எவனோ ஒருவனின் வரலாறு - கேக்கவே நல்லா இருக்குல்ல? (இல்லன்னாலும் ஆமான்னு சொல்லனும்), அதுக்குத்தான் இப்படி பேர வச்சேன். எவனோ ஒருவன் சொன்னான், எவனோ ஒருவனுடன் போனேன், எவனோ ஒருவன் வந்தான், எவனோ ஒருவன் நல்லா எழுதுறான் (ஆதவா, வேணாம், நிறுத்திக்கிறேன்).... ஏதோ டாட் காம்னு பேரு கிடச்சுது, அத வச்சதுக்கு அப்புறம் அதுக்கு ஏத்தமாதிரி எவனோ ஒருவன்னு வச்சாச்சு. இப்ப பேரையும் மாத்தியாச்சு. இத சொல்ல ஒரு பதிவு போடனுமேன்னு நெனச்சுட்டு இருந்தப்போதான், நம்ம
ஆதவன் வரலாறு தொடருக்கு கூப்ட்டாப்ல. நமக்கு சோசியல் சயின்ஸ்னா மூனாங்கிலாஸ்ல இருந்தே பயம். இருந்தாலும் தெரிஞ்ச சப்ஜெக்ட்டுங்கிறதுனால உள்ள குதிச்சிடலாம். ஏதும் சந்தேகம் கேட்டாக்கூட தைரியமா சொல்லலாம் பாருங்க.
---
பிரதாப் பெஸ்கி. இதுதான் நமது பெயர். இணையம் தொடர்பான வேலை. அதனால் சும்மா இருக்கும் நேரத்திலெல்லாம் ஏதாவது இணையதளம் மேய்வது எனது தொழிலின் ஒரு பகுதி. அதே போல
ரஜினிஃபேன்ஸ் தளத்தையும் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் இருந்தது.
ஒருமுறை RSS பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய சூழ்நிலை. படித்துக்கொண்டிருந்த நேரம், கூகுல் ரீடர் பற்றித் தெரிய வந்தது. ரஜினிஃபேன்ஸ் தளத்தின் RSS எடுத்து கூகுல்ரீடரில் சேர்த்து படிக்கத் தொடங்கினேன். அப்படியே என்னுடைய தொழில் சார்ந்த விபரங்களுக்கு சிலவற்றை சேர்த்தேன். அதன்பின் முதன்முதலில் பார்த்த பிலாக்
என்வழி. அதனைத் தொடர்ந்து படிக்கலானேன். பின்பு அதனுடன் சுந்தரின்
ஒன்லிரஜினி.
கிரி அவர்கள் பதிவு ஒன்றைப் படித்தாக ஞாபக. பிறகுதான் திருப்புமுனை.
டோண்டு அவர்களின் வலைப்பூவை பார்க்க நேர்ந்தது. அங்குதான் பின்னூட்டங்களைப் பார்த்து அடுத்தடுத்து தொடரத் தொடங்கினேன். அப்படியே வெகுகாலம் படித்துக்கொண்டிருந்தேன்.
தமிழில்தான் எழுதவில்லையே தவிற, எனது துறையின் தொழில்நுட்பம் சார்ந்த வலைப்பூக்கள் இரண்டு ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்தேன். சின்ன சின்ன குறிப்புகளுக்காக
http://phpbeginners.blogspot.com மற்றும் என்னுடைய வேலைகள், கொஞ்சம் பெரிய குறிப்புகளுக்காக
http://beski.wordpress.com. தமிழில் எழுதவேண்டும் எனத் தோன்றியபோது
http://dinamdinam.blogspot.com எனபதைத் தொடங்கி எழுதிப் பார்த்தேன். சுத்தமாக வரவில்லை. அதன் பிறகு பெரிதாக முயற்சியும் செய்யவில்லை.
வாசிக்கும் காலங்களில் அவ்வப்போது பதிவர் சந்திப்பு நடைபெறும். ஒரு வாசகனாக பதிவர் சந்திப்புக்கு வரவேண்டுமென வெகுநாட்கள் ஏங்கியதுண்டு. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் வந்து தடுத்துவிடும் (நாம எழுத ஆரம்பித்த 4 மாதங்களுக்கு சந்திப்பே நடைபெறவில்லை என்பதையும் நினைவில் கொள்க). ஒரு நாள்
இந்தப் பதிவைப் பார்த்ததும் கொஞ்சம் பொங்கிவிட்டேன். ஆத்திரத்தில்
ஏதோ எழுதியும் விட்டேன். பைத்தியக்காரன் மேலே கொஞ்சம் கோபம், சந்தேகம் (பின்புதான் தெரிந்தது
அவரது நல்ல மனது).
முதல் பதிவில் மூன்று பின்னூட்டங்கள்.
முத்துலெட்சுமி/muthuletchumi,
சென்ஷி,
அதிஷா . ஆச்சர்யம்! எப்படித் தெரிந்தது? ஒருவேளை தமிழ்மணத்தை குடைந்துகொண்டிருந்ததால் வெளியே தெரிந்திருக்கும், அல்லது திரட்டிகளில் இவர்கள் முக்கியப் பங்கு வகிக்கலாம். இவர்கள் வந்ததற்கு நான் வைத்த தலைப்பும் ஒரு காரணமாய் இருக்கும். பின்பு அப்படியே தொடர்ந்தது. கூடவே எனது அண்ணன்
கிகியையும் சேர்த்து உள்ளே போட்டேன். இவர் நல்ல அனுபவசாலி, பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதில் வல்லவர். இப்போது அலுவல் மற்றும் குடும்ப வேலைகள் காரணமாக் எழுதாமல் இருக்கிறார். விரைவில், அனுபவப் பதிவுகளை இவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
ஆரம்பத்தில் சென்ஷிதான் சில சந்தேகங்களை தீர்த்துவைத்தார். அப்போது அவரிடம் சாட் மூலம் உரையாடியது, உள்ளே வந்த இரண்டாம் நாளே
ஆதி அவர்களிடம் பேசியது,
சுரேஷ் கண்ணன் என்னை தொடர் பதிவிற்கு அழைத்தது ஆகியவைகளெல்லாம் எனது சாதனைகளாக கருதப்படுகின்றன (வரலாறு முக்கியம் அல்லவா). இப்படியே போய்க்கொண்டு இருந்தது, பின்புதான் இரண்டாவது திருப்பம்.
சிறுகதைப் பட்டறை. இங்குதான் முதன்முதலில் பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, பலரின் அறிமுகமும் கிடைத்தது. முடிந்தவுடன்
வால்பையன் உடன் அழைத்துச் சென்றார். வேறெங்கே? அங்கே இன்னும் சிலரின் அறிமுகம். அது ஒன்றும் பெரிதாக நீண்டுவிடவில்லை. பின்பு வந்தது மூன்றாவது திருப்பம்.
(மேலே உள்ள படத்தை அழுத்திப் பாருங்கள், வெளிவராத சில படங்களைக் காணலாம்)
மெரினாவில் பதிவர் சந்திப்பு. சந்திப்பு சரியாக நடக்கவில்லை என்பது வேறு விசயம். ஆனால் இன்னும் சில நண்பர்கள் கிடைத்தார்கள். அன்று பார்த்த
அடலேறு,
ஜனா,
நிலாரசிகன் ஆகியோர் இன்றும் தொடர்கிறார்கள். இதே நாளில்தான் இரண்டாவது திருப்பத்தில் கிடைத்த நட்புகளும் இரு கைகளை நீட்டி என்னை அழைத்துக்கொண்டன.
அகநாழிகை பொன்.வாசுதேவன்,
தண்டோரா,
கேபிள் சங்கர்,
வண்ணத்துப்பூச்சி சூர்யா ஆகியோருடன் தொடர்ந்து செல்கிறேன்.
இப்படி பார்த்துப் பழகாவிட்டாலும் சாட்டிலும், போனிலுமே பேசி நட்பை என்னுடன் வளர்த்துக்கொண்டவர்
குறை ஒன்றும் இல்லை ராஜ். இவர் இப்போது எழுதுவதில்லை. ஆனால் நட்பு தொடர்கிறது.கடந்த வாரம்தான் இவரை நேரில் பார்த்தேன். இதே போல
ஆதவன், தினமும் கதைக்கும் ஒருவன். ஆதவா, இந்தியா வந்தால் கண்டிப்பாக என்னை வந்து பார்ப்பாய், அதனால் ஒரு செண்டு பாட்டிலோடு வரவும். இதேபோல
இனியவன் என்.உலகநாதன். இவருடைய அனுபவப் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது
100 வது பதிவில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சி. அவ்வப்போது மின்மடலில் மட்டுமே தொடர்பு, இருப்பினும் இருவருக்கிடையே ஏதோ புரிதல் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.
இதன் பிறகு, நான் எழுதுவதில் உள்ள குறை நிறைகளை சுட்டிக்காட்டி, என்னை ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஆதி மற்றும் அகநாழிகை பொன்.வாசுதேவன். ஆதிதான் முதலில் ஆரம்பித்தார், “நல்லாத்தான எழுதுறீங்க, இப்படியெல்லாம் பேர வச்சுக்கிட்டா நல்லா இருக்காது”,ன்னு சொன்னார். பின் வாசு அவர்கள் சில விபரங்களைக் கேட்ட பிறகு ஒரு பெயரையும் வைத்துவிட்டார் (பேரு வச்சீங்களே, என்னைக்காவது எனக்கு சோறு வச்சீங்களா?).
அதி பிரதாபன் (இதன் பின்னணிக் கதை அறிய தனியே தொடர்பு கொள்ளவும், இப்போதே பதிவு நீண்டுவிட்டது). இனி மொக்கையாக எழுதுவதை கொஞ்சம் குறைக்க வேண்டும் என மனது சொல்கிறது. (என்னது? இதுவே மொக்கையா இருக்கா? ராஜ், அப்படியெல்லாம் சொல்லக்கூடாது)
இனி கொஞ்சம் கருத்து (நோ நோ, ஓடக்கூடாது, இவ்ளோ தூரம் வந்துட்டீங்க , இந்த பாராவையும் தாண்டி போயிருங்க). எழுத வந்தது என்னமோ ஒரு திருப்திக்காகத்தான். ஆனால் இங்கு கிடைத்த நட்புகள் எண்ணங்களை மாற்றி விட்டன. கிடைத்த நட்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன, எதிர்பாராதவை. யாரையும் பார்க்காமல் நான் சும்மா எழுதிக்கொண்டே இருந்திருந்தால் பல நடைமுறைகள், எழுத்துக்கள், அரசியல் தெரியாமல் போயிருக்கும். நான் எழுதுவது நன்றாக இருக்கிறதா என்று கூடத் தெரியாமலே போயிருக்கும், திருத்துவதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. சுருக்கமாகச் சொன்னால் கிணற்றுத் தவளையாகவே இருந்திருப்பேன். இப்பவும் அப்படித்தான், இருந்தாலும் வெளியே வருவதுபோல் இருக்கிறது.
உண்மையான விமர்சனம் இல்லாமல் திருத்திக்கொள்ள வாய்ப்பே இருக்காது.
---
தொடர் பதிவு எழுதுறது கூட பெரிய விசயமா தெரியல. அதுக்கு அடுத்து ஆள் பிடிக்கறத நெனச்சாத்தான் கொஞ்சம் மலைப்பா இருக்கு. ஒன்னு நாம கூப்பிட நினைத்தவர்களை யாராவது ஏற்கனவே கூப்பிட்டுருப்பாங்க. அல்லது கூப்பிட்டவங்க ஏதாவது வேலையா இருந்து எழுதாமப் போய், அப்புறம் அப்படியே மறந்து போய்டுவாங்க. ஆனா கூப்பிட்டவங்களுக்கு கண்டிப்பா ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். நான் கூப்பிடுபவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் (அரசியல் வாடை அடிக்கிதோ?). எழுத முடியாவிட்டால் விட்டுவிடலாம், நான் ஒன்றும் தப்பா நினைக்க மாட்டேன் (இப்படி ஒரு பிட்டப் போட்டாத்தான் அவங்க எழுதாமப் போனாலும் ஒன்னும் தெரியாது).
நான் எதிபார்க்கும் வரலாறுகள்:
1. யூத் பதிவர் கேபிள் சங்கர் (இவரை ஏற்கனவே யாரோ கூப்பிட்டார்களாம்,
யார் என்று தெரியவில்லையாம், ஹி ஹி ஹி...)
2. அண்ணன் தண்டோரா (அண்ணன் இப்போ கொஞ்சம் பிசின்னு நினைக்கிறேன்)
3. அகநாழிகை பொன்.வாசுதேவன் (இதழ் வெளியீட்டில் பிசியாக இருக்கிறார்)
4. வண்ணத்துப்பூச்சி சூர்யா (இவரும் பிசிதான், வீட்டு வேலைகள், அலுவல் பணிகள்)
5. ஜனா (நீங்களாவது எழுதுங்க, அதுக்காக உங்கள வெட்டின்னு சொல்ல வரல)
MLM பண்ணுறவங்க பாத்துருக்கீங்களா? நம்மளை அவங்களுக்கு கீழ சேரச் சொல்லிட்டு அவங்களே நம்மளுக்கு கீழ ஒரு ஆளை பிடிச்சுப் போடுவாங்க. அதே போல... மேலே அழைக்கப்பட்டவர்கள் இவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்...
அடலேறு
நிலாரசிகன்
கனகு
ரோமியோபாய்
(இதை பிரசுரிப்பதற்குள் இவர்களுள் யாரேனும் எழுதிவிட வாய்ப்புள்ளது,
அப்றம் எழுதாம இருக்குறவங்க பின்னூட்டத்துல சொல்லி கொக்கியப் போட்டுக்குங்க...)
-அதி பிரதாபன்.
எவனோ ஒருவனின் வரலாறு
Read More!