன். சத்தமும் என்னை தொடர்ந்தது. பயத்தினால் நன்றாக வியர்த்தது. மீண்டும் கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்துவிட்டு நடக்கும்போதுதான் சத்தம் வந்ததற்கான காரணம் தெரிந்தது. தெரிந்தபின் சிரிப்புதான் வந்தது. அதன் பின் பயமின்றி அறைக்குச்சென்றேன். இப்படி ஒரு வழியாக போட்டியில் ஜெயித்தேன்.
---கி.கி


Share/Bookmark
Read More!

யூனிவர்சலில் ஒரு ஏமாளி

கடந்த ஒரு வருடத்தில் நான்கு முறை யூனிவர்சலில் மொபைல் வாங்கியிருக்கிறேன். பெரிய கடை, மொத்த விற்பனையாளர், அங்குதான் விலை குறைவாய் இருக்கும் என்றிருந்த மூடநம்பிக்கை.

முதல்முறை, புரசைவாககத்தில் இருக்கும் கிளை. இணையத்திலேயே விபரங்கள் எல்லாம் பார்த்து, ஒரு நோக்கியா மொபைல் முடிவு செய்தாயிற்று. காண்பித்தார்கள்...
’என்ன விலை?’
’9000 ரூபாய்.’
’நெட்ல 8000 தான போட்டிருந்தது?’
’அது டாக்ஸ் இல்லாம சார்.’
இவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என வாங்கியாயிற்று. (பின்புதான் தெரிந்தது டாக்ஸ் 4%தான் என்று)

இரண்டாம் முறை, தீபாவளி சிறப்பு விற்பனை. எல்ஜி மொபைல் ஒன்று, ஏற்கனவே செய்தித்தாளில் விலை பார்த்தபடியால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
’இது நல்லாயிருக்குமா?’
’செம டிமாண்டு சார். என் பிரண்ட் இதுதான் வேணும்னு கேட்டு வாங்கிட்டுப் போனார்’,
என கிளை மேளாலரே சொன்னார் (வாங்கிய பிறகு என்ன சொன்னாரென்பதை சொல்லவில்லை). மேளாலரே சொல்கிறாரே என நம்பி வாங்கிவிட்டேன். உபயோகித்தபிதான் தெரிந்தது அது சரியான மொக்கை என்று. அதனால்தான் 20,000 மொபைலை 10,000 ’தள்ளு’படி விலையில் தள்ளிவிட்டார்களோ என்னவோ.

மூன்றாம் முறை, திநகர் கிளையில். இந்த முறை இணையத்தில், அவர்களது தளத்தில் உள்ள விலை பார்த்து, 4% வரி உட்பட கணக்கு பார்த்தாயிற்று. 8,500 ரூபாய்.
’ரேட் என்ன சார்?’
’9500 ரூபாய்.’
’நெட்ல 8500 தான போட்டுருந்தது?’
’அது டாக்ஸ் இல்லாம சார்.’
’இல்ல, டாக்ஸ் சேத்துதான் சொல்றேன்.’
’சான்ஸே இல்ல சார்.....’
விவாதம் சிறிது நேரம் நீடித்தது. கடைசி வரை நான் பணியவே இல்லை.
’வேணும்னா, நெட்ல நீங்களே பாக்கலாமே சார்.’
’ஓக்கே, இருங்க பாத்துட்டு வரேன்.’
சிறிது நேரம் கழித்து வந்து,
’ஆமா சார், 8500 தான் வருது, அப்டேட் பண்ணிட்டாங்க போல...’,
வாங்கியாயிற்று. அடப்பாவிகளா, இப்படி தினம் தினம் எத்தனை பேரை ஏமாற்றுகிறார்களோ? சரி, இந்த சூட்சுமம் நமக்குத் தெரிந்துவிட்டது. இனிமேல் இப்படியே வாங்கலாமென முடிவு செய்தாயிற்று.

நான்காம் முறை, அதே திநகர் கிளை. தம்பிக்காக எல்ஜி தொடுதிரை மொபைல் ஒன்று வாங்கச் சென்றோம். வழக்கம் போலவே டெமோ. அது ஆட்டோபோகஸ் காமிரா என்று அவர் சொன்னார். ஆனால் அது அப்படி இல்லை என ஏற்கனவே தெரியும், சொன்னேன். இல்லை என்று சாதித்தார். பின், எனது N73 எடுத்து ஆட்டோபோகஸ் என்றால் எப்படி இருக்கும் என டெமோ காண்பிக்கவேண்டியதாயிற்று. அப்படியும் ஒத்துக்கொள்ளவில்லை (தப்பா சொன்னாலும் கடைசி வரை அதையே மெயிண்டெய்ன் பண்ண வேண்டுமென்று சொல்லிக்கொடுத்திருப்பார்கள் போலும்). அப்புறம் ஸ்டார்ட் மீசிக்...
’என்ன ரேட் சார்?’
’10500 ரூபாய்.’
’நெட்ல 9800 தான போட்டிருந்தது?’
’அது டாக்ஸ் இல்லாம சார்’(எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போல).
’இல்ல, டாக்ஸ் சேத்துதான், வேணும்னா நீங்களே நெட்ல செக் பண்ணிப் பாருங்களேன்.’
’நெட் இப்போ வொர்க் பண்ணல சார்.’
’பரவால்ல, வேற பிராஞ்சுக்கு போன் பண்ணிக் கேட்டுப் பாருங்க.’
’எனக்கு நல்லா தெரியும் சார், 10000க்கு குறஞ்சு கண்டிப்பா இருக்காது சார்.’
விவாதம் போய்க்கொண்டே இருந்தது, அவர் மசியவில்லை.
’சரி, ஆடிக்கு என்ன தருவீங்க?’
’ஆடிக்கிட்டே தருவாங்களா இருக்கும்’,
இது என் தம்பி. எனக்கோ உள்ளே கொதிக்கிறது. இவனுக்கு இந்த நேரத்தில் சோக்கு வேற.
’ஒரு கோல்ட் காயின் தருவோம் சார்.’
’அது என்ன ரேட் இருக்கும்?’
’300ரூபாய் இருக்கும் சார்.’
’அத நீங்களே வச்சுக்குங்க, அந்த ரேட்ட மைனஸ் பண்ணி குடுங்க.’
’அப்படியெல்லாம் பண்ண முடியாது சார். ரேட் எல்லாம் கம்ப்யூட்டர்ல செட் பண்ணிட்டோம், மாத்த முடியாது.’
அடங்கொய்யால! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி 10,500ன்னான். இப்ப 10,000 க்கு வந்துட்டான். இத மட்டும் எப்படி மாத்த முடியுமோ தெரியல! கம்ப்யூட்டர், அப்படி, இப்படி சொன்னா பயந்துருவோம்னு நினைப்பு போல. இல்ல, என் நெத்தியில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டியிருக்கானு தெரியல. சரி, வந்துட்டோமே, இவ்வளவு பேசிட்டோம், வாங்கிட்டுப் போறதுதான் நாகரிகம் என நினைத்தேன் (இதைத்தான் பலர் அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிறாங்க).
’பரவாயில்ல, 1000தான, ஓக்கே.’
’அதோட 250 ரூபாய் இன்சூரன்ஸ் வரும் சார்.’
’அதெல்லாம் வேணாம்.’
’இல்ல சார், இது கம்பல்சரி. இது இல்லாம குடுக்க முடியாது சார்.’
எத்தனையோ தடவ மொபைல் வாங்கிருக்கேன், இதுவரை யாரும் இப்படி சொன்னது கிடையாது. உங்க மொபைலே வேணாம் என வந்துவிட்டேன்.

வேறு கடைக்குச் சென்று வாங்கும் மனநிலையில் நான் இல்லை. என் தம்பிக்கோ அன்றே வாங்கிவிட வேண்டும் என்ற மனநிலை. சரியென்று, அதே வரிசையிலிருக்கும் பூர்விகாவிற்குச் சென்றோம். யூனிவர்சலுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய கடை. வழக்கம்போல டெமோ, அப்புறம் ஸ்டார்ட் மீசிக்...
’என்ன ரேட் சார்?’
’9600 ரூபாய்.’
’டாக்ஸ் சேத்து?’
’டாக்ஸ் சேத்துதான் சார்.’
அவ்வளவுதான் மீசிக். உடனே வாங்கியாயிற்று.

---

* இந்த யூனிவர்சலில், எத்தனை பேர் நெட்டில் போட்டிருக்கும் சரியான விலைக்கு வாங்கிச் செல்கிறார்கள்?
* எத்தனை பேர் அவர்கள் சொல்லுவதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கிப் போகிறார்களோ? (ஒருவரிடம் 500 ரூபாய் அடித்தால்... ஒரு நாளைக்கு... யப்பா கணக்கு தாறுமாறாப் போகுது)
* நெட்டில், அவர்களது தளத்தில், அப்டேட் செய்யும் அனைத்து விலைகளையும் அறிந்து வைப்பது முடியாத ஒன்றுதான். ஆனால், வாடிக்கையாளர் சொல்லும்போது நெட்டில் பார்த்து உறுதி செய்யலாமே(மூன்றாம் முறை அப்படி நடந்ததே!). அதை விட்டுவிட்டு, கற்பூரம் அடிக்காத குறையாய் இதுதான் ரேட் என அடித்துச் சொல்ல அவசியமே இல்லை.

** இதே போல, எத்தனை பேர், எத்தனை தடவை, எத்தனை இடங்களில், கடைக்காரர் சொல்வது சரியில்லை எனத் தெரிந்தும், வந்து பேசிட்டோமே என நாகரிகம் கருதி, அரைமனதோடு, தெரிந்தே ஏமாந்து போகிறார்கள்?

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் - ஆகஸ்ட்08

தகவல்கள்

1) கூகுள் காலண்டரில் ஜீமெயிலில் இருப்பது போன்ற லேப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது கலர் கலரா தீம் வச்சிக்கலாம்.

2) கூகுள் எர்த்ல the ocean, the sky, Mars எல்லாம் இருக்காம் (இதுவே இப்பத்தான் தெரியுது), இப்போ the Moon சேத்துருக்காங்களாம். இதுக்கு லேட்டஸ்ட் Google Earth வேணும்.

3) Youtube ல இப்போ 3D வீடியோ பாக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதுக்கு ஸ்பெசல் 3D கண்ணாடி வேணுமாம் (அதத் தேடித்தான் அலஞ்சிட்டு இருக்கேன்).
ஒரு சாம்பிள் இங்கே...
மேலும் படிக்க இங்கே

4) கூகுள் இமேஜ் தேடலில் இப்போது புதிதாக பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன (web searchல் இருப்பதுபோன்ற optionகள்) மேலும் படிக்க...

5) Twitter எனக்கு இருக்கும் அக்கவுண்டில், புதிய பதிவு போட்டவுடனேயே ஒவ்வொரு முறையும் போய் அப்டேட் செய்வேன். இப்போது அது அவசியமில்லாமல் போய்விட்டது.
Twitterfeed சென்று புதிதாக ஒரு அக்கவுண்ட் திறந்து, அதில் என்னுடைய ட்விட்டரையும், ஏதோ டாட் காமின் RSS feed ஐயும் இனைத்துவிட்டேன். இப்போது புதிய பதிவு போட்டதும் ட்விட்டர் அக்கவுண்ட் தானாக அப்டேட் ஆகிவிடும். இதுபோல...

6) கூகுள் க்ரோம்ல இப்போ கலர் கலரா தீம் வந்துள்ளன... இங்கே சென்று எடுத்துக்கொள்ளுங்கள்...

---

வர வர விளம்பரம் பன்றவங்க அலும்பு தாங்க முடியல. எப்பிடித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ தெரியல. சில விளம்பர சத்தம் கேட்டாலே ஓடி வந்து பாக்கத் தோனுது.
20-20ல வந்த ஜூஜூ விளம்பரம் பத்தி எல்லாத்துக்கும் தெரியும். சமீபத்தில் என்னைக் கவர்ந்தவை...
சன் டிடிஎச் - நம்ம குண்டர் வண்டில போகும்போது சாமி கும்பிட்டுட்டே போவாரு. அப்படியே தலைவர் படம் வரும்போதும் ஒரு கும்பிடு. அந்த டிங் சத்தம் நல்லா பொருந்தியிருக்கும்.

கார் உதிரி பாகங்களுக்கு வரும் ஒரு விளம்பரம் - கார்லயே டென்னிஸ் விளையாடுவாங்க, கார்லயே கல்யாணம், கார்லயே டின்னர்... கடைசியா காருக்குள்ளயே கசமுசா. Car Accessories - Who love their cars ஆம்.

அப்புறம் ஒரு குழந்தைய ஒவ்வொருத்தரா வாங்கு வச்சுக்கிறாங்க, குழந்தை அழுதுக்கிட்டே இருக்கு... கடைசியா அம்மா வாங்கிகிட்ட பிறகுதான் அழுகைய நிறுத்துது - கார் சர்வீஸ்கு - அதுக்குண்டான இடத்துல விடனுமாம்.

அப்புறம் இது...---

இனி மொக்கை

கடிகார முள் கூட
என்னைப் பயமுறுத்துகிறது,
தாமதம்.
---
இயலாமை மேலே
கோபம் ஏறியது,
அழுகை.
---
நுனி வெளியே தெரிந்தால்தான்
உற்சாகமே வருகிறது,
பென்சில்.
---
சிறு துளி
ஒரு ரவுண்டு,
காலி பாட்டில்கள்.
---
வாங்கவா வேண்டாமா
வாங்கித்தான் பார்ப்போமே,
தள்ளுபடி.
---
தேவையோ இல்லையோ
(வாங்கி) குப்பையிலாவது போடலாம்,
இலவசம்.
---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

எனக்கு வந்த கு.த.சே.கள் - 8

1)
மகன்: அப்பா, சின்ன வீடுன்னா என்னப்பா?
அப்பா: ஏம்ப்பா?
மகன்: சும்மா தெரிஞ்சு வச்சுக்கலாம்னுதாம்ப்பா.
அப்பா: தெரியாம வச்சுக்கிறதுதாம்ப்பா சின்ன வீடு.

2)
நோயாளி: சார், இது உங்களுக்கே ஓவரா தெரியல?
டாக்டர்: என்ன?
நோயாளி: ஊசி எனக்குப் போட்டுட்டு நர்ஸ் பின்னாடி தடவுறீங்க?

3)
ஆடி அதிரடித் தள்ளுபடி.
3 sms அனுப்பினால் ஒரு sms திருப்பி அனுப்பப்படும்.
5 smsக்கு மேல் அனுப்பும் அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு பிச்சர் மெசேஜ் ஃப்ரீ.
மேலும்,
கால் செய்து ’ஹாய்’ சொல்லுங்கள், ஒரு மிஸ்டு காலை இலவசமாக அள்ளுங்கள்.
முந்துங்கள், இவை அனைத்தும் பேலன்ஸ் உள்ளவரை மட்டுமே...

4)
சர்தார்: ச்ச... வர வர செல் கம்பெனி சரியில்ல...
நண்பர்: ஏன்?
சர்தார்: என் மனைவிக்கு கால் பண்ணினேன், “நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் வேறு ஒருவரோடு தொடர்பு வைத்துள்ளார்”னு சொல்லுது.

5)
நா ஒரு மிகப்பெரிய ”மெசேஜ் ரவுடி”னு காட்டத்தான் வாண்ட்டடா இந்த மெசேஜ அனுப்புறேன். சினம் கொண்ட சிங்கத்தோட மெசேஜ டெலிட் பண்ணா அது செல்லயே செதச்சிடும் பரவால்லியா? இவ்வளவு பேசுறவன் கால் பண்ணலயேனு கேக்குறீங்களா? “டவர் ஸ்ட்ராங்கு, ஆனா பேலன்ஸ் கொஞ்சம் வீக்கு”. நெக்ஸ்டு மெசேஜ்ல மீட் பண்றேன்.

6)
டீக்கும் காபிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
.
.
.
.
டீல ஒரு ஈ இருக்கும் (TEA),
காபில ரெண்டு ஈ இருக்கும் (COFFEE).

அதனால, பாத்து குடிங்க.

7)
செய் அல்லது செத்து மடி.
- நேதாஜி
படி அல்லது படுத்துத் தூங்கு.
- (யார் சொன்னா என்ன? நல்லாருக்குல்ல?)

8)
முள் இருக்கும் பாதையில் சென்றால்
கால்கள்தான் புண்ணாகும்
பெண் இருக்கும் பாதையில் சென்றால்
வாழ்க்கையே மண்ணாகும்.

9)
உயிர் இல்லாத மலரைக் கூட நேசிக்கிறோம்
ஆனால்
நமக்காக உயிரையே கொடுப்பவர்களை மட்டும் நேசிக்க ஏன் யோசிக்கிறோம்?

ஆதலால் நேசிப்போம்
.
.
.
.
.
.
சிக்கன், மட்டன், ஃபிஸ் எல்லாத்தையும்.

10)
உலக sms வரலாற்றில்
முதன் முறையாக

இன்பாக்ஸ்க்கு வந்து
சில நிமிடங்களே ஆன

புத்தம் புதிய
மெஹா ஹிட் sms

.
.
.
.
.
.
.
.
.
ஏதாவது இருந்தா அனுப்புங்க...

Share/Bookmark
Read More!

பள்ளிக்கூடம் 4 - டிவி டெக் வாடகைக்கு

இப்பல்லாம் என்ன பெரிய ஓபன் தேட்டரு, அப்போ பாத்தோமே அந்த மாதிரி வருமா? பள்ளி நாட்களில் நடந்த சுவையான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

தெருவில் எப்போதாவது ஒரு கல்யாணம் நடக்கும். சிலருக்கு எப்படா பந்தி ஆரம்பிக்கும் என்றிருக்கும். ஆனா நம்ம கூட்டத்துக்கோ, எப்படா கல்யாணம் முடியும், எப்படா கேசட் ரிலீஸ் ஆகும்னு இருக்கும். ஒரு வாரத்தில் எப்படியும் கேசட் வந்துவிடும். கல்யாண வீட்டினர் சார்பாக டிவி டெக் வாடகைக்கு எடுக்கப்படும். அவர் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்து, அவர் வீட்டுக்கு நேரே தெருவில் வைத்துவிடுவார்கள். இருட்டியதும் ஒளிபரப்பு ஆரம்பமாகும்.

டெக்குக்காரர் முதலில் சில செட்டிங்குகளைச் செய்வார். அதை இதை மாட்டுவார். ஒரு கேசட்டைப் போட்டு அங்கே இங்கே எதையெல்லாமோ நோண்டுவார். அப்போதெல்லாம் AV கிடையாது. நாங்கள்லாம் சுத்தி நிண்ரு ‘பே’ என பார்த்துக்கொண்டிருப்போம். சிறிது நேரத்தில் படம் தெரிய ஆரம்பிக்கும். உடனே நம்ம கூட்டம் கத்த ஆரம்பிச்சுடும், ஓஓஓ... எல்லோருக்கும் தெரிந்துவிடும், கனெக்சனெல்லாம் ஓக்கே என்று.

தெரு மக்கள், கல்யாண வீட்டுக்காரர்கள் மற்றும் அவரது சொந்தங்கள், தெருவில் போவோர் வருவோர் அனைவரும் புடைசூழ, முதலில் கல்யாண கேசட். நாம எப்படா வருவோம்னு பாத்து, ‘டேய், நாண்டா, நாண்டா’ என்று சுற்றி பகிர்ந்துகொள்வோம். அதன் பிறகு எப்படா முடியும் என்றிருக்கும். அதே நேரத்தில் பலரது சாப்பாடும் முடிந்திருக்கும், தெருவிலேயே. பின்பு, பாய், தலையணை எடுத்து வந்து செட்டில் ஆவதற்கும், கல்யாண கேசட் முடிந்து படம் ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும்.

அதன்பிறகு ஒரே கொண்டாட்டம்தான். விசில், கைதட்டல், சிரிப்பு என தெருவே அமர்க்களப்படும். எப்படியும் புதுப்படம் இரண்டு இருக்கும். சிலர் விடிய விடியக் கூட ஓட்டுவர். நாமெல்லாம் ஒரு படம் முடிந்தவுடனேயே மட்டையாகி விடுவோம். விழித்துப் பார்த்தால் காலையில் வீட்டில் இருப்பேன்.

அப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் டிவி இருக்காது. எப்போதாவது இப்படி புதுப் படம் பார்த்தால்தான் உண்டு. இல்லையேல் ஞாயிறு, கருப்பு வெள்ளை படம் மட்டுமே. ‘டிவி டெக் வாடகைக்கு’ பலகைகள் ஊருக்குள் அப்போதெல்லாம் 2/3 இருக்கும். இப்போதெல்லாம் அது ஒழிந்தேவிட்டது. எல்லார் வீட்டிலும் டிவி, டிவிடி, ஹோம் தேட்டர் என வளர்ந்துவிட்டதே!

---

பள்ளிக்கூட நினைவுகளை எழுத ஆரம்பித்தவுடன் பல நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. தெப்பக்குளம், சுனை, மதகு, கடல் ஆகியவற்றில் குளியல், காவண்டி(சைக்கிள்) வாடகைக்கு எடுத்துப் பழகியது, பள்ளியில் சென்ற சுற்றுலாக்கள், சர்க்கஸ், ஜூராசிக் பார்க் படம், நாங்கள் விளையாண்ட கோலி, பம்பரம், கபடி, கொக்கோ, பாண்டி, சிகரெட் அட்ட, சோடா சுப்பி, கல்லா மண்ணா, கண்ணாமூச்சி, செவன் ஸ்டோன், கிளியந்தொட்டு, உப்புமூட்ட சண்ட, குச்சி கம்பு, கள்ளன் போலீஸ், WWF, வீடு கட்டி, சொப்பு சாமான், லக்கி பிரைஸ், கலக்கம்பு(திருவிழா நேரங்களில் ரொம்ப பேமஸ்) பூப்பறிக்க வருகிறோம்(?), ஆவியம், நொண்டி, டிக் டிக்... யாரது... பேயது...(?), கொல கொலயா முந்திரிக்கா, தாயக்கட்டை, பல்லாங்குழி, கூட்டஞ்சோறு, படம்பேர் சொல்லி, ஊர் பேர் சொல்லி, பாட்டுக்குப் பாட்டு... அனைத்தும் பசுமை. பழைய நினைவுகளில் மூழ்கி மகிழக் காரணமான நண்பர் சிறிய பறவை - ஜோதி அவர்களுக்கு நன்றிகள்.

இனி, கிகி தனது பள்ளி நினைவலைகளை நம்மேல் வீசுவார்.

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

புரோட்டா ஸ்டால்

சென்னை வந்த பிறகுதான் நம்ம ஊரு புரோட்டாவின் அருமை தெரிந்தது. வந்த புதிதில் பல இடங்களில் சாப்பிட்டிருப்பேன். ஆனால் எதிலுமே திருப்தி இல்லை. கொஞ்ச நாளில், இனி இங்கு புரோட்டா வாங்கி சாப்பிடவே கூடாது என முடிவு செய்தாயிற்று.

திருச்செந்தூரில், பள்ளி காலங்களில், ஏஒன் புரோட்டாதான் நம்ம ஃபேவரிட். அதுவும் பார்சல்தான். பிச்சுப்போட்டு சால்னா ஊத்தி வாங்கி வருவோம். வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தால், புரோட்டா சால்னாவுக்குள் ஊறிப்போய், பார்க்கவே அமிர்தமாய் இருக்கும். திண்றால்.... ம்ம்ம்ம்.

சிறிது வளர்ந்து வெளியூர் செல்ல ஆரம்பித்த பின், காயல்பட்டிணம், ஆறுமுகனேரி, தூத்துக்குடி என சுவை பார்க்கும் ஏரியாவின் சுற்றளவு கூடியது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அதிலும் தூத்துக்குடி சுவை மறக்க முடியாதது.

எனது காலத்தில், தூத்துக்குடியில், சத்யா ஏஜன்சி அருகிலிருக்கும் ஆழ்வார் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் ஆண்டவர் அனைவரும் அறிந்த பேமஸ் புரோட்டா கடைகள். இப்போதும் (தண்ணியடித்தால்) தேடிப்போய் சாப்பிடும் மற்றொரு கடை, ஆறுமுகனேரி ரமா ஹோட்டல்.

தூத்துக்குடியில் அடிக்கடி சாப்பிடும் இடமென்றால் அது பழைய பேருந்து நிலையம் வெளியே இருக்கும் முக்குக் கடை (இதுவரை அதன் பெயர் தெரியாது, நாங்கள் அழைப்பது அப்படித்தான்). எப்போதெல்லாம் தூத்துக்குடியைக் கடக்கிறேனோ அப்போதெல்லாம் இங்கு ஒரு விஜயம் உண்டு. ‘சுக்கா செட்டு’ என்று சொன்னால் போதும், இரு பொரித்த புரோட்டாக்களை நொருக்கிப் போட்டு, அதில் மட்டன் சுக்காவை ஊற்றி, ஓரத்தில் கொஞ்சம் நறுக்கிய பச்சை வெங்காயத்துடன் வாழை இலையில் ஒரு படையல் கிடைக்கும். இத்துடன் ஒரு அரைவேக்காடு சேர்த்தால்.... ஸ்ஸ்ஸ். இந்த முறை அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. (படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்)
இப்போது புரோட்டாவை நொருக்குவதற்கு தனி இயந்திரமே இருக்கிறது!


பின்பு, சனிக்கிழமை சிவகாசி சென்ற போது நண்பர் ஒரு புரோட்டா கடைக்கு கூட்டிச் சென்றார். இங்கு பொரிப்பதில்லை, கல்லில் போட்டு எடுத்த புரோட்டா.

படையல் ஆரம்பம்.


உச்சகட்டம்.

அங்கிருந்த கல்லூரி நாட்களில் நான் வழியல் விரும்பி சாப்பிடுவதை மறக்காத அவர், எனக்காக பிரத்யோகமாய் செய்யச் சொன்னார்.

இதுதான். வெங்காயத்தை கல்லில் நன்றாக வதக்கி, பின் அதை வைத்து ஒரு பக்க ஆம்லெட் போட்டால், அதுதான் வழியல். இதன் சுவையை வார்த்தைகளால் ஜொள்ள இயலவில்லை. (சிவகாசி தவிற வேறெங்கும் இந்த வகை முட்டை நான் கண்டதில்லை).

நீங்களும் பாத்துட்டு ஏதாவது ஜொள்ளிட்டுப் போங்க. என்ன இருந்தாலும் நம்ம ஊரு புரோட்டா கடை சுவை எங்குமே கிடைக்காது.
---

மேலும் கொஞ்சம் கொசுறு க்ளிக்குகள்...

இந்த தடவ அம்மா குடுத்த ஸ்பெசல் - ஆப்பம் வித் தேங்காப்பால்.


மஞ்சள், பச்சை நிறங்கள்.


சிவகாசி பூனை... நல்லா பாத்துக்குங்க.


தூத்துக்குடியில் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் மேம்பாலம் அடியில் - புதிய பேருந்து நிலையம் அருகே.


-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

முன்னோடிகள்

எவ்வளவு ஆண்டுகளுக்கு முன் சூரியன் உருவாகியிருக்கும்? பூமி? உயிர்? மனிதன்? நமக்கு முன் தோன்றிய உயிர்களில், இப்போது நம்முடன் இருப்பவற்றுள் பழமையானது எது? முதன் முதலில் தோன்றிய மனிதன் இவ்வுலகில் எங்கு வாழ்ந்திருப்பான்? முதலில் தோன்றியது ஆணா பெண்ணா?

மனிதனில் முதலில் தோன்றியது பெண் என்கிறது விஞ்ஞானம். அப்படியானால் இனப்பெருக்கம்? ஹோமோசேப்பியன் என்றால்? மனிதன் உலகம் முழுவதும் பரவியது ஏன்? கப்பல் இல்லாத அக்காலத்தில் கண்டம் விட்டு கண்டம் எப்படி சாத்தியம்? இமயமலை இருந்த இடத்தில் அதற்கு முன்னால் என்ன இருந்திருக்கும்? இப்பொதிருக்கும் மெரினாவில் முன்பு கடற்கரை இருந்திருக்குமா?

நாடோடியாக அலைந்த மனிதன் ஒரே இடத்தில் தங்க ஆரம்பித்தது ஏன்? சிக்கிமுக்கிக் கல் உபயோகிக்கும் முன், தீ எப்படிக் கிடைத்திருக்கும்? விவசாயம் எப்படி முளைத்திருக்கும்? நாகரிகம் தோன்றியது எப்படி? முதல் சட்டத்தை உருவாக்கியது யார்? ஊழலுக்கு மரணதண்டனை, குறிப்பிட்ட நாட்களுக்குள் திருடனைப் பிடிக்காவிடில் காவலர்களுக்கு வேலை நீக்கம், என்றெல்லாம் இருந்தது ஆச்சர்யம் அல்லவா?

பழமொழிகள் முதன் முதலில் எப்போது உருவானது? முதல் காப்பியம்? அதன் கதை எப்படி இருந்திருக்கும்? கடவுள்கள் எவ்வாறு இருந்திருப்பார்கள்? 100 என்பது முழுமை என்றால், நேரம் 60ன் அடுக்குகளாகவும், டிகிரி 360 எனவும் இருப்பது எப்படி?

இந்தியாவில் நாகரிகம் எப்போது தோன்றியிருக்கும்? அது பாபிலோனிய, எகிப்திய, ஐரோப்பிய நாகரிகங்களுக்கு இணையாக இருந்திருக்குமா?

எகிப்தின் கிடுகிடு வளர்ச்சி எப்போது? அப்போது ஆண்ட மன்னர் யார்? மூட/கடவுள் நம்பிக்கைகள் அதிகம் இருந்த அந்த காலகட்டத்தில் மன்னர் எப்படி சமாளித்திருப்பார்? எகிப்தியர் மம்மி செய்தது ஏன்? எப்படி? முதன் முதலில் பேப்பர் எப்படி வந்தது? 3500 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு ’காக்டெய்ல் பார்டி’ இருந்தது தெரியுமா?

கிரேக்க நாடுகளில் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்? பாரசீக - ஏதேன்ஸ் போரின் வரலாறு என்ன? முதன் முதலில் கச்சிதமாக நாணயங்கள் தயாரித்தது யார்? விளையாட்டுப் போட்டிகள் உருவானது எப்படி? ஒலிம்பிக்கை தோற்றுவித்தவர்கள் யார்?

பெரும் வல்லரசான கிரேக்கத்தின் வளர்ச்சிக்குத் தடை போட்டது யார்? முக்கியமான, மிகப் பெரிய போர்களில் ஒன்றான கிரேக்க - பாரசீகப் போரின் பிண்ணனி என்ன? கிரேக்கப் படையை விட நான்கு மடங்கு பெரிதான பாரசீகப் படை வென்றதா?

சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ மேதைகளைத் தந்த ஏதேன்ஸ், மும்பை நகர் அளவுதான். உலகமகா தத்துவ மேதை சாக்ரடீஸைக் கொன்றது ஒரு ஜனநாயக நாடு என்றால் நம்ப முடிகிறதா? அவரது சீடர் பிளேட்டோ மூலமே இன்றைய ’அகடாமி’ என்ற வார்த்தை வந்தது. முதல் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்ததும் அவரே. அவரது சீடர் அரிஸ்டாட்டில். அவரது மாணவரே மாவீரன் அலெக்ஸாண்டர்.

தனிமனித சுதந்திரத்தை கொண்டாடிய நாடு ஏதேன்ஸ் என்றாலும், பெண் சுதந்திரம் கொஞ்சம் கூட கிடையாது என்றால் நம்ப முடிகிறதா? பிள்ளை பெறுவதற்கு மட்டுமே பெண். சுகத்திற்குக் கூட ஆண் நண்பர்களுடந்தான் கலவி என்பதெல்லாம் ஆச்சர்யமான விசயமல்லவா?

அலெக்ஸாண்டர் இறந்த பிறகு இந்தியாவில் தலை தூக்கிய மாபெரும் சாம்ராஜ்யமே மௌரியா சாம்ராஜ்யம். அதன் சக்கரவர்த்தி சந்திரகுப்தனின் மெய்க்காவலர்கள் பெண்கள் என்றால் நம்ப முடிகிறதா? கிரேக்கப் படையையே தோற்கடித்த அவர் எவ்வாறு ஆட்சி செய்திருப்பார்?

சந்திரகுப்தனை உருவாக்கிய அந்த சாணக்கியன் யார் தெரியுமா? சந்திரகுப்தனின் மகன்தான் அசோகர். அசோகர் ஆரம்பத்தில் கொடுங்கோல் மன்னரென்றால் நம்ப முடிகிறதா? அவரின் மனதையே கலிங்கப் போர் மாற்றியதென்றால், அப்போர் எவ்வளவு பெரிதாக, கொடூரமாக இருந்திருக்கும்?

---

உலகம் தோன்றியதற்கு சற்று முன்னால் இருந்து, கிறிஸ்து பிறப்பதற்கு முன் வரை நடந்தவற்றின் ஒரு சிறிய தொகுப்பே, கி.மு. - கி.பி., குமுதத்தில் வெளிவந்த, மதன் அவர்கள் எழுதிய தொடர் புத்தகமாக. பள்ளி நாட்களில் வரலாறு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால், இப்போது படிக்கும்போது மிகவும் சுவையாக இருப்பது எப்படி என்று தெரியவில்லை. புத்தகத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, ஆச்சர்யப்படவைக்கும், சுவாரஸ்யமான தகவல்கள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன.

வரலாற்றில் எனக்கு ஈடுபாடு இல்லை என ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். படிக்க ஆரம்பித்தால், முடிக்காமல் கீழே வைக்க மனம் கேட்காது. படித்து முடித்த பின், நாம் இருக்கும் இந்த உலகம் இவ்வளவு பாதைகளைக் கடந்து வந்ததா என சிந்தனையைத் தூண்டுகிறது, நம் முன்னோர்களின் வாழ்வை அசைபோட்ட ஒரு திருப்தியைக் கொடுக்கிறது.

கிமு கிபி

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!