சின்ன மனசு - போட்டிக்கான சிறுகதை

சுரேஷ் ரயில் நிலையம் நோக்கி வேகமாக நடந்தான். அவனுக்கு, இஷ்டப்பட்ட வாழ்க்கை கிடைக்கப் போகும் சந்தோசம் மனது முழுதும் நிரம்பியிருந்தது. ‘நாளைலருந்து காலைலயே எந்திரிக்க வேணாம், சுப்பம்மா டீச்சரோ பாட்டியோ அடிக்க மாட்டாங்க, இஷ்டம்போல வெளாடலாம், ஆத்திலோ குளத்திலோ குளிக்கலாம், நெனைச்ச நேரம் ஐஸ்கிரீம் சாப்டலாம், எதையும் கண்டிக்க அப்பா இருக்க மாட்டார்’ என்று எண்ணியவாறே ரயில் நிலையம் உள்ளே நுழைந்தான்.

சுரேஷ், வயது 11, ஆறாம் வகுப்பு படிக்கிறான். அப்பா, அம்மா அரசு வேலையில். சொந்த வீட்டில் இருப்பு. ஒரு தம்பி மற்றும் ஆச்சியும் சேர்த்து வீட்டில் மொத்த்ம் ஐந்து பேர். கேட்டது கிடைக்கும் அளவுக்கு நல்ல வசதி. இவ்வளவு இருந்தும் இந்த சின்ன வயதில் வாழ்க்கையை வெறுத்தவன் அவனாகத்தான் இருப்பான். ரொம்ப நாளாகவே வீட்டை விட்டு ஓடிவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். இன்று சுப்பம்மா டீச்சர் அடித்த அடி சற்று அதிகமாக வலித்தது போலிருந்தது, கிளம்பிவிட்டான்.

உள்ளே நுழைந்ததும் சுற்று முற்றும் பார்த்தான், கூட்டம் அதிகம் இல்லை.சற்று தூரத்தில் சிறிய வரிசை ஒன்று. ’டிக்கட் எடுக்கிறார்கள்’ அவனது யூகம். ‘நாமளும் எடுக்கனுமோ? சரவணன் போகும்போது டிக்கட் எடுத்தமாரி சொல்லலியே?!’

சரவணன், ஒன்னாம் வகுப்பிலிருந்தே இவனது உற்ற தோழன். பள்ளி தவிர விடுமுறைகளிலும் ஒன்றாகவே சுற்றுவார்கள். ஆனால் சரவணன் அளவுக்கு சுரேஷுக்கு சுதந்திரம் கிடையாது. சுரேஷ் எங்கே போனாலும் வீட்டில் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும், சாப்பிடும் நேரம் வீட்டிலிருக்க வேண்டும், இருட்டியபின் வீட்டிற்கு வெளியே இருக்கக் கூடாது... இப்படி தனக்கு இருப்பது போல சரவணனுக்கு இல்லாதது சுரேஷுக்கு எப்போதும் ஏக்கமாய் இருக்கும். சரவணனுக்கு என்ன குறையோ, வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். ஆறு மாதம் கழித்துத் திரும்பி வந்து , சுரேஷிடம் தனது அனுபவங்களை, சிந்துபாத் கதை ரேஞ்சுக்கு அடுக்கினான். அதிலிருந்தே இவனுக்கும், தானும் எங்காவது சென்று சுதந்திரமாக வாழவேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து கொண்டிருந்தது.

’எங்க போனாலும் சின்னப் பசங்கள யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்கன்னு அவன் சொல்லிருக்கானே!? சரி, நமக்கு டிக்கட் தேவல்ல’, என்றவாறு உள்ளே முன்னேறினான். முதல் பிளாட்பாரம், ரயில் ஏதும் இல்லை. இன்னும் அரை மணி நேரத்தில் வரும் என அவன் அறிந்திருந்தான், முன்னமே தகவல்களைத் திரட்டியிருந்தான். செலவுக்கு, சேர்த்து வைத்திருந்த பத்து ரூபாய் இருந்தது. ‘இந்தப் பையை ஏந்தான் கொண்டுவந்தமோ?! இங்கேயே விட்டுட்டுப் போய்றவேண்டியதான்’, தோளிலிருந்த பையை இறக்கி பெஞ்சில் வைத்துவிட்டு அருகே உட்கார்ந்துகொண்டான்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் சுற்று முற்றும் பார்த்தான், ஆங்காங்கே மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். யாரும் தன்னை கவனிக்காதது கண்டு சுதந்திரக் காற்றை நிம்மதியாய் சுவாசித்தான்.

‘நாம நல்லாத்தான படிக்கிறோம்! அப்புறம் ஏன் நம்மளப் போட்டு இப்படி அடிக்கிறாங்க? அதுலயும் அந்த சுப்பம்மா டீச்சர், ஆச்சி ஃப்ரண்டாமே! எதுக்கெடுத்தாலும் அடிக்கிறாங்க. வீட்டுல மாத்திரை சாப்பிடலன்னா ஸ்கூல்ல அடிக்கிறாங்க, ஸ்கூல்ல தண்ணில வெளாண்டா வீட்டுல அடிக்கிறாங்க. எல்லா பசங்களும் தெருவுல எட்டு மணி வர வெளாடுறாங்க, நான் மட்டும் ஆறு மணி வரதான் வெளாடனுமா? குளத்துல குளிக்கப் போனா அடி, ஆத்துல மீன் பிடிக்கப் போனா அடி, ஏந்தான் இப்படி கொடுமைப்படுத்துறாங்களோ!’

தற்கொலை கூட செய்துகொள்ளலாம் என எண்ணியிருந்தான். ‘மருந்தக் குடிச்சா, வயிறு எரியுமாம்டா, உடம்புக்குள்ள இருக்குற எல்லாம் அழுகிப் போயிருமாம். செத்துட்டாப் பரவாயில்ல, ஆனா பொழச்சிட்டா ரொம்ப கஷ்டமாம்டா’, என சரவணன் கூறியதே அதைச் செய்யாததற்குக் காரணம். ‘சரவணன் நல்லா ஃப்ரீயாத்தான சுத்துனான்? அப்புறம் அவன் ஏன் வீட்டைவிட்டு ஓடிப்போகனும்?’, இதற்கு மட்டும் சுரேஷுக்கு பதில் தெரியவில்லை.

’மதுரை செல்லும் ரயில் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும்’, அறிவிப்பு ஒலித்தது. இப்போது மனசு கொஞ்சம் படபடப்பதாய் உணர்ந்தான். தூரத்தில் ஒரு சிறுமி, கந்தல் ஆடையும், கலைந்த தலையுமாய் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். பார்த்த அவனுக்கு, சரவணன் சொன்னது ஞாபகம் வந்தது, ‘பாம்பேலல்லாம், நம்மள மாதிரி பசங்கள கடத்திக்கிட்டுப் போயீ, கண்ணப் புடுங்கி, பிச்சையெடுக்க விட்டுருவாங்களாம்’. நெஞ்சில் படபடப்பு கூடியது. அந்தச் சிறுமியை நன்றாகப் பார்த்தான், கண் இருந்தது.

அப்போது, முறுக்கு மீசையும், வாட்டசாட்டமுமான ஆசாமி அவனைப் பார்த்துக்கொண்டே நெருங்கினார். ‘அய்யய்யோ! நம்மள கடத்திக்கிட்டு போகப் போறாங்க போலருக்கே!’... அருகில் வந்தவர் ‘மணி என்ன தம்பி?’ என்றார். அவனது வகுப்பிலேயே இருவர் மட்டுமே கைக்கடிகாரம் அணிந்தவர்கள். ஒன்று இவன், மற்றொருவர் சுப்பம்மா டீச்சர். பேச வார்த்தைகள் வராமல் கையைக் காண்பித்தான். ‘இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்துரும்’, என்றவாறு தன் மனைவியை நோக்கிச் சென்றார். மீண்டும் படபட.

அவருடைய மனைவியைப் பார்த்ததும் அவனுடைய அம்மா ஞாபகம் வந்தது சுரேஷுக்கு. அம்மாதான் இவ்வளவு நாள் அவன் அந்த வீட்டில் இருந்ததற்குக் காரணம், இல்லையென்றால் எப்போதோ காணாமல் போயிருப்பான். அப்பா அடிக்கும்போது அம்மாதான் இடையில் புகுந்து காப்பாற்றுவார், சில நேரங்களில் விசயம் அப்பா காதுக்குப் போகாமலேயே பார்த்துக்கொள்வார். கேட்கும் பண்டங்கள் வாங்கித் தருவார். ஆனால் , ஆச்சி அடிப்பதை மட்டும் தடுக்க மாட்டாரே? அவர் மாமியாரல்லவா! அந்த விசயத்தில் மட்டும் அம்மா மேல் இவனுக்குக் கொஞ்சம் கோபம் உண்டு. என்னதான் மெத்தையெல்லாம் இருந்தாலும் அம்மா மடியில் படுத்துத் தூங்குவதில்தான் அவனுக்குத் தனி சுகம். மாதா மாதம் மளிகை சாமான் வாங்குவதற்கு அவனும் அம்மாவும்தான் போவார்கள். அனைத்துப் பொருட்களையும் பையில் போட்டு, சைக்கிள் கேரியரில் வைத்து உருட்டிக்கொண்டு வருவான். அன்று மட்டும் அம்மாவிடமிருந்து ஒரு ஸ்பெசல் கவனிப்பு உண்டு அவனுக்கு. ‘நாம இல்லன்னா அம்மா அழுவாங்களோ? அப்பா லேசா திட்டுனாக் கூட அழுதுருவாங்களே?!’.

அம்மாவை நினைத்துக் கொண்டிருக்கும்போதே தூரத்தில் ரயில் வருவது தெரிந்தது. அனைவரும் அவனையே பார்ப்பது போல இருந்தது. நெஞ்சு படபடவென இன்னும் வேகமாய் அடித்தது. ‘அய்யய்யோ! இன்னிக்கி மளிகசாமான் வாங்க போனும்னு சொன்னாங்களே, நாம இல்லன்னா அம்மா எப்படி தனியாத் தூக்கிட்டு வருவாங்க? அப்பா கூட ஹெல்ப் பண்ண மாட்டாரே! அப்போ, இன்னிக்கிப் போயி வாங்கிக் குடுத்துட்டு, நாளைக்கி வந்து ஓடிப்போலாம்’, என்று எண்ணியவாறு பையை தூக்கித் தோளில் மாட்டினான். ரயில் நிலையம் விட்டு வெளியே வரும்போது, ஏதோ ஒரு நிம்மதி அவனது மனது முழுதும் நிறைந்திருந்தது. அந்த நிம்மதி, உள்ளே வரும்போது இருந்த மகிழ்ச்சியைவிட பல மடங்கு பெரிதாய் இருப்பதை அவன் உணர ஆரம்பித்தான்.
-x-
Share/Bookmark

16 ஊக்கங்கள்:

Suresh said...

நண்பா முழுவதும் படித்தேன் ஒரு வேளை என் பெயரை வைத்தாலோ என்னவோ பொறுமையா படிச்சிட்டேன்...

கதை எதார்த்தமா அழகா இருக்கு, அந்த வயசுல எப்படி யோசிப்பாங்களோ அதே மாதிரி யோசிச்சு எழுதியது அழகு...

வாழ்த்துகள் மச்சான்

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாழ்த்துக்கள்.. நல்லாயிருக்கு..

Beski said...

நன்றி சுரேஷ்... பொறுமையா படிச்சதுக்கும்... கருத்துக்களைப் பகிர்ந்ததுக்கும்.

Beski said...

குறை ஒன்றும் இல்லை,
நன்றி...

தங்களுடைய வாழ்த்துக்களே பரிசு பெற்ற திருப்தியைக் கொடுக்கின்றன.

Unknown said...

"சின்ன மனசு" சொல்லும் கருத்து நிச்சயம் சின்ன கருத்தல்ல..!

Beski said...

நன்றி எழில்.

butterfly Surya said...

அருமை.

வாழ்த்துகள்.

Beski said...

வண்ணத்துப்பூச்சியாருக்கு நன்றி.

Unknown said...

கதை சூப்பர் தல.வித்தியாசமான கதை.

// அப்போ, இன்னிக்கிப் போயி வாங்கிக் குடுத்துட்டு, நாளைக்கி வந்து ஓடிப்போலாம்’, என்று எண்ணியவாறு பையை தூக்கித் தோளில் மாட்டினான்.//

மனதைத் தொடும் வரிகள்.இதற்கு பின் வரிகள் வேண்டாம். கதை இங்கு முடிந்து விடுகிறது.”நச்” என்று முடியும்.வாசகன் மனதில் அலை அடிக்கும்.
க்டைசி திருப்பத்தை “சடார்” என்று அடியுங்கள்.

என் வேண்டுகோள் இது:

கடைசி வரிகள் வாசகன் மனதில் வந்து விடும்.நீங்கள் நோட்ஸ் போட வேண்டாம்.

வாழ்த்துக்கள்!

Beski said...

//இதற்கு பின் வரிகள் வேண்டாம். கதை இங்கு முடிந்து விடுகிறது.”நச்” என்று முடியும்.வாசகன் மனதில் அலை அடிக்கும்.
க்டைசி திருப்பத்தை “சடார்” என்று அடியுங்கள்.//
எனக்கு கதை எழுதுவதில் அனுபவம் இல்லை. இதே போல, கதை எழுதுவதில் உள்ள நுனுக்கங்களை, தவறுகளை இப்படி நேரடியாகச் சொல்வது, எனது எழுத்துக்கள் தரம் உயர பெரிதும் உதவும்.
--
//கடைசி வரிகள் வாசகன் மனதில் வந்து விடும்.நீங்கள் நோட்ஸ் போட வேண்டாம்.//
இதே சந்தேகம்தான் எனக்கும், சரியாகச் சொல்லிவிட்டீர்கள். ஆனால் என்ன செய்வது, போட்டுவிட்டேன்.
--
போட்டி அல்லவா? இப்படித் திருத்துவது முறையாகாது என்றே நினைக்கிறேன். விடுங்க மச்சான், இன்னும் எவ்வளவோ வரும், ஒரு கை பாத்துறலாம்.
--
//வாழ்த்துக்கள்!//
நன்றி மச்சான்.

iniyavan said...

கதை நல்லா வந்துருக்கு.

வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

Beski said...

//இனியவன்' என். உலகநாதன் said...
கதை நல்லா வந்துருக்கு.
வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.//
தங்களது வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்.

ஷங்கி said...

இப்பதான் படிச்சேன். நேரேஷன் சூப்பர்! பரிசு கிடைக்கலைன்னாலும் விமர்சகர் ரவிஷங்கர் பாராட்டிட்டாரே!

Beski said...

//சங்கா said...
இப்பதான் படிச்சேன். நேரேஷன் சூப்பர்!//
நன்றி அண்ணே.

//பரிசு கிடைக்கலைன்னாலும் விமர்சகர் ரவிஷங்கர் பாராட்டிட்டாரே!//
இதுதான நமக்கு வேணும். எழுதினவொடனே வந்த பின்னூட்டங்களிலேயே பரம திருப்தி. ஏன்னா, நான் எழுதிய முதல் கதை இல்லையா?

PPattian said...

கதை அருமையா இருக்கு. அதிலும் சின்ன மனசுக்குப் புரியாத இந்த அரசியலை மிகவும் ரசிச்சேன்

//ஆனால் , ஆச்சி அடிப்பதை மட்டும் தடுக்க மாட்டாரே? //

Beski said...

//PPattian : புபட்டியன் said...

கதை அருமையா இருக்கு. அதிலும் சின்ன மனசுக்குப் புரியாத இந்த அரசியலை மிகவும் ரசிச்சேன்//
வருகைக்கு நன்றி புபட்டியன்.
உள்குத்து புரிஞ்சுடுச்சா?