தேன்கூடு - 2009/10/31

கூகுளில்...
நமது பிலாக்கர் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது பற்றிய ஒரு சிறு கட்டுரை இதோ.

பிற தளங்கள் தரும் விட்ஜெட்டுகள் மூலம் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே நம்பத்தகுந்த விட்ஜெட்டுகளை உபயோகிப்பதே நல்லது. நன்றாக இருக்கிறதென்று கிடைத்ததையெல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாது. நல்லது என எப்படி நம்புவது? கொஞ்சம் கஷ்டம்தான். Widget Codeல் ஏதாவது லிங்க் இருப்பது, அல்லது விளம்பர பாப் அப் விண்டோவை உருவாக்கும் விட்ஜெட்டுகளைத் தவிர்க்கலாம். விட்ஜெட் பாக்ஸ் ஒரு அருமையான விட்ஜெட் தரும் தளமாகும்.

அதே போல, டெம்ப்லேட்டுகளும் இதே போன்ற பிரச்சனைகளைத் தரலாம். இந்த பிரச்சனை என்பது என்னவெனில், நீங்கள் வைத்திருக்கும் விட்ஜெட்/டெம்ப்லேட், உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களின் விபரங்களை சேகரிக்கலாம், Malwareஐ நமது கணினிக்குள் சொருகும் தளத்திற்கு இணைப்பு கொடுக்கலாம், விளம்பர பாப்அப் விண்டோக்களை உருவாக்கி எரிச்சலடையச் செய்யலாம், இன்னும் சில. நல்ல டெம்ப்லேட் தரும் தளங்களில் சில இங்கே.
நான் வழக்கமாக டெம்ப்லேட்டுகள் பார்க்கும் தளங்கள் www.deluxetemplates.net மற்றும் www.allblogtools.com, இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை.

மேலும், டெம்ப்லேட் மாற்றும்போது மறக்காமல் பேகப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. புதிதாய் மாற்றிய டெம்ப்லேட் பிடிக்கவில்லையெனில், மீண்டும் பழைய அமைப்பைப் பெற இது வசதியாய் இருக்கும்.

இது போன்ற பயனுள்ள தகவல்கள் இங்கு உள்ளன.

வெளியூர் பயணம்
இந்த மாதம் - சிவகாசி.
நண்பருடன் ஒருவருடன் உரையாடிவிட்டு, பரோட்டா சாப்பிடவேண்டும், நல்ல ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றேன். காளிதாஸ் ஓட்டலுக்கு கூட்டிச் சென்றார். பரோட்டாவை பிய்த்துப் போட்டு, சால்னா ஊற்றி, அதில் ஒரு மட்டன் சுக்கா, ஒருபுறம் வெறும் வெங்காயம், மறுபுறம் தயிர் வெங்காயம் அப்படியே ஒரு அரைவேக்காடு...

பரோட்டா வாயில் போட்டதும் அப்படியே கரைந்து போயிற்று. சிவகாசி சென்றால் கண்டிப்பாக இங்கு போய் பரோட்டா சாப்பிட்டுப் பாருங்கள்.

சென்ற முறை சென்ற போதும் அன்புத் தம்பி அன்பை சந்திக்க முடியவில்லை. இந்த முறையும் முடியவில்லை. கண்டிப்பாக அடுத்த முறை எப்படியும் சந்த்த்தே தீரவேண்டும் என்று மனம் அடம்பிடிக்கிறது.

இந்த வாரம் பார்த்த படம்: 9 (படம் பேரே அவ்வளவுதான்)



அனிமேசன் படம். ஒரு கையளவு இருக்கும் பொம்மையின் உயிர்ப்பிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. அதன் முதுகில் 9 என்றிருக்கிறது. அப்படியே ஜன்னலின் வெளியே பார்த்தால் ஊரே நாசக்காடாய் அழிந்திருக்கிறது. மனிதர்களே இல்லை. வெளியே வந்தால் தன்னைப்போல சில பொம்மைகள் இருப்பது தெரிகிறது. ஒவ்வொன்றின் முதுகிலும் ஒரு எண். பின்பு (பூனை, வௌவால், பாம்பு வடிவில்) வரும் அழிக்கும் இயந்திரங்கள், அதன் மூல இயந்திரம், அதன் பின்னணி கதைகள், இந்த பொம்மைகள் உருவான பின்னணி, காரணம் ஆகியவற்றுடன் கதை செல்கிறது.

வித்தியாசமான கதை, முடிவுதான் புரியவில்லை. அனிமேசன் அருமையாக செய்யப்பட்டிருக்கிறது. கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு அற்புதம். பார்க்கலாம்.

என்ன இருந்தாலும் Ratatouille, WALL·E ஏற்படுத்திய தாக்கத்தை இனி எந்த அனிமேசன் படமும் ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

படத்தின் பெயர் 9, இது 09-09-09 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது என்பது கூடுதல் சுவாரஸ்யம். 2005ல் Shane Acker என்பவரால் உருவாக்கப்பட்ட குறும்படத்தின் மூலம் கவரப்பட்ட Tim Burton, அதை முழு நீளப் படமாக தயாரித்துவிட்டார், Shane Acker கொண்டே.
குறும்படம் இங்கே (2005)
படத்தின் ட்ரெய்லர் இங்கே (2009)

SMS ஏரியா
சிந்திக்க:
மனம் திறந்து பேசு
ஆனால்
மனதில் பட்டதையெல்லாம் பேசாதே
சிலர் புரிந்துகொள்வர்
சிலர் பிரிந்து செல்வர்.

சிரிக்க:
மனைவி: இந்த வாரம் ஃபுல்லா படத்துக்குப் போவோம், அடுத்த வாரம் ஃபுல்லா ஷாப்பிங் போவோம்.
கணவன்: சரி, அதுக்கு அடுத்த வாரம் ஃபுல்லா கோவிலுக்குப் போவோம்.
மனைவி: எதுக்கு?
கணவன்: பிச்சையெடுக்கத்தான்.

வரும் தேன்கூட்டில்...
  • கின்னஸ் சாதனை படைத்த சின்னக்குயில்...
  • பதிவர் ஜனா வீட்டில் விருந்து, ’யூத்’ பதிவர்களின் கூத்து - படங்கள்..
  • குறையொன்றும் இல்லாத பதிவருடன் ஒரு சந்திப்பு...
-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

நறுமண தேவதை - சிறுகதை

து டீதானா? இனிப்பா, உவர்ப்பா? இல்லை இதுதான் டீயின் சுவையா? ஒன்றும் புரியவில்லை சுதாகருக்கு. கலரைப் பார்த்தான், இதுவரை பார்த்திராத புது நிறமாய் இருந்தது. அதற்கு மேல் குடிக்க மனமின்றி, பாதியோடு வைத்துவிட்டான். நான்கு ரூபாயை வைத்துவிட்டுத் திரும்பினான். இது என்ன நறுமணம்? மெய்மறந்து ஒரு கணம் கண்களை மூடினான். சில்லரையை எடுத்துப் போட்டுவிட்டு கடைக்காரர் கேட்டார், ”சார், நாலு ரூபா குடுத்துட்டுப் போங்க”.

திரும்பினான். அந்த மணம் இப்போது இல்லை. ”இப்பத்தான இங்க வச்சேன்”, நிதானமாகக் கூறினான் சுதாகர். ”என்ன சார் இது, கிலாஸ வச்சுட்டு அப்படியே திரும்பிப் போறீங்களே”, கடைக்காரனும் நிதானமாகத்தான் கேட்டான். அவனுடைய பார்வைதான் குறுகுறுவென இருப்பதாகத் தோன்றியது சுதாகருக்கு.

”நல்லா பாருப்பா, ரெண்டு ரெண்டு ரூபா, மொத்தம் நாலு ரூபா”.
”ரெண்டு ரெண்டு ரூபா நாலு ரூபான்னு எங்களுக்குத் தெரியாதா?” இப்போது அவன் வம்பிழுப்பது போலவே தெரிந்தது.

சுற்றி நோட்டம் விட்டான். எங்கும் காமிராவை ஒளித்து வைத்துவிட்டு நோட்டம் விடுகிறார்களா என்று. பின்பு சண்டையெல்லாம் போட்டுவிட்டு வழியவேண்டியிருக்கும். எதற்கு வம்பு என்று நாலு ரூபாய் கொடுத்து திரும்பி நடந்தான்.

நான்கு ரூபாய் இழந்தது சுதாகர் மனதை உறுத்தவே இல்லை. காரணம் அந்த நறுமணம். அன்று முழுவதும் அதே சிந்தனைதான். ”நேற்றும் இதே வாசம் அடித்ததே! அப்போ என்ன செய்துகொண்டிருந்தோம்?” யோசித்தான். அலுவலகத்தில் கணினி முன் உட்கார்ந்திருந்ததாய் ஞாபகம். அப்போது கடந்து சென்ற ப்ரியாவிடமிருந்து வந்திருக்கலாமென நினைத்திருந்தான். மறுநாளும் அதே வாசம் அதே நேரம் வருமென்றே தோன்றியது.

அலுவலகம் விடுமுறைதான். இதற்காகவே மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டான். கைக்கடிகாரத்தின் நேரத்தை சரியாக வைத்துவிட்டு வீட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தான். ஐந்து மணிக்கு அருகே என்பது அவனது கணிப்பு. கையிலிருக்கும் கடிகாரத்தையே பார்த்துகொண்டிருந்தான்.

சுதாகரின் அம்மா உள்ளே இருந்து எட்டிப் பார்த்தார். ”டிவி சும்மா ஓடுது, இவன் கையையே பாத்துட்டு இருக்கனே! சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கனும்”, முனுமுனுத்தவாரே வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

சுதாகர் கவனமெல்லாம் கடிகாரத்தின்மீதே இருந்தது. நேரம் ஐந்தை நெருங்கிக்கொண்டிருந்தது. நொடிமுள் பதினொன்றைத் தாண்டிக்கொண்டிருந்த நேரம், அம்மா கேட்டார் ”டேய், அப்பா மொபைல எடுத்து எங்கடா வச்ச?” மணி சரியாக ஐந்து ”டிவி மேல இருக்கு பாரும்மா” அன்னிச்சையாக பதில் வந்தது சுதாகரிடமிருந்து. டிக் டிக் டிக் டிக் டிக்... சரியாக ஐந்து நொடிதான் நறுமணம் நிலைத்தது.

"அப்பா மொபைல எங்க வச்சன்னு கேக்குறேன்ல, பதில் சொல்லாம அப்படி என்னடா பண்ணிட்டு இருக்க?"
"டிவி மேல இருக்கும்மா" குழப்பத்துடன் கத்தினான்.

இரவு அனைத்தையும் கணக்கு போட்டுப் பார்த்தான். அவனது கணிப்பு இதுதான். சரியாக ஐந்து மணியிலிருந்து ஐந்து நொடிகள் ஒரு நறுமணம் மிகுந்த தேவதை அவன் அருகில் வருகிறது. அந்த நேரம் அவன் செய்யும் செயல் அனைத்தும் மறைந்து விடுகிறது அல்லது மற்றவர்கள் மறந்து விடுகிறார்கள். இது அந்த தேவதையின் வரமாக இருக்கலாம். மறுநாள் சோதித்துப் பார்க்கலாமென முடிவு செய்தான்.

மறுநாள், அலுவலகத்தில் வேலை எதுவுமே ஓடவில்லை. மாலை ஐந்து மணி எப்போது வரும் என காத்துக்கிடந்தான். சிறிய அளவில் ஏதும் செய்து பார்க்கலாமென முடிவு செய்திருந்தான்.ஐந்து மணி ஆகப்போகிறது, அலுவலகத்துக்கு வெளியே, எதிரே இருக்கும் டீக்கடைக்கு கிளம்பினான்.

டீக்கடையில் ஒரு சிகரெட்டை வாங்கிவிட்டு கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தான். ஏற்கனவே கைக்கடிகாரத்தில் அலாரம் வைத்தாயிற்று. அருகில் இருவர் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தனர். பீப் பீப்... ஐந்து மணி. பேசிக்கொண்டே கடைக்குள் எட்டி ஒரு சிகரேட் பாக்கெட்டை ”ஒரு பாக்கெட் எடுத்துக்கிறேன்” என்றவாறே எடுத்து பாக்கெட்டுக்குள் வைத்தான். நறுமணம் மறைந்ததை உறுதி செய்துகொண்டு திரும்பி நடக்கலானான். சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தான். கடைக்காரர் அவர் வேலையை செய்துகொண்டிருந்தார்.

வீட்டிற்கு வந்து அதனையே ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான்.  திடீரென ஒரு சந்தேகம். அவர்தான் மிகவும் தெரிந்தவராயிற்றே, நாளை வாங்கிகொள்ளலாம் என விட்டிருப்பாரோ? அல்லது, நமக்குத் தெரிந்தவர்கள் திட்டமிட்டு இப்படி நம்மை நம்பச் செய்கிறார்களா? அப்படியென்றால் அந்த நறுமணம் எப்படி? கொஞ்சம் குழப்பம்தான். மறுநாள் அவனைத் தெரியாத இடத்திற்குச் சென்று சோதிக்கலாமென முடிவு செய்தான்.

மாலை நான்கு மணி. அலுவலத்திலிருந்து கிளம்பி, பைக்கில் வளைந்து நெளிந்து சென்றான். அறிமுகமே இல்லாத ஒரு கடையைத் தேர்வு செய்தான். நேரம் ஐந்தை நெருங்கும்போது கடையை நெருங்கி ”ஒரு மொசாம்பி” என்றான். கடையின் முன்பு சில கண்ணாடி பாட்டில்கள் கண்ணை உறுத்தின. முறுக்கு, கடலை மிட்டாய், பர்பி என வரிசையாக அடுக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்கள், சில வாடிக்கையாளர்கள் அருகில், காத்திருந்தான். பீப் பீப்... ஒரு கண்ணாடி பாட்டிலை அப்படியே கையால் மேலே தூக்கி, தரையில் ஓங்கி அடித்தான். கடைக்காரர் அலறினார், ”எதுக்குய்யா இப்படி ஒடைக்கிற”. பக்கத்தில் இருந்தவர்களோ விலகி நின்று ஒரு மாதிரி பார்த்தனர். ஒரு நொடி ஒன்றும் யூகிக்க முடியவில்லை சுதாகருக்கு. அடுத்து, ”எப்படி கீழே விழுந்தது?”, இது கடைக்காரர். ”தெரியல பாஸ், ஓரத்துல இருந்துருக்கும், அப்படியே கீழ விழுந்திருக்கும்போல இருக்கு”, பக்கத்தில் நின்றிருந்தவர்.

உறுதி செய்துகொண்டான். இது நிச்சயமாய் நமக்குக் கிடைத்த வரம்தான். இந்த ஐந்து நொடி நாம் என்ன நினைத்தாலும் செய்யலாம். மீண்டும் அலுவலகம் வந்து, பின் வீடு செல்லும் வரை ஒரு கவலை கூட இல்லை. இனி என்ன இருக்கிறது கவலைப்பட, இதை வைத்து என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாமே என்ற நினைப்புத்தான். அடுத்து என்னவெல்லாம் செய்யலாமென திட்டம் போட்டது சுதாகரின் மனது.

பைக் வாங்கனும், இல்லை கார் வாங்கலாம், இந்த சக்தியை எப்படி பயன்படுத்துவது. யோசித்தான், ஒன்றும் பிடிபடவில்லை. பணத்தை வேண்டுமானால் எடுத்துக்கொண்டு ஓடலாம். எங்கு பணத்தை எடுக்கலாம், எப்படி எடுக்கலாம்? பெட்டிக்கடையில் எடுக்கலாம். அங்கே குறைவாகத்தானே இருக்கும். இல்லையெனில் ஒயின் ஷாபில் எடுக்கலாம். கத்தையாக எடுத்து பைக்குள் வைத்துவிடலாம். ஐந்து நொடி கழித்து எடுத்தது தெரியவா போகிறது? கடன் வாங்கும் போது இந்த ஐந்து மணி பார்த்து வாங்க வேண்டும். ஆபீஸில் யாரிடம் கடன் வாங்கலாம்? நமக்குப் பிடிக்கதவர்களிடம் மட்டுமே வேலையைக் காட்ட வேண்டும். பின்பு, அதிகமாக குடைச்சல் குடுக்கும் டீம் லீடரை மூக்கில் ஒரு குத்து குத்தலாமா?

இப்படியே யோசித்துக் கொண்டிருந்த சுதாகரின் எண்ணங்கள் ப்ரியாவில் வந்து நின்றது. திமிர் பிடித்தவள். பாசுக்கு தெரிந்தவள் என்பதால் ரொம்பத்தான் ஆணவம். ஆம்பிளை நம்மளை மதிக்கிறாளா? ப்ராஜக்ட் மேனேஜர் என்றால் எல்லோரையும் மட்டம் தட்டித்தான் பேசவேண்டுமா? இவள் திமிரை அடக்க வேண்டுமே. ஆனால் அதெல்லாம் சாத்தியமா? சும்மா சொல்லக்கூடாது, செம பிகருதான். முதலில் நமது ஆசையைத் தீர்த்துக்கொள்வோம். நமது ரகசிய நேரத்தில், அவளது உதடு கிழிய ஒரு முத்தத்தை பதித்துவிட வேண்டும், முடிந்தால் செல்போனில் வீடியோ எடுத்துவிடவேண்டும்.

சுதாகர் இவ்வாறு பல திட்டங்களை வகுத்தபின், நாளை என்ன செய்வதென்று முடிவு செய்தான். அனைவர் முன்னிலையில், ப்ரியாவின் உதட்டில் நச்சென்று நான்கு நொடிக்கு ஒரு முத்தம் பதிப்பதென்று. அடுத்த நொடி யாருக்குத் தெரியப்போகிறது. ஆனால் அவளுக்கு மட்டுமே தெரிய வைக்க வேண்டும், யாரோ பல் பதித்திருக்கிறார்கள் என்று.

எவ்வளவு திட்டங்கள் உதிக்கின்றன, நமக்குள் இவ்வளவு எண்ணங்கள் இருக்கிறதா என அவனுக்கே ஆச்சர்யம். கொஞ்சம் தூங்குவோம் என கண்களை மூடினான். ப்ரியாவின் பரிதாப முகமே அவனது மனதுக்குள் ஆடியது. நினைத்துக் கொண்டான் ”கேட்காமலேயே வரம் தந்த நறுமண தேவதையே, நீ வாழ்க”.

தேவதை சிரித்தாள், ”இந்த ஐந்து நொடி வரம் ஐந்து நாளைக்குத்தானப்பா கொடுத்தேன்”!

---

-அதி பிரதாபன்.

சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டிக்காக எழுதியது

Share/Bookmark
Read More!

வேட்டைக்காரன் பாடல்கள்

கடந்த வெள்ளிக்கிழமை, சிவகாசி செல்லும் பஸ். ஏதோ பாட்டு மெல்லிய இசையில் ஓடிக்கொண்டிருந்தது (அது வேட்டைக்காரன் பாட்டுன்னு நினைச்சீங்கன்னா தப்பு, அதான் மெல்லிசான்னு சொல்றேன்ல). நாம வழக்கம்போல ஜன்னல் வெளியே வேடிக்கை (அந்த இருட்டுக்குள்ள என்ன பாத்தன்னு கேக்கப்பிடாது, போற வர்ற வாகனங்களைப் பாத்துட்டு இருந்தேன்). சைடுல ஒருத்தர் திட்டுறது கேட்டது...

‘பிச்சக்காரப்பய, போடுறதுக்கு வேற பாட்டே கிடைக்கலயா இவனுக்கு?’
(இப்பவும் வேட்டைக்காரன் பாட்டுன்னு நினைக்க வேணாம்)

என்னடான்னு பாட்டக் கேட்டேன், கட்டிப்புடி கட்டிப்புடிடால
ஜிங்கு ஜிக்ச்சா... ஜிக்கு ஜக்க ஜிக்கு ஜக்க...
ஓடிட்டு இருந்தது. இதுக்கு எதுக்கு கோவப்படுறான்னு யோசிச்சுக்கிட்டே கேட்டுட்டு இருந்தேன்.அடுத்த பாட்டு,
மீண்டும் மீண்டும் வா, வேண்டும் வேண்டும் வா....’
நல்லாத்தான் இருந்தது. அடுத்து,
’ராத்திரி நேரத்துப் பூஜையில்... ஜஞ்ஜக்கு ஜஞ்ஜக்கு ஜஞ்ஜக்கு ஜஞ்ஜக்கு....’
’ராக்கோழி கூவயில... ஹ்ஹா ஹ்ஹா ஹா...’

இப்படியே போய்கிட்டு இருந்தது (என்ன கேக்க வர்றீங்க...? ஆமா, பாக்கியராஜ் பாட்டுக்களும் வந்துச்சு). கொஞ்ச நேரத்துக்கு மேல நம்மளாலயும் கேக்க முடியல (எப்படித்தான் இப்படியே செலக்ட் பண்ணி வச்சிருக்காங்கன்னு தெரியல). அப்படியே மொபைல்ல பாட்டு கேக்கலாம்னு எடுத்தேன், தம்பியோட மொபைல், போன வாரம்தான் என்கிட்ட குடுத்தான். உள்ள ஆதவனும், வேட்டைக்காரனும் மட்டும் இருந்தது. ஆதவன் ரொம்ப தடவ கேட்டுட்டதால, வேட்டைக்காரனைக் கேட்டுத்தான் பாப்போமேன்னு கேட்டேன். நல்லா இருந்துச்சோ இல்லையோ, நல்லா நேரம்போச்சு...

1)
குஸ்து ஆலமாக்கி மிஸ்மாத்தா சூமிக்காஸா ஸூ (உண்மையிலேயே இப்படித்தான் ஆரம்பிச்சது)
ஏலேலம்மோ..... (டம்க்கு டக்கு டம்க்கு டக்கு... )
என் உச்சி மண்டேல சுர்ருங்குதே
உன்ன நா பாக்கேல கிர்ருங்குதே
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குதே
ட்டர்ருங்குதே....

கைதொடும் தூரம் காச்ச வட
சக்கரையால செஞ்ச வட
என் பசி தீக்க வந்தவளே (உண்மையிலேயே வடன்னு சொல்றாங்களா இல்ல வளேன்னு சொல்றாங்களான்னு தெரியல, 10 தடவ கேட்டுட்டேன்)
சுந்தரி...யே....

தாவணி தாண்டி பாத்தவனே (நல்ல வேளை, கவிஞர் தூக்கின்னு எழுதல)
கண்ணால என்ன சாச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே
தந்திர..னே...

இப்படியே டமுக்கு டப்பா டமுக்கு டப்பானு நல்லா உள்ள வாங்கி சைடுல வுட்டு பின்னாடி வெளிய எடுத்து, குத்து குத்துன்னு குத்தியிருக்காங்க. டான்சுக்குன்னே போட்ட பாட்டா இருக்கும்.

இதுல வர்ற குத்து ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கு, என்ன பாட்டுன்னுதான் ஞாபகத்துக்கே வர மாட்டேங்குது.

2)
லமன்க்க்கிட்டுது லாமுமச்சா
என்ன ரஸ்ஸப்பானில ரஸ்மியத்தான்
பிரேன்னு சீக்குல ஷோமியல்லவ்
நன நானன்ன நானன்ன நானன..... அத்தானே அத்தானே.....
(சத்தியமா இதுவும் இப்படித்தான் ஆரம்பிச்சது...)
ஆ: கரிகாலன் காலப்போல கருத்துருக்குது கொழலு
பெ: கொழலில்ல கொழலில்ல தாஜுமஹால் நெழலு
ஆ: சேவலோட கொண்டப்போல செவந்திருக்குது உதடு
பெ: உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு...

ஹீரோ ஏதாவது சொல்ல, ஹீரோயின் அது இல்ல இதுன்னு கடைசி வரை சொல்லிட்டே இருக்காங்க. நல்லா இருக்கு. கிராமத்து இசை, தவில விட்டு தட்டிருக்காங்க, ட்க்ர்ர்ர், வ்ர்ர்ர்ர்ர்ர்யூம், ச்சல் ச்சல் சத்தமெல்லாம் கேட்டுட்டே இருக்கு. பாட்டக் கேக்கும்போது, அப்படியே கிராமத்து வயல்வெளியும், பேக்குரவுண்டுல சேல கட்டுன பொம்பளங்களும், வேட்டி கட்டின ஆம்பளங்களும் ஆடுறது, அப்றம் வைக்கோல், ஆடு, மாடு, கெழவி எல்லாம்  மனசுல அப்படியே ஓடுச்சு.

3)
லைட்டா மீசிக் ஸ்டார்ட் ஆகுது, கூடவே...ஹேய்....  ஹோய்... சத்தம்.
ஆரம்பிக்கும்போதே தெரிஞ்சு போச்சு, இதான்  இண்ட்ரோ சாங்கா இருக்கும்.

நா அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதிப்பாரு வீடு போயி
சேர மாட்ட...
(கன்பார்ம்)... அப்படியே போச்சு, இடையில ஒரு சிங்கம் வேற கொட்டாவி வுடுற சவுண்டு, லெப்டுல இருந்து ரைட்டுக்கு பாயுது...
.
.
.
வாழு வாழு, வாழ விடு
வாழும்போதே, வானைத் தொடு
வம்பு பண்ணா, வாளை எடு
வணங்கி நின்னா, தோளக் கொடு.
(அட நல்லாத்தான் இருக்கு)

கடைசியில ஒரு சின்ன பையன் வாய்ஸும் வருது. சின்னப் பசங்க படம்னு சொல்ல வாய்ப்பிருக்கு.

குத்துங்கடா குத்து
எங்கூட சேந்து குத்து....(நல்ல குத்துதான்)

4)
ஸ்ஸ்ஸூம்
க்கிய்யா (அப்டின்னு ஒரு வாய்ஸ், அப்றம் ஒரு மீசிக்..)
காலகீ மூவிய இப் ஹாமச் யூஹாவ்
காஸ் பெண்டியா போ கிம்மீய மாமு
வங்குபாரு ஜஸ் லுக்கிமீ ஸ்னீக்கர்ஸ்
மா கிரிடிட் கார்ட் ஹேவ் ரீல்லி கூல் ஃபீச்சர்ஸ்
(மறுபடியுமா...? திரும்ப ஒரு குத்து குத்தப் போறாங்களோன்னே கேட்டேன்)
ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே...
(அடங்... மெலோடியா? ஏனோ தெரியல, இது கேக்கும்போது ’இருபது கோடி நிலவுகள் கூடி’ பாட்டு ஞாபகத்துக்கு வருது)
இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே...

நல்லாத்தான் எழுதியிருக்காங்க. காதல் பாட்டுன்னாலே வரிகள்லாம் சும்மா செதுக்கி வச்சிடுறாங்க. கண்டிப்பா காதலர்கள் கொஞ்ச நாளைக்கு இதத்தான் முனுமுனுப்பாங்க.

5)
ஸம்பரபர ஸிப்பட்டே ஸித்திஸ் ஸலபல கண்டா
லிம்ம ஸொப்பன ஸிந்தா ஹம்சா ஆலல கண்டா
ஹிப்பி ஸாலல கும்பா கப்பி ஸாலல கட்டே
ஓம் ஷாந்தி ஷாந்தி கீ...
(உண்மையிலேயே முடியல)

டன் டகெட டண்டண்டே டன் டகுட டன்
டன் டகெட டண்டண்டே டன் டகுட டன் (அய்யய்யோ இன்னொரு இண்ட்ரோவா)

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்கிது இடி இடிக்கிது
கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டக்காரன் வர்றதப் பாத்து
 (இதாவது பரவாயில்ல)


கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிக்கிது துடி துடிக்கிது
நெல கொலையிது நெல கொலையிது
வேட்டக்காரன் வர்றதப் பாத்து
(இதக் கேட்டவொடனேதான் சிரிப்பு வந்துட்டு, படம் நல்லா இல்லன்னா இந்த பாராவ மட்டும் எடுத்த்டு விமர்சனமா போட்டுறலாம், இதோட விட்டாங்களா..)


நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வர்றாம்பாரு வேட்டக்காரன்.
(இப்படி எடுத்துக்குடுத்துட்டே இருந்தா எப்டிங்னா?)


(நடுவுல ஒரு சாம்பில்)
போடு அடியப் போடு
போடு அடியப் போடு
ஆ: டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கருனா
கோரஸ்: டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டக்கருனா
(போதுமா, இதுவும் செம குத்துதான். இளைய தளபதி எப்பல்லாம் நடக்குறாரோ இது பின்னாடி பாடும்னு எதிர்பாக்கலாம்)

---

ஒரு இண்ட்ரோ, ஒரு பிஜிஎம், ஒரு மெலோடி, ஒரு வில்லேஜ் அப்றம் ஒன்னு டான்ஸ்க்கு. பாட்டுக்களே செம மசாலாவா இருக்கு. கேக்கலாம்.

-ஏனாஓனா
(ஆதி அண்ணன் மன்னிக்கவும், பேரு சீக்கிரம் மாத்திடுறேன்)

Share/Bookmark
Read More!

தேன்கூடு - 2009/10/22

கூகுள் தகவல்கள்

கூகுள் க்ரோம் புதிய வசதிகளுடன் அருமையாக உள்ளது. வெற்றுப் பக்கத்தில், ஏற்கனவே திறந்த பக்கங்களின் சிறிய படங்கள் ஏற்கனவே தெரிந்ததல்லவா... இப்போது அவற்றை அருமையாக கையாளும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கூகுள் க்ரோமில் தீம்கள் இருப்பது ஏற்கனவே தெரிந்ததே. இப்போது பிரபல ஆர்ட்டிஸ்ட்டுகள் உருவாக்கிய 95 தீம்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கே சென்று மாற்றிக்கொள்ளலாம். இதில் ஒரு கவனிக்கவேண்டிய விசயம் - தீம் மாறும்போது க்ரோமை ரீஸ்டார்ட் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

பாதுகாப்பான பாஸ்வேர்டு வைத்துக்கொள்வது பற்றிய அருமையான வழிமுறைகளை இங்கே காணலாம் - கூகுள் டீமிலிருந்து.

---

சென்ற வார பதிவர் சந்திப்பு



படத்தில்: ஜனா, அவருடைய நண்பர் சீலன், அடலேறு, நிலாரசிகன்.
படம் எடுத்துக்கொண்டிருப்பது: ஏனாஓனா.
இடம்: பாலவாக்கம் கடற்கரை.

நம்மைத் தவிர மற்றவர் அனைவருமே இலக்கிய சிந்தனையாளர்கள் என்பதால், பேச்சு இலக்கியம் பற்றியே அதிகம் இருந்தது (கதை, கவிதை, ஹைக்கூ, எழுத்தாளர்கள் இப்படியே...). நமக்கு அந்த அளவுக்கு அறிவு பத்தாததால் வெறும் கவனிப்பு மட்டுமே. இடையிடையே வெகுஜன கலப்பும் இருந்தது, நாம் பேசியதால்.

பாலவாக்கம் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் சொல்லுங்கள், அடுத்த முறை கூடும்போது தகவல் சொல்கிறேன்.

---

இந்த வார பதிவர் சந்திப்பு

பதிவர் வலைமனை சுகுமார் திருமணம் நேற்று இனிதே நடந்தது. பதிவர்கள் சிலர் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தோம்.



படத்தில்: அகநாழிகை பொன்.வாசுதேவன், கேபிள் சங்கர், முரளி கண்ணன், வண்ணத்துப்பூச்சி சூர்யா.
படம் எடுத்துக்கொண்டிருப்பது: (வழக்கம்போல)ஏனாஓனா.
இடம்: வில்லிவாக்கம், பாபா நகர் திருமண மண்டபம் ஒன்றில்.

இந்த பாபா நகர் தேடிக் கண்டுபிடித்ததே ஒரு பெரிய கதையாக எழுதலாம். ‘பாபாவைத் தேடி ஒரு பயணம்’ என்று தலைப்பு போட்டால் ஹிட்டு கண்டிப்பாக கூடும் என்று வண்ணத்துப்பூச்சியார் சொன்னது கூடுதல் சுவாரஸ்யம்.

இது ஒரு காதல் திருமணம். பல போராட்டங்களுக்கிடையே காதலியைக் கைப்பிடித்த சுகுமாருக்கு வாழ்த்துக்கள்.

மொய்யாக 4 பின்னூட்டம் எழுதி கவரில் வைத்துக் கொடுத்துவிடலாம் என்றார் முரளி கண்ணன், நான் ஒரு பதிவே போட்டு விடுகிறேன் என்றேன் (ஐய்யா, செலவு மிச்சம்).

படத்தை மீண்டும் பாருங்கள், நால்வரும் சீனியாரிட்டிப்படி வரிசையில் இருப்பதுபோல் தெரிகிறதா? (இடப் பக்கம் இருப்பவர்கள் மன்னிக்கவும்)

---

ஒரு SMS

நேத்து ஒரு கல்யாண வீட்டுக்குப் போனேன்.
ஜோடின்னா ஜோடி அப்படி ஒரு ஜோடிய என் வாழ்க்கையில பாத்ததே இல்ல.
அப்படி ஒரு அழகு.
அப்புறம் என்ன,
கால்ல மாட்டிட்டு வந்துட்டேன்.

---

கடைசியா ஒரு சொந்த சரக்கு

பொண்ணு கிடைத்தாலும்
புதன் கிடைக்காதாம்
கிடைத்தது என்னவோ
புதன்கள் மட்டுமே.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

பேரு வைக்கிறதுக்கு ஒரு அக்கப்போரா?

ஏற்கனவே வானவில் வந்த கதை உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். தெரியாதுன்னா இங்க போயி பாத்துக்குங்க.

அதுக்கப்புறம், அங்க பின்னூட்டத்துல கூட சிலபேர் சில தலைப்புகளை சிபாரிசு பண்ணினாங்க. அண்ணன் ஷங்கி என்சிலாடான்னு ஒரு ஐட்டத்த சொன்னாரு. விக்கில பாத்தா ஃப்ரூட் சாலட் மாதிரி தெரிஞ்சது. அப்றம் ஆதவன், இந்த பேரு ஏற்கனவே இருக்குன்னு ஒரு குண்ட தூக்கி போட்டுட்டான். அப்றம் ஜனா மனோரஞ்சிதம், இராகமாலிகா, பூந்தோட்டம், கூட்டாஞ்சோறு, பலதும் பத்தும், பழக்கூடை இப்படி வரிசையா பின்னிட்டாரு. சாம்ராஜ்ய ப்ரியன் கதம்பம்னு ஒன்னு சொன்னாரு. இதுல இன்னொரு முக்கியமான விசயம், கிரி அண்ணன் ஆ60மொ30 தொடர்ந்து படிக்கிறாராம்.

இதெல்லாம் பத்தி யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது... ஒரு பிரபல பதிவர் சாட்ல வந்தார். அவரும் நானும் இதப் பத்தி அலசி ஆராஞ்சு பாத்தத நீங்களும் பாருங்க...

பி.ப.1: ஏனோ ஓனோ, எங்கிட்ட ஒரு ஐடியா கேட்டிருக்கலாம்ல.... பேரு வைக்கிறாராம் பேரு
ஏனாஓனா: அட போய்யா, எந்த பேரு யோசிச்சாலும் யாராவது வச்சிருக்காங்க, நீ ஏதாவது சொல்லேன்.
பி.ப.1: இரு யோசிக்கிறேன்
ஏனாஓனா: தமிழ்ல சொல்லு
பி.ப.1: இதெல்லாம் முன்னாடியே கேட்டிருக்கனும்
ஏனாஓனா: அதுக்கு என்ன இப்போ? இந்த வாரத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சு, இது ஏற்கனவே இருக்குன்னு இன்னொரு பதிவு போடலாம். மொத்தம் 2 பதிவுக்கு மேட்டர் கிடச்சுதுல்ல?
ஹி ஹி ஹி...
பி.ப.1: வாந்தி ஓக்கேவா?
ஏனாஓனா: அது ஏற்கனவே யோசிச்சேன்.. .வேணாம்.
பி.ப.1: ரைட்டு
ஏனாஓனா: ’ரைட்டு விடு’ - இது?
பி.ப.1: ஹிஹி
ஏனாஓனா: ஹி ஹி ஹி
பி.ப.1: தமிழ்ல இல்லையே
ஏனாஓனா: அட ஆம்மா...
பி.ப.1: பத்தியா நம்ம எது தமிழ் எது மற்ற மொழின்னு மறக்கற அளவுக்கு இருக்கு நம்ம தமிழ்
ஏனாஓனா: ஹ்ம்ம்ம்
பி.ப.1: வழக்கு தமிழ்
ஏனாஓனா: நீ பாடம் நடத்த ஆரம்பிச்சிடாத, மேட்டருக்கு வா.
பி.ப.1: பேசாம “தமிழ்”ன்னு வச்சிரு, கலப்படம் இருக்குல்ல
ஏனாஓனா: பேர கண்டிப்பா மாத்தனுமா?
பி.ப.1: இல்ல விடு. அவரும் என் நண்பர் தான். அதான் கேட்டேன், இளைய பல்லவன்.
ஏனாஓனா: கூட்டாஞ்சோறு...?
பி.ப.1: அதுவும் இருக்குய்யா
ஏனாஓனா: ம்ம்ம்ம்...
பி.ப.1: யாருன்னு ஞாபகம் இல்ல
ஏனாஓனா: கே.கு. - அப்டின்னு வச்சிடலாமா?
பி.ப.1: அதென்ன?
ஏனாஓனா: அது அவனவன் இஷ்டம்... என்ன தோனுதோ வச்சிக்கட்டும்
பி.ப.1: அசிங்கமா இருக்குமே
ஏனாஓனா: உனக்கு என்ன தோனுது?
பி.ப.1: அதே தான் தோணுது
ஏனாஓனா: ஹி ஹி ஹி...
பி.ப.1: ஹிஹி
ஏனாஓனா: சாக்கடைனு வைக்கலாம்னு பாத்தா.... வாந்தி மாதிரி இருக்கு...
சாக்கடை - நாத்தம் - னு நீயே பின்னூட்டம் போடுவ...
பி.ப.1: கண்டிப்பா
ஏனாஓனா: ம்ம்ம்... ’அத்தப்பூ’?
பி.ப.1: மாமியார்பூ கூட வைப்ப போல
ஏனாஓனா: அதென்னப்பா மாமியார்பூ? கெட்ட வார்த்த மாதிரி இருக்கு!
பி.ப.1: யோவ் நீ அத்தைப்பூன்னு வைக்கும் போது அதுவும் வைக்கலாம்ல?
ஏனாஓனா: இது அத்தப்பூய்யா... கேரளால போடுவாங்கள்ல...
பி.ப.1: ஓ அதுவா, நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன்
ஏனாஓனா: அடங்... சரி... இது கேரளா... அதுவும், ரொம்ப சாப்டா இருக்கு, லேடீஸ் இந்தப் பேர வச்சிக்கலாம்...
நமக்கு நல்லா, டெர்ரரா இருக்கனும் பேரு...
பி.ப.1: ம்... யோசிப்போம்
ஏனாஓனா: என்னல்லாமோ தோனுது...
தலைப்பில்லா
தலைப்பின்மை...
முண்டம்
பி.ப.1: அவ்வ்வ்வ்
ஏனாஓனா: வாய்க்கொழுப்பு
பி.ப.1: ரெஸ்ட் எடுய்யா
ஏனாஓனா: ஹி ஹி ஹி...
பி.ப.1: உடம்பு சரியில்லைன்னு தோனுது
ஏனாஓனா: நேரடியா சொல்ல வேண்டியதுதான... மெண்டல்னு சொல்ல வர்றியா?
”மூக்க ஒடச்சிடுவேன்”...
பி.ப.1: ச்சீ சீ என் வாயால அப்படி சொல்லுவேணா
ஏனாஓனா: அதான் மாத்தி சொன்னியாக்கும்...?
கடல்
?
சங்கமம்?
பி.ப.1: அந்த பழனி முருகன் சிலை எதால செஞ்சது?
நவ பாசானம்?
ஏனாஓனா: ஓஹோ...
பி.ப.1: ஆனா ஒன்பது மேட்டர் வேணூம்
ஏனாஓனா: அது கொஞ்சம் அதிகமா இருக்குய்யா... அதான்...
வானவில்னா 7ஓட முடிஞ்சு போகும்
பி.ப.1: ம், ஐஸ் பிரியாணி? பழைய சோறு தான் அப்படி சொன்னேன்...
ஏனாஓனா: ஐஸ்? தமிழா?
ஏனாஓனா: ’அட போடாங்’
ஏனாஓனா: அப்டின்னு வச்சிடலாமா?
பி.ப.1: அட போய்யாங்... ‘கழனி மண்டி’?
ஏனாஓனா: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
எரும மாடு... அப்டின்னு பின்னூட்டம் வரும்...
பி.ப.1: யோவ் அதுல தான்யா எல்லாமே இருக்கும்
ஏனாஓனா: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
அதுக்காக... சாக்கடைல கூட எல்லாம் இருக்கும்....போய்யாங்...
பி.ப.1: யோவ் கால்நடைக்கு தீவனம்யா அது, சாக்கடையோட கம்பேர் பண்ணாத
ஏனாஓனா: அது சரி, அவனவன் மனுச தீனி பேரு வச்சிருக்கான்...
பி.ப.1: ஹிஹிஹி
ஏனாஓனா: அதுக்கு நாம இப்படியா வைக்கிறது...?
பி.ப.1: ஜிகர்தண்டா?
ஏனாஓனா: அது எப்பிடி பண்ணூவாங்க? அதப் பத்தி ஒன்னும் தெரியாதே...
பி.ப.1: மதுரையில இருக்கும்
ரெண்டு மூனு பொருளை போட்டு பண்ணுவாங்க. ஜில்லுன்னு டேஸ்டா இருக்கும்
ஏனாஓனா: ஏற்கனவே இருக்கு...
பி.ப.1: quarter matter..?, quarter quarteraa matter..? தமிழ்ல வேணும்னு அடம்பிடிக்காத
ஏனாஓனா: அது மானிட்டர் பக்கங்கள் மாதிரி இருக்கே....
பி.ப.1: ம்ம்ம்ம்... மகாமகம்?
ஏனாஓனா: அதென்னய்யா மகாமகம்... ஏதோ திருவிழா மாதிரி இருக்கு?
பி.ப.1: ம் அதே தான், ஒன்னு கூடுற இடம்
ஏனாஓனா: ம்ம்ம்... சந்தை...?
பி.ப.1: பல சரக்கு?
ஏனாஓனா: சூப்பர்...அது பலசரக்கு
பி.ப.1: தெரிஞ்சு தான் ஸ்பேஸ் விட்டேன்
ஏனாஓனா: ம்ம்ம், சூப்பரா இருக்கு, அடுத்த பதிவு ரெடி... நாம பேசுனதுதான் பதிவு... தலைப்பு - ‘வானவில் கோனவில்லான கதை’
பி.ப.1: ஹிஹி, என்னமோ பண்ணு
ஏனாஓனா: அதுவும் இருக்குய்யா... :(
பி.ப.1: அவ்வ்வ்வ் :(
ஏனாஓனா: பேசாம ’ங்கொய்யால’ன்னு வைக்கப்போறேன் பாரு, எல்லாத்தையுமே யோசிச்சுடுறானுவ...
பி.ப.1: யோவ் அது கெட்ட வார்த்தையா
ஏனாஓனா: அது வேறயா...
பி.ப.1: ஆமா
ஏனாஓனா: அவ்வ்வ்வ்வ்....
பி.ப.1: முத்தமிழ்? மூனு மேட்டர் தான் சொல்லமுடியும்
ஏனாஓனா: கொஞ்சம் ஓவரா தெரியல?
பி.ப.1: அதெல்லாம் இல்ல, மூனுமே ஒவ்வொரு ஊர் ஸ்லாங்ல சொல்லு
ஏனாஓனா: இல்லன்னா... சதுரம்னு வச்சு நாலு மேட்டர் சொல்லிடலாம்...
பி.ப.1: வட்டம் வச்சு நிறைய மேட்டரே சொல்லலாமே :)
ஏனாஓனா: ஹி ஹி ஹி.... வாழ்க்கை ஒரு வட்டம்டா....
பி.ப.1: தத்துவம்ம்ம்ம்
ஏனாஓனா: அஞ்சரப் பெட்டி
பி.ப.1: அஞ்சரப்பெட்டி இருக்கு
ஏனாஓனா: ம்ம்ம்ம்... ஆரரைப் பெட்டி? ஹி ஹி ஹி...
பி.ப.1: ங்கொய்யால
பி.ப.1: ’என்னமோ ஒன்னு'?
ஏனாஓனா: ஐ, ’ஏதோ ஒன்னு’
பி.ப.1: ஏதோ ஒன்னு, என்னமோ ரெண்டு?
ஏனாஓனா: அட, கொஞ்சம் பெருசா இருக்கே...
பி.ப.1: சுருக்கு
ஏனாஓனா: ஒன்னு ரெண்டு மூனு
பி.ப.1: ஊர் வாய்க்கு அவல்?
ஏனாஓனா: என்னய்யா இது வாய்க்கரிசிதான் ஞாபகத்துக்கு வருது...
பி.ப.1: அவ்வ்வ்வ்
ஏனாஓனா: பஞ்சாயத்து?
பி.ப.1: தீர்ப்பா சொல்ல போற?
ஏனாஓனா: ஹி ஹி ஹி.... நல்லா யோசிச்சு வை... கொஞ்ச நேரத்துல வறேன்...
பி.ப.1: சரி

அப்பப் போனவருதான், அதுக்கப்புறம் ஆன்லைன்ல வரவே இல்ல. என்ன நெனச்சாரோ தெரியல?!

---

அப்றம் இன்னொரு பிரபல பதிவர் சில தலைப்புகளை மெயில்ல அனுப்பினார்.
இப்போ பி.ப. பார்ட் 2

வறுத்த கடலை
தேனீ
வடகறி
சரிகம பதநி
சூடா போண்டா
சுண்டல்
இதுதான் லிஸ்ட். நான் கேட்டேன்,

ஏனாஓனா: ஹா ஹா ஹா... என்னா இதெல்லாம்... ?
பி.ப.2: வானவில்லுக்கு தலைப்பு
ஏனாஓனா: நல்லது, கலவையான ஐட்டமா இருக்கனுமே...இப்படி ஏதாவது சொல்லிட்டே இருங்க.. ஏதாவது சிக்கும்... ம்ம்ம், பாக்கலாம்...
பி.ப.2: கென்டகி சட்னி, மகரந்தம்?
ஏனாஓனா: கெண்டகி? அப்டின்னா?
பி.ப.2: தெரியாது, ஆனா இது ஒரு மிக்ஸ்டு சட்னி
ஏனாஓனா: ஓஹோ... எந்த ஊரு ஐட்டம் இது?
பி.ப.2: நாலு வருடங்களுக்கு முன் 'ஆனந்த விகடன்'ல் பார்த்தது. "கெண்டகி சட்னி" என்ற பெயரில் யூகி சேது எடுக்கப் போவதாக சொல்லி இருந்தார். அவர் சொன்னது தான் அந்த அர்த்தம்.
ஏனாஓனா: ஓஹோ.... விசாரிச்சுப் பாக்குறேன்... நல்ல பேரு, நன்றி

---

அப்புறம் இன்னோரு பிரபல பதிவர் போன்ல வந்தாரு...

பி.ப.3: என்னப்பா பண்ற?
ஏனாஓனா: சும்மா யோசிச்சுட்டு இருக்கேண்ணே, இன்னும் தலைப்பு கிடைக்கல, உங்களுக்கு ஏதாவது கெடச்சுதா?
பி.ப.3: நானா இருந்தா இப்படில்லாம் வைப்பேன், நீ வைக்க மாட்டியே...
ஏனாஓனா: பரவால்ல சொல்லுங்க, அப்படி என்னதான் சொல்றீங்கன்னு பாப்போம்...
பி.ப.3: ஜில்பான்ஸி, கில்மா...
ஏனாஓனா: என்னது கில்மாவா? அப்டின்னா?
பி.ப.3: யாருக்குத் தெரியும்... ஃபிகரையும் கில்மான்னுதான் சொல்றாங்க, சரக்கையும் கில்மான்னுதான் சொல்றாங்க... கில்மாவான ஐட்டம் எல்லாத்தையுமே கில்மான்னுதான சொல்றாங்க...
ஏனாஓனா: அதுசரி. அப்றம் ஜலபுலஜங்ஸ விட்டுட்டீங்களே.
பி.ப.3: சொன்னா மட்டும் வச்சுறப் போறியா?
ஏனாஓனா: இதெல்லாம் நமக்கு சரிவராதுண்ணே. நான் பலது யோசிச்சேன். நவபாசானம் எப்படி இருக்கு?
பி.ப.3: யோவ் அது விஷம்யா.
ஏனாஓனா: அது வேறயா? பல்நவீனத்துவம்?
பி.ப.3: ???? என்னது?
ஏனாஓனா: ச்சும்மா... கேக்க புதுசா நல்லா இருக்குல்ல... இதக் கேளுங்க. ’கலக்கல்’ - ஏதோ டாட் காம்ல எவனோ ஒருவன் எழுதும் கலக்கல் பதிவுகள் - இத தெரியாதவன் கேட்டா குழம்பிப் போயிருவான்ல...
பி.ப.3: ஆமா, இன்னைக்கி எவ்வளவு அடிச்ச?
ஏனாஓனா: அட போங்கண்ணே, இன்னிக்கி நோ சரக்கு.
பி.ப.3: அடிக்காமலேயே இவ்ளவு பேசுறியா? உனக்கு கடைசி வரை தலைப்பே கிடைக்காது பாரு.
ஏனாஓனா: ஙே....

---

அதுக்கப்புறம் பி.ப.4, பி.ப.5... கதையெல்லாம் வேணாம். உங்களை இதுக்கு மேல சோதிக்க விரும்பல. கடைசியா ஒரு பூவைப் பார்த்தப்போ தோனினதுதான் ’தேன்கூடு’. ரொம்ப பொருத்தமா இருந்தது (எப்படிங்கிற மொக்கை அடுத்த பதிவில்). வேற யாராவது இந்த தலைப்புல கலவைப் பதிவு எழுதுறாங்களானு கூகுள்ல தேடிப்பாத்தேன். தேன்கூடுன்னு ஒரு திரட்டி இருந்தது மட்டும் தெரியுது, கலவை யாரும் எழுதுற மாதிரி தெரியல.
உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க, ப்லீஸ்.

---

பெஸ்கியின் டிஸ்கி: பி.ப.1 - ஆதவன், பி.ப.2 - சாம்ராஜ்ய ப்ரியன், பி.ப.3 - கேபிள்ஜி, பி.ப.4 - அடலேறு, பி.ப.5 - நிலாரசிகன், பி.ப.6 - ஜனா. பேரு வைக்க அக்கப்போர் பண்ணின, பண்ண முயற்சி பண்ணின இவங்களுக்கு நன்றிகள்.
அப்றம் முதல் பத்தியில இருக்குறவங்களுக்கும் நன்றிகள்.

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

வெள்ளை மின்னலே…!



நீ
என் அகத்திற்கு வருகிறாய் என்றதும்
என் அகத்தின் உவகை உலகறியாதது.



குறுகுறுப்புடனும் கூதுகலத்துடனும்
காத்திருந்தேன் கண்மணியே,
ஈராறு நாட்கள்
பலநூறு யுகங்கள் போல்!


என் தந்தை தமையனுடன்
தவழ்ந்து வந்த தேரில்(காரில்)
நீ
வந்திறங்கியபோது - உன்
வதனம் கண்டு ஒரு தேவதை
என்றே எண்ணியது என் மனம்.



உனைப் பாராமல்
உன் மேல் நான்கொண்ட ஈர்ப்பு
உனைக் கண்டதும் பல மடங்கானது
.


கண்டதும் ஓடி வந்து
கட்டியணைக்க வேண்டுமென்ற அவாவை
கட்டுப் படுத்தினேன் தந்தையின்
கண்ணசைவில்.


உனக்கும் என் மீது
உண்மையாகவே ஒரு தனி ஈர்ப்பு
இருந்ததால் தானே
யாராவது என்னை வசைபாடினால்,
ஒரு மூலையில் அமர்ந்து
இருவர் முகத்தையும் பார்ப்பாய்...?!



எல்லோரும் இறைவனிடம் வேண்டும்
வேளையில்
என்னை உன் காலால்
தட்டுவாயே..?!



அர்த்த ராத்திரியில்
அனைவரும் சயனிக்கையில்
சத்தமில்லாமல் என் போர்வைக்குள்
நுழைவாயே..!?



பின்
என் காதில்
செல்ல கடி கடித்து
என்னை எழுப்புவாயே..!?


எழுப்பி என் மார்பில்
தலைசாய்ந்து உறங்குவாயே..?!


நான் விரும்பும் ,
என்னை விரும்பும்,
எதுவும் நிலைப்பதில்லை அன்று.

அது
உன் விஷயத்திலும்
உண்மை ஆகிவிட்டதே..?!

சத யுகங்கள் நீ என்னுடன்
இருப்பாயென அகமகிழ்ந்தேனே..?!

தச நாட்களில் எனை விட்டும்,
என் அகம் விட்டும்,
இவ்வையகம் விட்டும் சென்றாயே..?!

என் “வெள்ளை மின்னலே






---கி.கி






Share/Bookmark
Read More!

Gmailல் Multiple Signature

Gmailல் Multiple Signature சாத்தியமா?

இந்த மாதிரி கேள்வி உங்களுக்கும் இருக்கா? Gmail ல் ஒன்றுக்கும் மேற்பட்ட இமெயில் ஐடிகளை கனெக்ட் பண்ணி வைச்சிருக்கீங்களா? அப்போ மேல (கீழ) படிங்க.

ஒன்றுக்கும் மேற்பட்ட Email id களை Gmail ல் பிணைத்து வைக்கும் வசதி இருப்பது ஏற்கனவே தெரிந்த்தே. நான் 5 Email id களை வைத்திருக்கிறேன். Gmail Inbox லேயே எல்லாம் வந்து கொட்டிவிடும். Send பண்ணுவதும் இங்கிருந்தே தேவைப்படும் ஐ.டி. களின் மூலம் அனுப்பி விடலாம். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை நேற்று வரைக்கும்.

ஐந்து Email மூலம் அனுப்பும் வசதி இருந்தாலும், Signature ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. Personal, Official, Blog சம்பந்தமான எல்லா மெயிலுக்கும் ஒரே Signature தானா? என்ன கொடுமை கிரி அண்ணே இது? ஒவ்வொரு தடவையும் அந்த Signature ஐ மாற்றி மாற்றி அடித்து அனுப்பவேண்டுமா? ஹ்ம்... நேற்று இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கனுமேன்னு தேடினேன் இணையத்தில்.

முதலில் Google Labs ல் ஏதேனும் வழி இருக்கிறதா எனப் பார்த்தேன். இல்லை. சீக்கிரம் வர வாய்ப்பிருக்கிறது. Google ல் தேடினேன். Firefox ல் சில Addons சேர்த்து, Multiple Signature உபயோகிக்கும் முறைகள் சில கிடைத்தன. அவற்றில் திருப்தி இல்லை. நமது சிஸ்டத்தில் இதை செய்து உபயோகித்துக்கொள்ளலாம். வெளியே எங்காவது சென்று இந்த வசதியை உபயோகிக்க முடியாதல்லவா? மீண்டும் வேறு வழிகளைத் தேடினேன்.

இறுதியாகச் சிக்கிய வழிமுறைதான் இது. Gmail ல் Multiple Signature இல்லை. ஆனால், Canned Responses ஐ இந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். Canned Responses என்பது Google Labs ன் ஒரு வசதி. இதன் மூலம் சில Ready made Message களை சேமித்து வைத்து, தேவைப்படும்போது அனுப்பிக்கொள்ளலாம் (I m busy now, will call u later என்பது போன்ற). இதை எப்படி Multiple Signature ஆகப் பயன்படுத்தலாம் எனபது பற்றி பார்க்கலாம்.

முதலில் Gmail Settings -> General சென்று Signature வசதியை நீக்கி விடவும் (ஏற்கனவே உபயோகித்தால்).



பின், Gmail ல் இருக்கும் Google Lab சென்று Canned Responses வசதியை உயிர்ப்பிக்கவும்.



இப்போது Gmail Restart ஆகும்.
Compose Mail பண்ணவும்.
இப்போது, தேவையான signature ஒன்றை அடிக்கவும்.
(உதாரணத்திற்கு,
அன்புடன்,
பெஸ்கி.
http://www.yetho.com)
அடித்துவிட்டு Canned Responses சென்று Save பண்ணவும்.
இப்போது இதற்கு ஒரு பெயர் கொடுக்கவும். (இங்குள்ள உதாரணத்திற்கு, BLOG எனக் கொள்ளலாம்)



பின்பு இதேபோல் எத்தனை வேண்டுமோ அத்தனை signature களையும் தனித்தனியே save செய்து கொள்ளவும். இதை பின்பு delete மற்றும் edit செய்துகொள்ளவும் முடியும்.

வழக்கம்போல மெயில் அனுப்பும்போது compose வந்தவுடன், முதலில் Canned Responses க்ளிக் செய்து தேவையான signature ஐ தேர்வு செய்து, பின் மற்றதை டைப்பவும். அல்லது. எந்த இடத்தில் வேண்டுமோ அங்கே cursor ஐ வைத்து insert செய்துகொள்ளலாம்.



இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட signature கிடைத்துவிட்டது.
Gmail ல் ஒன்றுக்கும் மேற்பட்ட Email id வைத்திருப்பவர்கள் கருத்துக்களைக் கூறவும்.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

வானவில் - 2009/10/12

கொத்துபரோட்டா, பஞ்சாமிர்தம், நங்கநல்லூர் பஞ்சாமிர்தம், காக்டெயில், மிக்ஸர், மானிட்டர் பக்கங்கள், அவியல், குவியல், டரியல், என்’ணங்கள், டிபன் (இட்லி, வடை, பொங்கல்....), மிக்ஸ்டு ஊறுகாய், மிக்ஸ்டு ஃப்ரைடு ரைஸ்  இப்படி பல பேர் பல தலைப்புல கலவைப் பதிவுகளை எழுதுறாங்க. நான் கூட எழுதிட்டுதான் இருக்கேன் (உண்மையாத்தான்), அது எத்தன பேருக்குத் தெரியும்னு தெரியல. ஆக்கம் 60 நாள் மொக்கை 30 நாள் - எங்கையோ பாத்த தலைப்பு மாதிரி இருக்கா? இதுதான் நம்ம கலவைப் பதிவின் தலைப்பு, நேத்து வரைக்கும் (இதுக்கு அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுக்கனும்னா தனியா காண்டாக்ட் பண்ணுங்க (போன் பண்ணப் போறவங்களுக்கு இன்னோனு - உங்க தலையெழுத்து(இதுதான் பிராக்கெட்டுக்கே பிராக்கெட் போடுறது))).

திடீர்னு ஒரு சந்தேகம், நேத்து வீட்டுக்குப் போற வழியில. நம்ம கலவைப் பதிவு நல்லா ரீச் ஆகல போல இருக்கேன்னு! காரணம் என்னன்னு ஆராய்ச்சி பண்ணிப் பாத்தா தலைப்பும் ஒரு காரணமா இருக்குமோன்னு தோணுச்சு. சரி, தலைப்பை மாத்தி வச்சுடலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். வேற தலைப்பு என்ன வைக்கலாம்? (மொக்கைனு வைய்டா மொக்கைனு சொல்றீங்களா? கவலப்படாதீங்க, அது லேபில்ல கண்டிப்பா இருக்கும்) ’ஏதேதோ’னு வைக்கலாமா, நம்ம தளத்தோட பேருக்குப் பொருத்தமா இருக்கும் அப்டின்னு தோனுச்சு. ஆனா, மத்த பிரபல பதிவர்களோட தலைப்புகளை எல்லாம் பாத்தா ஏதோ ஒன்னு ஸ்டிரைக் ஆச்சு... எல்லாமே வாய்க்குள்ள போறதாவே இருக்கே! (என்’ணங்களை கணக்குல எடுக்கல) அப்போ நாமலும் ஒரு (சாப்பிடுற) ஐட்டத்தோட பேர  தலைப்பா வச்சிடலாம்னு முடிவு பண்ணி, அப்படியே யோசிக்க ஆரம்பிச்சேன் (திரும்பவும்).

பஞ்சாமிர்தம், கொத்துபரோட்டா, மிச்சர் - இந்த மாதிரி மிக்ஸிங் ஐட்டமா இருக்கனுமேன்னு யோசிச்சு யோசிச்சுப் பாத்தேன். கடைசியில நம்ம மூளைக்குள்ள ஓடுன தலைப்புதான் - பழரசம்.

இது சின்ன வயசுல நம்ம ஊரு ஃபேவரிட் ஐட்டம். ஒரு ரூபாய்க்கு ஒரு கண்ணாடி கிலாஸ் நெறையா கெடைக்கும். வாழைப்பழம், ஆப்பிள், அன்னாச்சி, கொய்யா... இப்படி கைல கெடைக்கிறத எல்லாம் மொத்தமா போட்டு அடிச்சி வச்ச்சிருப்பாங்க. சிகப்பு கலர்ல இருக்கும். வாங்கி குடிச்சா வயிறு நெறைஞ்சே போகும். நாம 25 காசு குடுத்து பாதி கிலாஸ்ல குடிக்கிறது வழக்கம் (அப்போ ஒரு நாள் பாக்கெட் மனி அவ்ளோதான்). வீட்டுல இதெல்லாம் வாங்கி குடிக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஏன்னா மிச்சம் இருக்குற பழைய பழங்களைப் போட்டுத்தான் இது பண்றாங்கங்கிறது அவங்களோட எண்ணம். நாம இதெல்லாம் கண்டுக்கிறது இல்ல (இப்ப குடிக்கிற ஐட்டம் வரைக்கும் இதே கததான்).

சென்னை வந்து ஒரு ரெண்டு வருசத்துக்கு அப்புறம் (ஒன்னா ரெண்டா, ஒழுங்கா சொல்லுன்னு கமண்டு போடாதீங்க, ஒரு ஃப்லோல வருது) திரும்பவும் இது குடிக்க ஆசப்பட்டு, ஒரு கடைக்கிப் போயி கேட்டேன். கடக்காரன் நம்மள மொறச்சுப் பாத்தான். என்னடான்னு யோசிக்கிறதுக்குள்ள கூட இருந்த நம்ம மச்சி ஒருத்தன் ’ரெண்டு பழரசம்’ அப்டின்னான். நான் கேட்டது ‘ரெண்டு ஃப்ரூட் ஜூஸ்’.

நல்ல பேரு ஒன்னு கெடச்சிடுச்சுன்னு நெனச்சிட்டு இருக்கும்போது, ஒரு பிரபல பதிவரிடம் கருத்துக் கேக்கலாமேன்னு தோனுச்சு. நமக்குத் தெரிஞ்ச பிரபலம் ஒருத்தருக்கு போன் பண்ணி கேட்டேன். இது நல்லா இல்லன்னு சொல்லிட்டாரு (உங்க ஊருலதான் இப்படி, மத்தவங்களுக்கு பழரசம்னா ஒரு பழத்தோட ஜூஸ்னுதான் தோனும் என்பது விளக்கம்). வேணும்னா ஃப்ரூட் சாலட்னு வைச்சுகோன்னு சொன்னார். இல்ல, நான் தமிழ்லதான் வைப்பேன்னு சொன்னேன். எக்கேடும் கெட்டுப்போன்னு விட்டுட்டாரு.

இப்ப திரும்பவும் யோசன... ரொம்ம்ம்ம்ம்ப யோசிச்சப்றம், மிச்சம் மீதி இருக்குற ஐட்டத்தத்தான எழுதுறோம், அப்போ இட்லி உப்புமான்னு வைக்கலாமா? இல்லை. சரி டஸ்ட் பின், வேணாம் இங்லீஸ், அப்போ குப்பைத்தொட்டி; ஆதவன் கோபத்துக்கு ஆளாக வேணாம். மிச்ச சொச்சம்... ஆஹா, ரொம்ப நல்லா இருக்கு. இதையே வச்சிடலாம்னு முடிவு பண்ணியாச்சு.

இவ்ளோ யோசிச்சு என்ன பிரயோஜனம்? கடைசியில யோசிக்காமலேயே தோனின ஒன்னுதான் தலைப்பா போச்சு. துணிதுவைக்கும்போது தண்ணியெல்லாம் தெரிச்சு, வானவில் மாதிரி தெரிஞ்சது. அட, வானவில் நல்லா இருக்குமேன்னு, அந்த பிரபலத்த திரும்பவும் கூப்பிட்டுக் கேட்டேன். ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. ரைட்டு.

சரி, அதெல்லாம் இருக்கட்டும், மேட்டருக்கு வான்னு ’நீ ஆதவன்’ கூவுறது கேக்குது. இதான் மேட்டரு. இனி ஆ60மொ30 - வானவில்னு மாறப் போகுது, உங்க மனச கொள்ளை அடிக்கப் போகுது. (கொஞ்சம் ஓவரா போறமோ?) யாராவது இந்தப் பேருல எழுதிட்டு இருந்தா, தயவு செஞ்சு சொல்லிருங்க, அப்பிடின்னு சொல்லுவேன்னு மட்டும் எதிர்பாக்க வேணாம். தயவு செஞ்சு நீங்க பேர மாத்திக்குங்க, ரொம்ப யோசிச்சு, ஒரு பதிவு வேற போட்டுட்டேன் (இதுல பதிவு போட்டது பெருசா, நீ யோசிச்சது பெருசான்னு கேக்காதீங்க).

 ----

இந்த வானவில்அறிமுகப் வானவில்லாக இருப்பதால் இதுக்கு மேல மேட்டர் இல்ல. என்னது? ஏதாவது சொல்லனுமா? சரி.
டெம்ப்லேட் மாத்திட்டேன் (அதான் தெரியுதே, இது ஒரு மேட்டரான்னு அவசரப்பட வேணாம்). உங்களுக்கும் டெம்ப்லேட் மாத்த உதவி தேவைனா, தாராளமா தொடர்புகொள்ளலாம். ஃபிரீயாய் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பா செய்து தருகிறேன்.(இது ச்சும்மா... செஞ்சு குடுடான்னு அடம் பிடிச்சீங்கன்னா செஞ்சு குடுத்துருவான் இந்த ஏனாஓனா, அவ்ளோ நல்ல மனசு).

பெஸ்கியின் டிஸ்கி 1: இந்தப் பதிவுல அதிகமா (பிராக்கெட்) இருக்குதேன்னு தோனுதா? அதுக்கு நா ஒன்னும் செய்ய முடியாது.
பெஸ்கியின் டிஸ்கி 2: மொதல்ல ஒன்னுன்னு போட்டுட்டேன்... ஆனா உண்மையிலயே ரெண்டாவது இல்ல. (இதுக்கு மொதல்ல 1 போடாமலேயே இருந்திருக்கலாமோ?)

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

கல்லூரி பூக்கள்

அழகிய கல்லூரி பூக்களில்



ல்வியே சிறந்தது என கற்கும் சில,



காதல்தான் எல்லாம் என அலையும் சில,



கிண்டலால் பிறர் மனதை வருத்தும் சில,



கீழான பழக்கங்களால் வருத்தும் சில,



குற்றம் கூறியே குறைபடும் சில-வேண்டா



கூட்டம் கூடியே அழியும் சில- தானும்



கெட்டு அருகிலுள்ளதையும் அழிக்கும் சில,



கேவலமான வாழ்க்கையை விரும்பும் சில,



கையாலாகாதவை என் பட்டம் பெறும் சில,



கொட்டமடித்தே தினம் வட்டம் போடும் சில,



கோபமே கொள்ளாமல் அமைதியாய் சில,



கெளரவமாய் நடந்து காட்டும் அதிசயமாய் சில,



என பல உள்ளத்தில


எதிலும் பொருந்தாமல்


நித்தமும் வாடியும்


உதிராமல் இருக்கின்றாயே!



என் இனிய பூவே!



N B:
இதில் ’பூவே என்று அழைத்திருப்பது பூவுள்ளம்
படைத்த சில மனிதர்களை ,
அது ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம் (94 டிசம்பரில் கிறுக்கியது)

---

-கிகி.

Share/Bookmark
Read More!

எங்கே இருக்கின்றாய்

என்னவளே

நெற்றிக்கு பொட்டு வைத்தாய்;

நிலவையே நீ தொட்டு வைத்தாய்;

என்னை மட்டும் ஏன் விட்டு வைத்தாய்?




கண்ணுக்கு மை தீட்டுகின்றாய்;

கண்ணானவன் எனை மட்டும் ஏன் வாட்டுகின்றாய்?





உன் உதடுகள் மின்னுதடி சாயத்தில்;

என் உள்ளமன்றோ உருகுதடி காயத்தில்;




ஆயிரம் கவிதைகள் கிடைத்துவிட்ட ஆதாயத்தில்;

பல்லாயிரம் கற்பனையில் மிதக்கின்றேன் ஆகாயத்தில்;



ஆகாயத்தில் கார்மேகங்கள்

சூழ்ந்த்தால் ஆலாபனை பாடுகிறேன் வாடி

முகத்தில் கருரோமங்கள்

சூழ்வதால் ஆகிவிடுகின்றன தாடி




காதலை தேடிப்போனேன் கவி பாடி

காதலி உன் பெயரை உரைக்குதே என் நாடி,



சொன்னதை மறந்துவிட்டு போனாய் நீ ஓடி,

சுகராகம் பாடுகின்றாய் யாரோடோ கூடி,



வானத்துக்கு பூமியின் மீது காதல்,

வஞ்சி உனக்கு என்னோடு மோதல்,





ஏனோ என் விழி கண்ணீரால் நனையுதடி,

எப்படி பொறுக்கின்றாய்

எங்கே இருக்கின்றாய்?




N B: என் நண்பனின் வருத்தம்


என் கவிதை வழியாய்(95-ஆம் ஆண்டு கிறுக்கியது)


---கி.கி

Share/Bookmark
Read More!

நிறம் மாறும் உறவுகள்

”ஏங்க போய்த்தான் ஆகணுமா”

“வேற என்ன செய்யச் சொல்ற”

“நாம இங்க ஏதாவது வியாபாரம்...”

“என்ன வியாபாரம் பண்ண முடியும் அப்படி பண்றதா இருந்தாலும்பணத்துக்கு எங்கே போறது”

“வெளிநாட்டுக்கு போக செலவு செய்யிற காசுல வியாபாரம் ஆரம்பிக்கலாமில்லையா”?


“ஆரம்பிக்கலாம்,ஆன வருமானம் அதிகமாக ஒன்றும் வராதே”

“கிடைக்கிறத வச்சுட்டு,நாமும் பிள்ளையும் ஒரு வேளை கஞ்சி குடித்தாவது நிம்மதியா இருக்கலாம்

“இந்தாப்பாரு உனக்கு இப்போ ஆறு மாதம்,அடுத்த மாதம் நீ உன் அம்மா வீட்டுக்கு
போயிடுவ அப்படி ஒரு 6 மாதம்,அதுக்கப்புறம் குழந்தைக்கு ஒன்று ஒன்றர வயசாகும்போது நான் திரும்பி வந்துவிடுவேன்”


இப்படி ஒரு வழியாக தன் மனைவியை சமாதானப்படுத்தி அரபு நாட்டுக்கு
வேலைக்கு கிளம்பினான் அந்த கணவன்.

இடையிடையே குழந்தையின் புகைப்படத்தை மின் அஞ்சலில்
பார்த்து,அங்கிருந்து இங்கு வருபவர்களிடம் பரிசுப்பொருட்கள்
கொடுத்தனுப்பி கடந்தது இரண்டு வருடம்.

தாயகம் திரும்பினான் ஒரளவு சம்பாத்தியத்துடன் சிறிது நிலம்
வாங்கினான், குழந்தையின் பேரில் வைப்பு முதலீடு செய்தான்.

“இனி இருக்கிற பணத்தை வைத்து இங்கேயே ஒரு வியாபாரம்
செய்யலாமுன்னு யோசிக்கிறேன்”

“ஏங்க நீங்க வந்து 3 மாசம் ஆகுது,இப்போ நான் 1 மாதம்
முழுகாமலிருக்கிறேன்,எப்படியும் என்னால் 2 வருடம் ஓட்ட
முடியும்,இங்கே வியாபாரம் பண்ணி கஷ்ட்ப்படுறதை விட
அங்க போய் வந்தீங்கன்னா, சின்னதா ஒரு வீடு கட்டி நாம்
தனியாகப்போய்,பின் வியாபாரம் செய்யலாமில்லையா”

இம்முறை மனைவி கணவனை சமாதனப்படுத்தி அனுப்பினாள்
அரபு நாட்டுக்கு?!

ஏழு எட்டு மாதங்களுக்குப் பின், இரண்டாவது குழந்தையும் பிறந்தது .

சிறிது நாட்களுக்கு பின் ஊர் திரும்பினான் கணவன் உயிரற்றவனாக.

கதறி அழுதனர் குடும்பத்தினர், கடைசியாக மனைவியும்.

“நான் அப்பவே சொன்னேன் போக வேண்டாம், போக வேண்டாம் என , கடைசியில் இப்படி போயிட்டியே, பிள்ளைங்க அப்பா எங்கேன்னு கேட்டா
நான் என்ன பதில் சொல்வேன்”

கூடியிருந்த கூட்டம் அதைக்கண்டு கண்ணீருடன் கலைந்தது.

ஒரு வருடத்திற்குப்பின் யாரோ முதல் குழந்தையிடம் கேட்டார்கள், அப்பா எங்கே என்று.
“அங்க அம்மாவோடு படுத்து தூங்குறாங்க” என இறந்த கணவனின் ஆயுள் காப்பீடு மற்றும் இழப்பீடு பணத்தில் கட்டிய வீட்டின் படுக்கை அறையை காட்டி சொன்னது இரண்டாவது குழந்தையை அரவணைத்தபடி.

பி.கு:-

இது முற்றிலும் கதையல்ல, 95% உண்மை.


---கி.கி



Share/Bookmark
Read More!