அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர் (நிலாரசிகன், அடலேறு, ஜனா, அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் - இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம்.
குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும்,
அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன. மற்ற மூவர்களுக்கான சுட்டி கதையின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாசித்து உங்களது பின்னூட்டத்தை
பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சுடர் - சிறுகதை

எங்களது வாழ்க்கை எப்போது சூனியமானது என்றே தெரியவில்லை. கொஞ்ச நாட்களாக இப்படித்தான். எனது கணவரைக் காணவில்லை. இரு குழந்தைகளில் ஒன்று மட்டுமே இருக்கிறது. எங்கள் வீடு இன்னேரம் தரைமட்டமாய் ஆயிருக்கும். கணவரும், பிள்ளையும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் தெரியாது. ஒன்று மட்டும் தெரிகிறது, நாங்களும் சாகப் போகிறோம்.
அடுத்த வேளை உணவு எப்படிக் கிடைக்கும், எது கிடைக்கும் என்றெல்லாம் யோசிக்க நேரமில்லை. அது கிடக்கட்டும். இப்போது உயிர் பிழைப்பது ஒன்றே நோக்கமாய் இருக்கிறது. ஒரு வேளை உணவில்லாமல் கூட இறக்கும் வாய்ப்புள்ளது. எவ்வளவு தூரம் ஓடுவது, உணவில்லாமல்? கிடைக்கும் சிறிது உணவு எனது குழந்தைக்கே போதவில்லையே! பெண் குழந்தை, ஆறு வயது. இவளாவது பிழைத்துத் தழைக்கட்டும். இருந்தாலும் மறுபுறம் யோசிக்கிறேன். எதற்கு இவளை வளர்க்க வேண்டும், ஏதும் சண்டாளன் வந்து நாசமாக்க?
உயிர் பிழைத்துவிட்டோமோ? சிறிது நாட்களாக குண்டுச் சத்தங்கள் இல்லையே! இப்படி மொத்தமாக அடைத்து வைத்திருக்கிறார்களே, கொல்வதற்கா? இன்னும் என் மகள் உயிருடன்தான் இருக்கிறாள், என்னுடன்.
எங்கும் ராணுவ வீரர்கள், கையில் ஆயுதங்களுடன். காலையில் எழும்போது கொட்டாவி விட்டபடி, சாப்பாட்டுக்காக ஏங்கும்போது ஏதோ ஏக்கமாய் பார்த்தபடி, உச்சி வெயிலில் ஏளனமாய் முறைத்தபடி, உணர்ச்சிவசப்பட்டால் கொலைவெறியுடன் அடித்துத் துவைத்தபடி, தூங்கும் முன் கதைத்தபடி... எப்போதும் இவர்களே தெரிகிறார்கள் என் கண் முன். இப்போது என் மகளை விட இவர்களைத்தான் அதிகம் பார்க்கிறேன், பயம். எப்போது என்ன செய்வார்களோ தெரியாது. இப்படி காட்டுமிராண்டிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோமே, நம் மனமும் இவர்களைப் போல் மாறி விடாதா? எனது குழந்தையை நினைத்துத்தான் கவலையாக இருக்கிறது, இதையெல்லாம் பார்க்கும் அவள் என்ன ஆவாளோ, இப்போதே அவளது மனதில் அழுகை, இரக்கம் எல்லாம் காணாமல் போயிருக்குமோ?
என்னால் எழுந்து நடக்க முடியவில்லை, மிகவும் பலவீனமாகிவிட்டேன் சில நாட்களாகவே. சாப்பாடு வாங்கக் கூட போக முடியவில்லை. எனது மகளுக்கு எப்படி உணவளிப்பது? அவள் உயிருடன் இருந்திருந்தால் கூட இவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டேன், அவளை நினைத்து. இந்த முறை அவளே சென்றிருக்கிறாள், வேறு வழியில்லை. ஏதாவது கிடைத்தால் கண்டிப்பாக எனக்கும் கொண்டு வருவாள்.
அதோ வருகிறாள். கையில் ஒரு ரொட்டித் துண்டு. அவளுக்கு இருக்கும் பசிக்கு அங்கேயே தின்றிருக்கலாம், யாரேனும் பிடுங்கியிருக்கலாம் அல்லது உணவு கிடைக்காமல் கூட போயிருக்கலாம். எல்லாவற்றையும் மீறி ஏதோ கிடைத்துவிட்டது, இன்னும் ஒரு நாள் உயிர் வாழும் தன்னம்பிக்கை இப்போது வந்துவிட்டது. எனக்காகத்தான் கொண்டு வருகிறாள், எத்தனை முறை பட்டினி கிடந்து ஊட்டியிருப்பேன்?
நானோ இப்படி வாழ்வின் இன்னொரு நாளைப் பற்றி ஏக்கத்தோடு காத்துக்கொண்டிருக்கிறேன். அவளோ சற்று தொலைவிலிருக்கும் ராணுவ வீரன் அருகே வந்தபோது நின்றுவிட்டாள், ரொட்டித் துண்டில் பாதியைப் பிய்த்து அவனை நோக்கி நீட்டியபடி, எனது சுடர்.
-அதி பிரதாபன்.
மற்ற மூன்று கதைகள்: அடலேறு - மரப்பாச்சி பொம்மை- ஒரு கரு நான்கு கதைகள்! ஜனா - ஒரு கரு நான்கு கதைகள்! நிலாரசிகன் - ஒரு கரு நான்கு கதைகள்!

Read More!