தேன்கூடு - 2009/12/20

முக்கு: தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை இங்கே தனியே பதிவிடுவதால், இனி தேன்கூட்டில் அந்த மாதிரி தகவல்கள் இடம்பெறாது.


வெளிநாட்டில் அண்ணன் கிகி
அண்ணன் கிகி இப்போது சார்ஜாவில் இருக்கிறார், மனைவியுடன். சொந்த விசயமாக சென்றுள்ள அவர், டிசம்பர் முழுவதும் அங்கேதான் இருப்பார். குப்பைத்தொட்டி நான் ஆதவன் நான் ’கவனித்துக்கொள்கிறேன்’ என சொல்லியிருக்கிறான். நல்லா கவனிச்சுக்கோப்பா.


---

பதிவர் சந்திப்புகள்
வரும் வாரம் ஏதேனும் ஒரு நாள் நண்பர் ரோமியோபாய் சந்திக்க வருவதாகச் சொல்லியிருக்கிறார். வீட்டுக்குப் போகும் வழியில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிவிடுவதாகவும், அங்கேயே கும்மி அடிக்கலாமெனவும் சொல்லியிருக்கிறார். சைதை என்பதால் கேபிலும் கண்டிப்பாக வருவார். புலவன் புலிகேசியும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சைதை அருகில் இருப்பவர்கள், சந்திக்க ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக தொடர்புகொள்ளவும்.

இன்று ஈரோட்டில் பதிவர் சந்திப்பு. சென்னையிலிருந்து நண்பர்கள் தண்டோரா, கேபில், பப்லிசர் அகநாழிகை, சூர்யா, அப்துல்லா ஆகியோர் சென்றிருப்பதாக அறிகிறேன். சில காரணங்களால் செல்ல இயலாது போனது குறித்து வருத்தமே. இந்த சந்திப்பு நல்ல விதமாக நடைபெற வாழ்த்துக்கள்.

இந்த வார இறுதியில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எனது மாமாவுடன், பெங்களூரில். அங்கு சில கல்லூரி நண்பர்களையும், பதிவுலகில் பெங்களூரில் இருப்பவர்களில் எனக்குத் தெரிந்த ஒருவர், ஜெ மாம்ஸ் அவர்களையும் பார்க்கலாமென இருக்கிறேன். அதற்கேற்றார்போல நேரம் அமையவேண்டுமென வேண்டுகிறேன், காலத்திடம். அங்கு தங்கப்போகும் இடம் மடிவாலா என நினைக்கிறேன். அருகில் யாரேனும் இருந்தால் அழைத்துக்கொள்ளவும்.

---

சென்ற வருட மழை - வீடியோ
இப்போது பெய்யும் மழையைப் பார்த்ததும், சென்ற வருடம் டிசம்பர் 31 ஞாபகம் வந்தது. அதற்கு முன்பு மூன்று நாட்கள் பயங்கர மழை. நான்காவது நாள் போரடிக்கிறது என நண்பனும் நானும் தெரியாத்தனமா வெளியே வந்துவிட்டோம். மேற்கு மாம்பலம் பகுதி பெரும் வெள்ளம். அதிலும் அரங்கநாதன் சப்வே முழுதும் தண்ணீர், உள்ளுக்குள் ஒரு அரசுப் பேருந்துடன். அப்போது எடுத்த வீடியோ.


---

பட அறிமுகம்
The Moon

படத்தப் பத்தி சொன்னா சுவாரஸ்யம் போயிடும். ஆனாலும் கொஞ்சம் சொல்றேன். படத்துல ஒரே ஒரு கதாப்பாத்திரம்தான். ஆனா கடைசி வரை சுவாரஸ்யமா இருக்கும்.
எதிகாலக் கதைகளம். பூமியில் சக்தி இல்லை. அதனால் நிலவிலிருந்து சக்தி எடுக்கப்பட்டு பூமிக்கு கிடைக்கிறது. நிலவில் இருக்கும் சக்தி எடுக்கும் நிலையத்தில் இருக்கிறார் நமது கதாநாயகன். சக்தி சேமிக்கப்படும் கலனை எடுத்து பூமிக்கு அனுப்பும் வேலை. ஒரே ஆள்தான். மூன்று வருட ஒப்பந்தம் முடிந்து பூமிக்குத் திரும்பும் தருவாய். ஒரு விபத்து. முழித்துப் பார்த்தால் நிலையத்திற்குள். அங்கு உதவிக்கு இருக்கும் ரோபோவிடம் கேட்டால் விபத்திலிருந்து தப்பிவிட்டீர்கள் என்கிறது. பின்பு வழக்கம்போல வேலைக்குச் செல்லும்போது விபத்தில் சிக்கிய வாகனம். உள்ளே அடிபட்ட அவன். அவனை எடுத்துவந்து முதலுதவி செய்கிறான். அவன் எழுந்து பல கேள்விகள் கேட்கிறான். ஒரே போல இருக்கும் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை, நமக்கும்தான். மூன்று வருடம் தனியாக ஒருத்தன் இருக்கும்போது என்ன ஆகும்? ஒரு வேளை பைத்தியம் பிடித்துவிட்டதோ? கற்பனையில் இவ்வாறு யாராவது பக்கத்தில் இருப்பது போல கற்பனை செய்துகொண்டு பேசுவார்களாமே! அப்படி ஆகிவிட்டானோ என என் மனம் பல கற்பனைக் கதைகளைத் தேடியது. உண்மை என்ன என்பதே கதை.
படம் முழுக்க இந்த ஒரே உருவம்தான், இருவராக. ஆனால் அலுப்பு தட்டவில்லை. நிலவில் இருப்பது போன்றே உணர வைக்கும் செட் மற்றும் சிஜி. வித்தியாசமான எதிர்காலம் பற்றிய அனுமானத்துடன் கூடிய படம். ஒரே ஒரு உருவத்தையே படம் முழுக்க வைத்து, நம்மை போரடிக்காமல் வைத்திருப்பது சபாஷ். பார்க்கலாம்.

---

குறுந்தகவல் குறும்புகள்

நீ வெற்றி பெறும்போது
சொல்வேன்
மற்றவர்களிடம் பெருமையுடன்
அவன் என் நண்பன் என்று
நீ தோல்வியுரும்போது
சொல்வேன்
உன் அருகில் நின்று
நான் உன் நண்பன் என்று.

***

அப்பா:
என்ன சார், என் பொண்ணு கிளாமரா வரலைனு திட்டினீங்களாமே?
வாத்தியார்:
நாசமாப் போச்சு, நா கிராமர் வரலன்னு சொன்னேன்...

---

சொந்த சரக்கு
இரவல் கேட்பவர்கள்
எரிச்சலாய் தெரிகிறார்கள்
வாங்குகிறேன்
இரண்டாவது புத்தகம்.


பிக்கு: பின் குறிப்பு எழுதுறதுக்குக் கூட சிலர் டிஸ்கின்னு ஏன் போடறாங்கன்னு தெரியல. டிஸ்கின்னா disclaimer , அதாவது எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை, இதுல வர்றது எல்லம் கற்பனை அப்டி இப்டின்னு தப்பிக்க வசதியான குறிப்புகள்தான் டிஸ்கில வரனும்ங்கிறது என்னோட அனுமானம். அதனால, முன் குறிப்ப முக்குன்னும், பின்குறிப்ப பிக்குன்னும் நான் எழுதப்போறேன்.
அப்றம், பதிவர் சந்திப்புகளின்போதும், பார்த்த நல்ல இடங்கள், ஓட்டல் ஆகியவற்றின் படஙகள் மொபைலில் இருக்கின்றன. ஆனால், டேடாகேபில் தம்பி கொண்டுசென்றுவிட்டதால் அவற்றைப் பற்றி எழுத முடியவில்லை. புது வருடத்தில் அவற்றைப் பற்றி எழுதுகிறேன்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

தூக்கம் உன் கண்களை...

ஒரு நாள் இரவு, வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வெகு நேரம் பேசிய பின்பு, ”காலையில் எழுதிருக்கனும், நா தூங்குறேன்”, என்றார். சரி என்று கணினியிடம் திரும்பினேன். இரண்டு பின்னூட்டங்கள் படித்திருப்பேன், திரும்பிப் பார்த்தால் நண்பர் ஆழ்ந்த உறக்கத்தில். கொடுத்துவைத்தவர். இப்படித்தான் சிலபேர். நினைத்தவுடன் தூங்கிவிடுவர். நமது கதையோ வேறு. இரவு 12 மணிக்குமேல் தூங்கலாமென முடிவெடுத்தபின், படுக்கையில் ஒரு அரை மணி நேரம் புரண்டபின்தான் தூக்கம் வரும். அதுவும் நல்ல காற்று வீச வேண்டும். வெளிச்சம் இருக்கக் கூடாது, போன்ற நிபந்தனைகளுடன்.

காற்று என்றவுடன்தான் ஞாபகத்துக்கு வருகிறது. சிலருக்கு மின்விசிறி இல்லாமல் தூக்கமே வராது. காற்றுதான் காரணம் என்று நினைக்க வேண்டாம். அந்த மின்விசிறியில் காற்றே வராது. கொர கொர என்று சத்தம்தான் வரும். அந்த சத்தம் நின்றுவிட்டால் உடனே விழித்துவிடுவார்கள். எனது நண்பன் சுரேஷ் நான்கு பேருடன் ஒரு வீட்டில் வசித்துவந்தான். இரவு வெகு நேரம் கழித்துதான் வீட்டிற்கு வருவான். வந்து பார்த்தால் மின்விசிறி உள்ள அறையில் மற்ற நால்வரும் படுத்துவிடுவர். அவன் மின்விசிறியில்லாத அடுத்த அறையில்தான் படுக்கவேண்டும். ஆனால் காலை மட்டும் இந்த அறைக்குள் நீட்டியிருப்பான், காற்றுக்காகவாம். எப்போதாவது மின்விசிறியை அனைத்தால் போதும், உடனே எழுந்து போடச்சொல்வான். ”ஏண்டா, அங்கதான் காத்தே வராதே, அப்புறம் எதுக்கு ஃபேன்”, என்று கேட்டால், பதில் சொல்லத்தெரியாது. மின்விசிறி ஓடினால்தான் தூக்கம் வருமென்பது அவனது நினைப்பு.

சிலருக்கு போர்த்தினால்தான் தூக்கம் வரும், குளிர்காலத்தில் மட்டுமல்ல. கொளுத்தும் வெயில்காலத்தில் கூட சிலர் போர்த்திக்கொண்டு தூங்குவதைப் பார்த்திருக்கிறேன். குளிர் காலத்தில் மின்விசிறியையும் போட்டு நடுக்கத்துடன் போர்த்திக்கொண்டு தூங்குவர் சிலர். மின்விசிறியை அனைத்தால் தூக்கம் வராது. சிலருக்கோ மல்லாந்து படுத்தால்தான் தூக்கம் வரும், சிலருக்கு வலதுபுறம் சரிந்து, சிலருக்கு இடதுபுறம்.

சிலருக்கு கட்டிலில் படுத்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கு தலையணை இல்லாமல் தூக்கம் வராது. சிலருக்கு வெளிச்சம் இல்லாமல் இருந்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கு சப்தம் ஏதும் இருந்தால் தூக்கம் வராது. சிலருக்கு குறிப்பிட்ட சபதம் கேட்டால்தான் தூக்கம் வரும், சிலருக்கு குறிப்பிட்ட சப்தங்கள் மட்டும் தொந்தரவைக் கொடுக்கும். உதாரணத்திற்கு, குறட்டை சத்தம் கேட்டால் ஒன்றும் தொந்தரவில்லை. அதே நபருக்கு சுவற்றில் மாட்டியிருக்கும் நாட்காட்டி (அல்லது ஏதாவது தாள்) உரசும் சப்தம் கேட்டால் தூக்கம் வராது. சிலருக்கு தூங்குவதற்கு முன் ஒரு சிகரெட் குடித்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கோ தண்ணி. சிலருக்கு வேறு வகை போதை.

இன்னும் சில வித்தியாசமான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அவனுக்கு பக்கத்தில் இருப்பவர் மேல் கால் போட்டால்தான் தூக்கம் வரும். பயந்த சுபாவம் உள்ளவனென்று நினைக்கிறேன். பக்கத்தில் யாரேனும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இன்னோருவன், சின்ன வயதில் பக்கத்தில் இருப்பவரின் காதைப் பிடித்துக்கொண்டுதான் தூங்குவானாம். பல தடவைகள் இப்படி அம்மாவின் காதைப் பிடித்து கம்மலை கழட்டிவிட்டிருக்கிறான். இதேபோல சின்ன வயதில் சிலர் கை சூப்பிக்கொண்டுதான் தூங்குவர். விரலை எடுத்தால் போதும் டபக்கென்று விழித்துக்கொள்வர். எப்படித்தான் தூங்கும்போது தெரியுமோ தெரியவில்லை. இன்னோரு நண்பன் காலை(மட்டும்தான்) ஆட்டிக்கொண்டேதான் தூங்குவானாம்.

இதில் பொதுவான சில விசயங்களும் இருக்கின்றன. புதிய இடத்தில் தூக்கம் சரியாக வராது. பேருந்து பிரயானத்தில் சன்னலோரம் இருந்தால் தூக்கம் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. அதிக உடல்வலியுடன், தூக்கமே இல்லாது இருக்கும்போது தூங்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த சூழ்நிலையிலும் தூக்கம் அமோகமாக வரும்.

அதிலும் கல்யாணம் ஆன சிலரிடம் கேட்டேன். ஒருத்தருக்கு மனைவியை வயிற்றோடு கட்டிப்பிடித்தால்தான் தூக்கம் வருமாம். இன்னொருத்தருக்கு மார்போடு அனைத்துத் தூங்கும் பழக்கமாம். இன்னொருவர் காலை தூக்கிப் போட்டுக்கொண்டுதான் படுப்பாராம். ஒன்று மட்டும் உறுதி, கல்யாணமானவர்கள் மனைவியைக் கட்டிப் பிடித்துக்கொண்டுதான் தூங்குகிறார்கள். :)

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

மீள் இயக்கம்

எழும்போது மகிழ்ச்சியில்லை உள்சென்றதும் உடனே குளியல் கண்ணாடியில் தெரியவில்லை முகம் இயல்பு இயல்பாகவே குழந்தைகள் கண்ணில் குழந்தைகளாய் அலைகள் முன்னே அலைகளாய் பாதைகள் பாதைகளாக மட்டுமே பயணம் தவறிப் போவதில்லை நிலவு குளிர்கிறது சூரியன் சுட மட்டுமே செய்கிறது மேகங்கள் மேகங்களாகவே மாறித் தெரிவதில்லை பாயாசம் இனிக்கிறது வேப்பங்காய் கசக்கிறது மலர்கள் அப்படியே சுவையில் மாற்றமில்லை தட்டில் கோலங்கள் இல்லை சிகரெட் கையைச் சுடுவதில்லை வெறித்துப் பார்க்கும் விட்டம் இல்லை சிந்தனையில் சிதறல் இல்லை மறுபடியும் என எழுத நினைக்கையில் இயங்கவில்லை எண்டர் பட்டன்.

-அதி பிரதாபன்.

இது உரையாடல் கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படலாம்.


Share/Bookmark
Read More!