மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை பதிவு எழுத முயற்சி செய்யலாம் எனத் தோன்றியது. ஏன் எழுதுவது நின்று போனது என்று யோசித்துப் பார்க்கிறேன், சரியாகத் தெரியவில்லை, அதைப் பற்றி மேலும் யோசித்து அறிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்.

திருமணத்திற்குப் பிறகு எழுதுவது சிறிது குறைந்தது. குழந்தை பிறந்த பிறகு படிப்பதும் குறைந்தது. குழந்தையைப் பற்றி சொல்லிக்கொண்டெ போகலாம். வெர்னிகா. ஒரு குழந்தை பிறந்தது முதல், வளர்வதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும், அவள் நடந்து கொள்ளும் விதம், புதிது புதிதாக அவள் பார்ப்பது, கற்றுக்கொள்வது, பிரதிபலிப்பது என்று ரசித்துக்கொண்டே இருக்கலாம். இப்போது நடக்க ஆரம்பித்துவிட்டாள். காலையில் எங்காவது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பரப்பி வைப்பதுதான் இப்போது பிரதான வேலை. பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது. திரும்பவும் எடுத்து அடுக்கி வைப்பது நமது வேலைகளில் ஒன்றாகிவிட்டது. சென்ற வாரம் வேளாங்கண்ணி சென்று மொட்டை போட்டு காதி குத்தி வந்தோம்.

வேளாங்கண்ணி இப்போது எனது பார்வையில் புதிதாகத் தெரிகிறது. மற்றவர்கள், அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள். ஒருவேளை எனக்கு சில அகக் கண்கள் திறந்திருக்கலாம். கடைகளில் எல்லாம் அதிக விலை. ஒரு தண்ணீர் பாக்கட் 3 ரூபாய்க்கு பேருந்து நிலையம் அருகில் வாங்கினேன். விலைக்குத் தகுந்த தரமான உணவை எங்கும் பார்க்கவில்லை. பேருந்து நிலையத்தின் உள்ளேயே டாஸ்மாக். பயணிகள் காத்திருக்கும் இடம்தான் பாராக இருக்கிறது. கோவிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டேபோகலாம். சுருக்கமாகச் சொல்கிறேன். ஒரு அரசு அலுவலகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. இதைக் கவனிக்கவேண்டிய பாதிரியார்கள் என்ன சேவை செய்கிறார்களோ தெரியவில்லை. வேளாங்கண்ணி பற்றி தனியாக ஒரு பதிவு எழுதினால் நல்ல விசயங்களை விட கெட்ட விசயங்கள்தான் அதிகமாக இருக்கும். புனிதப் பயணம் என்று சென்று மனத்தாங்களோடுதான் திரும்பி வரவேண்டியிருக்கிறது.

சமீபத்தில் பார்த்த படங்களைப் பற்றிச் சொல்லவேண்டும். ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் கலகலப்பு திரையரங்கில் பார்த்தேன். ஓகே ஓகே ஆரம்பம் முதல் கடைசி வரை தொய்வு இல்லாமல் சென்றது. சந்தானம்தான் காரணம். கலகலப்பு ஆரம்பத்தில் தொங்கியது. ஆனால் பின்பாதி சேர்த்து வைத்து சமன் செய்தது. ஆனால் சந்தானம் ஒருவரே காரணம் என்று சொல்ல முடியாது. இரண்டையும் ஒப்பிட்டால் கலகலப்பில்தான் வயிறு வலிக்க சிரித்தேன். ஆனால் நல்ல படம் என்று பார்த்தால் அது ஓகேஓகேதான்.

அடுத்து சில ஆங்கிலப் படங்கள் பற்றி. கடைசியாகப் பார்த்த படங்கள்: Avengers, Safe House மற்றும்  Prometheus. Avengers பற்றிச் சொல்லவே வேண்டாம், அட்டகாசம். ஆனால் அது பற்றிய கருந்தேள் கண்ணாயிரம் எழுதிய தொடர் பதிவுகள் அதை விட அட்டகாசம். Safe House: சமீபத்தில் இதைப் போன்ற மிகசிறந்த விருவிருப்பான திரைக்கதை மிகுந்த படத்தைப் பார்த்ததே இல்லை என்ற உணர்வைக் கொடுத்த படம். The Bourne வகையறா என்றாலும் புதிதாக இருந்தது. Prometheus பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. சுத்த போர். ஒரு வேளை தமிழில் பாத்ததால் அப்படி இருக்கலாம். ஆங்கிலத்தில் மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும்.

மேலும் சில படங்கள் பற்றி: Contraband, இதில் அப்படி என்ன பெரிதாக இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் தொய்வில்லாத படம். The Divide என்ற படம் ஒன்று பாத்தேன். தூக்கத்தைக் கெடுத்த படம். Blindness வகையறா... உலகம் அழிந்த நிலை. தப்பித்த சில பேரின் மன நிலைகளைப் பிரதிபலிக்கும் படம். The Awakening என்று ஒரு படம். The Sixth Sense வகைப் படம். கடைசி இடத்தில் அவிழ்க்கப்படும் முடிச்சு, திரும்பவும் படத்தை ஆரம்பத்தில் இருந்து நம்மைப் பார்க்க வைக்கும், நன்றாகத்தான் இருந்தது.

என்னதான், நா ரொம்ப பிசி, என்று ஒப்புக்குச் சொன்னாலும், சிலருடைய பதிவுகளை எப்போதுமே படிக்கத் தவறுவது இல்லை. கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன் மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் ஆகியோரது பதிவுகளை எப்போதுமே படிப்பதுண்டு. கூகுள் பிளஸ் ஒரு நாளைக்கு சில வேளைகள் சென்று நாட்டு நடப்பதைத் தெரிந்துகொள்கிறேன். ஆனால் எதையும் எழுதுவது இல்லை, எதற்கும் பதிலிடுவதும் இல்லை. எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்!

-பெஸ்கி.


Share/Bookmark
Read More!