சிறு வயதில் பேய்ப்படம் பார்ப்பது ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும். அன்றைய தினங்களில் (3 - 6 வகுப்புகள் படிக்கும்போது) டிவி டெக் வாடகைக்கு எடுத்துப் படம் பார்க்கும் வழக்கம் ஒன்று உண்டு. ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்தால் 4-5 கேசட்டுகளை வாங்குவார்கள். அதில் ஒரு ஆங்கில ஆக்சன் படமோ பேய்ப்படமோ கட்டாயம் இருக்கும். ஆக்சன் படம் என்றால் ஜாக்கிசான், புரூஸ்லி படம். பேய்ப்படம் என்றால் இவில் டெட். அவ்வளவுதான் அப்போதைய ஹாலிவுட் அறிவு.
யார் வீட்டிலாவது பேய்ப்படம் (இவில்டெட்) ஓடுகிறது என்றால் கட்டாயம் நமது விஜயம் அங்கு இருக்கும். வேறெதுவும் கற்பனை செய்துவிட வேண்டாம். நானும் ரவுடிதான் எனக் காட்டிக்கொள்ளவே. மற்றபடி எங்க வீட்டிலேயே அதிபயங்கர பயந்தாங்கொள்ளி நான்தான். ஏதோ ஆர்வத்தில் டிவி முன்பு அமர்ந்துவிடுவேன். பேய் கூட இன்னும் வந்திருக்காது. பின்னணி இசைக்கே பயம் வந்து தொற்றிக்கொள்ளும். விரல்களால் கண்களை மூடிக்கொள்வேன். சத்தம் குறைவாக இருக்கும்போது, மெதுவாக விரல்களை விலக்கி, சிறு இடுக்கு வழியே பார்ப்பேன். சத்தம் கொஞ்சம் கூடினால் போதும் விரல்களையும் கண்களையும் சேர்த்து மூடிக்கொள்வேன். பயங்கர சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இன்னும் இரு கைகள் இருந்தால் நலம் எனத் தோன்றும்.
15 நிமிடத்தில் மனம் திக் திக் என அடிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் ஒரு நிமிடம் கூட பார்த்திருக்க மாட்டேன். மெதுவாகத் திரும்பி பக்கத்திலிருக்கும் (எனது வயதுடைய) மணியைப் பார்ப்பேன். அவன் ஆ என்று வாயை (கண்களையும்தான்) பிளந்து பார்த்துக்கொண்டிருப்பான். ஆச்சர்யமாய் இருக்கும். நம்மால் ஏன் முடியவில்லை? அடுத்த 5 நிமிடத்தில் வீட்டிலிருந்து ஏதும் அழைப்பு வருமா என மனம் ஏங்கும். வராத பட்சத்தில், அடுத்த 2வது நிமிடத்தில் பிறந்திருக்காத காரணத்திற்காக வீட்டிலிருப்பேன்.
அதோடு முடிந்தால் பரவாயில்லை. சாதாரணமாகவே இருட்டு என்றால் பயம். அதுவும் பேய்ப்படம் பார்த்த (கேட்ட) அடுத்த ஒரு வாரத்திற்கு மிகவும் பயமாய் இருக்கும். கொல்லைப்புறத்தில் தனியே ஒன்னுக்கு போகக்கூட பயம். அம்மா வந்து பின்னால் நின்றால்தான் வரும். அப்பப்போ திரும்பி அம்மா இருக்காங்களான்னு பார்ப்பதும் உண்டு. “ஆம்பளப் புள்ள, இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்கியே!”, என்று அம்மா திட்டுவார்கள். அப்படியே நாட்கள் ஓடிற்று.
இன்று நிலைமையே தலைகீழ். வீட்டில் பேய்ப்படம் தனியே. தூக்கம் தனியே. வெளிச்சம் இருந்தால் தூக்கம் வராது என்று இரவு விளக்கு கூட போடுவது கிடையாது. இப்போது அதே கொல்லைபுறத்தில் அம்ம குரல் கேட்கிறது, “லைட்டப் போட்டுட்டு போனா என்னடா?”.
நினைத்துக்கொள்வேன். சிறு வயதில் சிலருக்கு பயம் இருக்கும். வளர வளர சரியாகிவிடுமென்று, சென்ற மாதம் வரை.
சென்ற மாதம் ஒரு நாள், தங்கை அழைத்தாள்..
”என் கூட அந்த ரூமுக்கு வாயேன்”
”எதுக்கு?”
”தண்ணி குடிக்கனும்”, போனேன்.
”??? அதுக்கு எதுக்கு நான்?”
”இருட்டா இருக்குல்ல, பயமா இருக்கு”
எனக்கு இருந்த அதே பயம், கேட்டேன்
”பேய்ப்படமெல்லாம் பாப்பியா?”
”பாப்பேனே”
”எப்படிப் பாப்ப, பயமா இருக்காதா?”
”இருக்கும். கைய வச்சு இப்படி மறச்சிக்கிட்டு பாப்பேன்.”
இன்னும் சில கேள்விகள். அப்படியே ஒத்துப்போகின்றன.
”சின்ன வயசுலயும் இதே மாதிரிதானா?”
”ஆமா”
”மாறலையா?”
”இல்லையே, அப்படியேதான் இருக்கு!”
ஓஹோ, அப்போ சிலருக்கு குணம் மாறாது போலருக்கு.
இன்னொரு நாள், அதே தங்கை. மதிய உணவு நேரம்...
”அண்ணா, இத எடுத்துக்க”
”வேணாம்”
”ஏன், நான் எது குட்த்தாலும் வாங்கவே மாட்டேங்குற?”
”அட. உன்கிட்ட மட்டும் இல்ல. யார் தட்டுலயும் கை வைக்க மாட்டேன். சின்ன வயசுல இருந்தே இப்படித்தான்.”
இதுவும் என்னை பல நேரங்களில் யோசிகக் வைக்கும். சிறு வயதில் எனது சாப்பாட்டில் யாரும் கை வைப்பது பிடிக்காது. அப்படி வைத்தால் சாப்பிட மாட்டேன். யாரும் எனக்கு ஊட்டிவிட்டதாய் ஞாபகமே இல்லை. இப்போது மற்றவர்கள் எனது சாப்பாட்டை எடுத்தால் ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால், இன்னும் அடுத்தவர் சாப்பிடுவதை எடுத்து சாப்பிடத் தயங்குகிறேன். மற்ற நண்பர்கள் அடுத்தவர் உணவை எடுத்துச் சாப்பிடும்போதெல்லாம் நினைப்பேன், நமக்கு ஏன் இது கூச்சமாகவே இருக்கிறது என்று.
”நான் கூட சின்ன வயசுல அப்படித்தான் இருந்தேன். ஆனா, இப்போ மாறிட்டேன். எப்படின்னு தெரியல!”, என்றாள் அவள்.
எதையும் முடிச்சுப் போட்டு இதுதான் காரணம் என்று சொல்ல முடியவில்லை. எனக்கு மாறிய குணம் அவளுக்கு ஏன் மாறவில்லை? அவளுக்கு மாறுவது எனக்கு ஏன் மாறவில்லை? குணம் மாறுதலின் குணம் பாலினம் சார்ந்ததா? சூழ்நிலை சார்ந்ததா? மரபணு சார்ந்ததா? என்று பார்த்தால், மூன்றும்தான் என்றே தோன்றுகிறது. இது சரியெனில், இவ்வுலகில் எவரும் நிரந்தரமான நல்லவருமில்லை, நிரந்தரமான கெட்டவருமில்லை.
-அதி பிரதாபன்.

நிறம் மாறும் குணங்கள்
Read More!