நறுமண தேவதை - சிறுகதை

து டீதானா? இனிப்பா, உவர்ப்பா? இல்லை இதுதான் டீயின் சுவையா? ஒன்றும் புரியவில்லை சுதாகருக்கு. கலரைப் பார்த்தான், இதுவரை பார்த்திராத புது நிறமாய் இருந்தது. அதற்கு மேல் குடிக்க மனமின்றி, பாதியோடு வைத்துவிட்டான். நான்கு ரூபாயை வைத்துவிட்டுத் திரும்பினான். இது என்ன நறுமணம்? மெய்மறந்து ஒரு கணம் கண்களை மூடினான். சில்லரையை எடுத்துப் போட்டுவிட்டு கடைக்காரர் கேட்டார், ”சார், நாலு ரூபா குடுத்துட்டுப் போங்க”.

திரும்பினான். அந்த மணம் இப்போது இல்லை. ”இப்பத்தான இங்க வச்சேன்”, நிதானமாகக் கூறினான் சுதாகர். ”என்ன சார் இது, கிலாஸ வச்சுட்டு அப்படியே திரும்பிப் போறீங்களே”, கடைக்காரனும் நிதானமாகத்தான் கேட்டான். அவனுடைய பார்வைதான் குறுகுறுவென இருப்பதாகத் தோன்றியது சுதாகருக்கு.

”நல்லா பாருப்பா, ரெண்டு ரெண்டு ரூபா, மொத்தம் நாலு ரூபா”.
”ரெண்டு ரெண்டு ரூபா நாலு ரூபான்னு எங்களுக்குத் தெரியாதா?” இப்போது அவன் வம்பிழுப்பது போலவே தெரிந்தது.

சுற்றி நோட்டம் விட்டான். எங்கும் காமிராவை ஒளித்து வைத்துவிட்டு நோட்டம் விடுகிறார்களா என்று. பின்பு சண்டையெல்லாம் போட்டுவிட்டு வழியவேண்டியிருக்கும். எதற்கு வம்பு என்று நாலு ரூபாய் கொடுத்து திரும்பி நடந்தான்.

நான்கு ரூபாய் இழந்தது சுதாகர் மனதை உறுத்தவே இல்லை. காரணம் அந்த நறுமணம். அன்று முழுவதும் அதே சிந்தனைதான். ”நேற்றும் இதே வாசம் அடித்ததே! அப்போ என்ன செய்துகொண்டிருந்தோம்?” யோசித்தான். அலுவலகத்தில் கணினி முன் உட்கார்ந்திருந்ததாய் ஞாபகம். அப்போது கடந்து சென்ற ப்ரியாவிடமிருந்து வந்திருக்கலாமென நினைத்திருந்தான். மறுநாளும் அதே வாசம் அதே நேரம் வருமென்றே தோன்றியது.

அலுவலகம் விடுமுறைதான். இதற்காகவே மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டான். கைக்கடிகாரத்தின் நேரத்தை சரியாக வைத்துவிட்டு வீட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தான். ஐந்து மணிக்கு அருகே என்பது அவனது கணிப்பு. கையிலிருக்கும் கடிகாரத்தையே பார்த்துகொண்டிருந்தான்.

சுதாகரின் அம்மா உள்ளே இருந்து எட்டிப் பார்த்தார். ”டிவி சும்மா ஓடுது, இவன் கையையே பாத்துட்டு இருக்கனே! சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கனும்”, முனுமுனுத்தவாரே வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

சுதாகர் கவனமெல்லாம் கடிகாரத்தின்மீதே இருந்தது. நேரம் ஐந்தை நெருங்கிக்கொண்டிருந்தது. நொடிமுள் பதினொன்றைத் தாண்டிக்கொண்டிருந்த நேரம், அம்மா கேட்டார் ”டேய், அப்பா மொபைல எடுத்து எங்கடா வச்ச?” மணி சரியாக ஐந்து ”டிவி மேல இருக்கு பாரும்மா” அன்னிச்சையாக பதில் வந்தது சுதாகரிடமிருந்து. டிக் டிக் டிக் டிக் டிக்... சரியாக ஐந்து நொடிதான் நறுமணம் நிலைத்தது.

"அப்பா மொபைல எங்க வச்சன்னு கேக்குறேன்ல, பதில் சொல்லாம அப்படி என்னடா பண்ணிட்டு இருக்க?"
"டிவி மேல இருக்கும்மா" குழப்பத்துடன் கத்தினான்.

இரவு அனைத்தையும் கணக்கு போட்டுப் பார்த்தான். அவனது கணிப்பு இதுதான். சரியாக ஐந்து மணியிலிருந்து ஐந்து நொடிகள் ஒரு நறுமணம் மிகுந்த தேவதை அவன் அருகில் வருகிறது. அந்த நேரம் அவன் செய்யும் செயல் அனைத்தும் மறைந்து விடுகிறது அல்லது மற்றவர்கள் மறந்து விடுகிறார்கள். இது அந்த தேவதையின் வரமாக இருக்கலாம். மறுநாள் சோதித்துப் பார்க்கலாமென முடிவு செய்தான்.

மறுநாள், அலுவலகத்தில் வேலை எதுவுமே ஓடவில்லை. மாலை ஐந்து மணி எப்போது வரும் என காத்துக்கிடந்தான். சிறிய அளவில் ஏதும் செய்து பார்க்கலாமென முடிவு செய்திருந்தான்.ஐந்து மணி ஆகப்போகிறது, அலுவலகத்துக்கு வெளியே, எதிரே இருக்கும் டீக்கடைக்கு கிளம்பினான்.

டீக்கடையில் ஒரு சிகரெட்டை வாங்கிவிட்டு கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தான். ஏற்கனவே கைக்கடிகாரத்தில் அலாரம் வைத்தாயிற்று. அருகில் இருவர் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தனர். பீப் பீப்... ஐந்து மணி. பேசிக்கொண்டே கடைக்குள் எட்டி ஒரு சிகரேட் பாக்கெட்டை ”ஒரு பாக்கெட் எடுத்துக்கிறேன்” என்றவாறே எடுத்து பாக்கெட்டுக்குள் வைத்தான். நறுமணம் மறைந்ததை உறுதி செய்துகொண்டு திரும்பி நடக்கலானான். சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தான். கடைக்காரர் அவர் வேலையை செய்துகொண்டிருந்தார்.

வீட்டிற்கு வந்து அதனையே ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான்.  திடீரென ஒரு சந்தேகம். அவர்தான் மிகவும் தெரிந்தவராயிற்றே, நாளை வாங்கிகொள்ளலாம் என விட்டிருப்பாரோ? அல்லது, நமக்குத் தெரிந்தவர்கள் திட்டமிட்டு இப்படி நம்மை நம்பச் செய்கிறார்களா? அப்படியென்றால் அந்த நறுமணம் எப்படி? கொஞ்சம் குழப்பம்தான். மறுநாள் அவனைத் தெரியாத இடத்திற்குச் சென்று சோதிக்கலாமென முடிவு செய்தான்.

மாலை நான்கு மணி. அலுவலத்திலிருந்து கிளம்பி, பைக்கில் வளைந்து நெளிந்து சென்றான். அறிமுகமே இல்லாத ஒரு கடையைத் தேர்வு செய்தான். நேரம் ஐந்தை நெருங்கும்போது கடையை நெருங்கி ”ஒரு மொசாம்பி” என்றான். கடையின் முன்பு சில கண்ணாடி பாட்டில்கள் கண்ணை உறுத்தின. முறுக்கு, கடலை மிட்டாய், பர்பி என வரிசையாக அடுக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்கள், சில வாடிக்கையாளர்கள் அருகில், காத்திருந்தான். பீப் பீப்... ஒரு கண்ணாடி பாட்டிலை அப்படியே கையால் மேலே தூக்கி, தரையில் ஓங்கி அடித்தான். கடைக்காரர் அலறினார், ”எதுக்குய்யா இப்படி ஒடைக்கிற”. பக்கத்தில் இருந்தவர்களோ விலகி நின்று ஒரு மாதிரி பார்த்தனர். ஒரு நொடி ஒன்றும் யூகிக்க முடியவில்லை சுதாகருக்கு. அடுத்து, ”எப்படி கீழே விழுந்தது?”, இது கடைக்காரர். ”தெரியல பாஸ், ஓரத்துல இருந்துருக்கும், அப்படியே கீழ விழுந்திருக்கும்போல இருக்கு”, பக்கத்தில் நின்றிருந்தவர்.

உறுதி செய்துகொண்டான். இது நிச்சயமாய் நமக்குக் கிடைத்த வரம்தான். இந்த ஐந்து நொடி நாம் என்ன நினைத்தாலும் செய்யலாம். மீண்டும் அலுவலகம் வந்து, பின் வீடு செல்லும் வரை ஒரு கவலை கூட இல்லை. இனி என்ன இருக்கிறது கவலைப்பட, இதை வைத்து என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாமே என்ற நினைப்புத்தான். அடுத்து என்னவெல்லாம் செய்யலாமென திட்டம் போட்டது சுதாகரின் மனது.

பைக் வாங்கனும், இல்லை கார் வாங்கலாம், இந்த சக்தியை எப்படி பயன்படுத்துவது. யோசித்தான், ஒன்றும் பிடிபடவில்லை. பணத்தை வேண்டுமானால் எடுத்துக்கொண்டு ஓடலாம். எங்கு பணத்தை எடுக்கலாம், எப்படி எடுக்கலாம்? பெட்டிக்கடையில் எடுக்கலாம். அங்கே குறைவாகத்தானே இருக்கும். இல்லையெனில் ஒயின் ஷாபில் எடுக்கலாம். கத்தையாக எடுத்து பைக்குள் வைத்துவிடலாம். ஐந்து நொடி கழித்து எடுத்தது தெரியவா போகிறது? கடன் வாங்கும் போது இந்த ஐந்து மணி பார்த்து வாங்க வேண்டும். ஆபீஸில் யாரிடம் கடன் வாங்கலாம்? நமக்குப் பிடிக்கதவர்களிடம் மட்டுமே வேலையைக் காட்ட வேண்டும். பின்பு, அதிகமாக குடைச்சல் குடுக்கும் டீம் லீடரை மூக்கில் ஒரு குத்து குத்தலாமா?

இப்படியே யோசித்துக் கொண்டிருந்த சுதாகரின் எண்ணங்கள் ப்ரியாவில் வந்து நின்றது. திமிர் பிடித்தவள். பாசுக்கு தெரிந்தவள் என்பதால் ரொம்பத்தான் ஆணவம். ஆம்பிளை நம்மளை மதிக்கிறாளா? ப்ராஜக்ட் மேனேஜர் என்றால் எல்லோரையும் மட்டம் தட்டித்தான் பேசவேண்டுமா? இவள் திமிரை அடக்க வேண்டுமே. ஆனால் அதெல்லாம் சாத்தியமா? சும்மா சொல்லக்கூடாது, செம பிகருதான். முதலில் நமது ஆசையைத் தீர்த்துக்கொள்வோம். நமது ரகசிய நேரத்தில், அவளது உதடு கிழிய ஒரு முத்தத்தை பதித்துவிட வேண்டும், முடிந்தால் செல்போனில் வீடியோ எடுத்துவிடவேண்டும்.

சுதாகர் இவ்வாறு பல திட்டங்களை வகுத்தபின், நாளை என்ன செய்வதென்று முடிவு செய்தான். அனைவர் முன்னிலையில், ப்ரியாவின் உதட்டில் நச்சென்று நான்கு நொடிக்கு ஒரு முத்தம் பதிப்பதென்று. அடுத்த நொடி யாருக்குத் தெரியப்போகிறது. ஆனால் அவளுக்கு மட்டுமே தெரிய வைக்க வேண்டும், யாரோ பல் பதித்திருக்கிறார்கள் என்று.

எவ்வளவு திட்டங்கள் உதிக்கின்றன, நமக்குள் இவ்வளவு எண்ணங்கள் இருக்கிறதா என அவனுக்கே ஆச்சர்யம். கொஞ்சம் தூங்குவோம் என கண்களை மூடினான். ப்ரியாவின் பரிதாப முகமே அவனது மனதுக்குள் ஆடியது. நினைத்துக் கொண்டான் ”கேட்காமலேயே வரம் தந்த நறுமண தேவதையே, நீ வாழ்க”.

தேவதை சிரித்தாள், ”இந்த ஐந்து நொடி வரம் ஐந்து நாளைக்குத்தானப்பா கொடுத்தேன்”!

---

-அதி பிரதாபன்.

சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டிக்காக எழுதியது

Share/Bookmark

25 ஊக்கங்கள்:

☀நான் ஆதவன்☀ said...

கதை நடை சுவாரஸியமா இருக்கு மாப்பி. அவன் எப்ப தப்பான எண்ணத்துக்கு வந்தானோ அப்பவே முடிவு இப்படி தான் இருக்கும்னு யூகிக்க முடிஞ்சுது.

☀நான் ஆதவன்☀ said...

’நச்’க்கு இதே கதை, நடையோட முடிவு இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம்னு எனக்கு தோணுது.

மணிஜி said...

கொஞ்சம் சுருக்கமா இருந்தா இன்னும் நச்சுன்னு இருக்கும்

Thamira said...

நல்ல அழகான பெயர்.

எவனோஒருவன் / அதிபிரதாபன்
இப்படி எழுதினால் இருவர் எழுதியது போலாகும்.

எவனோஒருவன் (எ) அதிபிரதாபன்
இப்படிப்போடுங்கள்.

கதை நேரமில்லை. நாளை வந்து படிக்கிறேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹீம்ம்ம்ம்.. கலக்கறீங்க.. எனக்கெண்ணமோ அந்த கதையில வ்ர ஆள் நீங்க தானோன்னு ஒரு சின்ன டவுட் :)))

Beski said...

நன்றி ஆதவா,
நீ பெரிய ஆளு மாப்பி, உன்னையெல்லாம் ஏமாத்த முடியுமா?
முடிவு மாத்தத் தோனல, வேணும்னா வேற கதை எழுதுறேன்.

நன்றி தண்டோரா,
அடுத்த முறை முயற்சி செய்கிறேன்.

நன்றி ஆதி அண்ணே,
எவனோஒருவன் (எ) அதிபிரதாபன் - இது சரியா வருமா? இல்லை அதிபிரதாபன் (எ) எவனோஒருவன் - இதுவா?
படித்துவிட்டு சொல்லுங்கள்.

நன்றி ராஜ்,
என்னது? இந்த கதைக்கும் இப்படியே சொன்னா எப்படி?

iniyavan said...

அருமை! அருமை!! அருமை!!!

கலக்கீட்டிங்க. நல்லா இருக்கு.

உரையாடல் அமைப்பு நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற அந்த சையிண்டிஸ் கதையின் பாதிப்பு லேசாக உள்ளது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Jana said...

நறுமணதேவதை வாசமாகத்தான் இருக்கின்றாள். முன்னர் பல ஆண்டுகளின் முன்னர் படித்த "கண்ணுக்குத்தெரியாதவன் காதலிக்கின்றான்" (மறைதல்தான் இது.. இந்தக்கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டகதை) ஞாபங்களை ஊட்டிவிட்டீர்கள்.
தொடர்ந்தும் வித்தியாசமான, அமானுசமான கதைகளை தந்துகொண்டிருக்கின்றீர்கள் படிக்கவும் ஆர்மாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Thamira said...

வித்தியாசமான ஃபேண்டஸி கதை. இதுபோல நிறைய படித்திருந்தாலும் வேறு விதமான ட்ரீட்டில் நன்றாக இருக்கிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல ஃப்ளோல்ல நல்லா வந்துருக்கு பெஸ்கி..

Beski said...

கருத்துக்களுக்கு நன்றி என்.உலகநாதன்.

நன்றி ஜனா.
//அமானுசமான கதைகளை தந்துகொண்டிருக்கின்றீர்கள் //
என்னன்னு தெரியல, யோசிக்கிறது எல்லாம் இப்படித்தான் வருகிறது.

கருத்துக்களுக்கு நன்றி ஆதி அண்ணே.

நன்றி வசந்த்.

தினேஷ் ராம் said...

கதை... கற்பனை.. அருமை.

Unknown said...

நல்லா இருக்குங்க.புது வித கற்பனை.

முடிவு:கொஞ்சம் யோசித்தால் வேறு முடிவு கிடைக்கலாமோ?


வாழ்த்துக்கள்!

Beski said...

நன்றி சாம்ராஜ்ய ப்ரியன்.

//கே.ரவிஷங்கர் said...
நல்லா இருக்குங்க.புது வித கற்பனை.//
தலைவா, வாங்க. ரொம்ப நன்றி.

//முடிவு:கொஞ்சம் யோசித்தால் வேறு முடிவு கிடைக்கலாமோ?//
அப்படியா? பேசலாம். சனிக்கிழமை வருவீங்கல்ல?

தமிழினியன் said...

முடிவு நல்லா இருக்கு ஆனா ஒரு 2 வரிக்கு முன்னாலயே இதுதான் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சுடுது ஆனா எப்படின்னு தெரியலன்னு யோசிக்கும் போது முடிவைப் பார்த்ததும் செம நச்

Beski said...

நன்றி தமிழினியன்.

CS. Mohan Kumar said...

நல்லா இருந்தது கதை. சொல்ல போனா suspense தாங்க முடியாம கடைசி para போய் பாக்கலாமான்னு இருந்தது. (அப்படி செய்யலை)

தொடர்ந்து கலக்குங்கள்.

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/

Beski said...

நன்றி மோகன் குமார்.
பதிவர் சந்திப்பில் சந்திக்கலாம். மறக்காமல் வந்துவிடவும்.

ஸ்வர்ணரேக்கா said...

நல்லாயிருக்கு....

Beski said...

நன்றி ஸ்வர்ணரேக்கா.

CS. Mohan Kumar said...

ஊரில் இருந்து வந்தாச்சா?

சர்வேசன் டாப் 20 லிஸ்ட் போட்டுருக்கார். அதில் உங்க கதை, Cable Shankar, ஆதி, முரளி கண்ணன் மற்றும் என் கதையும் செலெக்ட் ஆகியிருக்கு.

thamizhparavai said...

நல்ல வித்தியாசமான கதை, நச் கூடப் பரவாயில்லை..

Beski said...

நன்றி மோகன்குமார்,
வந்தாச்சு.
பார்த்தேன், மகிழ்ச்சியாக இருக்கிறது.

நன்றி தமிழ்ப்பறவை.

ஷங்கி said...

அருமையா இருக்கு அதி பிரதாபன். ஒரு தட்டச்சு பிழை இருக்கிறது. சரி செய்யுங்கள். (நாலு நொடி என்பதற்குப் பதில் நாலு நிமிடம் என்று இருக்கிறது)
முதல் கட்ட வெற்றிக்கு வாழ்த்துகள். முழுமையாக வெற்றி பெற வாழ்த்துகள்.

Beski said...

நன்றி ஷங்கி.
சரி பண்ணியாச்சு, ரொம்ப நன்றி.