தேன்கூடு - 2009/12/20

முக்கு: தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை இங்கே தனியே பதிவிடுவதால், இனி தேன்கூட்டில் அந்த மாதிரி தகவல்கள் இடம்பெறாது.


வெளிநாட்டில் அண்ணன் கிகி
அண்ணன் கிகி இப்போது சார்ஜாவில் இருக்கிறார், மனைவியுடன். சொந்த விசயமாக சென்றுள்ள அவர், டிசம்பர் முழுவதும் அங்கேதான் இருப்பார். குப்பைத்தொட்டி நான் ஆதவன் நான் ’கவனித்துக்கொள்கிறேன்’ என சொல்லியிருக்கிறான். நல்லா கவனிச்சுக்கோப்பா.


---

பதிவர் சந்திப்புகள்
வரும் வாரம் ஏதேனும் ஒரு நாள் நண்பர் ரோமியோபாய் சந்திக்க வருவதாகச் சொல்லியிருக்கிறார். வீட்டுக்குப் போகும் வழியில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிவிடுவதாகவும், அங்கேயே கும்மி அடிக்கலாமெனவும் சொல்லியிருக்கிறார். சைதை என்பதால் கேபிலும் கண்டிப்பாக வருவார். புலவன் புலிகேசியும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சைதை அருகில் இருப்பவர்கள், சந்திக்க ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக தொடர்புகொள்ளவும்.

இன்று ஈரோட்டில் பதிவர் சந்திப்பு. சென்னையிலிருந்து நண்பர்கள் தண்டோரா, கேபில், பப்லிசர் அகநாழிகை, சூர்யா, அப்துல்லா ஆகியோர் சென்றிருப்பதாக அறிகிறேன். சில காரணங்களால் செல்ல இயலாது போனது குறித்து வருத்தமே. இந்த சந்திப்பு நல்ல விதமாக நடைபெற வாழ்த்துக்கள்.

இந்த வார இறுதியில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எனது மாமாவுடன், பெங்களூரில். அங்கு சில கல்லூரி நண்பர்களையும், பதிவுலகில் பெங்களூரில் இருப்பவர்களில் எனக்குத் தெரிந்த ஒருவர், ஜெ மாம்ஸ் அவர்களையும் பார்க்கலாமென இருக்கிறேன். அதற்கேற்றார்போல நேரம் அமையவேண்டுமென வேண்டுகிறேன், காலத்திடம். அங்கு தங்கப்போகும் இடம் மடிவாலா என நினைக்கிறேன். அருகில் யாரேனும் இருந்தால் அழைத்துக்கொள்ளவும்.

---

சென்ற வருட மழை - வீடியோ
இப்போது பெய்யும் மழையைப் பார்த்ததும், சென்ற வருடம் டிசம்பர் 31 ஞாபகம் வந்தது. அதற்கு முன்பு மூன்று நாட்கள் பயங்கர மழை. நான்காவது நாள் போரடிக்கிறது என நண்பனும் நானும் தெரியாத்தனமா வெளியே வந்துவிட்டோம். மேற்கு மாம்பலம் பகுதி பெரும் வெள்ளம். அதிலும் அரங்கநாதன் சப்வே முழுதும் தண்ணீர், உள்ளுக்குள் ஒரு அரசுப் பேருந்துடன். அப்போது எடுத்த வீடியோ.


---

பட அறிமுகம்
The Moon

படத்தப் பத்தி சொன்னா சுவாரஸ்யம் போயிடும். ஆனாலும் கொஞ்சம் சொல்றேன். படத்துல ஒரே ஒரு கதாப்பாத்திரம்தான். ஆனா கடைசி வரை சுவாரஸ்யமா இருக்கும்.
எதிகாலக் கதைகளம். பூமியில் சக்தி இல்லை. அதனால் நிலவிலிருந்து சக்தி எடுக்கப்பட்டு பூமிக்கு கிடைக்கிறது. நிலவில் இருக்கும் சக்தி எடுக்கும் நிலையத்தில் இருக்கிறார் நமது கதாநாயகன். சக்தி சேமிக்கப்படும் கலனை எடுத்து பூமிக்கு அனுப்பும் வேலை. ஒரே ஆள்தான். மூன்று வருட ஒப்பந்தம் முடிந்து பூமிக்குத் திரும்பும் தருவாய். ஒரு விபத்து. முழித்துப் பார்த்தால் நிலையத்திற்குள். அங்கு உதவிக்கு இருக்கும் ரோபோவிடம் கேட்டால் விபத்திலிருந்து தப்பிவிட்டீர்கள் என்கிறது. பின்பு வழக்கம்போல வேலைக்குச் செல்லும்போது விபத்தில் சிக்கிய வாகனம். உள்ளே அடிபட்ட அவன். அவனை எடுத்துவந்து முதலுதவி செய்கிறான். அவன் எழுந்து பல கேள்விகள் கேட்கிறான். ஒரே போல இருக்கும் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை, நமக்கும்தான். மூன்று வருடம் தனியாக ஒருத்தன் இருக்கும்போது என்ன ஆகும்? ஒரு வேளை பைத்தியம் பிடித்துவிட்டதோ? கற்பனையில் இவ்வாறு யாராவது பக்கத்தில் இருப்பது போல கற்பனை செய்துகொண்டு பேசுவார்களாமே! அப்படி ஆகிவிட்டானோ என என் மனம் பல கற்பனைக் கதைகளைத் தேடியது. உண்மை என்ன என்பதே கதை.
படம் முழுக்க இந்த ஒரே உருவம்தான், இருவராக. ஆனால் அலுப்பு தட்டவில்லை. நிலவில் இருப்பது போன்றே உணர வைக்கும் செட் மற்றும் சிஜி. வித்தியாசமான எதிர்காலம் பற்றிய அனுமானத்துடன் கூடிய படம். ஒரே ஒரு உருவத்தையே படம் முழுக்க வைத்து, நம்மை போரடிக்காமல் வைத்திருப்பது சபாஷ். பார்க்கலாம்.

---

குறுந்தகவல் குறும்புகள்

நீ வெற்றி பெறும்போது
சொல்வேன்
மற்றவர்களிடம் பெருமையுடன்
அவன் என் நண்பன் என்று
நீ தோல்வியுரும்போது
சொல்வேன்
உன் அருகில் நின்று
நான் உன் நண்பன் என்று.

***

அப்பா:
என்ன சார், என் பொண்ணு கிளாமரா வரலைனு திட்டினீங்களாமே?
வாத்தியார்:
நாசமாப் போச்சு, நா கிராமர் வரலன்னு சொன்னேன்...

---

சொந்த சரக்கு
இரவல் கேட்பவர்கள்
எரிச்சலாய் தெரிகிறார்கள்
வாங்குகிறேன்
இரண்டாவது புத்தகம்.


பிக்கு: பின் குறிப்பு எழுதுறதுக்குக் கூட சிலர் டிஸ்கின்னு ஏன் போடறாங்கன்னு தெரியல. டிஸ்கின்னா disclaimer , அதாவது எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை, இதுல வர்றது எல்லம் கற்பனை அப்டி இப்டின்னு தப்பிக்க வசதியான குறிப்புகள்தான் டிஸ்கில வரனும்ங்கிறது என்னோட அனுமானம். அதனால, முன் குறிப்ப முக்குன்னும், பின்குறிப்ப பிக்குன்னும் நான் எழுதப்போறேன்.
அப்றம், பதிவர் சந்திப்புகளின்போதும், பார்த்த நல்ல இடங்கள், ஓட்டல் ஆகியவற்றின் படஙகள் மொபைலில் இருக்கின்றன. ஆனால், டேடாகேபில் தம்பி கொண்டுசென்றுவிட்டதால் அவற்றைப் பற்றி எழுத முடியவில்லை. புது வருடத்தில் அவற்றைப் பற்றி எழுதுகிறேன்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

தூக்கம் உன் கண்களை...

ஒரு நாள் இரவு, வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வெகு நேரம் பேசிய பின்பு, ”காலையில் எழுதிருக்கனும், நா தூங்குறேன்”, என்றார். சரி என்று கணினியிடம் திரும்பினேன். இரண்டு பின்னூட்டங்கள் படித்திருப்பேன், திரும்பிப் பார்த்தால் நண்பர் ஆழ்ந்த உறக்கத்தில். கொடுத்துவைத்தவர். இப்படித்தான் சிலபேர். நினைத்தவுடன் தூங்கிவிடுவர். நமது கதையோ வேறு. இரவு 12 மணிக்குமேல் தூங்கலாமென முடிவெடுத்தபின், படுக்கையில் ஒரு அரை மணி நேரம் புரண்டபின்தான் தூக்கம் வரும். அதுவும் நல்ல காற்று வீச வேண்டும். வெளிச்சம் இருக்கக் கூடாது, போன்ற நிபந்தனைகளுடன்.

காற்று என்றவுடன்தான் ஞாபகத்துக்கு வருகிறது. சிலருக்கு மின்விசிறி இல்லாமல் தூக்கமே வராது. காற்றுதான் காரணம் என்று நினைக்க வேண்டாம். அந்த மின்விசிறியில் காற்றே வராது. கொர கொர என்று சத்தம்தான் வரும். அந்த சத்தம் நின்றுவிட்டால் உடனே விழித்துவிடுவார்கள். எனது நண்பன் சுரேஷ் நான்கு பேருடன் ஒரு வீட்டில் வசித்துவந்தான். இரவு வெகு நேரம் கழித்துதான் வீட்டிற்கு வருவான். வந்து பார்த்தால் மின்விசிறி உள்ள அறையில் மற்ற நால்வரும் படுத்துவிடுவர். அவன் மின்விசிறியில்லாத அடுத்த அறையில்தான் படுக்கவேண்டும். ஆனால் காலை மட்டும் இந்த அறைக்குள் நீட்டியிருப்பான், காற்றுக்காகவாம். எப்போதாவது மின்விசிறியை அனைத்தால் போதும், உடனே எழுந்து போடச்சொல்வான். ”ஏண்டா, அங்கதான் காத்தே வராதே, அப்புறம் எதுக்கு ஃபேன்”, என்று கேட்டால், பதில் சொல்லத்தெரியாது. மின்விசிறி ஓடினால்தான் தூக்கம் வருமென்பது அவனது நினைப்பு.

சிலருக்கு போர்த்தினால்தான் தூக்கம் வரும், குளிர்காலத்தில் மட்டுமல்ல. கொளுத்தும் வெயில்காலத்தில் கூட சிலர் போர்த்திக்கொண்டு தூங்குவதைப் பார்த்திருக்கிறேன். குளிர் காலத்தில் மின்விசிறியையும் போட்டு நடுக்கத்துடன் போர்த்திக்கொண்டு தூங்குவர் சிலர். மின்விசிறியை அனைத்தால் தூக்கம் வராது. சிலருக்கோ மல்லாந்து படுத்தால்தான் தூக்கம் வரும், சிலருக்கு வலதுபுறம் சரிந்து, சிலருக்கு இடதுபுறம்.

சிலருக்கு கட்டிலில் படுத்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கு தலையணை இல்லாமல் தூக்கம் வராது. சிலருக்கு வெளிச்சம் இல்லாமல் இருந்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கு சப்தம் ஏதும் இருந்தால் தூக்கம் வராது. சிலருக்கு குறிப்பிட்ட சபதம் கேட்டால்தான் தூக்கம் வரும், சிலருக்கு குறிப்பிட்ட சப்தங்கள் மட்டும் தொந்தரவைக் கொடுக்கும். உதாரணத்திற்கு, குறட்டை சத்தம் கேட்டால் ஒன்றும் தொந்தரவில்லை. அதே நபருக்கு சுவற்றில் மாட்டியிருக்கும் நாட்காட்டி (அல்லது ஏதாவது தாள்) உரசும் சப்தம் கேட்டால் தூக்கம் வராது. சிலருக்கு தூங்குவதற்கு முன் ஒரு சிகரெட் குடித்தால்தான் தூக்கம் வரும். சிலருக்கோ தண்ணி. சிலருக்கு வேறு வகை போதை.

இன்னும் சில வித்தியாசமான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அவனுக்கு பக்கத்தில் இருப்பவர் மேல் கால் போட்டால்தான் தூக்கம் வரும். பயந்த சுபாவம் உள்ளவனென்று நினைக்கிறேன். பக்கத்தில் யாரேனும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இன்னோருவன், சின்ன வயதில் பக்கத்தில் இருப்பவரின் காதைப் பிடித்துக்கொண்டுதான் தூங்குவானாம். பல தடவைகள் இப்படி அம்மாவின் காதைப் பிடித்து கம்மலை கழட்டிவிட்டிருக்கிறான். இதேபோல சின்ன வயதில் சிலர் கை சூப்பிக்கொண்டுதான் தூங்குவர். விரலை எடுத்தால் போதும் டபக்கென்று விழித்துக்கொள்வர். எப்படித்தான் தூங்கும்போது தெரியுமோ தெரியவில்லை. இன்னோரு நண்பன் காலை(மட்டும்தான்) ஆட்டிக்கொண்டேதான் தூங்குவானாம்.

இதில் பொதுவான சில விசயங்களும் இருக்கின்றன. புதிய இடத்தில் தூக்கம் சரியாக வராது. பேருந்து பிரயானத்தில் சன்னலோரம் இருந்தால் தூக்கம் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. அதிக உடல்வலியுடன், தூக்கமே இல்லாது இருக்கும்போது தூங்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த சூழ்நிலையிலும் தூக்கம் அமோகமாக வரும்.

அதிலும் கல்யாணம் ஆன சிலரிடம் கேட்டேன். ஒருத்தருக்கு மனைவியை வயிற்றோடு கட்டிப்பிடித்தால்தான் தூக்கம் வருமாம். இன்னொருத்தருக்கு மார்போடு அனைத்துத் தூங்கும் பழக்கமாம். இன்னொருவர் காலை தூக்கிப் போட்டுக்கொண்டுதான் படுப்பாராம். ஒன்று மட்டும் உறுதி, கல்யாணமானவர்கள் மனைவியைக் கட்டிப் பிடித்துக்கொண்டுதான் தூங்குகிறார்கள். :)

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

மீள் இயக்கம்

எழும்போது மகிழ்ச்சியில்லை உள்சென்றதும் உடனே குளியல் கண்ணாடியில் தெரியவில்லை முகம் இயல்பு இயல்பாகவே குழந்தைகள் கண்ணில் குழந்தைகளாய் அலைகள் முன்னே அலைகளாய் பாதைகள் பாதைகளாக மட்டுமே பயணம் தவறிப் போவதில்லை நிலவு குளிர்கிறது சூரியன் சுட மட்டுமே செய்கிறது மேகங்கள் மேகங்களாகவே மாறித் தெரிவதில்லை பாயாசம் இனிக்கிறது வேப்பங்காய் கசக்கிறது மலர்கள் அப்படியே சுவையில் மாற்றமில்லை தட்டில் கோலங்கள் இல்லை சிகரெட் கையைச் சுடுவதில்லை வெறித்துப் பார்க்கும் விட்டம் இல்லை சிந்தனையில் சிதறல் இல்லை மறுபடியும் என எழுத நினைக்கையில் இயங்கவில்லை எண்டர் பட்டன்.

-அதி பிரதாபன்.

இது உரையாடல் கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படலாம்.


Share/Bookmark
Read More!

ஒரு கரு நான்கு கதைகள்

முன்கதைச்சுருக்கம்:
அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர் (நிலாரசிகன், அடலேறு, ஜனா, அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் - இவர்கள்தான் கதையில் நடமாடும் பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம்.


குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும்,
அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின் பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன. மற்ற மூவர்களுக்கான சுட்டி கதையின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாசித்து உங்களது பின்னூட்டத்தை
பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


சுடர் - சிறுகதை


எங்களது வாழ்க்கை எப்போது சூனியமானது என்றே தெரியவில்லை. கொஞ்ச நாட்களாக இப்படித்தான். எனது கணவரைக் காணவில்லை. இரு குழந்தைகளில் ஒன்று மட்டுமே இருக்கிறது. எங்கள் வீடு இன்னேரம் தரைமட்டமாய் ஆயிருக்கும். கணவரும், பிள்ளையும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் தெரியாது. ஒன்று மட்டும் தெரிகிறது, நாங்களும் சாகப் போகிறோம்.

அடுத்த வேளை உணவு எப்படிக் கிடைக்கும், எது கிடைக்கும் என்றெல்லாம் யோசிக்க நேரமில்லை. அது கிடக்கட்டும். இப்போது உயிர் பிழைப்பது ஒன்றே நோக்கமாய் இருக்கிறது. ஒரு வேளை உணவில்லாமல் கூட இறக்கும் வாய்ப்புள்ளது. எவ்வளவு தூரம் ஓடுவது, உணவில்லாமல்? கிடைக்கும் சிறிது உணவு எனது குழந்தைக்கே போதவில்லையே! பெண் குழந்தை, ஆறு வயது. இவளாவது பிழைத்துத் தழைக்கட்டும். இருந்தாலும் மறுபுறம் யோசிக்கிறேன். எதற்கு இவளை வளர்க்க வேண்டும், ஏதும் சண்டாளன் வந்து நாசமாக்க?

உயிர் பிழைத்துவிட்டோமோ? சிறிது நாட்களாக குண்டுச் சத்தங்கள் இல்லையே! இப்படி மொத்தமாக அடைத்து வைத்திருக்கிறார்களே, கொல்வதற்கா? இன்னும் என் மகள் உயிருடன்தான் இருக்கிறாள், என்னுடன்.

எங்கும் ராணுவ வீரர்கள், கையில் ஆயுதங்களுடன். காலையில் எழும்போது கொட்டாவி விட்டபடி, சாப்பாட்டுக்காக ஏங்கும்போது ஏதோ ஏக்கமாய் பார்த்தபடி, உச்சி வெயிலில் ஏளனமாய் முறைத்தபடி, உணர்ச்சிவசப்பட்டால் கொலைவெறியுடன் அடித்துத் துவைத்தபடி, தூங்கும் முன் கதைத்தபடி... எப்போதும் இவர்களே தெரிகிறார்கள் என் கண் முன். இப்போது என் மகளை விட இவர்களைத்தான் அதிகம் பார்க்கிறேன், பயம். எப்போது என்ன செய்வார்களோ தெரியாது. இப்படி காட்டுமிராண்டிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோமே, நம் மனமும் இவர்களைப் போல் மாறி விடாதா? எனது குழந்தையை நினைத்துத்தான் கவலையாக இருக்கிறது, இதையெல்லாம் பார்க்கும் அவள் என்ன ஆவாளோ, இப்போதே அவளது மனதில் அழுகை, இரக்கம் எல்லாம் காணாமல் போயிருக்குமோ?

என்னால் எழுந்து நடக்க முடியவில்லை, மிகவும் பலவீனமாகிவிட்டேன் சில நாட்களாகவே. சாப்பாடு வாங்கக் கூட போக முடியவில்லை. எனது மகளுக்கு எப்படி உணவளிப்பது? அவள் உயிருடன் இருந்திருந்தால் கூட இவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டேன், அவளை நினைத்து. இந்த முறை அவளே சென்றிருக்கிறாள், வேறு வழியில்லை. ஏதாவது கிடைத்தால் கண்டிப்பாக எனக்கும் கொண்டு வருவாள்.

அதோ வருகிறாள். கையில் ஒரு ரொட்டித் துண்டு. அவளுக்கு இருக்கும் பசிக்கு அங்கேயே தின்றிருக்கலாம், யாரேனும் பிடுங்கியிருக்கலாம் அல்லது உணவு கிடைக்காமல் கூட போயிருக்கலாம். எல்லாவற்றையும் மீறி ஏதோ கிடைத்துவிட்டது, இன்னும் ஒரு நாள் உயிர் வாழும் தன்னம்பிக்கை இப்போது வந்துவிட்டது. எனக்காகத்தான் கொண்டு வருகிறாள், எத்தனை முறை பட்டினி கிடந்து ஊட்டியிருப்பேன்?

நானோ இப்படி வாழ்வின் இன்னொரு நாளைப் பற்றி ஏக்கத்தோடு காத்துக்கொண்டிருக்கிறேன். அவளோ சற்று தொலைவிலிருக்கும் ராணுவ வீரன் அருகே வந்தபோது நின்றுவிட்டாள், ரொட்டித் துண்டில் பாதியைப் பிய்த்து அவனை நோக்கி நீட்டியபடி, எனது சுடர்.

-அதி பிரதாபன்.

மற்ற மூன்று கதைகள்:
அடலேறு - மரப்பாச்சி பொம்மை- ஒரு கரு நான்கு கதைகள்!
ஜனா - ஒரு கரு நான்கு கதைகள்!
நிலாரசிகன் - ஒரு கரு நான்கு கதைகள்!


Share/Bookmark
Read More!

ஒரு தீவிரவாதியின் மறுபக்கம் - Flugten (The Escape)

கடந்த வாரத்தில் கிடைத்த ஒரு மாலை ஓய்வு நேரத்தில் படம் பார்க்கலாமே என்று நினைத்தபோது, கண்ணில் பட்டதுதான் இந்தப் படம். Flugten (The Escape). டென்மார்க் படம்.



போஸ்டரைப் பார்த்தவுடனேயே மனதில் ஒரு கதை ஓடிவிட்டது. நம்ம கதாநாயகியை தீவிரவாதிகள் பிடித்துக்கொண்டு போய்விட, அவள் தப்பி வருவதுதான் கதை போல இருக்குமென்று. படம் ஆரம்பித்தவுடனே அது போலவே நடந்தது. ஆனால் அடுத்த 20 நிமிடத்தில் நாம் நினைத்த திரைக்கதை அனைத்தும் தவிடுபொடி.

டென்மார்க் நிருபர் நமது கதாநாயகி ரிக்கி. ஆப்கானிஸ்தானில் வேலை செய்யும்போது தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறாள். ஒரு மலைப் பகுதியில் சிறைவைக்கப்படுகிறாள். டென்மார்க்கிற்கு சில நிபந்தனைகளை வைக்கிறார்கள் தீவிரவாதிகள். டென்மார்க் கண்டுகொள்ளவில்லை. அடுத்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விரலாக வெட்டுவோம் எனச் சொல்கிறார்கள் தீவிரவாதிகள் (வீடியோவில்). சொன்னபடி முதல் நாள் ஒரு விரல் வெட்டப்படுகிறது, நாசிர் எனும் சிறுவன் மூலம் (வயது 15 இருக்கும்).

இந்த நாசிர் தனது தந்தையை இழந்தவன். அப்பாவி ஆசிரியரான இவரது தந்தையை வெளிநாட்டு ராணுவத்தினர் அவனது கண் முன்னாலேயே நடு ரோட்டில் சுட்டுக் கொல்கிறார்கள். தீவிரவாதி மாமா, இந்த காரணத்தையே பயன்படுத்தி, வெறி ஏற்றி, நாசிரை தீவிரவாதத்திற்குள் கொண்டுவந்துவிடுகிறார். இப்போது நாசிர் பயிற்சியிலிருக்கும் ஒரு தீவிரவாதி. இந்த கடத்தலில் உதவி செய்துகொண்டு இருக்கிறான்.



அவனைத்தான் விரலை வெட்டச்சொல்கிறான் மாமா தீவிரவாதி. தயங்கும் அவனை பலவிதமாகப் பேசி, உசுப்பேற்றி வெட்ட வைக்கிறான். இது அவனை மிகவும் பாதித்துவிடுகிறது. அன்று இரவே ரிக்கியை திட்டமிட்டு தப்பிக்கச் செய்கிறான். தப்பிக்கும் முன், வெளியே சென்று தான் தப்பிக்க விட்டதாகச் சொன்னால் தன் உயிர் போய்விடும், அதனால் தன்னை அடித்துவிட்டு, அவளாகவே தப்பி வந்ததாக வெளியில் சொல்லுமாறு சொல்கிறான்.



ரிக்கியும் தப்பி விடுகிறாள். இனிமேல்தான் கதையே. தப்பி வரும் ரிக்கி மறுபடியும் டென்மார்க் வருகிறாள்.வரும் ரிக்கிக்கு பலத்த வரவேற்பு. வந்தவள் பேட்டி கொடுக்கிறாள், தப்பித்தவற்றைப் பற்றி பத்திரிக்கைகளில் எழுதுகிறாள், பின்பு ஒரு புத்தகமே எழுதுகிறாள். பெரிய பிரபலமாக உருவாகிறாள், டென்மார்க்கின் ஜெஸிகா லின்ச் என்று சொல்லப்படும் அளவுக்கு (இந்த ஜெஸிகா லின்ச் என்பது தனிக் கதை). ஏனெனில், ஆப்கன் தீவிரவாதிகளிடமிருந்து யாரும் எளிதாக, அவர்களாகவே (யாருடைய உதவியும் இல்லாமல்) தப்பி வந்தது கிடையாது.

அப்படியே இவளது வாழ்க்கை போகிறது. மற்றொரு புறம், ஆப்கானிஸ்தானில் நாசிர். இவள் தப்பிய பிறகு, சந்தேகப்படும் தீவிரவாதி மாமா அடிக்கிறார். ஆனால் நாசிரும் அவளாகவே தப்பித்துப்போய்விட்டாள், நான் உதவி செய்யவில்லை என மறுக்கிறான். மாமா நம்பாவிட்டாலும் அவனை ஒன்றும் செய்யவில்லை. ஒரு நாள் வீதியில் செல்லும்போது வெடிகுண்டு விபத்தில் இவனது மாமா மற்றும் சிலர் காலியாகிறார்கள். அப்போது தப்பிக்கும் நாசிரும் அவனது கூட்டாளியும் ஈராக் வருகிறார்கள். கஷ்டப்படும் நாசிர் நண்பனுடன் டென்மார்க் செல்ல முடிவு செய்கிறான், ரிக்கி தனக்கு உதவி செய்வாள் என்று. ஒரு வழியாக ஒரு ட்ரக்கில் நாசிர் மட்டும் ஏறி டென்மார்க் வந்ததும் அகதிகள் முகாமில் சிக்கிக்கொள்கிறான்.



மறுபுறம், ரிக்கியின் பழைய காதலனுடன் மீண்டும் தொடர்பு, மகிழ்ச்சி, மோகம், மற்றும் பிரபலமான சந்தோசம், கிடைக்கும் மரியாதை, கூடவே கிடைத்த பொறாமை மற்றும் எதிரிகள் என அவளது வாழ்க்கை சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

நாசிரின் வாழ்க்கை முகாமில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சந்தர்பத்தில் முகாமை விட்டு தப்பிக்கும் நாசிர், நள்ளிரவில் அவளுக்கு போன் செய்கிறான். காதலனுடன் இருக்கும் ரிக்கி, அவனையும் அழைத்துக்கொண்டு வந்து பார்க்கிறாள். உன் உயிரைக் காப்பாற்றிய என்னைக் காப்பாற்று என்று சொல்லும் நாசிர் முன்னே. தானாக தப்பி வந்ததாகச் சொன்னதை நம்பிய நாடு பின்னே.


அந்த இடத்தில்தான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இவன் இங்கிருப்பது தெரிந்தால் அரசாங்கம் அகதி முகாமுக்கோ, மறுபடி ஆப்கானுக்கோ அனுப்பிவிடும். அங்கே சென்றால் சாவு நிச்சயம். இங்கே இவளுடன் ஒரு ஆப்கன் தீவிரவாதி இருப்பது வெளியே தெரிந்தால் பிரச்சனை. ஏன் எதற்கு என்ற கேள்வி எழும். தானாக தப்பி வரவில்லை, இவன் உதவியுன்தான் வந்தேன் என்று சொல்லவேண்டியது இருக்கும், சொன்ன பொய்யினால் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். ஒன்று, பிரபலமாக இருப்பதே நலம் என்று இவனை போலீசில் பிடித்துக் கொடுக்கலாம், அல்லது தன் உயிரைக் காப்பாற்றிய நாசிரை எங்காவது வாழ வழி செய்ய வேண்டும், அந்த முயற்சியில் உண்மையின் பிடியில் சிக்கவும் செய்யலாம். என்ன செய்வாள் அவள்?

தீவிரவாதிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள் எனச் சித்தரிக்கும் படங்களுக்கு மத்தியில் இது ஒரு வித்தியாசமான படம். தந்தை சாவையே காரணம் காட்டி தீவிரவாதியாக்க முயற்சி செய்தும், தீவிரவாதியாகப் பிடிக்காமல் ஊரைவிட்டே ஓடிப்போகும் ஒரு முஸ்லிம் சிறுவன். எங்கு சென்று வாழ்வது? நாட்டிற்குள் இருக்கவும் முடியாமல், வெளியே சென்று வாழவும் வழி இல்லாமல்... கொடுமை. அதிலும் வேறு வழியே இல்லை, நம்மால் ரிக்கிக்கு ரொம்ப கஷ்டம் என்று தற்கொலைக்கே செல்லும் நாசிர், தீவிரவாதப் பிடியின் இன்னொரு பக்கம்.

அருமையான படம். பெரிய பெரிய விளக்கங்கள் இல்லாமால் வேகமாக ஓடும் கதை. கதாப்பாத்திரங்கள் அறிமுகமே இல்லாமல் நமது மனதில் விளங்கி விடுவார்கள். கதையின் பெரிய பெரிய கட்டங்கள் எல்லாம் சின்னச் சின்ன காட்சிகளாக ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு காட்சி விட்டுவிட்டால் கூட நன்றாக இருந்திருக்காது. கதையின் மையத்தையே படம் சுற்றாமல் ஒரு இயல்பான வாழ்க்கையாக செல்வது, கடைசி கட்டத்தில் சுவாரஸ்யம் ஏற்றுகிறது. அதே போல, வாழ்வின் அழகான சின்னச் சின்ன விசயங்களும் அப்படியே கதையோடு கலந்து தூவப்பட்டிருக்கிறது. இப்படி பல காட்சிகளைச் சொல்லலாம்... வேண்டாம். பாருங்கள்.

இயக்குனர் கேத்தரின் வின்ஃபீல்ட்க்கு இது முதல் படம்! இதற்கு முன் சில டி.வி.தொடர்களை இயக்கியுள்ளார். பெண் இயக்குனரான இவரிடமிருந்து இன்னும் சில நல்ல படங்களை எதிர்பார்க்கலாம். இந்த எஸ்கேப், முஸ்லீமாகப் பிறந்து தீவிரவாதத்தின் பிடியிலிருந்து தப்பித்து, மனிதனாக வாழ நினைக்கும் ஒரு சிறுவனின் முயற்சி.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

நில் கவனி செல்லாதே செய்.





நீங்கள் எப்போதாவது உங்கள் கேஸ் சிலிண்டரின் (expiry date’) காலக் கெடு குறித்து கேள்வி பட்டதுண்டா, உண்டெனில் கவனித்ததுண்டா?! கவனித்ததில்லையெனில் இனி கவனியுங்கள்.


அதைப்பற்றி தெரியாது என்றால் நான் சொல்கிறேன் கேளுங்கள்.
சிலிண்டரின் பிடியில் A or B or C or D-ம் அதனுடன் 2 இலக்க எண்ணும் இருக்கும்.

எ.கா:- D-06,A-13



தன் பொருள்

1. A for March (First Qtr),A மார்ச் முதல் காலாண்டு்
2. B for June (Second Qtr),B ஜூன் 2-ம் காலாண்டு்
3. C for Sept (Third Qtr), C செப்டம்பர் 3-ம் காலாண்டு&
4. D for December (Fourth Qtr).D டிசம்பர் என்பதாகும்.

மேலே படத்தில் காட்டியுள்ளபடி D- 06 என்றிருந்தால் டிசம்பர் 2006-லேயே காலாவதியாகிவிட்டது என்றுபொருள். கீழே காட்டியுள்ளபடி
D-13 என்றிருந்தால் டிசம்பர் 2013-ல் காலாவதியாகும் என்றுபொருள்.




இப்படி கவனித்து வாங்கினால் மருமகள்கள் சிலிண்டர் வெடித்து காலாவதி ஆகுவது குறையும்.

எனவே நின்று கவனித்துவிட்டுச்செல்லாமல் செயல்படுங்கள்.

சமூக நலன் கருதி

---கி.கி



Share/Bookmark
Read More!

புதுத்தகம்

கதிரவன் ஸ்டோர். பள்ளி நாட்களில் மறக்க முடியாத கடை. இந்தக் கடை முதலாளி பெரும்பாலன மாதங்கள் ஈ ஓட்டிக்கொண்டிருப்பார். கடையில் ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே இருப்பார். ஆனால் ஜூன் மாதம் வந்துவிட்டால் அவருக்கும் அவரது கடைக்கும் தனி மவுசு வந்துவிடும். கடையில் அதிகமாக மூன்று பேரைப் போட்டிருப்பார். கடையில் கூட்டம் நிரம்பி வழியும். சொந்தபந்தம், தெரிந்தவர்களெல்லாம் இப்போதுதான் தங்களது நெருக்கத்தைக் காண்பித்துக்கொண்டிருப்பார்கள், கடை வாசலில். கதிரவன் ஸ்டோர் ஒரு புத்தகக் கடை.

புத்தகக் கடை என்றதும் சென்னையிலிருப்பது போல இலக்கியவாதிகள் வந்துபோகும் புத்தகக் கடை என்று நினைத்துவிட வேண்டாம். எங்களது ஊரில் புத்தகக் கடை என்றால் பள்ளிக் குழந்தைகளுக்கான நோட்டுகள், புத்தகங்கள் கிடைக்கும் கடை. பள்ளி ஆரம்பித்தவுடன் நோட்டுகளின் விறபனை சூடு பறக்கும். நோட்டுகளுடன் பேனா, பென்சில், டப்பா இன்ன பிற துணை ஆயுதங்களும் கிடைக்கும். பாடப் புத்தகம்தான் அதிக கிராக்கியாக இருக்கும்.

அப்போதெல்லாம் பாடப் புத்தகங்கள் பள்ளி ஆரம்பித்தவுடன் கடைகளில் கிடைக்காது. சிறிது நாட்கள் கழித்துதான் வரும். அதுவரை கடந்த வருட பழைய புத்தகத்தை வாங்கி வைத்து காலம் செல்லும். சிலருக்குத்தான் கிழியாத புத்தகம் கிடைக்கும். சில வீட்டில் அண்ணனோ அக்காவோ இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் மூத்தவர் இல்லாத வீடுகளில் இருப்பவர்களோ, இளையவர்கள் இல்லாத ஆட்களாகப் பார்த்து கொக்கி போடவேண்டியதிருக்கும். சிலர் விலைக்குக் கூட கொடுப்பர். சிலரோ ஓசிக்கே கொடுத்துவிடுவர். பெரும்பாலும் அது கிழிந்த புத்தகமாகவே இருக்கும். கிழிந்த புத்தகமென்றால் அட்டையில்லாத புத்தகம்.

பழைய புத்தகம் வாங்குவதில் இரண்டு வகை உண்டு. சிலர், புது புத்தகம் வாங்குவது வரை ஒப்பேத்த பழைய புத்தகத்தை உபயோகிப்பர். அவர்கள் பெரும்பாலும் கிழிந்த புத்தகத்தையே வைத்திருப்பர். மற்றவர்கள் நல்ல பழைய புத்தகத்தை ஒரு விலை கொடுத்து வாங்கி விடுவர். அவர்களுக்கு புது புத்தகம் வாங்கும் எண்ணம் கிடையாது. அவர்களது வீட்டு பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்காது. அரசு தரும் இலவசப் புத்தகம் கிடைக்கும்தான். ஆனால் அது எத்தனை மாதங்கள் கழித்து வருமென்பது யாருக்கும் தெரியாது.

இப்படி பள்ளி ஆரம்பித்த சில நாட்களாகப் புத்தகம் வாங்கும் வேட்டை நடந்துகொண்டிருக்கும். புது புத்தகம் வாங்கும் நபர்களோ கதிரவன் ஸ்டோருக்கு புத்தகம் வந்ததா என்பது குறித்து விசாரணையிலேயே இருப்பர். ”நேற்று ஐந்தாம் வகுப்பு தமிழ் புத்தகம் வந்துவிட்டதாம் தெரியுமா?”, என்பது போன்ற ஆச்சர்யமிக்க அவரச் செய்திகள் காற்றில் பறந்துகொண்டிருக்கும். ஆம், ஒரு வகுப்பிற்கான புத்தகங்கள் மொத்தமாக வராது. தவணை முறையில்தான் வரும். ஒரு பாடமோ, அதற்கு மேற்பட்ட பாடங்களோதான் ஒரு சமயத்தில் வரும். மொத்தமாக வந்ததாய் சரித்திரம் கிடையாது.

சிலருடைய பெற்றோர் வெளியூரில் வேலை செய்துகொண்டிருப்பர். அவர்கள் அருகிலுள்ள பெரிய ஊர்களில் இருந்தால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சீக்கிரம் புது புத்தகங்கள் கைகளில் தவழ வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு அந்த சமயத்தில் நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுடைய கைகளிலும் சில நாட்களில் புது புத்தகம். அந்த சில பேரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும், படம் பார்க்க. மற்றவர்களுக்கும் புத்தகங்கள் கிடைத்துவிட்டால் அதன் பிறகு அவர்களைச் சீண்ட ஆள் இருக்காது.

இதாவது பரவாயில்லை. சில நேரங்களில் பாடத்திட்டம் மாறி, முந்தைய வருடத்திலிருந்து முழுவதும் வேறான புத்தகத்தை அரசு வெளியிடும். அபோதுதான் நமக்குக் கொண்டாட்டமே. புத்தகம் வாங்கியாச்சா என்ற ஆசிரியரின் நச்சரிப்பு அவ்வளவாக இருக்காது. அவருக்கு மட்டும் எங்கிருந்தாவது ஒரு புத்தகம் கிடைத்திருக்கும். அது எங்காவது தூரத்திலிருக்கும் உறவினர் மூலமோ நண்பர் மூலமோ கிடைத்திருக்கலாம். மீண்டும் ஒரு நாள் கதிரவன் ஸ்டோருக்கு புது புத்தகம் வந்துவிட்டது என்ற செய்தி காட்டுத்தீ போல பரவும். உடனே அப்பாவை அழைத்துக்கொண்டு கடைக்கு படையெடுப்புகள் தொடங்கும். காலியாவதற்குள் வாங்கவேண்டுமே!

இப்படியெல்லாம் வாங்கிய புத்தகங்களை இப்போது தேடவேண்டுமென்கிறது மனது. ’ஈறு போதல், இடை உகரம் ஈயாதல்’, ‘இரட்டைக்கிளவி’, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’, ‘பண்புத்தொகை’, ‘நேர் நேர் தேமா’ போன்றவை இலக்கணப் புத்தகத்திலிருந்து அவ்வப்போது கேட்கும். சரி, இலக்கணம் பற்றி எழுதலாமென்றால், அந்த புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அடுத்தமுறை ஊருக்குச் செல்லும்போது அவற்றைத் தேடி எடுத்துவரவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

இப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போது நண்பனிடமிருந்து வந்தது மின்னஞ்சல் ஒன்று, தமிழ்நாடு அரசுப் பாடநூலகள் இணையத்தில் இருக்கிறது, டவுன்லோடு செய்து பிரிண்ட் பண்ணி ஏழைக்குழந்தைகளுக்குக் கொடுங்கள் என்று (அல்லது இந்த மின்னஞ்சல் வந்த பின் இவையனைத்தும் மனதில் ஓடின எனவும் கொள்ளலாம்). முடிந்தவர்கள் செய்யலாம், இங்கே (textbooksonline.tn.nic.in) சென்று பார்க்கவும். முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்துப் புத்தகங்களும் PDF வடிவில் இருக்கின்றன. தமிழ் இலக்கணம், செய்யுளும் இங்கே இருக்கிறது, அருஞ்சொற்பொருள் விளக்கத்துடன். செய்யுள் பகுதிகளை அசைபோட நினைப்பவர்கள் சென்று பார்க்கலாம். இலக்கணமும் இருக்கிறது. ஆனால் நாம் எதிர்பார்த்த பகுதி இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் பாடத்திட்டம் அனைத்தும் மாறி இருக்குமே.

பெஸ்கியின் டிஸ்கி: இனி இலக்கணம் பற்றிய பதிவுகள் வரலாம்.

(பதிவிற்கு சம்பந்தமில்லாத)பெஸ்கியின் டிஸ்கி: ஆணி அதிகம்; ஆதலால் பதிவு உலா குறைவாகத்தான் இருக்கும்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

தீபாவளி சிறப்புப் பதிவு 2009?

2009 தீபாவளி கடந்து நாட்களாகிவிட்டாலும், அன்புத் தம்பி அன்புத்தம்பி அழைத்ததற்காக இந்த தீபாவளி் தொடர் பதிவு.

 


1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
சிறு குறிப்பு என்ன, கொஞ்சம் பெருசாவே தெரிஞ்சுக்குங்க. இங்க, இங்க, இங்க, இங்கயெல்லாம் போய் பாத்து தெரிஞ்சுக்கலாம். (இன்னும் ரெண்டு தொடர் பதிவு எழுதினா நம்ம ஜாதகமே நெட்டுல வந்துரும் போல இருக்கு...)

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
கல்லூரி மூன்றாம் ஆண்டில் வந்த தீபாவளி. எப்போதும் இல்லாது அந்த வருடம் நண்பர்கள் பலபேர் ஆஜர். காலை முழுதும் ’உற்சாகமாய்’ ஊரையே ரவுண்டு கட்டி வந்தோம். பின் மதியம் அஜீத்தின் வில்லன் படம். ஆட்டம்னா ஆட்டம் செம ஆட்டம். ”ஆடியில காத்தடிச்சா” சோகப்பாட்டுக்கு கூட குத்து குத்துனு குத்துனத, அன்னைக்கு உடன் இருந்த யாராலயும் மறக்க முடியாது.

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
சென்னை.

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
இங்க நோ கொண்டாட்டம். ஒன்லி வாச்சிங்.

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
இதுக்கும் இல்லை.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
அய்யோ அய்யோ...


7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
செல்லிடபேசி.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
வழக்கமாக தொலைக்காட்சி பார்ப்பது குறைவே. தீபாவளி அன்று வெளியில் செல்ல பயம். எங்கு எப்போது வெடிக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தீபாவளியும் ஒவ்வோரு விதமாகப் போயிற்று. இந்த வருடம் சமையல், கணினி, டிவி, வேடிக்கை என பொழுது போனது. வெளியில் செல்லவில்லை.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
ரொம்ப நாள் ஆயிடுச்சு. அடுத்த வருடம் கூப்பிட்டுக்கவா?

அன்பு, கோபப்படக்கூடாது. உண்மையிலேயே பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லைதான். 4 வருடங்களுக்கு முன் சொந்த ஊரில் இருக்கும்போது கேட்டிருந்தால் கூட சில பதில்கள் உருப்படியா வந்திருக்கும். சென்னையில் இருக்கும்வரை, எனக்குத் தீபாவளி என்பது இன்னொரு விடுமுறை நாள், அவ்வளவே.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

தேன்கூடு - 2009/11/11

பதிவர் சந்திப்பு தள்ளிவைப்பு
சென்ற வாரம் நடைபெறவிருந்த பதிவர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அநேகமாக வரும் சனிக்கிழமை இருக்கலாம். போன தடவை மழை வந்துவிட்டதே என கூரைக்குள் கூடுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தடவை அந்த இடத்திற்கே செல்ல முடியாதபடி மழை. இயற்கையை வெல்ல யாரால் முடியும். அடுத்த தடவை அவரவர் இடத்திலேயே இருந்தபடி பதிவர் சந்திப்பு நடத்துவது பற்றி யோசனை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். :)

இமெயில் அட்டாச்மெண்ட்
இமெயிலில் அட்டாச்மெண்ட் அனுப்பவது பற்றிய சுவையான கட்டுரை ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது...

பெரிய அளவு ஃபைல்களை அனுப்ப நீங்கள் இமெயிலை உபயோக்கிறீர்களா? இதைக் கொஞ்சம் கவனியுங்கள்.
இமெயிலில் ஒரு ஃபைலை அட்டாச் செய்யும்போது MIME encoding அதற்கு 33% அதிக இடம் எடுத்துக்கொள்ளும். அதாவது 15MB ஃபைலை அட்டாச் செய்ய, தகவலுக்கான இடம் உட்பட 20MB அளவு இடம் தேவைப்படும்.
அதையே 20 பேருக்கு CC போட்டு அனுப்புகிறீர்களென்றால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மெயிலாக 20x20MB = 400MB இடம் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு சி.டி. அளவு.
அதன்பின், ஒரு சின்ன அலுவலகத்தில் இருக்கும் 5 பேர் அதை டவுன்லோடு செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்களது இமெயில் சர்வரின் பயன்பாடும் அதிகரிக்கிறது. இதனால் Maximum Bandwidth சீக்கிரம் அடைய வாய்ப்புள்ளது.
இதைத் தவிர்க்க, பெரிய ஃபைலை ஒரு இடத்தில் அப்லோடு செய்துவிட்டு, அனைவருக்கும் அந்த லிங்கை அனுப்பிவிடுவது நல்லது.
நான் இது போன்ற வேலைக்கு www.yousendit.com தளத்தையே உபயோகிக்கிறேன். 100MB அளவு வரையிலான ஃபைல்களை இதன் மூலம் அனுப்ப முடியும். கூகுளில் மெயில் அட்டாச்மெண்டின் அதிகபட்ச அளவு 25MB மட்டுமே.

அனைத்து அக்கவுண்டுகளும் ஒரே இடத்தில்
கூகுள் - மெயில், டாக்குமெண்ட், ஆர்குட், காலண்டர்... இப்படி பல சேவைகளை வழங்குகிறது. இது போன்ற பல சேவைகளை உபயோகிப்பவர்கள் http://google.com/dashboard க்கு ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள். அனைத்து அக்கவுண்டுகளையும் ஒரே இடத்தில் கையாளலாம். அட்டகாசம்.

ஜாக்கிரதை
இப்போது Facebook லிருந்து உங்கள் அக்கவுண்ட் பாஸ்வேர்டை ரீசெட் செய்துவிட்டோம். இந்த மெயிலுடன் வரும் ஃபைலை டவுன்லோடு செய்து திரும்ப மாற்றிக்கொள்ளவும் எனுமாறு ஒரு இமெயில் அடிக்கடி வருகிறது. இதுபோல் உங்களுக்கும் வந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும். பேஸ்புக் இப்படியெல்லாம் செய்வதில்லை. அதிலிருக்கும் ஃபைலை டவுன்லோடு கூட செய்ய வேண்டாம். மெயிலை அழித்துவிடவும்.


பதிவர் சந்திப்புகள்
குறையொன்றுமில்லை ராஜ்


ஒரு சோறு பற்றி எழுதியதிலிருந்தே பதிவர்  ராஜ், அங்கு சந்திப்போம் என கூறிக்கொண்டிருந்தார். பல திட்டங்கள் போட்டும் எல்லாம் தவிடுபொடி. சென்ற வாரம் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது மதிய உணவுடன். மனுசன் ரொம்ப நல்லவர். அவரது அலுவலகத்திலிருந்து ஆட்டோ பிடித்து வந்து சாப்பாடும் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனார். அவருக்கும் எனக்கும் ஆறு அல்ல நூறு வித்தியாசங்கள் சொல்லலாம். எனக்கு சந்திப்புகள் பிடிக்கும். போதை பிடிக்கும். அவரோ டீ கூட குடிக்க மாட்டார். இருவருக்கும் இடையே என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. அருமையான நண்பர்.

நிறைய விசயங்களைப் பற்றி பேசினோம். பதிவர்கள், ஞாயிறு திரைப்படம் என பேச்சு போய்க்கொண்டிருந்தது. உலக திரப்படம் காட்டுவதால் என்ன பயன் என்றார். ‘பல மக்களில் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளலாம். கதை எழுதுவதற்கு நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம்’ என்றேன். சிறிது நேரம்தான் பேசினோம். கடமை அழைத்ததால் அத்துடன் முடித்துக்கொண்டோம்.

சாப்பிடும் போது சேவை செய்துகொண்டிருக்கும் ஓட்டலின் ஊழியர் ஒருவர் ராஜிடம் வந்து “அன்லிமிட்டட்தான் சார், வேணும்னா வாங்கிக்குங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார். “நாம ரெண்டு பேரு இருக்கோம். அது ஏன் என்கிட்ட மட்டும் வந்து சொல்லிட்டுப் போறான். என்னைப் பாக்க அப்படியா இருக்கு?” என்றார் ராஜ். “இது வரை 3 தடவை வந்திருக்கிறேன். இங்கு அன்லிமிடட் என்று என்னிடம் சொன்னதே கிடையாது தெரியுமா?” என்றேன்.

“ரெண்டு பேரு இருக்கோம், அது ஏன் என் கிட்ட மட்டும் வந்து இப்படி சொல்லனும்?”, என கரகாட்டக்காரன் கவுண்டர் ரேஞ்சுக்கு கடைசி வரை புலம்பிக்கொண்டே இருந்தார் ராஜ்.

அடுத்த முறை நான் அவருடைய இடத்திற்கு செல்லலாம் என நினைத்திருக்கிறேன்.

ஜனா வீட்டில் விசேசம் + அட்டகாசம்
ஜனாவினுடைய தேவதை இந்த உலகத்திற்கு வந்திறங்கிய 31ஆம் நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவரது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் பதிவர்கள் சிலரையும் அழத்திருந்தார். சிலரால் வர இயலவில்லை. நானும் கேபிள்ஜியும் சென்றோம். பின்பு www.thamizhstudio.com அருண் நண்பர்களுடன் வந்து சேர்ந்தார்.

முதலில் அட்டகாசங்கள் ஆரம்பமாகின. ஒரு சாம்பில்...



கையெழுத்து அழகாக வேண்டுமா ? வாங்கி அருந்துங்கள் Signature.
(மேலும் படங்களுக்கு pbeski@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்)

நண்பர்களை இவ்வளவு உபசரிக்கும், Cheers With Jana என்ற தலைப்பை வைத்திருக்கும், வாரந்தோரும் ஞாயிறு ஹொக்ரெயில் எழுதும் ஜனா குடிப்பதில்லை என்றால் நம்ப முடிகிறதா?

பின்பு குழந்தையைத் தொட்டிலில் போடும் சடங்கு நடைபெற்றது. பின்பு சாப்பாடு. அதன்பின் பேச்சு பேச்சு பேச்சுதான். முதலில் அங்கு வந்திருந்த ஜனாவின் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். பல அனுபவங்களைக் நேரில் கேட்க முடிந்தது. விரைவில் அனைவரும் அவர்கள் நினைத்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்.

பின்பு ஜனா, கேபிள்ஜி, நான், அருண் மற்றும் நண்பர்கள் பேசினோம். பட்டிமன்றமே தோற்றுவிடும் அளவுக்கு சுவாரஸ்யம். படம், குறும்படம், பதிவு, பெண்ணியம், கவிதை, இலக்கியம், பெண்ணின் சுதந்திரம், சம உரிமை எங்கெல்லாம் என விவாதம் நீண்டது. அங்கு எல்லோரையும் கவர்ந்தது யூத் கேபிள் சங்கர் பேச்சுகள்தான்.

பார்த்த படங்கள்
Public enemies


இந்தப் படம் நல்லா இருக்கும்னு கேபிள்ஜி சொன்னதால பாக்க உட்கார்ந்தேன். இது ஒரு உண்மைக்கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படமாம். வராலாரைப் புரட்டிப் பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது. 1933ல் நடந்த கதை. எப்.பி.ஐ. ஏஜண்ட் மெல்வின் பெர்விஸ் அமெரிக்காவின் எதிர்காலத்தையே அச்சுருத்தும் முக்கிய குற்றவாளிகளான ஜான் டிலிங்கர், பேபி ஃபேஸ் நெல்சன், ப்ரெட்டி பாய் பிலாய்டு ஆகியோரை தடுக்கப் போராடினார். இந்த சமயத்தில்தான் எப்.பி.ஐ. தோன்றி வளர்ந்த காலம், இவர்களை ஒடுக்குவதற்காகவே. அவர்களில் ஜான் டிலிங்கரின் கடைசி காலக் கதைதான் இந்த பப்லிக் எனிமீஸ்.

கொள்ளையன் ஜான் டிலிங்கராக நம்ம ஊர் பைரேட்ஸ் ஆப் த கரீபியன் புகழ் ஜானி டெப், எப்.பி.ஐ. ஆபீசராக கிரிஸ்டியன் பேய்ல் (டெர்மினேட்டர் சால்வேசன் மற்றும் டார்க் நைட்டில் நடித்தவர்). படத்தின் கதையைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லாததால் மற்ற விசயங்களைப் பற்றிப் பார்க்கலாம். இந்த இருவரின் கதாப்பாத்திரங்களுமே அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கொள்ளைக்கார ஹீரோவின் பார்வையே அவனைப் பற்றிச் சொல்கிறது. அழகாகப் பார்க்கிறார். திடீரென காதலில் விழுவதும், அவளையே தேடிப்போய் அடைவதும் அழகு. என்னதான் கொள்ளையனாக இருந்தாலும் கொலை செய்யாமல் இருப்பது, கடைசியில் தன் முன்னே முதன் முதலாய் நண்பன் ஒருவன் செத்துப்போவதைப் பார்க்கும்போது பதறுவது என அவரது கதாப்பாத்திரம் அழகாகப் புரிகிறது. அதே போல போலீஸ் ஆபீசர். முதல் காட்சியே நம்ம ஊரு விஜய் படம் போல மிகப் பெரிய கொள்ளையன் ஒருவனை அசால்ட்டாக சுட்டுப் பிடிப்பதில் ஆரம்பிக்கிறது. நேர்மையான ஆபீசராக படம் முழுதும் வலம்வருகிறார். கதாநாயகி அதிகம் பேசாத அழகு.

படத்தில் காட்சி அமைப்புகள் அப்படியே 1930 களுக்கு நம்மை கொண்டு செல்கின்றன. உடை, கார், சிறை, இடங்கள் என எல்லாமே அந்த காலகட்டத்தில் இருப்பதாக இருக்கிறது (அந்தக்காலம் எப்படி இருந்ததோ தெரியாது, ஆனால் இது இந்தக்காலம் இல்லை). படத்தின் மிகப்பெரிய பலம் இசை. எனக்கு இசை பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் இந்தப் படத்தில் வரும் பின்னணி இசை அப்படியே மனதிற்கு உள்ளே சென்று அறைகளனைத்தும் புகுந்து ஏதேதோ செய்கிறது. இந்த இசைக்காகவே இன்னொரு முறை பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

UP


இது ஒரு அனிமேசன் படம். சிறுவன் ஒருவன் அட்வெஞ்சர் பற்றிய படம் பார்ப்பதுபோல படம் ஆரம்பிக்கிறது. பின், வரும் வழியில் தன் எண்ணங்களை ஒத்த சிறுமியைச் சந்திக்கிறான். வாலிபனானதும் அவளையே கல்யாணம் செய்துகொள்கிறான். இவன் ஒரு காஸ் நிரப்பி, விட்டால் மேலே சென்றுவிடக்கூடிய பலூன் விறபவன்.  இவர்களுக்கு குழந்தை பிறக்காதது பற்றி அவள் வருந்துகிறாள். இருந்தாலும் சந்தோசமாக வாழ்க்கை நகருகிறது. கடைசியில் அவள் இறந்துவிடுகிறாள். கால்கள் தள்ளாடும் கிழ வயதில், கையில் குச்சியுடன் நடந்துவந்து வீட்டில் உட்காருகிறார். இவையனைத்தும் படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குள் முடிந்துவிடும். அதற்குப் பிறகுதான் படமே.

தள்ளாடும் இந்த வயது வந்த பிறகு இந்த ஹீரோஎன்னதான் செய்ய முடியும் என்று நினைத்த என்னை, கடைசி வரை உட்கார்ந்து பார்க்க வைத்துவிட்டது இதன் கதையும், காட்சிகளும். அனிமேசன் அருமையாக செய்யப்பட்டிருக்கிறது. உதவி செய்ய வரும் பையனுக்கும் இவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி அழகாக இருக்கிறது. நாய்கள் துரத்தும்போது, அந்தப் பறவை இவர்களையும், வீட்டையும் தூக்கிக்கொண்டு ஓடும் காட்சி அருமை. Wall-E க்கு அடுத்து என்னைக் கவர்ந்த அனிமேசன் படம்.
கண்டிப்பாக பார்க்கலாம்.

SMS AREA

ஆசை
அடுத்த ஜென்மத்தில்
அவளது செருப்பாகப் பிறக்க ஆசை
அவளிடம் மிதி படுவதற்கு அல்ல
என்னைச் சுமந்த அவளை
சுமக்க ஆசை.

எது சிறந்தது?
லவ் மேரேஜ் சிறந்ததா
அரேஞ்சுடு மேரேஜ் சிறந்ததா
லவ் மேரேஜ்தான்.
.
.
.
தெரியாத பிசாசை விட
தெரிந்த குட்டிச்சாத்தானே மேல்.

சொந்த சரக்கு
பயம் அவளுக்கு
இல்லையென்றால்
பயம் எனக்கு
முதலிரவு.

---

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

பிடிக்கும்... ஆனா பிடிக்காது

இந்த சுவாரஸ்யமான தொடர்பதிவிற்கு அழைத்த அண்ணன் இனியவன் என்.உலகநாதன் மற்றும் ஆதவன், ஜனா அவர்களுக்கு எனது நன்றிகள்.
விதிமுறைகள்: 
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், 
அதிகபட்சம் ஆறு பேராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்று இருக்கிறதா எனப் பார்த்தேன், இல்லை. அதையும் விதிமுறையில் சேர்த்திருக்கலாம்.

கருத்து:
இவரைப் பிடிக்கும் இவரைப் பிடிக்காது என எப்படிச் சொல்ல முடியும்? அறை முழுதும் குப்பையாக்கும் பிடிக்காத நண்பனொருவன், ஒரு பாட்டியை சாலை கடக்க உதவியதற்காக பிடித்துப் போகிறான். குடித்துவிட்டு மனைவியுடன் சண்டைபோடும் பக்கத்து வீட்டுக்காரன், அவனது குழந்தையைக் கொஞ்சும்போது ஈர்த்துவிடுகிறான். தெரிந்த இவர்களையே பிடிக்கும் பிடிக்காது என சொல்லத் தெரியாத போது, ஒரு பக்கம் மட்டுமே தெரிந்த பிரபலங்களை எப்படி பிடிக்கும் அல்லது பிடிக்காது எனச் சொல்ல முடியும்? கண்களால் பார்ப்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், அவரது உண்மை வாழ்க்கையில் எப்படியோ? ஹ்ஹ்ம்...

அரசியல்வாதி: செல்வி.ஜெ.ஜெயலலிதா
பிடிக்கும்: ஆளுமையால்


பிடிக்காது: ஊழல் குற்றச்சாட்டுகளால்


தொழிலதிபர்: சரவணபவன் ராஜகோபால்
பிடிக்கும்: அருமையாக உணவு கிடைக்க காரணமாதலால்


பிடிக்காது: ஜீவஜோதி விசயத்தால்



நடிகர்: திரு. ரஜினிகாந்த்
பிடிக்கும்: ஸ்டைல், ஆதரவு, பொது விசயங்களில் நடந்துகொள்ளும் விதம்


பிடிக்காது: அரசியல் முடிவுவில் இழுத்தடிப்பதால்



நடிகை: ப்ரியாமணி
பிடிக்கும்: பருத்திவீரன் நடித்தபோது


பிடிக்காது: அதற்க்குப் பின் நடிக்கும்போது



தயாரிப்பாளர்: உதயநிதி ஸ்டாலின்
பிடிக்கும்: அரசியல் பாதையில்செல்லாததால்


பிடிக்காது: மொக்கை படங்களாகவே எடுப்பதால்


இயக்குனர்: ஹரி
பிடிக்கும்: சாமி எடுத்தபோது (எங்கள் ஊர் தியேட்டரில் சாமி ஒரு வரலாறு)


பிடிக்காது: அதன் பிறகு...



பதிவர்: கேபிள் சங்கர்
பிடிக்கும்: நல்ல சாப்பிடும் இடங்களைக் காட்டுவதால்


பிடிக்காது: எனது நேரங்களை நிறைய சாப்பிடுவதால்


கடைசியா,
விதி எண் இரண்டை மீறிவிட்டேன்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

ஒரு நல்லவனின் பிரார்த்தனை - சிறுகதை

எட்டு மணி வரை தூங்கிப் பழகிவிட்டேன். இனி ஐந்து மணிக்கே எழ வேண்டும். இல்லையெனில் வாழ்க்கையை ஓட்ட முடியாது. சிக்கனம் என்பதே மிகச் சிக்கனமாக இருந்த என் மனது, இப்போது தாராளமாக அதைப் பற்றி அசை போடுகிறது. இனி இரவு நேரங்களில் சுற்றுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எத்தனை நாள்தான் இந்தப் போராட்டம் எனப் பார்த்துவிடலாம்.

சிலர் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்கிறார்கள் என்பார்கள். எனது விசயத்தில் இனி அது சிக்கனத்தைக் குறிக்கும். வரும்காலத்தில் இதன் அர்த்தமே தலைகீழாகப் போகலாம், இப்போது இருப்பதுபோல். தண்ணீர் என்றதும் சரக்கின் ஞாபகம் வேறு வருகிறது. அதற்கு ஏது சிக்கனம், நமது அரசு இருக்கும்வரை.

நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டதாம். தண்ணீர் கொஞ்சம்தான் வருகிறது. காலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரைதான் எங்களது தளத்திற்கு மோட்டார் ஓடும். அப்போதே மற்ற மூவரும் பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். எனக்கும் வேறு வழி இல்லை. இல்லையேல் காலியாகிவிடும். இரவே குழாயைத் திறந்துவிட்டுப் படுக்கலாம். ஆனால், காலை ஐந்தரை மணிக்கு யாராவது காலிங் பெல்லை அடித்து எழுப்பி, “குழாய மூடலயா? ரொம்ப நேரம் தண்ணி விழுதே...”, என அறிவுரையை ஆரம்பித்துவிடுவார்கள்.

குளிப்பதற்குப் போதும். ஆனால் துவைக்க? இதற்காகவே இன்னொரு வாளி வாங்க வேண்டியதாகிவிட்டது. முன்பெல்லாம் இருமுறை அலசும் துணிகள், இப்போது அரை வாளி தண்ணீரில் நனைவது கண்டு ஏங்குகின்றன, எனது உடலைப்போல். சோப்பும், அழுக்கும் போகுதோ இல்லையோ, துவைக்கவேண்டும், அவ்வளவுதான்.

தினமும் காலை எரிச்சலுடன் ஆரம்பிப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை. குளிக்கும்போதும் இதே நினைப்புதான், வழக்கம்போல. ”ஏன் எனக்கு இப்படி? யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்? ஒருவேளை பக்கத்து வீட்டுக்காரர்கள் செய்ததற்கு தண்டனையா? அதை எதற்கு எனக்கும் சேர்த்துக் கொடுக்கவேண்டும்?”, பெல்ட்டை மாட்டி, தலையைச் சீவினேன்.

”மழையைக் கொடுப்பதில் அப்படி என்ன கஞ்சத்தனம் கடவுளுக்கு? காசா பணமா? கொட்டவேண்டியதுதானே”. சுள்ளென எரிக்கும் சூரியனை எண்ணங்களால் சுட்டுக்கொண்டே இறங்கினேன். ”மக்களை கஷ்டப்படுத்துவதில் அப்படி என்னதான் சந்தோசமோ உனக்கு”. தெருவில் இறங்கி நடக்கையில், எதிரே உப்பு விற்பவன்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

எவனோ ஒருவனின் வரலாறு

எவனோ ஒருவனின் வரலாறு - கேக்கவே நல்லா இருக்குல்ல? (இல்லன்னாலும் ஆமான்னு சொல்லனும்), அதுக்குத்தான் இப்படி பேர வச்சேன். எவனோ ஒருவன் சொன்னான், எவனோ ஒருவனுடன் போனேன், எவனோ ஒருவன் வந்தான், எவனோ ஒருவன் நல்லா எழுதுறான் (ஆதவா, வேணாம், நிறுத்திக்கிறேன்).... ஏதோ டாட் காம்னு பேரு கிடச்சுது, அத வச்சதுக்கு அப்புறம் அதுக்கு ஏத்தமாதிரி எவனோ ஒருவன்னு வச்சாச்சு. இப்ப பேரையும் மாத்தியாச்சு. இத சொல்ல ஒரு பதிவு போடனுமேன்னு நெனச்சுட்டு இருந்தப்போதான், நம்ம ஆதவன் வரலாறு தொடருக்கு கூப்ட்டாப்ல. நமக்கு சோசியல் சயின்ஸ்னா மூனாங்கிலாஸ்ல இருந்தே பயம். இருந்தாலும் தெரிஞ்ச சப்ஜெக்ட்டுங்கிறதுனால உள்ள குதிச்சிடலாம். ஏதும் சந்தேகம் கேட்டாக்கூட தைரியமா சொல்லலாம் பாருங்க.

---

பிரதாப் பெஸ்கி. இதுதான் நமது பெயர். இணையம் தொடர்பான வேலை. அதனால் சும்மா இருக்கும் நேரத்திலெல்லாம் ஏதாவது இணையதளம் மேய்வது எனது தொழிலின் ஒரு பகுதி. அதே போல ரஜினிஃபேன்ஸ் தளத்தையும் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் இருந்தது.

ஒருமுறை RSS பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய சூழ்நிலை. படித்துக்கொண்டிருந்த நேரம், கூகுல் ரீடர் பற்றித் தெரிய வந்தது. ரஜினிஃபேன்ஸ் தளத்தின் RSS எடுத்து கூகுல்ரீடரில் சேர்த்து படிக்கத் தொடங்கினேன். அப்படியே என்னுடைய தொழில் சார்ந்த விபரங்களுக்கு சிலவற்றை சேர்த்தேன். அதன்பின் முதன்முதலில் பார்த்த பிலாக் என்வழி. அதனைத் தொடர்ந்து படிக்கலானேன். பின்பு அதனுடன் சுந்தரின் ஒன்லிரஜினி. கிரி அவர்கள் பதிவு ஒன்றைப் படித்தாக ஞாபக. பிறகுதான் திருப்புமுனை. டோண்டு அவர்களின் வலைப்பூவை பார்க்க நேர்ந்தது. அங்குதான் பின்னூட்டங்களைப் பார்த்து அடுத்தடுத்து தொடரத் தொடங்கினேன். அப்படியே வெகுகாலம் படித்துக்கொண்டிருந்தேன்.

தமிழில்தான் எழுதவில்லையே தவிற, எனது துறையின் தொழில்நுட்பம் சார்ந்த வலைப்பூக்கள் இரண்டு ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்தேன். சின்ன சின்ன குறிப்புகளுக்காக http://phpbeginners.blogspot.com மற்றும் என்னுடைய வேலைகள், கொஞ்சம் பெரிய குறிப்புகளுக்காக http://beski.wordpress.com. தமிழில் எழுதவேண்டும் எனத் தோன்றியபோது http://dinamdinam.blogspot.com எனபதைத் தொடங்கி எழுதிப் பார்த்தேன். சுத்தமாக வரவில்லை. அதன் பிறகு பெரிதாக முயற்சியும் செய்யவில்லை.



வாசிக்கும் காலங்களில் அவ்வப்போது பதிவர் சந்திப்பு நடைபெறும். ஒரு வாசகனாக பதிவர் சந்திப்புக்கு வரவேண்டுமென வெகுநாட்கள் ஏங்கியதுண்டு. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் வந்து தடுத்துவிடும் (நாம எழுத ஆரம்பித்த 4 மாதங்களுக்கு சந்திப்பே நடைபெறவில்லை என்பதையும் நினைவில் கொள்க). ஒரு நாள் இந்தப் பதிவைப் பார்த்ததும் கொஞ்சம் பொங்கிவிட்டேன். ஆத்திரத்தில் ஏதோ எழுதியும் விட்டேன். பைத்தியக்காரன் மேலே கொஞ்சம் கோபம், சந்தேகம் (பின்புதான் தெரிந்தது அவரது நல்ல மனது).

முதல் பதிவில் மூன்று பின்னூட்டங்கள். முத்துலெட்சுமி/muthuletchumi, சென்ஷி, அதிஷா . ஆச்சர்யம்! எப்படித் தெரிந்தது? ஒருவேளை தமிழ்மணத்தை குடைந்துகொண்டிருந்ததால் வெளியே தெரிந்திருக்கும், அல்லது திரட்டிகளில் இவர்கள் முக்கியப் பங்கு வகிக்கலாம். இவர்கள் வந்ததற்கு நான் வைத்த தலைப்பும் ஒரு காரணமாய் இருக்கும். பின்பு அப்படியே தொடர்ந்தது. கூடவே எனது அண்ணன் கிகியையும் சேர்த்து உள்ளே போட்டேன். இவர் நல்ல அனுபவசாலி, பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதில் வல்லவர். இப்போது அலுவல் மற்றும் குடும்ப வேலைகள் காரணமாக் எழுதாமல் இருக்கிறார். விரைவில், அனுபவப் பதிவுகளை இவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

ஆரம்பத்தில் சென்ஷிதான் சில சந்தேகங்களை தீர்த்துவைத்தார். அப்போது அவரிடம் சாட் மூலம் உரையாடியது, உள்ளே வந்த இரண்டாம் நாளே ஆதி அவர்களிடம் பேசியது, சுரேஷ் கண்ணன் என்னை தொடர் பதிவிற்கு அழைத்தது ஆகியவைகளெல்லாம் எனது சாதனைகளாக கருதப்படுகின்றன (வரலாறு முக்கியம் அல்லவா). இப்படியே போய்க்கொண்டு இருந்தது, பின்புதான் இரண்டாவது திருப்பம்.





சிறுகதைப் பட்டறை. இங்குதான் முதன்முதலில் பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, பலரின் அறிமுகமும் கிடைத்தது. முடிந்தவுடன் வால்பையன் உடன் அழைத்துச் சென்றார். வேறெங்கே? அங்கே இன்னும் சிலரின் அறிமுகம். அது ஒன்றும் பெரிதாக நீண்டுவிடவில்லை. பின்பு வந்தது மூன்றாவது திருப்பம்.


(மேலே உள்ள படத்தை அழுத்திப் பாருங்கள், வெளிவராத சில படங்களைக் காணலாம்)


மெரினாவில் பதிவர் சந்திப்பு. சந்திப்பு சரியாக நடக்கவில்லை என்பது வேறு விசயம். ஆனால் இன்னும் சில நண்பர்கள் கிடைத்தார்கள். அன்று பார்த்த அடலேறு, ஜனா, நிலாரசிகன் ஆகியோர் இன்றும் தொடர்கிறார்கள். இதே நாளில்தான் இரண்டாவது திருப்பத்தில் கிடைத்த நட்புகளும் இரு கைகளை நீட்டி என்னை அழைத்துக்கொண்டன. அகநாழிகை பொன்.வாசுதேவன், தண்டோரா, கேபிள் சங்கர், வண்ணத்துப்பூச்சி சூர்யா ஆகியோருடன் தொடர்ந்து செல்கிறேன்.




இப்படி பார்த்துப் பழகாவிட்டாலும் சாட்டிலும், போனிலுமே பேசி நட்பை என்னுடன் வளர்த்துக்கொண்டவர் குறை ஒன்றும் இல்லை ராஜ். இவர் இப்போது எழுதுவதில்லை. ஆனால் நட்பு தொடர்கிறது.கடந்த வாரம்தான் இவரை நேரில் பார்த்தேன். இதே போல ஆதவன், தினமும் கதைக்கும் ஒருவன். ஆதவா, இந்தியா வந்தால் கண்டிப்பாக என்னை வந்து பார்ப்பாய், அதனால் ஒரு செண்டு பாட்டிலோடு வரவும். இதேபோல இனியவன் என்.உலகநாதன். இவருடைய அனுபவப் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது 100 வது பதிவில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சி. அவ்வப்போது மின்மடலில் மட்டுமே தொடர்பு, இருப்பினும் இருவருக்கிடையே ஏதோ புரிதல் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.




இதன் பிறகு, நான் எழுதுவதில் உள்ள குறை நிறைகளை சுட்டிக்காட்டி, என்னை ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஆதி மற்றும் அகநாழிகை பொன்.வாசுதேவன். ஆதிதான் முதலில் ஆரம்பித்தார், “நல்லாத்தான எழுதுறீங்க, இப்படியெல்லாம் பேர வச்சுக்கிட்டா நல்லா இருக்காது”,ன்னு சொன்னார். பின் வாசு அவர்கள் சில விபரங்களைக் கேட்ட பிறகு ஒரு பெயரையும் வைத்துவிட்டார் (பேரு வச்சீங்களே, என்னைக்காவது எனக்கு சோறு வச்சீங்களா?). அதி பிரதாபன் (இதன் பின்னணிக் கதை அறிய தனியே தொடர்பு கொள்ளவும், இப்போதே பதிவு நீண்டுவிட்டது). இனி மொக்கையாக எழுதுவதை கொஞ்சம் குறைக்க வேண்டும் என மனது சொல்கிறது. (என்னது? இதுவே மொக்கையா இருக்கா? ராஜ், அப்படியெல்லாம் சொல்லக்கூடாது)

இனி கொஞ்சம் கருத்து (நோ நோ, ஓடக்கூடாது, இவ்ளோ தூரம் வந்துட்டீங்க , இந்த பாராவையும் தாண்டி போயிருங்க). எழுத வந்தது என்னமோ ஒரு திருப்திக்காகத்தான். ஆனால் இங்கு கிடைத்த நட்புகள் எண்ணங்களை மாற்றி விட்டன. கிடைத்த நட்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன, எதிர்பாராதவை. யாரையும் பார்க்காமல் நான் சும்மா எழுதிக்கொண்டே இருந்திருந்தால் பல நடைமுறைகள், எழுத்துக்கள், அரசியல் தெரியாமல் போயிருக்கும். நான் எழுதுவது நன்றாக இருக்கிறதா என்று கூடத் தெரியாமலே போயிருக்கும், திருத்துவதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. சுருக்கமாகச் சொன்னால் கிணற்றுத் தவளையாகவே இருந்திருப்பேன். இப்பவும் அப்படித்தான், இருந்தாலும் வெளியே வருவதுபோல் இருக்கிறது.

உண்மையான விமர்சனம் இல்லாமல் திருத்திக்கொள்ள வாய்ப்பே இருக்காது.

---

தொடர் பதிவு எழுதுறது கூட பெரிய விசயமா தெரியல. அதுக்கு அடுத்து ஆள் பிடிக்கறத நெனச்சாத்தான் கொஞ்சம் மலைப்பா இருக்கு. ஒன்னு நாம கூப்பிட நினைத்தவர்களை யாராவது ஏற்கனவே கூப்பிட்டுருப்பாங்க. அல்லது கூப்பிட்டவங்க ஏதாவது வேலையா இருந்து எழுதாமப் போய், அப்புறம் அப்படியே மறந்து போய்டுவாங்க. ஆனா கூப்பிட்டவங்களுக்கு கண்டிப்பா ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். நான் கூப்பிடுபவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் (அரசியல் வாடை அடிக்கிதோ?). எழுத முடியாவிட்டால் விட்டுவிடலாம், நான் ஒன்றும் தப்பா நினைக்க மாட்டேன் (இப்படி ஒரு பிட்டப் போட்டாத்தான் அவங்க எழுதாமப் போனாலும் ஒன்னும் தெரியாது).

நான் எதிபார்க்கும் வரலாறுகள்:
1. யூத் பதிவர் கேபிள் சங்கர் (இவரை ஏற்கனவே யாரோ கூப்பிட்டார்களாம், 
   யார் என்று தெரியவில்லையாம், ஹி ஹி ஹி...)
2. அண்ணன் தண்டோரா (அண்ணன் இப்போ கொஞ்சம் பிசின்னு நினைக்கிறேன்)
3. அகநாழிகை பொன்.வாசுதேவன் (இதழ் வெளியீட்டில் பிசியாக இருக்கிறார்)
4. வண்ணத்துப்பூச்சி சூர்யா (இவரும் பிசிதான், வீட்டு வேலைகள், அலுவல் பணிகள்)
5. ஜனா (நீங்களாவது எழுதுங்க, அதுக்காக உங்கள வெட்டின்னு சொல்ல வரல)

MLM பண்ணுறவங்க பாத்துருக்கீங்களா? நம்மளை அவங்களுக்கு கீழ சேரச் சொல்லிட்டு அவங்களே நம்மளுக்கு கீழ ஒரு ஆளை பிடிச்சுப் போடுவாங்க. அதே போல... மேலே அழைக்கப்பட்டவர்கள் இவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்...

அடலேறு
நிலாரசிகன்
கனகு
ரோமியோபாய்
(இதை பிரசுரிப்பதற்குள் இவர்களுள் யாரேனும் எழுதிவிட வாய்ப்புள்ளது, 
 அப்றம் எழுதாம இருக்குறவங்க பின்னூட்டத்துல சொல்லி கொக்கியப் போட்டுக்குங்க...)

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

நாம் யார் ?

வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !


வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள் !


சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள் !


நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள் !


தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள் !


கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!


ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள் !


நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள் !


பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !


ஏ . சி . காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !


வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள் !


தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் !


அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !


உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!


முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள் !


கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!


பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள் !

---


பி.கு:-
எனது நண்பன் ஒருவன் அரபு
நாட்டிலிருந்து அனுப்பிய கவிதை


-கி.கி


Share/Bookmark
Read More!

நிறம் மாறும் குணங்கள்

சிறு வயதில் பேய்ப்படம் பார்ப்பது ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும். அன்றைய தினங்களில் (3 - 6 வகுப்புகள் படிக்கும்போது) டிவி டெக் வாடகைக்கு எடுத்துப் படம் பார்க்கும் வழக்கம் ஒன்று உண்டு. ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்தால் 4-5 கேசட்டுகளை வாங்குவார்கள். அதில் ஒரு ஆங்கில ஆக்சன் படமோ பேய்ப்படமோ கட்டாயம் இருக்கும். ஆக்சன் படம் என்றால் ஜாக்கிசான், புரூஸ்லி படம். பேய்ப்படம் என்றால் இவில் டெட். அவ்வளவுதான் அப்போதைய ஹாலிவுட் அறிவு.

யார் வீட்டிலாவது பேய்ப்படம் (இவில்டெட்) ஓடுகிறது என்றால் கட்டாயம் நமது விஜயம் அங்கு இருக்கும். வேறெதுவும் கற்பனை செய்துவிட வேண்டாம். நானும் ரவுடிதான் எனக் காட்டிக்கொள்ளவே. மற்றபடி எங்க வீட்டிலேயே அதிபயங்கர பயந்தாங்கொள்ளி நான்தான். ஏதோ ஆர்வத்தில் டிவி முன்பு அமர்ந்துவிடுவேன். பேய் கூட இன்னும் வந்திருக்காது. பின்னணி இசைக்கே பயம் வந்து தொற்றிக்கொள்ளும். விரல்களால் கண்களை மூடிக்கொள்வேன். சத்தம் குறைவாக இருக்கும்போது, மெதுவாக விரல்களை விலக்கி, சிறு இடுக்கு வழியே பார்ப்பேன். சத்தம் கொஞ்சம் கூடினால் போதும் விரல்களையும் கண்களையும் சேர்த்து மூடிக்கொள்வேன். பயங்கர சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இன்னும் இரு கைகள் இருந்தால் நலம் எனத் தோன்றும்.

15 நிமிடத்தில் மனம் திக் திக் என அடிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் ஒரு நிமிடம் கூட பார்த்திருக்க மாட்டேன். மெதுவாகத் திரும்பி பக்கத்திலிருக்கும் (எனது வயதுடைய) மணியைப் பார்ப்பேன். அவன் ஆ என்று வாயை (கண்களையும்தான்) பிளந்து பார்த்துக்கொண்டிருப்பான். ஆச்சர்யமாய் இருக்கும். நம்மால் ஏன் முடியவில்லை? அடுத்த 5 நிமிடத்தில் வீட்டிலிருந்து ஏதும் அழைப்பு வருமா என மனம் ஏங்கும். வராத பட்சத்தில், அடுத்த 2வது நிமிடத்தில் பிறந்திருக்காத காரணத்திற்காக வீட்டிலிருப்பேன்.

அதோடு முடிந்தால் பரவாயில்லை. சாதாரணமாகவே இருட்டு என்றால் பயம். அதுவும் பேய்ப்படம் பார்த்த (கேட்ட) அடுத்த ஒரு வாரத்திற்கு மிகவும் பயமாய் இருக்கும். கொல்லைப்புறத்தில் தனியே ஒன்னுக்கு போகக்கூட பயம். அம்மா வந்து பின்னால் நின்றால்தான் வரும். அப்பப்போ திரும்பி அம்மா இருக்காங்களான்னு பார்ப்பதும் உண்டு. “ஆம்பளப் புள்ள, இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்கியே!”, என்று அம்மா திட்டுவார்கள். அப்படியே நாட்கள் ஓடிற்று.

இன்று நிலைமையே தலைகீழ். வீட்டில் பேய்ப்படம் தனியே. தூக்கம் தனியே. வெளிச்சம் இருந்தால் தூக்கம் வராது என்று இரவு விளக்கு கூட போடுவது கிடையாது. இப்போது அதே கொல்லைபுறத்தில் அம்ம குரல் கேட்கிறது, “லைட்டப் போட்டுட்டு போனா என்னடா?”.

நினைத்துக்கொள்வேன். சிறு வயதில் சிலருக்கு பயம் இருக்கும். வளர வளர சரியாகிவிடுமென்று, சென்ற மாதம் வரை.

சென்ற மாதம் ஒரு நாள், தங்கை அழைத்தாள்..
”என் கூட அந்த ரூமுக்கு வாயேன்”
”எதுக்கு?”
”தண்ணி குடிக்கனும்”, போனேன்.
”??? அதுக்கு எதுக்கு நான்?”
”இருட்டா இருக்குல்ல, பயமா இருக்கு”
எனக்கு இருந்த அதே பயம், கேட்டேன்
”பேய்ப்படமெல்லாம் பாப்பியா?”
”பாப்பேனே”
”எப்படிப் பாப்ப, பயமா இருக்காதா?”
”இருக்கும். கைய வச்சு இப்படி மறச்சிக்கிட்டு பாப்பேன்.”

இன்னும் சில கேள்விகள். அப்படியே ஒத்துப்போகின்றன.
”சின்ன வயசுலயும் இதே மாதிரிதானா?”
”ஆமா”
”மாறலையா?”
”இல்லையே, அப்படியேதான் இருக்கு!”
ஓஹோ, அப்போ சிலருக்கு குணம் மாறாது போலருக்கு.

இன்னொரு நாள், அதே தங்கை. மதிய உணவு நேரம்...
”அண்ணா, இத எடுத்துக்க”
”வேணாம்”
”ஏன், நான் எது குட்த்தாலும் வாங்கவே மாட்டேங்குற?”
”அட. உன்கிட்ட மட்டும் இல்ல. யார் தட்டுலயும் கை வைக்க மாட்டேன். சின்ன வயசுல இருந்தே இப்படித்தான்.”

இதுவும் என்னை பல நேரங்களில் யோசிகக் வைக்கும். சிறு வயதில் எனது சாப்பாட்டில் யாரும் கை வைப்பது பிடிக்காது. அப்படி வைத்தால் சாப்பிட மாட்டேன். யாரும் எனக்கு ஊட்டிவிட்டதாய் ஞாபகமே இல்லை. இப்போது மற்றவர்கள் எனது சாப்பாட்டை எடுத்தால் ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால், இன்னும் அடுத்தவர் சாப்பிடுவதை எடுத்து சாப்பிடத் தயங்குகிறேன். மற்ற நண்பர்கள் அடுத்தவர் உணவை எடுத்துச் சாப்பிடும்போதெல்லாம் நினைப்பேன், நமக்கு ஏன் இது கூச்சமாகவே இருக்கிறது என்று.


”நான் கூட சின்ன வயசுல அப்படித்தான் இருந்தேன். ஆனா, இப்போ மாறிட்டேன். எப்படின்னு தெரியல!”, என்றாள் அவள்.

எதையும் முடிச்சுப் போட்டு இதுதான் காரணம் என்று சொல்ல முடியவில்லை. எனக்கு மாறிய குணம் அவளுக்கு ஏன் மாறவில்லை? அவளுக்கு மாறுவது எனக்கு ஏன் மாறவில்லை? குணம் மாறுதலின் குணம் பாலினம் சார்ந்ததா? சூழ்நிலை சார்ந்ததா? மரபணு சார்ந்ததா? என்று பார்த்தால், மூன்றும்தான் என்றே தோன்றுகிறது. இது சரியெனில், இவ்வுலகில் எவரும் நிரந்தரமான நல்லவருமில்லை, நிரந்தரமான கெட்டவருமில்லை.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

தேன்கூடு - 2009/10/31

கூகுளில்...
நமது பிலாக்கர் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது பற்றிய ஒரு சிறு கட்டுரை இதோ.

பிற தளங்கள் தரும் விட்ஜெட்டுகள் மூலம் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே நம்பத்தகுந்த விட்ஜெட்டுகளை உபயோகிப்பதே நல்லது. நன்றாக இருக்கிறதென்று கிடைத்ததையெல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாது. நல்லது என எப்படி நம்புவது? கொஞ்சம் கஷ்டம்தான். Widget Codeல் ஏதாவது லிங்க் இருப்பது, அல்லது விளம்பர பாப் அப் விண்டோவை உருவாக்கும் விட்ஜெட்டுகளைத் தவிர்க்கலாம். விட்ஜெட் பாக்ஸ் ஒரு அருமையான விட்ஜெட் தரும் தளமாகும்.

அதே போல, டெம்ப்லேட்டுகளும் இதே போன்ற பிரச்சனைகளைத் தரலாம். இந்த பிரச்சனை என்பது என்னவெனில், நீங்கள் வைத்திருக்கும் விட்ஜெட்/டெம்ப்லேட், உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களின் விபரங்களை சேகரிக்கலாம், Malwareஐ நமது கணினிக்குள் சொருகும் தளத்திற்கு இணைப்பு கொடுக்கலாம், விளம்பர பாப்அப் விண்டோக்களை உருவாக்கி எரிச்சலடையச் செய்யலாம், இன்னும் சில. நல்ல டெம்ப்லேட் தரும் தளங்களில் சில இங்கே.
நான் வழக்கமாக டெம்ப்லேட்டுகள் பார்க்கும் தளங்கள் www.deluxetemplates.net மற்றும் www.allblogtools.com, இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை.

மேலும், டெம்ப்லேட் மாற்றும்போது மறக்காமல் பேகப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. புதிதாய் மாற்றிய டெம்ப்லேட் பிடிக்கவில்லையெனில், மீண்டும் பழைய அமைப்பைப் பெற இது வசதியாய் இருக்கும்.

இது போன்ற பயனுள்ள தகவல்கள் இங்கு உள்ளன.

வெளியூர் பயணம்
இந்த மாதம் - சிவகாசி.
நண்பருடன் ஒருவருடன் உரையாடிவிட்டு, பரோட்டா சாப்பிடவேண்டும், நல்ல ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றேன். காளிதாஸ் ஓட்டலுக்கு கூட்டிச் சென்றார். பரோட்டாவை பிய்த்துப் போட்டு, சால்னா ஊற்றி, அதில் ஒரு மட்டன் சுக்கா, ஒருபுறம் வெறும் வெங்காயம், மறுபுறம் தயிர் வெங்காயம் அப்படியே ஒரு அரைவேக்காடு...

பரோட்டா வாயில் போட்டதும் அப்படியே கரைந்து போயிற்று. சிவகாசி சென்றால் கண்டிப்பாக இங்கு போய் பரோட்டா சாப்பிட்டுப் பாருங்கள்.

சென்ற முறை சென்ற போதும் அன்புத் தம்பி அன்பை சந்திக்க முடியவில்லை. இந்த முறையும் முடியவில்லை. கண்டிப்பாக அடுத்த முறை எப்படியும் சந்த்த்தே தீரவேண்டும் என்று மனம் அடம்பிடிக்கிறது.

இந்த வாரம் பார்த்த படம்: 9 (படம் பேரே அவ்வளவுதான்)



அனிமேசன் படம். ஒரு கையளவு இருக்கும் பொம்மையின் உயிர்ப்பிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. அதன் முதுகில் 9 என்றிருக்கிறது. அப்படியே ஜன்னலின் வெளியே பார்த்தால் ஊரே நாசக்காடாய் அழிந்திருக்கிறது. மனிதர்களே இல்லை. வெளியே வந்தால் தன்னைப்போல சில பொம்மைகள் இருப்பது தெரிகிறது. ஒவ்வொன்றின் முதுகிலும் ஒரு எண். பின்பு (பூனை, வௌவால், பாம்பு வடிவில்) வரும் அழிக்கும் இயந்திரங்கள், அதன் மூல இயந்திரம், அதன் பின்னணி கதைகள், இந்த பொம்மைகள் உருவான பின்னணி, காரணம் ஆகியவற்றுடன் கதை செல்கிறது.

வித்தியாசமான கதை, முடிவுதான் புரியவில்லை. அனிமேசன் அருமையாக செய்யப்பட்டிருக்கிறது. கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு அற்புதம். பார்க்கலாம்.

என்ன இருந்தாலும் Ratatouille, WALL·E ஏற்படுத்திய தாக்கத்தை இனி எந்த அனிமேசன் படமும் ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

படத்தின் பெயர் 9, இது 09-09-09 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது என்பது கூடுதல் சுவாரஸ்யம். 2005ல் Shane Acker என்பவரால் உருவாக்கப்பட்ட குறும்படத்தின் மூலம் கவரப்பட்ட Tim Burton, அதை முழு நீளப் படமாக தயாரித்துவிட்டார், Shane Acker கொண்டே.
குறும்படம் இங்கே (2005)
படத்தின் ட்ரெய்லர் இங்கே (2009)

SMS ஏரியா
சிந்திக்க:
மனம் திறந்து பேசு
ஆனால்
மனதில் பட்டதையெல்லாம் பேசாதே
சிலர் புரிந்துகொள்வர்
சிலர் பிரிந்து செல்வர்.

சிரிக்க:
மனைவி: இந்த வாரம் ஃபுல்லா படத்துக்குப் போவோம், அடுத்த வாரம் ஃபுல்லா ஷாப்பிங் போவோம்.
கணவன்: சரி, அதுக்கு அடுத்த வாரம் ஃபுல்லா கோவிலுக்குப் போவோம்.
மனைவி: எதுக்கு?
கணவன்: பிச்சையெடுக்கத்தான்.

வரும் தேன்கூட்டில்...
  • கின்னஸ் சாதனை படைத்த சின்னக்குயில்...
  • பதிவர் ஜனா வீட்டில் விருந்து, ’யூத்’ பதிவர்களின் கூத்து - படங்கள்..
  • குறையொன்றும் இல்லாத பதிவருடன் ஒரு சந்திப்பு...
-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

நறுமண தேவதை - சிறுகதை

து டீதானா? இனிப்பா, உவர்ப்பா? இல்லை இதுதான் டீயின் சுவையா? ஒன்றும் புரியவில்லை சுதாகருக்கு. கலரைப் பார்த்தான், இதுவரை பார்த்திராத புது நிறமாய் இருந்தது. அதற்கு மேல் குடிக்க மனமின்றி, பாதியோடு வைத்துவிட்டான். நான்கு ரூபாயை வைத்துவிட்டுத் திரும்பினான். இது என்ன நறுமணம்? மெய்மறந்து ஒரு கணம் கண்களை மூடினான். சில்லரையை எடுத்துப் போட்டுவிட்டு கடைக்காரர் கேட்டார், ”சார், நாலு ரூபா குடுத்துட்டுப் போங்க”.

திரும்பினான். அந்த மணம் இப்போது இல்லை. ”இப்பத்தான இங்க வச்சேன்”, நிதானமாகக் கூறினான் சுதாகர். ”என்ன சார் இது, கிலாஸ வச்சுட்டு அப்படியே திரும்பிப் போறீங்களே”, கடைக்காரனும் நிதானமாகத்தான் கேட்டான். அவனுடைய பார்வைதான் குறுகுறுவென இருப்பதாகத் தோன்றியது சுதாகருக்கு.

”நல்லா பாருப்பா, ரெண்டு ரெண்டு ரூபா, மொத்தம் நாலு ரூபா”.
”ரெண்டு ரெண்டு ரூபா நாலு ரூபான்னு எங்களுக்குத் தெரியாதா?” இப்போது அவன் வம்பிழுப்பது போலவே தெரிந்தது.

சுற்றி நோட்டம் விட்டான். எங்கும் காமிராவை ஒளித்து வைத்துவிட்டு நோட்டம் விடுகிறார்களா என்று. பின்பு சண்டையெல்லாம் போட்டுவிட்டு வழியவேண்டியிருக்கும். எதற்கு வம்பு என்று நாலு ரூபாய் கொடுத்து திரும்பி நடந்தான்.

நான்கு ரூபாய் இழந்தது சுதாகர் மனதை உறுத்தவே இல்லை. காரணம் அந்த நறுமணம். அன்று முழுவதும் அதே சிந்தனைதான். ”நேற்றும் இதே வாசம் அடித்ததே! அப்போ என்ன செய்துகொண்டிருந்தோம்?” யோசித்தான். அலுவலகத்தில் கணினி முன் உட்கார்ந்திருந்ததாய் ஞாபகம். அப்போது கடந்து சென்ற ப்ரியாவிடமிருந்து வந்திருக்கலாமென நினைத்திருந்தான். மறுநாளும் அதே வாசம் அதே நேரம் வருமென்றே தோன்றியது.

அலுவலகம் விடுமுறைதான். இதற்காகவே மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டான். கைக்கடிகாரத்தின் நேரத்தை சரியாக வைத்துவிட்டு வீட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தான். ஐந்து மணிக்கு அருகே என்பது அவனது கணிப்பு. கையிலிருக்கும் கடிகாரத்தையே பார்த்துகொண்டிருந்தான்.

சுதாகரின் அம்மா உள்ளே இருந்து எட்டிப் பார்த்தார். ”டிவி சும்மா ஓடுது, இவன் கையையே பாத்துட்டு இருக்கனே! சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கனும்”, முனுமுனுத்தவாரே வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

சுதாகர் கவனமெல்லாம் கடிகாரத்தின்மீதே இருந்தது. நேரம் ஐந்தை நெருங்கிக்கொண்டிருந்தது. நொடிமுள் பதினொன்றைத் தாண்டிக்கொண்டிருந்த நேரம், அம்மா கேட்டார் ”டேய், அப்பா மொபைல எடுத்து எங்கடா வச்ச?” மணி சரியாக ஐந்து ”டிவி மேல இருக்கு பாரும்மா” அன்னிச்சையாக பதில் வந்தது சுதாகரிடமிருந்து. டிக் டிக் டிக் டிக் டிக்... சரியாக ஐந்து நொடிதான் நறுமணம் நிலைத்தது.

"அப்பா மொபைல எங்க வச்சன்னு கேக்குறேன்ல, பதில் சொல்லாம அப்படி என்னடா பண்ணிட்டு இருக்க?"
"டிவி மேல இருக்கும்மா" குழப்பத்துடன் கத்தினான்.

இரவு அனைத்தையும் கணக்கு போட்டுப் பார்த்தான். அவனது கணிப்பு இதுதான். சரியாக ஐந்து மணியிலிருந்து ஐந்து நொடிகள் ஒரு நறுமணம் மிகுந்த தேவதை அவன் அருகில் வருகிறது. அந்த நேரம் அவன் செய்யும் செயல் அனைத்தும் மறைந்து விடுகிறது அல்லது மற்றவர்கள் மறந்து விடுகிறார்கள். இது அந்த தேவதையின் வரமாக இருக்கலாம். மறுநாள் சோதித்துப் பார்க்கலாமென முடிவு செய்தான்.

மறுநாள், அலுவலகத்தில் வேலை எதுவுமே ஓடவில்லை. மாலை ஐந்து மணி எப்போது வரும் என காத்துக்கிடந்தான். சிறிய அளவில் ஏதும் செய்து பார்க்கலாமென முடிவு செய்திருந்தான்.ஐந்து மணி ஆகப்போகிறது, அலுவலகத்துக்கு வெளியே, எதிரே இருக்கும் டீக்கடைக்கு கிளம்பினான்.

டீக்கடையில் ஒரு சிகரெட்டை வாங்கிவிட்டு கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தான். ஏற்கனவே கைக்கடிகாரத்தில் அலாரம் வைத்தாயிற்று. அருகில் இருவர் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தனர். பீப் பீப்... ஐந்து மணி. பேசிக்கொண்டே கடைக்குள் எட்டி ஒரு சிகரேட் பாக்கெட்டை ”ஒரு பாக்கெட் எடுத்துக்கிறேன்” என்றவாறே எடுத்து பாக்கெட்டுக்குள் வைத்தான். நறுமணம் மறைந்ததை உறுதி செய்துகொண்டு திரும்பி நடக்கலானான். சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தான். கடைக்காரர் அவர் வேலையை செய்துகொண்டிருந்தார்.

வீட்டிற்கு வந்து அதனையே ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான்.  திடீரென ஒரு சந்தேகம். அவர்தான் மிகவும் தெரிந்தவராயிற்றே, நாளை வாங்கிகொள்ளலாம் என விட்டிருப்பாரோ? அல்லது, நமக்குத் தெரிந்தவர்கள் திட்டமிட்டு இப்படி நம்மை நம்பச் செய்கிறார்களா? அப்படியென்றால் அந்த நறுமணம் எப்படி? கொஞ்சம் குழப்பம்தான். மறுநாள் அவனைத் தெரியாத இடத்திற்குச் சென்று சோதிக்கலாமென முடிவு செய்தான்.

மாலை நான்கு மணி. அலுவலத்திலிருந்து கிளம்பி, பைக்கில் வளைந்து நெளிந்து சென்றான். அறிமுகமே இல்லாத ஒரு கடையைத் தேர்வு செய்தான். நேரம் ஐந்தை நெருங்கும்போது கடையை நெருங்கி ”ஒரு மொசாம்பி” என்றான். கடையின் முன்பு சில கண்ணாடி பாட்டில்கள் கண்ணை உறுத்தின. முறுக்கு, கடலை மிட்டாய், பர்பி என வரிசையாக அடுக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்கள், சில வாடிக்கையாளர்கள் அருகில், காத்திருந்தான். பீப் பீப்... ஒரு கண்ணாடி பாட்டிலை அப்படியே கையால் மேலே தூக்கி, தரையில் ஓங்கி அடித்தான். கடைக்காரர் அலறினார், ”எதுக்குய்யா இப்படி ஒடைக்கிற”. பக்கத்தில் இருந்தவர்களோ விலகி நின்று ஒரு மாதிரி பார்த்தனர். ஒரு நொடி ஒன்றும் யூகிக்க முடியவில்லை சுதாகருக்கு. அடுத்து, ”எப்படி கீழே விழுந்தது?”, இது கடைக்காரர். ”தெரியல பாஸ், ஓரத்துல இருந்துருக்கும், அப்படியே கீழ விழுந்திருக்கும்போல இருக்கு”, பக்கத்தில் நின்றிருந்தவர்.

உறுதி செய்துகொண்டான். இது நிச்சயமாய் நமக்குக் கிடைத்த வரம்தான். இந்த ஐந்து நொடி நாம் என்ன நினைத்தாலும் செய்யலாம். மீண்டும் அலுவலகம் வந்து, பின் வீடு செல்லும் வரை ஒரு கவலை கூட இல்லை. இனி என்ன இருக்கிறது கவலைப்பட, இதை வைத்து என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாமே என்ற நினைப்புத்தான். அடுத்து என்னவெல்லாம் செய்யலாமென திட்டம் போட்டது சுதாகரின் மனது.

பைக் வாங்கனும், இல்லை கார் வாங்கலாம், இந்த சக்தியை எப்படி பயன்படுத்துவது. யோசித்தான், ஒன்றும் பிடிபடவில்லை. பணத்தை வேண்டுமானால் எடுத்துக்கொண்டு ஓடலாம். எங்கு பணத்தை எடுக்கலாம், எப்படி எடுக்கலாம்? பெட்டிக்கடையில் எடுக்கலாம். அங்கே குறைவாகத்தானே இருக்கும். இல்லையெனில் ஒயின் ஷாபில் எடுக்கலாம். கத்தையாக எடுத்து பைக்குள் வைத்துவிடலாம். ஐந்து நொடி கழித்து எடுத்தது தெரியவா போகிறது? கடன் வாங்கும் போது இந்த ஐந்து மணி பார்த்து வாங்க வேண்டும். ஆபீஸில் யாரிடம் கடன் வாங்கலாம்? நமக்குப் பிடிக்கதவர்களிடம் மட்டுமே வேலையைக் காட்ட வேண்டும். பின்பு, அதிகமாக குடைச்சல் குடுக்கும் டீம் லீடரை மூக்கில் ஒரு குத்து குத்தலாமா?

இப்படியே யோசித்துக் கொண்டிருந்த சுதாகரின் எண்ணங்கள் ப்ரியாவில் வந்து நின்றது. திமிர் பிடித்தவள். பாசுக்கு தெரிந்தவள் என்பதால் ரொம்பத்தான் ஆணவம். ஆம்பிளை நம்மளை மதிக்கிறாளா? ப்ராஜக்ட் மேனேஜர் என்றால் எல்லோரையும் மட்டம் தட்டித்தான் பேசவேண்டுமா? இவள் திமிரை அடக்க வேண்டுமே. ஆனால் அதெல்லாம் சாத்தியமா? சும்மா சொல்லக்கூடாது, செம பிகருதான். முதலில் நமது ஆசையைத் தீர்த்துக்கொள்வோம். நமது ரகசிய நேரத்தில், அவளது உதடு கிழிய ஒரு முத்தத்தை பதித்துவிட வேண்டும், முடிந்தால் செல்போனில் வீடியோ எடுத்துவிடவேண்டும்.

சுதாகர் இவ்வாறு பல திட்டங்களை வகுத்தபின், நாளை என்ன செய்வதென்று முடிவு செய்தான். அனைவர் முன்னிலையில், ப்ரியாவின் உதட்டில் நச்சென்று நான்கு நொடிக்கு ஒரு முத்தம் பதிப்பதென்று. அடுத்த நொடி யாருக்குத் தெரியப்போகிறது. ஆனால் அவளுக்கு மட்டுமே தெரிய வைக்க வேண்டும், யாரோ பல் பதித்திருக்கிறார்கள் என்று.

எவ்வளவு திட்டங்கள் உதிக்கின்றன, நமக்குள் இவ்வளவு எண்ணங்கள் இருக்கிறதா என அவனுக்கே ஆச்சர்யம். கொஞ்சம் தூங்குவோம் என கண்களை மூடினான். ப்ரியாவின் பரிதாப முகமே அவனது மனதுக்குள் ஆடியது. நினைத்துக் கொண்டான் ”கேட்காமலேயே வரம் தந்த நறுமண தேவதையே, நீ வாழ்க”.

தேவதை சிரித்தாள், ”இந்த ஐந்து நொடி வரம் ஐந்து நாளைக்குத்தானப்பா கொடுத்தேன்”!

---

-அதி பிரதாபன்.

சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டிக்காக எழுதியது

Share/Bookmark
Read More!