கோவா - சிரிக்க மட்டும்


கோவா - உண்மையிலேயே சரியான பெயர்தான். இரண்டு முறை இதுவரை கோவா சென்றிருக்கிறேன். அதில் ஒரு தடவை குடும்பத்துடன். ஹ்ம்ம்ம். இன்னொரு தடவை கல்லூரி நாட்களில், அதகளம். போனதும் தெரியவில்லை வந்ததும் தெரியவில்லை. ஆனா திரும்பி வரும்போது ஜாலியா இருந்ததா ஒரு ஞாபகம். காசெல்லாம் ’தண்ணியா’ செலவாகி வெறுங்கையா இருந்தது அந்தப் பயணம். ஆனா வெறுமையா இல்லை. சரி கோவா படத்துக்கு வருவோம். ஏற்கனவே வெங்கட்டோட படங்கள் இரண்டு பாத்ததுனால, கதை இருக்காதுன்னு தெரிஞ்சுதான் போனேன். என்னோட எதிர்பார்ப்பை சரியா பூர்த்தி பண்ணியிருக்கிறார் இயக்குனர். இடைவேளை வரை கதையே இல்லை, அதுக்கு அப்றம் மட்டும் இருக்கான்னு கேட்டீங்கன்னா, அதுவும் இல்லை.

இந்த இயக்குனரிடம் எனக்குப் பிடிச்சதே இதுதான். கதையம்சம் இல்லாத படம் எடுப்பது. அல்லது, ஒரு கதையை கதையே இல்லாத மாதிரி எடுப்பது. அப்புறம் ஏன் இது பிடித்திருக்கிறது? ஆரம்பம் முதல் முடியும் வரை சிரித்துக்கொண்டே இருக்க வைக்கிறார் என்னை, அதுதான். இந்த மாதிரி ஒட்டுமொத்த திரையரங்கும் விழுந்து விழுந்து சிரித்ததை வெகு நாட்களுக்குப் பின் பார்த்தேன். படம் ஆரம்பிக்கும்போதே இது ஒரு நகைச்சுவைப் படம் மட்டுமே என்ற மனநிலையை ஏற்படுத்திக்கொண்டதும் இதற்குக் காரணமாய் இருக்கலாம். எனது அருகில் இருந்தவர் மட்டும் திட்டிக்கொண்டே இருந்தார், என்ன மனநிலை அவருக்கோ தெரியவில்லை.

முதலில் டைட்டில் சாங். கிராமத்துப் பின்னணி, மஞ்சள் நிற எழுத்துக்கள், எங்க ஊரு நல்ல ஊரு ரேஞ்சுக்கு ஒரு கிராமத்துப் பாட்டு. பழைய ராமராஜன் படம்தான் ஞாபகத்துக்கு வந்தது. படம் ஆரம்பிக்கும்போதே பஞ்சாயத்தில் ஆரம்பிக்கிறது, கூடவே நக்கலும். அப்படியே நக்கல் தொடர்வண்டி மாதிரி போய்க்கொண்டே இருக்கும். வழக்கம்போல கதாநாயகன் என்பதே கிடையாது. எல்லோருக்கும் சம வாய்ப்பு. இதன் பிறகு கதை? தேவையில்லை. காட்சிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. நாங்கள் சிரித்துக்கொண்டே இருந்தோம். சின்னச் சின்ன விசயங்கள்தான். கவனிக்கத் தவறினால் சிரிப்பு வராது. சில நேரங்களில் சிரிப்பலை அடங்க நேரம் ஆகி அதன் தொடர்ச்சியாக வரும் நக்கல் வசனக்கள் கேட்காமலேயே போய்விட்டது. அதிலும் ஒருவர் கவனித்து ரசித்ததை இன்னொருவர் கவனிக்காமல் போய்விட வாய்ப்பு உள்ளது. ஒரே ஆள் வாத்தியார், போலீஸ், பஞ்சாயத்து ஆட்களில் ஒருவர், பைலட் என பல்வேறு கெட்டப்புகளில் வந்ததை எனது நண்பன் கவனித்திருக்கிறான், நான் கவனிக்கவில்லை. வெள்ளைக்காரியின் கல்யாணத்தில், தாலி கட்டும்போது அப்பா அழுவது, நண்பனுடைய வீட்டில் பின்னணியில் வெள்ளைக்காரியுடன் இருக்கும் போட்டோக்கள் இன்னும் சில விசயங்களை நான் கவனித்திருந்தேன், நண்பனுடைய கண்ணுக்கு சிக்கவைல்லை. ஜெய் ஆங்கிலம் இன்னொரு கலாட்டா. அந்த ஹோமோ காதலர்களின் வாழ்க்கை - நண்பனுக்கு சிரிப்பாகத் தெரிந்தது, ஆனால் உன்னிப்பாகக் கவனித்தால் அதிலிருக்கும் உண்மை புரியும்.

இப்படிச் சின்னச் சின்ன காட்சிகள் நகரும்போது கடைசிவரை நெளியாமல் உட்கார்ந்திருக்க முடியுமா என்றால் சந்தேகம்தான். படத்தில் கதை இருக்காது. அந்த மாதிரி ஏதாவது எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும். தனியாக சிரிக்கத் தெரியாதவர்கள் தனியாகப் போனாலும் வேலைக்காகாது. நண்பர்களுடன் சென்றால் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது. இன்னும் முக்கியமாக, இதில் பல காட்சிகள் முந்தைய தமிழ்ப்படங்களை நக்கல் செய்வதால், அந்தப் படங்களில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு சிரிப்பு வருவது சந்தேகமே. அதே போல, சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் அதிகமாக இருக்கும். சிறிது கண்ணை திரையை விட்டு நகர்த்தும்போது மற்ற அனைவரும் சிரிக்கக் கண்டு, அருகில் இருப்பவரிடம் ‘என்ன ஆச்சு’ என்று கேட்கும் வாய்ப்பு அதிகம் வருவதால் சிலருக்கு எரிச்சலைத் தரலாம். அதிலும் அருகே இருப்பவர் பதிலே சொல்லாமல் சுவாரஸ்யமாகத் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தால் அந்த எரிச்சல் அதிகமாக வாய்ப்புண்டு. மொத்தத்தில் கோவா சிரிக்க முடிந்த ஆண்களுக்கு மட்டும்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

நாணயம் மற்றும் The Bank Job

நாணயம்


எந்த எதிர்பார்ப்புமில்லாது சென்ற படம். ஆரம்பம் முதலே திரையில் பயங்கர ரிச்னஸ். வந்த இடங்கள் எல்லாம் என்னைப் போன்ற சாமானியர்கள் பார்க்காத இடங்கள். ஆனால் கதையின் ஓட்டத்திற்குள் தானாக சென்றுவிட்டேன். ஒரு பெரிய வங்கியில் வேலை பார்க்கும் இளைஞன் பிரசன்னா. உலகத்திலேயே பாதுகாப்பான பெட்டக வசதியை வடிமைத்து அந்த வங்கியில் செயல்படுத்துகிறார். சொந்தமாகத் தொழில் தொடங்க இரண்டு கோடி வங்கி கடனுக்காக காத்திருக்கிறார், அதே வங்கியில். திடீரென முளைக்கும் காதல். காதலிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்தாகி இருக்கிறது. பழைய கணவனால் பிரச்சனை வந்து அடிதடி ஆகிறது. மறுநாள் அவன் பிரசன்னா காரில் பிணமாய். அந்த சண்டைக்காட்சிகளைப் போட்டோ எடுத்து மிரட்டுகிறது வில்லன் கும்பல். வில்லன் சிபிராஜ், அசத்தல். பிரசன்னா வடிவமைத்த அதே பாதுகாப்புப் பெட்டகத்தை திறந்து கொள்ளை அடிப்பதுதான் அவர்கள் கேட்பது. வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை. திட்டமும் ஆரம்பிக்கிறது. அதன்பிறகு அனைத்தும் வேகம் + சுவாரஸ்யம். அதே சமயம் பிரசன்னா இவர்களிடமிருந்து தப்பிக்கவும் திட்டம் போடுகிறார், ஆனால் எல்லாம் தவிடுபொடி. இறுதியில் மிகப்பெரிய எதிர்பாராத திருப்பங்கள். உண்மையிலேயே நகைச்சுவை இல்லாமல் கடைசிவரை உட்காரவைத்த படம். பாடல்கள்தான் வெறுப்பேற்றுகின்றன. முதல் இரண்டு பரவாயில்லை. காக்கா பாடலும் கொஞ்சம் ஈர்க்கிறது. தைரியமாகப் போய் பார்க்கலாம்.

சிபிராஜ் - அப்படியே பழைய வில்லன் சத்யராஜை ஞாபகப்படுத்துகிறார். அமைதியாக மிரட்டும் வில்லன், கொஞ்சம் நக்கலுடன். இவர் வில்லனாகவே நடிக்கலாம், நல்லாவே பொருந்துகிறது.

படம் ஆரம்பிக்கும்போதே ஒரு ஆங்கிலப்படம் ஞாபகத்திற்கு வந்தது. அதிலும் முதலில் ஒரு காமிராவில் படம்பிடிப்பது போலத்தான் தொடங்கும். நினைத்தது சரிதான். ஒரு ஆங்கிலப்படத்தின் கதைதான். ஆனால் யோகியைப் போல அப்படியே சுட்டுவிடவில்லை. அதிலிருக்கும் ஒரு சின்ன கருவை மட்டுமே இங்கே உபயோகித்திருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை அப்படியே வேறு. அதைச் சுற்றி வெவ்வேறு கதைகளைப் பிணைத்து அழகாகச் செதுக்கியிருக்கிறார்கள். தெரிந்த கதைதான் என்றாலும், என்னைக் கடைசிவரை சுவாரஸ்யமாய் உட்கார வைத்ததற்காக இயக்குனரைக் கட்டாயம் பாராட்டனும்.

மேலும், படத்தின் பெயர் முதலில் ஆங்கிலத்தில், பின்புதான் தமிழில். அதன்பிறகு எல்லாமே ஆங்கிலத்தில்தான். பல ஆங்கிலப் படக் காட்சிகளின் தாக்கம், அதிலும் அந்த ஆங்கிலப் படத்தை ஒரு காட்சியில் சிபிராஜ் டிவியில் பார்ப்பது போன்றே வரும்.

பாதி படத்திற்கு மேலே திடீரென்று கதவைத் திறந்து ஒருவர் வந்து, கதவருகே நின்று படத்தைப் பார்த்தார். திரையரங்கில் வேலை பார்ப்பவர் போலும். ஹீரோயின் நீச்சலுடையில் நீந்தி வெளியே வரும் காட்சி, அதிரடி பின்னணி இசை, நன்றாகத்தான் இருந்தது. ஒரு நிமிடம் கூட இருக்காது, முடிந்ததும் சென்றுவிட்டார். ஹ்ம்ம்ம்.

மேலும், உதயம் தியேட்டர் சமோசா அருமையாக இருக்குமென்று நண்பர் சொன்னார், ஆறு ரூபாய்தான், மிக மிக அருமை. உதயம் சென்றால் கண்டிப்பாக நாலு வாங்கி சாப்பிடுங்கள்.

வந்தவுடன் அந்த மூலக் கதையைத் தேடினேன், அது The Bank Job, இதைவிட சுவாரஸ்யமாக இருக்கும். மீண்டும் பார்க்கவேண்டும்போல இருந்தது. விக்கியில் தோண்டியதில் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

The Bank Job


இந்தப் படத்தின் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. பேக்கர் தெரு கொள்ளை - ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளைகளில் முக்கியமானது மற்றும் வில்லங்கமானதும் கூட. 1971 செப்டம்பர் 11, லண்டன் பேக்கர் தெருவிலுள்ள, லாய்டு வங்கி கிளையின் பாதுகாப்பு பெட்டகம் கொள்ளையடிக்கப்பட்டது. வங்கியிலிருந்து இரண்டாவது குடியிருப்பிலிருந்து தரைவழியே 50 அடி நீளத்திற்கு வங்கி வரை குழி தோண்டி கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

கொள்ளை நடந்த அன்று, கொள்ளையர்களில் ஒருவன் மொட்டை மாடியிலிருந்து உள்ளே இருப்பவர்களுக்கு ஒரு ரேடியோ சாதனம் மூலம் தகவல் தந்துகொண்டிருந்திருக்கிறான். அந்த ரேடியோ பேச்சுக்களை ஒருவர் வீட்டிலிருக்கும் ரேடியோ கருவி மூலம் கேட்டிருக்கிறார், அதனைப் பதிவும் செய்திருக்கிறார். உடனே காவல்துறைக்குத் தகவலும் தந்திருக்கிறார். பிரச்சனை என்னவெனில் அந்த ரேடியோ அலைபேசி கிடைத்த சுற்றுவட்டாரத்திற்குல் 700க்கும் மேற்பட்ட வங்கிகள் இருந்திருக்கின்றன. அனைத்து வங்கிகளையும் காவல்துறை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது. அந்த கொள்ளை நடந்த வங்கிக்கும் வந்திருக்கிறது. துரதிஷ்டம், சரியாக சோதிக்காமல் சென்றுவிட்டனர் காவலர்கள்.

நான்கு நாட்களுக்குப் பின் அரசாங்க பாதுகாப்பு கருதி இதைப் பற்றிய செய்திகள் எதுவும் போட வேண்டாமென பத்திரிக்கைகளை அரசாங்கம் கேட்டுக்கொண்டது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே தெரியாத மர்மான கொள்ளையாகவே இன்றும் இருக்கிறது இந்த பேக்கர் தெரு கொள்ளை. கொள்ளையர்களைப் பிடித்தாயிற்று, அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது என்று ஒரு செய்தி. கொள்ளையர்களைப் பிடிக்கவே இல்லை என்கிறது இன்னொன்று. அந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த பல வில்லங்கமான, அரசு உயரதிகாரிகள், அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களின் தகவல்கள், தடயங்கள் காணாமல் போய்விட்டதால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது இன்னொன்று. அரசாங்கமே முக்கிய தடயங்களை அழிக்க அந்தக் கொள்ளையை அரங்கேற்றம் செய்தது என்றும் ஒரு சேதி உண்டு. ஆனால் உண்மையான உண்மை இன்றுவரை உறுதிசெய்யப்படவில்லை.

ஆனால், இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் நம்மை திக் என அதிர வைக்கிறது. இந்த மாதிரி தைரியமாக நம்ம ஊரில் சொல்ல முடியுமா என யோசித்துப் பார்க்கக்கூட முடியவில்லை. சுவாரஸ்யமான திரைக்கதை, திடுக் திருப்பங்கள் என அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது. இதனுடன் நமது நாணயத்தை ஒப்பிட்டால், காப்பியடித்திருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது, எதையுமே சுடவில்லை என்றும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு திரைக்கதையில் மாற்றம் இருக்கிறது. ஆரம்பம்தான் அதே மாதிரி இருக்கிறதே தவிற அதன்பிறகு அனைத்துமே மாற்றப்பட்டிருக்கிறது. மேலே சொன்னதுபோல, ஏற்கனவே இந்த பேங்க் ஜாப் படம் பார்த்திருந்தாலும் நாணயம் பார்க்கும்போது சுவாரஸ்யத்திற்கு குறைவிருக்காது என்பது உறுதி.

---

சென்ற பதிவில் 2009 - IMDB - டாப் படங்களில் குறிப்பிடாத, ஆண்டு இறுதியில்  வெளிவந்த அவதார் இப்போது (2009 படங்களில்) முதல் இடத்தில் இருக்கிறது. மொத்தத்தில் 37வது இடம். இரண்டு கோல்டன் க்ளோப் அவார்டுகளைப் பெற்றிருக்கிறது.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

2009ல் IMDB ன் டாப் படங்கள்

சில படங்களைப் பற்றி நண்பர்களிடம் பேசும்போது, எப்படி இந்த மாதிரி படங்களெல்லாம் கிடைக்கிறது என என்னிடம் கேட்பதுண்டு. அது ஒன்றும் பெரிய விசயமில்லை, சில படங்கள் நண்பர்கள் வாய்வழி வரும் பரிந்துரை. மற்ற படங்கள் எல்லாம் www.imdb.com பரிந்துரைதான். ஒரு படத்தின் டொரண்ட் கிடைத்தவுடன் இங்கு சென்று அதன் ரேங்கிங் எவ்வளவு என்று முதலில் பார்ப்பேன். பின்பு யூ.எஸ். யூ.கே. நிலவரம். ஏனென்றால் ரேங்கிங் மட்டும் வைத்து ஒரு படத்தை முடிவுசெய்துவிட முடியாது. குறைவான ரேட்டிங் உள்ள நல்ல படங்களும் இங்கே இருக்கும். மக்கள் கண்களுக்கு அது தெரியாது, அல்லது ஓட்டு விழுந்திருக்காது, அவ்வளவுதான்.

சில நேரங்களில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடக்கும். சமீபத்தில் வெளியான படம் The Twilight Saga: New Moon - ரேட்டிங் என்று பார்த்தால் 4.6 தான். ஆனால் வசூலில் பார்த்தால் சகைப்போடு போடுகிறது. இதே போல ரொம்பப் பிடித்த படங்களுக்கு ரேட்டிங்கே சரியாக இருக்காது. அதனால்தான் ஒரு படத்தின் வெற்றிக்கு விளம்பரம் மிக மிக முக்கியம் என்று கேபிள்ஜி சொல்கிறார்.

இந்த IMDB ரேட்டிங்கில் உள்ள டாப் 250 படங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படங்கள். இந்த தளத்தில் இருக்கும் மொத்த படங்களில், ரேட்டிங்கில் முதல் 250க்குள் இருக்கும் படங்கள். புதிதாக வரும் ஒரு படம் இந்த டாப் 250க்குள் வருவது என்பது அவ்வளவு எளிதல்ல.

இந்த டாப் 250 எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு ஒரு தனி சூத்திரத்தையே கையாளுகிறார்களாம். முதலில், ஒரு படம் டாப் 250 க்குள் வருவதற்கு குறைந்தபட்ச தகுதி 1500 ஓட்டுக்களையாவது பெற்றிருக்க வேண்டும். அந்த தளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே ஓட்டுப்போடலாம். அதுவும் யாருடைய 1500 என்றால், வழக்கமாக ஓட்டுப்போடும் பழக்கமுடையவர்களுடைய 1500 ஓட்டுக்கள். அதற்காக தனி அட்டவணையும் வைத்திருக்கிறார்கள். அந்த பட்டியலில் இருப்பவர்களில் 1500 ஓட்டுக்கள் வாங்கினால் அது 250க்குள் வர முதற்கட்டத்தைத் தாண்டிவிடும். பின்பு அதன் இடம் இன்னொரு சூத்திரம் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. அது எப்படி என்பது இங்கே சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.

அந்த உலகப் பட வரிசையில் முதல் 250 படங்கள் இங்கே. இந்தப் பட்டியலில் 2009ல் வெளியான படங்களில் 5 படங்கள் இடம்பிடித்துள்ளன. இவைதான் கண்டிப்பாக மிகச்சிறந்த படங்கள் என்று சொல்ல இயலாது. ஆனால் இவை சிறந்த படங்கள்தான்.

---
(ரேட்டிங்ஸ் - 18/டிசம்பர்/2009 நிலவரப்படி)

5. (500) Days of Summer

இடம்: 217
தரம்: 8.0/10
மொத்த ஓட்டுகள்: 31,997
படம் கையில் கிடைத்து ஒரு வாரம் ஆகிறது. இன்னும் பார்க்கவில்லை. காதல் காமெடி. கதை இதுதான். காதல் மேல் நம்பிக்கையில்லாத கதாநாயகி சம்மர், அவளைப் பார்த்தவுடனேயே காதலிக்கத் தொடங்கிய கதாநாயகன். இவர்களுக்கிடையேயான 500 நாட்களில் சிலவற்றை அசைபோடுவதாகக் கதையாம். படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. பார்த்தபின் விரிவாக எழுதுகிறேன்.

---

4. Star Trek

இடம்: 139
தரம்: 8.1/10
மொத்த ஓட்டுகள்: 98,057
வழக்கமான வானவெளி சாகசப் படம். ஆரம்பம் முதலே கண்களுக்கும், மூளைக்கும் ஆச்சர்ய விருந்து. திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டிய காட்சிகள் பல. இதைப் பற்றிய ஹாலிவுட் பாலாவின் விரிவான விமர்சனம் இங்கே.

---

3. District 9

இடம்: 95
தரம்: 8.3/10
மொத்த ஓட்டுகள்: 98,057
இதைப் பற்றி கேபிள்ஜி விரிவான விமர்சனம் ஒன்றை ஏற்கனவே எழுதியிருக்கிறார். படம் ஆரம்பித்தவுடனேயே ஒரு டாக்குமெண்ட்ரி போல இருப்பதால் கவனத்தை ஈர்த்துவிடுகிறது. வழக்கமாக இல்லாமல் சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும். வித்தியாசமான உருவத்துடன் இருக்கும் வேற்றுகிரகவாசிகள், அவர்களுக்கென தனி முகாம், அதைக் கையாளத் தனி அரசாங்கப் பிரிவு, அதிலிருக்கும் ஒரு சுயநலமிக்க உயர் அதிகாரி என கதை ஆரம்பிக்கும். அப்படியே ஒரு விபத்தில் அந்த அதிகாரி கொஞ்சம் கொஞ்சமாக அந்த வேற்றுகிரகவாசிகளின் உருவத்திற்கு மாற, அதைச் சரிசெய்ய அந்த வேற்றுகிரகவாசிகளின் உதவியை நாட, இவன் உதவி அவர்களுக்கு தேவைப்பட... கடைசியில் என்ன ஆனது என்பது சுவாரஸ்யம். அனைத்தும் பார்க்க அசலாகவே தெரிவது CGன் உழைப்பு.

---

2. Up

இடம்: 68
தரம்: 8.4/10
மொத்த ஓட்டுகள்: 65,804
இதைப் பற்றி ஏற்கனவே ஒரு தேன்கூட்டில் எழுதியது:
இது ஒரு அனிமேசன் படம். சிறுவன் ஒருவன் அட்வெஞ்சர் பற்றிய படம் பார்ப்பதுபோல படம் ஆரம்பிக்கிறது. பின், வரும் வழியில் தன் எண்ணங்களை ஒத்த சிறுமியைச் சந்திக்கிறான். வாலிபனானதும் அவளையே கல்யாணம் செய்துகொள்கிறான். இவன் ஒரு காஸ் நிரப்பி, விட்டால் மேலே சென்றுவிடக்கூடிய பலூன் விறபவன்.  இவர்களுக்கு குழந்தை பிறக்காதது பற்றி அவள் வருந்துகிறாள். இருந்தாலும் சந்தோசமாக வாழ்க்கை நகருகிறது. கடைசியில் அவள் இறந்துவிடுகிறாள். கால்கள் தள்ளாடும் கிழ வயதில், கையில் குச்சியுடன் நடந்துவந்து வீட்டில் உட்காருகிறார். இவையனைத்தும் படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குள் முடிந்துவிடும். அதற்குப் பிறகுதான் படமே.

தள்ளாடும் இந்த வயது வந்த பிறகு இந்த ஹீரோஎன்னதான் செய்ய முடியும் என்று நினைத்த என்னை, கடைசி வரை உட்கார்ந்து பார்க்க வைத்துவிட்டது இதன் கதையும், காட்சிகளும். அனிமேசன் அருமையாக செய்யப்பட்டிருக்கிறது. உதவி செய்ய வரும் பையனுக்கும் இவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி அழகாக இருக்கிறது. நாய்கள் துரத்தும்போது, அந்தப் பறவை இவர்களையும், வீட்டையும் தூக்கிக்கொண்டு ஓடும் காட்சி அருமை. Wall-E க்கு அடுத்து என்னைக் கவர்ந்த அனிமேசன் படம்.

---

1. Inglourious Basterds

இடம்: 64
தரம்: 8.4/10
மொத்த ஓட்டுகள்: 1,05,244
இதுதான் 2009ல் டாப். இந்தப் படம் பார்க்கும்போது ஏனோ தெரியவில்லை, No Country for Old Men (4 ஆஸ்கர்), There Will Be Blood (2 ஆஸ்கர்) மற்றும் Public Enemies படங்கள் ஞாபகத்திற்கு வந்து போகின்றன. அப்படி என்ன ஒற்றுமை? படம் சில நேரம் மெதுவாகச் செல்வது போலத் தோன்றும், சில நேரம் வேகம் போலத் தோன்றும், சில நேரம் சுவாரஸ்யம்... கடைசியில் ஒன்றுமே புரியாதது போலவும் தோன்றியது எனக்கு. எப்படியோ, இதற்கு ஆஸ்கர் நிச்சயம் என்றே தோன்றுகிறது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாசிசப் படைக்கு அச்சுறுத்தலை உண்டாக்க உருவாக்கப்பட்ட பாஸ்டர்ட்ஸ் எனப்படும் குழுவோடு இணைந்த கதை. ஹிட்லருக்கு எதிராக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஹிட்லர் அரசின் பிடியிலிருந்து தப்பி, ஒரு திரையரங்கு நடத்திக்கொண்டிருக்கும் ஒரு பெண், இவர்களுக்கிடையே வரும் தொடர்பு என சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது படம். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் ஹிட்லரின் ஹான்ஸ் லாண்டா என்ற நயவஞ்சக அதிகாரியின் கதாப்பாத்திரம் உச்சம், மேலும் ஒரு மதுபான விடுதிக் காட்சி அருமை.

---

பி.கு.: டிசம்பரில் எழுத ஆரம்பித்து கிடப்பில் போடப்பட்ட பதிவு. சில பயணங்கள், அதனால் விடுமுறை, அதனால் கிடப்பில் போடப்பட்ட அலுவலக வேலைகள் என நேரங்கள் கையைவிட்டுப் போய்விட்டன. எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை. காலம் கடந்தாலும் சிலருக்கு உபயோகமாக இருக்க வாய்ப்புள்ளதால் தூசி தட்டி எடுத்துப் போடுகிறேன். விரைவில் பழையபடி பதிவுலகில் உலா வருவேன் என நம்புகிறேன்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!