அலுப்பே நெருங்காதே

முதன் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பின், அதை ஓட்டுவது எப்படி இருந்தது? முதன் முதலில் வாங்கிய நோக்கியா 1100 தொலைத்த தூக்கங்கள் எத்தனை? முதன் முதலில் குடித்த பாதி பாட்டில் பீர், கால் டம்ளர் ரம் - இவைகள் தந்த போதை இப்போது எதிலும் கிடைக்காதது ஏன்? பள்ளி நண்பர்களுடனான முதல் சுற்றுலா, கல்லூரி நண்பர்களுடனான கடைசி சுற்றுலா ஏக்கம் தருவது ஏன்? முதல் பணியில் வெற்றிகரமாக செய்த சிறு வேலை தந்த மகிழ்ச்சி எங்கே? முதல் பதிவு, முதல் பின்னூட்டம் தந்த கிளுகிளுப்பு இப்போது எப்படிக் கிடைக்கும்?

எந்த ஒரு விசயத்திலும், முதலில் இருக்கும் சுவாரஸ்யம் கடைசி வரை இருப்பதில்லை. எனது வீட்டில் மொத்தம் நான்கு அறைகள். எனது ஒரு வயது குழந்தை, நாள் முழுதும் அதற்குள்தான் சுற்றிச் சுற்றி வருகிறாள். திங்கள் முதல் வெள்ளி வரை அந்த அறைகள்தான். நடக்கிறாள், ஓடுகிறாள், விழுகிறாள், அழுகிறாள், பாடல் கேட்கிறாள், பார்க்கிறாள், என்னுடன் விளையாடுகிறாள், சிரிக்கிறாள். சில நேரங்களில், ஒரு பொருளை கைகளில் வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பல கோணங்களில் பார்க்கிறாள். வீட்டுச் சாவியைக் கொடுத்தால், ஒரு மணி நேரம் வரை அந்த ஆராய்ச்சி நடக்கும். சிறு வயதில் நானும் இப்படித்தான் ஒரே இடத்தில் உட்கார்ந்து அலுக்காமல் சிறு செயல்களைச் செய்துகொண்டு இருந்திருப்பேன், என்பதை எண்ணிப் பார்க்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.


முதன் முதலில் DTS ல் திரைப்படம், மதுரையில் ஏதோ ஒரு திரையரங்கில் பார்க்க நேர்ந்தது. எந்தத் திரையரங்கு என்பது ஞாபகம் இல்லை, ஆனால் படம் ஞாபகம் இருக்கிறது The Mummy. அப்போது பதினோறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என ஞாபகம், DTS என்றால் என்ன என்பதே தெரியாது, ஆனால் சப்தங்கள் நம்மைச் சுற்றி வருகின்றன, தெளிவாக இருக்கின்றன என்பது மட்டும் புரிந்தது. பின்பு அது DTS என்பது ஒரு வருடத்திற்குப் பின்புதான் தெரிந்தது. வேறு எங்கெல்லாம் இருக்கிறது என்பதை ஆராய்ந்த போது, எங்களது சுற்று வட்டாரத்திலேயே, திருநெல்வேலி ராம் தியேட்டரில் மட்டும்தான் இருப்பது தெரிந்தது. மாதம் ஒரு முறை செல்லும்படி ஆகிப்போனது வாழ்க்கை. இரண்டு மணி நேரப் பேருந்துப் பயணம், மதிய உணவு. பேருந்து நிலையம் முதல் திரையரங்கு வரை நடை. மொத்த செலவு ஒரு நாள் மற்றும் எண்பது ரூபாய். திருநெல்வேலிக்குள் பேருந்து நுழையும்போது, போஸ்டர் பார்த்து என்ன படம் அங்கு ஓடுகிறது என்பதே தெரியும். அந்த அளவுக்கு ஆர்வம். இப்போது அனைத்து படங்களும் DTS ல்தான் பார்க்கிறேன், அனைத்தும் சாதாரணமாகத்தான் இருக்கின்றன.

படிக்கும் காலங்களில், ஏதாவது ஒன்றைச் சேர்த்து வைக்கும் பழக்கம் எப்போதும் இருந்ததாக ஞாபகம் இருக்கிறது. எனக்குத் தெரிந்து அது பல பேருக்கு இருந்தது. தொடர்ச்சியாக ஒரு பொருளை சேர்க்காவிட்டாலும், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளைச் சேர்க்கும் பழக்கம் இருந்தது. முதலில் சிகரட் அட்டை. தெருவில் வட்டம் போட்டு கற்களைக் கொண்டு  செதுக்கி விளையாடுவோம். எளிதில் கிடைக்கும் சிசர் பத்து ரூபாய், கோல்டு பிலேக் ஐம்பது/நூறு, பெர்க்கிலி ஐநூறு, 555 எல்லாம் மிக மிக அதிக மதிப்பு. திறமையுள்ளவன், விளையாட்டில் ஜெயித்து அதிகம் வைத்திருப்பான். வசதியுள்ளவன் கடைகளில் காசு கொடுத்து வாங்கி வைத்திருப்பான். பத்து காசு கொடுத்தால் கண்ணாடிப் பை நிறைய கிடைக்கும் ஐம்பது ரூபாயும் பத்து ரூபாயும். ஒவ்வொருவரிடமும் ஒரு பெரிய கண்ணாடிப் பை இருக்கும். அதில்தான் ஆரம்பித்தது சேர்க்கும் பழக்கம். பின்பு கோலிக்காய். கலர்கலராய் சேர்த்துவைத்து விளையாட்டு. அதிலும் அந்த நீல நிற கோலிக்கு மவுசு அதிகம். பின்பு சில நாட்கள் பூமர் பபுல்கம் உள்ளே இருக்கும் கார்டூன் கதைகள். ரெஸ்லிங் கார்ட்ஸ், பேருந்து பயணச்சீட்டுகள், எழுதுகோல்கள், பொங்கல் வாழ்த்து அட்டைகள், சினிமா டிக்கட்கள், தினமலர் - தீபாவளி மலர் ரஜினி ப்லோ அப்கள், சிகரட் லைட்டர்கள், பல நாட்டு ஸ்டாம்புகள். இதில் சேர்த்து வைத்த ஸ்டாம்புகள் தொலைந்து போனபோது மிகவும் மனம் உடைந்துவிட்டது. இவைகளில் சில பொருட்கள் இன்னும் என்னிடம் பத்திரமாய் இருப்பது ஒரு சிறப்பு, எப்போதாவது ஊருக்குச் செல்லும்போது என்னுடைய மேசையைத் திறந்து பார்ப்பதுண்டு. இப்போது சிகரட் அட்டை சேர்ப்பதென்றால் அலமாரி நிறைந்திருக்கும். தவிர, எந்தவொரு பொருளையும் சேர்த்து வைக்கும் ஆர்வம் இப்போது இல்லை.

கல்லூரி நாட்களில், வாரத்தின் சில நாட்கள் வெறுப்பாய் இருக்கும். வகுப்பில் ஏதாவதொரு விசயத்தைச் செய்துவரும்படி சொல்லியிருப்பார் ஆசிரியர். சில நேரங்களில் தேர்வு இருக்கும். அல்லது ஏதாவது ஒரு போட்டியில் கலந்துகொண்டிருப்பேன், அல்லது ஏதாவதொரு நிகழ்ச்சியில். இப்படி ஏதாவது ஒன்றிற்கு தயார்செய்துகொண்டிருப்பதே வேலையாக இருக்கும். அந்த நிகழ்ச்சி முடியும் வரை நிம்மதியாகவே இருக்காது. எப்போது முடியும் என்றிருக்கும், முடியும், மற்றொன்று தயாராகும். இப்படியே செல்லும். ஆனால் மாலை ஏழு மணிக்குமேல் நண்பர்கள் ஒரு இடத்தில் கூடி அரட்டை அடிப்போம். அந்நேரம் உயிர் போகும் பிரச்சனை தினமும் இருந்தால்கூட மனதில் ஒரு கவலையும் இருக்காது. கையில் காசு இருக்காது. எவனிடமாவது இருக்கும் ஐந்து ரூபாயில் நான்கு பேர் சிகரெட் பகிர்வோம். அதுவும் இல்லையென்றால் கணேசன் கடையில் அக்கவுண்ட். இப்போது ஒரு நாளுக்கு ஒரு பாக்கெட் வாங்கும் வசதி வந்துவிட்டது. ஆனால் கவலைகளை மறக்கும் தருணங்கள் இல்லை.

சில நேரங்களில் இருக்கும் வீடு அலுத்துவிட்டது போன்ற ஒரு உணர்வு. வேறு வீட்டிற்குச் செல்லலாம் எனத் தோன்றும். ஏதாவது ஒரு காரணத்திற்காக டிவி இருக்கும் இடத்தையோ அல்லது கட்டிலையோ, பீரோலையோ இடத்தை மாற்றி வைக்கவேண்டிய சூழ்நிலை வரும். மாற்றி வைத்தபின் சிறிது காலத்திற்கு அந்த உணர்வு வராது. மாற்றம் தேவைதான், அதற்காக வீட்டையே மாற்றவேண்டும் என்றில்லை. வீட்டிலுள்ள பொருட்களை இடம் மாற்றினாலே மனது மாற்றத்தை உணர்கிறது.

முதல் நான்கு வருடங்கள் நண்பர்களுடன் வேலை செய்தேன். பின்பு அனைவரும் தனித்தனியே பிரிந்து சென்றுவிட்டோம். அதன் பின் இப்போது இரண்டாவது நிறுவனம். முதலில் ஒரு நிறுவனத்தில் எட்டு மாதங்கள், இப்போது இங்கே பத்து மாதங்கள், அதற்குள் அலுத்துவிட்டது. அதற்கு உள்ளே நடக்கும் சில பிடிக்காத நடைமுறைகளும் காரணம் என்றாலும், இந்த ஆர்வமின்மை ஆறு மாதத்திற்குள் வந்துவிடுவது பற்றி பயமாக இருக்கிறது. இப்படியே போனால் வருடத்திற்கு இரண்டு நிறுவனங்களில் பணியாற்றுவது போல இருக்கும். எதிர்காலம்? ஒரு வேளை சென்னை அலுத்துவிட்டதோ என்னவோ.... ஒரு மாற்றத்திற்காக பெங்களூர் சென்று வாழலாம் எனத் தோன்றுகிறது.

-பெஸ்கி.


Share/Bookmark

0 ஊக்கங்கள்: