கடந்த வெள்ளிக்கிழமை

இந்த வெள்ளியும் வழக்கம்போல விடிந்தது. முந்தைய நாள் மாலை மழை பெய்தபடியால் அன்றும் பெய்யும் என்றே தோன்றியது. அதனால் அன்று காரில் கிளம்பினேன். அதற்கு முந்தைய நாள் வியாழக்கிழமை, உடன் பணிபுரியும் தோழி ஒருவருக்குப் பிறந்தநாள் என்று மதிய உணவுக்கு வெளியில் செல்லவேண்டியது இருந்தது. மூன்று மணி நேரம் காலி. வந்த பின்னும் அங்கே இங்கே என்று சிலருக்கு உதவி செய்தபடியால், என்னுடைய வேலைகளை முடிக்க இயலவில்லை. அதனால் வெள்ளிக்கிழமை அந்த வேலைகளையும் சேர்த்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் என்னை புகுத்திக்கொண்டேன்.

அந்த முந்தைய நாள் மதிய உணவு பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். எப்படித்தான் அப்படித் திண்கிறார்களோ? என்ன முறையோ அது? ஒன்றும் புரியவில்லை. ஸ்டார்ட்டர் என்று சொல்லி வகை வகையாக அடுக்கித் திண்கிறார்கள். இதில் முதலில் ஒரு சூப்பும் கடைசியில் ஒரு மேங்கோ லஸ்ஸியும் அடக்கம். நானும் சூப்பில்தான் ஆரம்பித்தேன், ஆனால் லஸ்ஸி வரைக்கும் வர முடியவில்லை. அதற்குள் வயிற்றுக்குள் இடம் இல்லை. அதன் பிறகுதான் மெயின் கோர்சாம். முடியல. யாரோ ஆர்டர் செய்த சிக்கன் பிரைடு ரைசில் கொஞ்சம் சாப்பிட்டேன். ஆர்டர் செய்யும்போதே சொன்னேன், வீணாக்கினால் எனக்குப் பிடிக்காது, குறைவாகச் சொல்லுங்கள் என்று. அப்படி இருந்தும் ஒரு புலாவ் அப்படியே இருந்தது.

பக்கத்தில் இருந்த கல்கத்தாக்காரனிடம் சொன்னேன், நான் இப்படியெல்லாம் சாப்பிடுவது இல்லை, எங்கள் ஊரில் நேரடியாக மெயின் கோர்ஸ்தான். சில நேரங்களில் இந்த ஸ்டாட்டர்களைச் சாப்பிடுவதும் உண்டு, ஆனால் அதை நாங்கள் சைடு டிஸ் என்று சொல்லுவோம் என்றேன். பயலுக்குப் புரிந்துவிட்டது. மேலும் கேட்டேன், இது என்ன வழக்கம் என்று, அவனுக்கும் தெரியவில்லை எப்படி இதுபோன்று சாப்பிடப் பழகினானென்று. ஆனால், கொஞ்சம் சரக்கு உள்ளே சென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்த உணவகத்தில் ஆல்ககால் அனுமதி கிடையாது.



Share/Bookmark
Read More!