Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

புதுத்தகம்

கதிரவன் ஸ்டோர். பள்ளி நாட்களில் மறக்க முடியாத கடை. இந்தக் கடை முதலாளி பெரும்பாலன மாதங்கள் ஈ ஓட்டிக்கொண்டிருப்பார். கடையில் ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே இருப்பார். ஆனால் ஜூன் மாதம் வந்துவிட்டால் அவருக்கும் அவரது கடைக்கும் தனி மவுசு வந்துவிடும். கடையில் அதிகமாக மூன்று பேரைப் போட்டிருப்பார். கடையில் கூட்டம் நிரம்பி வழியும். சொந்தபந்தம், தெரிந்தவர்களெல்லாம் இப்போதுதான் தங்களது நெருக்கத்தைக் காண்பித்துக்கொண்டிருப்பார்கள், கடை வாசலில். கதிரவன் ஸ்டோர் ஒரு புத்தகக் கடை.

புத்தகக் கடை என்றதும் சென்னையிலிருப்பது போல இலக்கியவாதிகள் வந்துபோகும் புத்தகக் கடை என்று நினைத்துவிட வேண்டாம். எங்களது ஊரில் புத்தகக் கடை என்றால் பள்ளிக் குழந்தைகளுக்கான நோட்டுகள், புத்தகங்கள் கிடைக்கும் கடை. பள்ளி ஆரம்பித்தவுடன் நோட்டுகளின் விறபனை சூடு பறக்கும். நோட்டுகளுடன் பேனா, பென்சில், டப்பா இன்ன பிற துணை ஆயுதங்களும் கிடைக்கும். பாடப் புத்தகம்தான் அதிக கிராக்கியாக இருக்கும்.

அப்போதெல்லாம் பாடப் புத்தகங்கள் பள்ளி ஆரம்பித்தவுடன் கடைகளில் கிடைக்காது. சிறிது நாட்கள் கழித்துதான் வரும். அதுவரை கடந்த வருட பழைய புத்தகத்தை வாங்கி வைத்து காலம் செல்லும். சிலருக்குத்தான் கிழியாத புத்தகம் கிடைக்கும். சில வீட்டில் அண்ணனோ அக்காவோ இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் மூத்தவர் இல்லாத வீடுகளில் இருப்பவர்களோ, இளையவர்கள் இல்லாத ஆட்களாகப் பார்த்து கொக்கி போடவேண்டியதிருக்கும். சிலர் விலைக்குக் கூட கொடுப்பர். சிலரோ ஓசிக்கே கொடுத்துவிடுவர். பெரும்பாலும் அது கிழிந்த புத்தகமாகவே இருக்கும். கிழிந்த புத்தகமென்றால் அட்டையில்லாத புத்தகம்.

பழைய புத்தகம் வாங்குவதில் இரண்டு வகை உண்டு. சிலர், புது புத்தகம் வாங்குவது வரை ஒப்பேத்த பழைய புத்தகத்தை உபயோகிப்பர். அவர்கள் பெரும்பாலும் கிழிந்த புத்தகத்தையே வைத்திருப்பர். மற்றவர்கள் நல்ல பழைய புத்தகத்தை ஒரு விலை கொடுத்து வாங்கி விடுவர். அவர்களுக்கு புது புத்தகம் வாங்கும் எண்ணம் கிடையாது. அவர்களது வீட்டு பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்காது. அரசு தரும் இலவசப் புத்தகம் கிடைக்கும்தான். ஆனால் அது எத்தனை மாதங்கள் கழித்து வருமென்பது யாருக்கும் தெரியாது.

இப்படி பள்ளி ஆரம்பித்த சில நாட்களாகப் புத்தகம் வாங்கும் வேட்டை நடந்துகொண்டிருக்கும். புது புத்தகம் வாங்கும் நபர்களோ கதிரவன் ஸ்டோருக்கு புத்தகம் வந்ததா என்பது குறித்து விசாரணையிலேயே இருப்பர். ”நேற்று ஐந்தாம் வகுப்பு தமிழ் புத்தகம் வந்துவிட்டதாம் தெரியுமா?”, என்பது போன்ற ஆச்சர்யமிக்க அவரச் செய்திகள் காற்றில் பறந்துகொண்டிருக்கும். ஆம், ஒரு வகுப்பிற்கான புத்தகங்கள் மொத்தமாக வராது. தவணை முறையில்தான் வரும். ஒரு பாடமோ, அதற்கு மேற்பட்ட பாடங்களோதான் ஒரு சமயத்தில் வரும். மொத்தமாக வந்ததாய் சரித்திரம் கிடையாது.

சிலருடைய பெற்றோர் வெளியூரில் வேலை செய்துகொண்டிருப்பர். அவர்கள் அருகிலுள்ள பெரிய ஊர்களில் இருந்தால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சீக்கிரம் புது புத்தகங்கள் கைகளில் தவழ வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு அந்த சமயத்தில் நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுடைய கைகளிலும் சில நாட்களில் புது புத்தகம். அந்த சில பேரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும், படம் பார்க்க. மற்றவர்களுக்கும் புத்தகங்கள் கிடைத்துவிட்டால் அதன் பிறகு அவர்களைச் சீண்ட ஆள் இருக்காது.

இதாவது பரவாயில்லை. சில நேரங்களில் பாடத்திட்டம் மாறி, முந்தைய வருடத்திலிருந்து முழுவதும் வேறான புத்தகத்தை அரசு வெளியிடும். அபோதுதான் நமக்குக் கொண்டாட்டமே. புத்தகம் வாங்கியாச்சா என்ற ஆசிரியரின் நச்சரிப்பு அவ்வளவாக இருக்காது. அவருக்கு மட்டும் எங்கிருந்தாவது ஒரு புத்தகம் கிடைத்திருக்கும். அது எங்காவது தூரத்திலிருக்கும் உறவினர் மூலமோ நண்பர் மூலமோ கிடைத்திருக்கலாம். மீண்டும் ஒரு நாள் கதிரவன் ஸ்டோருக்கு புது புத்தகம் வந்துவிட்டது என்ற செய்தி காட்டுத்தீ போல பரவும். உடனே அப்பாவை அழைத்துக்கொண்டு கடைக்கு படையெடுப்புகள் தொடங்கும். காலியாவதற்குள் வாங்கவேண்டுமே!

இப்படியெல்லாம் வாங்கிய புத்தகங்களை இப்போது தேடவேண்டுமென்கிறது மனது. ’ஈறு போதல், இடை உகரம் ஈயாதல்’, ‘இரட்டைக்கிளவி’, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’, ‘பண்புத்தொகை’, ‘நேர் நேர் தேமா’ போன்றவை இலக்கணப் புத்தகத்திலிருந்து அவ்வப்போது கேட்கும். சரி, இலக்கணம் பற்றி எழுதலாமென்றால், அந்த புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அடுத்தமுறை ஊருக்குச் செல்லும்போது அவற்றைத் தேடி எடுத்துவரவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

இப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போது நண்பனிடமிருந்து வந்தது மின்னஞ்சல் ஒன்று, தமிழ்நாடு அரசுப் பாடநூலகள் இணையத்தில் இருக்கிறது, டவுன்லோடு செய்து பிரிண்ட் பண்ணி ஏழைக்குழந்தைகளுக்குக் கொடுங்கள் என்று (அல்லது இந்த மின்னஞ்சல் வந்த பின் இவையனைத்தும் மனதில் ஓடின எனவும் கொள்ளலாம்). முடிந்தவர்கள் செய்யலாம், இங்கே (textbooksonline.tn.nic.in) சென்று பார்க்கவும். முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்துப் புத்தகங்களும் PDF வடிவில் இருக்கின்றன. தமிழ் இலக்கணம், செய்யுளும் இங்கே இருக்கிறது, அருஞ்சொற்பொருள் விளக்கத்துடன். செய்யுள் பகுதிகளை அசைபோட நினைப்பவர்கள் சென்று பார்க்கலாம். இலக்கணமும் இருக்கிறது. ஆனால் நாம் எதிர்பார்த்த பகுதி இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் பாடத்திட்டம் அனைத்தும் மாறி இருக்குமே.

பெஸ்கியின் டிஸ்கி: இனி இலக்கணம் பற்றிய பதிவுகள் வரலாம்.

(பதிவிற்கு சம்பந்தமில்லாத)பெஸ்கியின் டிஸ்கி: ஆணி அதிகம்; ஆதலால் பதிவு உலா குறைவாகத்தான் இருக்கும்.

-அதி பிரதாபன்.

Share/Bookmark
Read More!

முன்னோடிகள்

எவ்வளவு ஆண்டுகளுக்கு முன் சூரியன் உருவாகியிருக்கும்? பூமி? உயிர்? மனிதன்? நமக்கு முன் தோன்றிய உயிர்களில், இப்போது நம்முடன் இருப்பவற்றுள் பழமையானது எது? முதன் முதலில் தோன்றிய மனிதன் இவ்வுலகில் எங்கு வாழ்ந்திருப்பான்? முதலில் தோன்றியது ஆணா பெண்ணா?

மனிதனில் முதலில் தோன்றியது பெண் என்கிறது விஞ்ஞானம். அப்படியானால் இனப்பெருக்கம்? ஹோமோசேப்பியன் என்றால்? மனிதன் உலகம் முழுவதும் பரவியது ஏன்? கப்பல் இல்லாத அக்காலத்தில் கண்டம் விட்டு கண்டம் எப்படி சாத்தியம்? இமயமலை இருந்த இடத்தில் அதற்கு முன்னால் என்ன இருந்திருக்கும்? இப்பொதிருக்கும் மெரினாவில் முன்பு கடற்கரை இருந்திருக்குமா?

நாடோடியாக அலைந்த மனிதன் ஒரே இடத்தில் தங்க ஆரம்பித்தது ஏன்? சிக்கிமுக்கிக் கல் உபயோகிக்கும் முன், தீ எப்படிக் கிடைத்திருக்கும்? விவசாயம் எப்படி முளைத்திருக்கும்? நாகரிகம் தோன்றியது எப்படி? முதல் சட்டத்தை உருவாக்கியது யார்? ஊழலுக்கு மரணதண்டனை, குறிப்பிட்ட நாட்களுக்குள் திருடனைப் பிடிக்காவிடில் காவலர்களுக்கு வேலை நீக்கம், என்றெல்லாம் இருந்தது ஆச்சர்யம் அல்லவா?

பழமொழிகள் முதன் முதலில் எப்போது உருவானது? முதல் காப்பியம்? அதன் கதை எப்படி இருந்திருக்கும்? கடவுள்கள் எவ்வாறு இருந்திருப்பார்கள்? 100 என்பது முழுமை என்றால், நேரம் 60ன் அடுக்குகளாகவும், டிகிரி 360 எனவும் இருப்பது எப்படி?

இந்தியாவில் நாகரிகம் எப்போது தோன்றியிருக்கும்? அது பாபிலோனிய, எகிப்திய, ஐரோப்பிய நாகரிகங்களுக்கு இணையாக இருந்திருக்குமா?

எகிப்தின் கிடுகிடு வளர்ச்சி எப்போது? அப்போது ஆண்ட மன்னர் யார்? மூட/கடவுள் நம்பிக்கைகள் அதிகம் இருந்த அந்த காலகட்டத்தில் மன்னர் எப்படி சமாளித்திருப்பார்? எகிப்தியர் மம்மி செய்தது ஏன்? எப்படி? முதன் முதலில் பேப்பர் எப்படி வந்தது? 3500 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு ’காக்டெய்ல் பார்டி’ இருந்தது தெரியுமா?

கிரேக்க நாடுகளில் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும்? பாரசீக - ஏதேன்ஸ் போரின் வரலாறு என்ன? முதன் முதலில் கச்சிதமாக நாணயங்கள் தயாரித்தது யார்? விளையாட்டுப் போட்டிகள் உருவானது எப்படி? ஒலிம்பிக்கை தோற்றுவித்தவர்கள் யார்?

பெரும் வல்லரசான கிரேக்கத்தின் வளர்ச்சிக்குத் தடை போட்டது யார்? முக்கியமான, மிகப் பெரிய போர்களில் ஒன்றான கிரேக்க - பாரசீகப் போரின் பிண்ணனி என்ன? கிரேக்கப் படையை விட நான்கு மடங்கு பெரிதான பாரசீகப் படை வென்றதா?

சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ மேதைகளைத் தந்த ஏதேன்ஸ், மும்பை நகர் அளவுதான். உலகமகா தத்துவ மேதை சாக்ரடீஸைக் கொன்றது ஒரு ஜனநாயக நாடு என்றால் நம்ப முடிகிறதா? அவரது சீடர் பிளேட்டோ மூலமே இன்றைய ’அகடாமி’ என்ற வார்த்தை வந்தது. முதல் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்ததும் அவரே. அவரது சீடர் அரிஸ்டாட்டில். அவரது மாணவரே மாவீரன் அலெக்ஸாண்டர்.

தனிமனித சுதந்திரத்தை கொண்டாடிய நாடு ஏதேன்ஸ் என்றாலும், பெண் சுதந்திரம் கொஞ்சம் கூட கிடையாது என்றால் நம்ப முடிகிறதா? பிள்ளை பெறுவதற்கு மட்டுமே பெண். சுகத்திற்குக் கூட ஆண் நண்பர்களுடந்தான் கலவி என்பதெல்லாம் ஆச்சர்யமான விசயமல்லவா?

அலெக்ஸாண்டர் இறந்த பிறகு இந்தியாவில் தலை தூக்கிய மாபெரும் சாம்ராஜ்யமே மௌரியா சாம்ராஜ்யம். அதன் சக்கரவர்த்தி சந்திரகுப்தனின் மெய்க்காவலர்கள் பெண்கள் என்றால் நம்ப முடிகிறதா? கிரேக்கப் படையையே தோற்கடித்த அவர் எவ்வாறு ஆட்சி செய்திருப்பார்?

சந்திரகுப்தனை உருவாக்கிய அந்த சாணக்கியன் யார் தெரியுமா? சந்திரகுப்தனின் மகன்தான் அசோகர். அசோகர் ஆரம்பத்தில் கொடுங்கோல் மன்னரென்றால் நம்ப முடிகிறதா? அவரின் மனதையே கலிங்கப் போர் மாற்றியதென்றால், அப்போர் எவ்வளவு பெரிதாக, கொடூரமாக இருந்திருக்கும்?

---

உலகம் தோன்றியதற்கு சற்று முன்னால் இருந்து, கிறிஸ்து பிறப்பதற்கு முன் வரை நடந்தவற்றின் ஒரு சிறிய தொகுப்பே, கி.மு. - கி.பி., குமுதத்தில் வெளிவந்த, மதன் அவர்கள் எழுதிய தொடர் புத்தகமாக. பள்ளி நாட்களில் வரலாறு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால், இப்போது படிக்கும்போது மிகவும் சுவையாக இருப்பது எப்படி என்று தெரியவில்லை. புத்தகத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, ஆச்சர்யப்படவைக்கும், சுவாரஸ்யமான தகவல்கள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன.

வரலாற்றில் எனக்கு ஈடுபாடு இல்லை என ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். படிக்க ஆரம்பித்தால், முடிக்காமல் கீழே வைக்க மனம் கேட்காது. படித்து முடித்த பின், நாம் இருக்கும் இந்த உலகம் இவ்வளவு பாதைகளைக் கடந்து வந்ததா என சிந்தனையைத் தூண்டுகிறது, நம் முன்னோர்களின் வாழ்வை அசைபோட்ட ஒரு திருப்தியைக் கொடுக்கிறது.

கிமு கிபி

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!