முடியாது = தெரியாது - பாகம் 2

முடியாது = தெரியாது - பாகம் 1
தொடர்ச்சி...

அடுத்து ‘அம்பை’ கிளைக்குப் போன் போட்டான். அங்கு சொன்னது கேட்டு நொந்தேபோய்விட்டான்!

’நீங்க இந்தியாவுல எங்க போய் வேனாலும் ரினீவல் பண்ணிக்கலாமே சார்...’
அந்த விசயம் கூட பெரிதல்ல, அவர் சொன்ன விதம் அவனை மேலும் சூடாக்கியது. தூத்துக்குடி நண்பனுக்கு போன் போட்டு அனைத்தையும் திரும்ப அனுப்பச் சொன்னான். இரு நாட்களில் கைக்கு வந்த்தது.... இன்னும் இரு நாட்களின் முடியப்போகிறது. திரும்பவும் சென்னையிலிருக்கும் அந்த கிளைக்குச் சென்றான். அதே மாமிதான்,
‘மேடம், இத இங்க கூட ரினீவல் பண்ணிக்கலாமே மேடம், அம்பை பிராஞ்ல சொன்னாங்க..’
’முடியாது சார், அப்படியெல்லாம் பண்ண முடியாது...’
பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பக்கம் ஒருவர்...
‘ஏம்பா... அத இங்க கொண்டா...’
வாங்கி செந்தில் மாதிரி லேசா 45 டிகிரில அங்குமிங்கும் திருப்பிப் பார்த்தார்.
‘முடியாதேப்பா....!’
இதுக்குத்தான் இவ்வளவு நேரம் பார்த்தாரா?
‘சார், ஒரிஜினல் ஆர்சி புக் இருக்கு, இன்சுரன்ஸ் இருக்கு, இன்னும் எக்ஸ்பரி ஆகல, பைக் கூட கீழதான் நிக்கிது, இதுக்கு மேலயும் பண்ண முடியாதா?’
முடியவே முடியாது என்றாகி விட்டது. அவனுக்கு ‘முடியல’ என்றாகிவிட்டது.

அடுத்து அம்பை கிளைக்கு போன், அவர் மீண்டும் அதையே சொன்னார்.
‘அதெல்லாம் பண்ணலாம் சார், நீங்க மானேஜரைப் போய் பாருங்க, அப்படியும் முடியாதுன்னு சொன்னா என்கிட்ட சொல்லுங்க, நா பேசறேன்’.
அவனுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. திரும்பவும் சென்னை கிளைக்கு போகலாம்னு நினைக்கும் போது... அவனுக்கு அது தோன்றியது.

முதலில் நேராகச் செல்லவில்லை, போன் செய்தான்.
‘பைக் இன்சூரன்ஸ் ரினீவல் பண்ணனும் சார்’
‘எக்ஸ்பரி ஆய்ட்டா?’
‘ஆய்ட்டு சார்’
மறுபுறம் யோசனை
‘பழைய இன்சூரன்ஸ் காப்பி, பைக் எல்லாம் இருக்கு சார், எப்படியாவது பண்ணிக் குடுங்க சார்...’
மீண்டுமொரு யோசனைக்குப் பின்
‘வாங்க பாத்துக்கலாம்’
அவனுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டும் போல இருந்தது; தனது தலையை அல்ல, போனில் பேசியவனின் தலையை.

ஒரு முடிவோடு நேரில் சென்றான்.
‘மேனேஜரைப் பாக்கனும்’
அவனிடம் வேறெதுவும் கேட்கவில்லை, அவன் அந்த அளவுக்கு பரிச்சயமாகிவிட்டான்.
‘வெய்ட் பண்ணுங்க, சார் மீட்டிங் போய்ருக்காரு...’
நொந்து போய்விட்டான். எப்படித்தான் தனக்கு மட்டும் இப்படி செட்டாகிறதோ தெரியவில்லை. எல்லா உயர் பதவியில் இருப்பவர்களும் இப்படித்தான் அடிக்கடி மீட்டிங் போவார்களா? இல்லை, தான் பார்க்க வரும் நபர்கள் மட்டும்தான் இப்படியா! அப்போதே தெரிந்துவிட்டது, இன்றைய பெர்மிஷன், லீவாக உருமாறும் என்று.

எவ்வளவு நேரம்தான் 3 மேஜைகளையே பர்த்துக்கொண்டிருப்பது... பேப்பரை எடுத்துப் படிக்கலாமா? எடுக்க முயன்ற நேரம் அவள் கடந்து உள்ளே சென்றாள். பேப்பர் படிக்கும் எண்ணம் கைவிடப்பட்டது. வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றுவிட்டாள். ஆனால் கைவிடப்பட்டது விடப்பட்டதுதான். வேடிக்கையே பொழுதுபோக்கானது. திடீரென்று மாமி எழுந்து நின்றார்... அந்தப் பக்கம் ஒருவர்... மானேஜர் வேகமாக அவனைக் கடந்து உள்ளே சென்றுவிட்டார். சென்ற பிறகே எழுந்து நின்றான் வழக்கம்போல.

சிறிது நேரத்தில் உள்ளே இருந்து அழைப்பு. அனைத்து டாக்குமெண்டுகளுடனும் உள்ளே சென்றான். இன்சூரன்ஸைப் பார்த்தார், ஆர்சி புக்கைப் பார்த்தார், அவனிக் கொஞ்சம் அதிகமாகவே பார்த்தார். அம்பை கிளைக்கு போன் போடனுமோ என நினைத்துக்கொண்டிருந்தான். அவர் போனில் யாரையோ அழைத்தார், மாமி உள்ளே வந்தார், ஏதோ சொன்னார். அவனுக்குப் புரிந்துவிட்டது, எல்லாம் ஓகே என்று. மாமியோடு வெளியே வந்தான்; மாமி பழைய இன்சூரன்ஸைப் பார்த்து கணினியில் அடிக்க ஆரம்பித்தார். ஒருசில இடங்களில் என்ன போடுவது என்று தெரியவில்லை... இருமுறை மேனேஜரைப் போய் பார்த்து வந்தார், ஒரு வழியாகக் காரியம் முடிந்தது.

இதுவரை முடியாது = தெரியாது என்பதுதான் அவனுக்குத் தெரியும், இப்போது தெரிந்துகொண்டான்,
முடியாது = தெரியாது = முடியும்.


Share/Bookmark