ஒரு நல்லவனின் பிரார்த்தனை - சிறுகதை

எட்டு மணி வரை தூங்கிப் பழகிவிட்டேன். இனி ஐந்து மணிக்கே எழ வேண்டும். இல்லையெனில் வாழ்க்கையை ஓட்ட முடியாது. சிக்கனம் என்பதே மிகச் சிக்கனமாக இருந்த என் மனது, இப்போது தாராளமாக அதைப் பற்றி அசை போடுகிறது. இனி இரவு நேரங்களில் சுற்றுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எத்தனை நாள்தான் இந்தப் போராட்டம் எனப் பார்த்துவிடலாம்.

சிலர் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்கிறார்கள் என்பார்கள். எனது விசயத்தில் இனி அது சிக்கனத்தைக் குறிக்கும். வரும்காலத்தில் இதன் அர்த்தமே தலைகீழாகப் போகலாம், இப்போது இருப்பதுபோல். தண்ணீர் என்றதும் சரக்கின் ஞாபகம் வேறு வருகிறது. அதற்கு ஏது சிக்கனம், நமது அரசு இருக்கும்வரை.

நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டதாம். தண்ணீர் கொஞ்சம்தான் வருகிறது. காலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரைதான் எங்களது தளத்திற்கு மோட்டார் ஓடும். அப்போதே மற்ற மூவரும் பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். எனக்கும் வேறு வழி இல்லை. இல்லையேல் காலியாகிவிடும். இரவே குழாயைத் திறந்துவிட்டுப் படுக்கலாம். ஆனால், காலை ஐந்தரை மணிக்கு யாராவது காலிங் பெல்லை அடித்து எழுப்பி, “குழாய மூடலயா? ரொம்ப நேரம் தண்ணி விழுதே...”, என அறிவுரையை ஆரம்பித்துவிடுவார்கள்.

குளிப்பதற்குப் போதும். ஆனால் துவைக்க? இதற்காகவே இன்னொரு வாளி வாங்க வேண்டியதாகிவிட்டது. முன்பெல்லாம் இருமுறை அலசும் துணிகள், இப்போது அரை வாளி தண்ணீரில் நனைவது கண்டு ஏங்குகின்றன, எனது உடலைப்போல். சோப்பும், அழுக்கும் போகுதோ இல்லையோ, துவைக்கவேண்டும், அவ்வளவுதான்.

தினமும் காலை எரிச்சலுடன் ஆரம்பிப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை. குளிக்கும்போதும் இதே நினைப்புதான், வழக்கம்போல. ”ஏன் எனக்கு இப்படி? யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்? ஒருவேளை பக்கத்து வீட்டுக்காரர்கள் செய்ததற்கு தண்டனையா? அதை எதற்கு எனக்கும் சேர்த்துக் கொடுக்கவேண்டும்?”, பெல்ட்டை மாட்டி, தலையைச் சீவினேன்.

”மழையைக் கொடுப்பதில் அப்படி என்ன கஞ்சத்தனம் கடவுளுக்கு? காசா பணமா? கொட்டவேண்டியதுதானே”. சுள்ளென எரிக்கும் சூரியனை எண்ணங்களால் சுட்டுக்கொண்டே இறங்கினேன். ”மக்களை கஷ்டப்படுத்துவதில் அப்படி என்னதான் சந்தோசமோ உனக்கு”. தெருவில் இறங்கி நடக்கையில், எதிரே உப்பு விற்பவன்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark

11 ஊக்கங்கள்:

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நிஜ நிகழ்வுகளை சிறுகதையாக போடுவதும் நல்லா இருக்கு

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

என்னதான் தண்ணி இல்லன்னு நீ பதிவு போட்டாலும் 14-ம் தேதி உன் வீட்டில்தான் டேரா.

ஜெட்லி... said...

//தண்ணீர் என்றதும் சரக்கின் ஞாபகம் வேறு வருகிறது. அதற்கு ஏது சிக்கனம், நமது அரசு இருக்கும்வரை.
//

கரெக்ட்ஆ சொன்னிங்க ஜி...

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்ன யாராச்சும் ரூம்ல வந்து தங்கரேன்னு சொன்னாங்களா?

Thamira said...

ரொம்ப சுமார்.! குறைந்தது ஆயிரம் தடவை இதுமாதிரி படித்திருப்போமா.?

☀நான் ஆதவன்☀ said...

நடத்து மாப்பி நீ நடத்து. எப்ப மொக்கைய நிறுத்தபோறேன்னு சொன்னயோ அப்பவே நாங்க எல்லாத்துக்கும் தயாராகிட்டோம்.

பை த வே கதையின் முடிவில் முரண் அட்டகாசம்.

Cable சங்கர் said...

அதிபிரதாபன்.. நேற்று போனில் சொன்னதை பதிவாக்கிவிட்டீர்களா..?

முடிவில் முரண் காட்ட நினைத்திருந்தாலும்.. இன்றைய காலகட்டத்தில் ரோட்டில் உப்பு விற்பவர்கள் இருப்பதில்லை.:(

Beski said...

//நிஜ நிகழ்வுகளை சிறுகதையாக போடுவதும் நல்லா இருக்கு//
நன்றி கிகி,

//என்னதான் தண்ணி இல்லன்னு நீ பதிவு போட்டாலும் 14-ம் தேதி உன் வீட்டில்தான் டேரா.//
வாங்க வாங்க, இப்போ அந்தப் பிரச்சனை இல்லை. தண்ணி அதிகமா வந்துட்டு இருக்கு. அத வச்சு இன்னொரு கதை எழுதலாம்.

நன்றி ஜெட்லி,
//கரெக்ட்ஆ சொன்னிங்க ஜி...//
கரெக்டா நம்ம ஏரியாவ நோட் பண்ணிருக்கிங்களே!

நன்றி ராஜ்,
//என்ன யாராச்சும் ரூம்ல வந்து தங்கரேன்னு சொன்னாங்களா?//
ஆமா, முதல் பின்னூட்டக்காரர். அவர் சொன்ன நேரம் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது.

Beski said...

நன்றி ஆதி அண்ணே,
//ரொம்ப சுமார்.! குறைந்தது ஆயிரம் தடவை இதுமாதிரி படித்திருப்போமா.?//
ஹி ஹி ஹி... இதுக்குத்தான் அதிகமா படிங்கன்னு சொல்றாங்களோ?

நன்றி ஆதவா,
//பை த வே கதையின் முடிவில் முரண் அட்டகாசம்.//
புரிஞ்சுரிச்சா மாப்பி, அப்பாடா.

நன்றி கேபிள்ஜி,
//அதிபிரதாபன்.. நேற்று போனில் சொன்னதை பதிவாக்கிவிட்டீர்களா..?//
ஆமாம், சில கற்பனைகளையும் சேர்த்து.
//முடிவில் முரண் காட்ட நினைத்திருந்தாலும்.. இன்றைய காலகட்டத்தில் ரோட்டில் உப்பு விற்பவர்கள் இருப்பதில்லை.:(//
ஜி, நான் எந்த ஊருல நடக்குதுன்னு சொல்லவே இல்லையே! நீங்க என் சூழ்நிலைய மனசுல வச்சுட்டு பாத்துட்டீங்கன்னு நினைக்கிறேன். இன்றும் நம்ம ஊரில் ஒன்னாம் தேதி ஆனா கரெக்டா வந்துருவாங்க... ஒன்னாம் தேதி உப்பு வாங்குனா சாப்பாடு ருசியா இருக்குமோ?

Jana said...

கதை நல்லா இருக்கு. அது சரி 14ஆம் திகதி என்ன விசேசம்?

Beski said...

நன்றி ஜனா.
14ம் தேதி கிகி சென்னை விஜயம்.