Showing posts with label சாப்பாடு. Show all posts
Showing posts with label சாப்பாடு. Show all posts

ஒரு சோறு - ஒரு பார்வை

கோடம்பாக்கம் மஹாலிங்கபுரம் பிரதான சாலையில், புதிய மேம்பாலத்திற்கு ஒரு புறத்தில் இருக்கிறது ஒரு சோறு - அசைவ உணவகம். லயோலா கல்லூரியிலிருந்து கோடம்பாக்கம் வரும்போது, பாலத்திற்கு இடதுபுறம் இருக்கிறது, முழுவதும் குளிரூட்டப்பட்ட உணவகம். சென்ற வாரம் ஒரு மதியம் சென்றேன், நண்பனுடன்.



சாதாரணமாக சாலையில் செல்லும்போது அவ்வளவாகத் தெரியாது; சற்று உள்வாங்கி இருக்கும். அகலம் குறைவான வாசல், உள்ளே சென்றதும் ஐந்து, நால்வர் உட்காரும் மேசைகள். என்னடா இது! இவ்வளவு சிறிய இடமா இருக்கே? இல்லை. உள்ளே சென்றால், மங்கலான ஒளி, இன்னும் அகலமான, 10 மேசைகளுக்கு மேல் போடக்கூடிய பரந்த இடம். நன்றாகத்தான் இருக்கிறது. சீருடை அணிந்த பணியாளர்கள், இரு மேற்பார்வையாளர்கள் சீருடை இன்றி. பின்னனியில் தமிழ்ப் பாடல்கள்.

நாங்கள் வெளியே அமர்ந்தோம்.



இங்கு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று உணவுப் பட்டியல் அட்டை (மெனு கார்டு). முதல் பக்கமும் கடைசி பக்கமும் பார்த்தவுடனேயே பிடித்துப் போயிற்று.
 




உள்ளே பலப்பல ரகங்கள். அதையெல்லாம் சாப்பிட ஒரு வயிறு போதாது என்றே தோன்றியது. ஒவ்வோரு நாளும் ஒரு சிறப்பு மதிய உணவுக் கலவை.



நாங்கள் சென்ற அன்று நெய்சோறும், கோழிக் கறிக் குழம்பும். கூடவே இரு சைவ கூட்டுக்கள், பருப்பு மற்றும் கத்தரிக்காய், கூடவே தயிர் வெங்காயம். அருமையான சுவை, இதன் விலை 79 ரூபாய்.



மேலும் சில படங்கள் மெனுவிலிருந்து
தோசை வகைகள்...



ஒரு சோறு சிறப்பு உணவு வகைகள் மற்றும் சைனீஸ் வகைகள்
 


அருமையான இடம், அசைவ உணவுப் பிரியர்களுக்குக் கொழுத்த வேட்டை.

---
இதை அறிமுகம் செய்த கேபிள்ஜிக்கு நன்றி.
-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

மீனாட்சி பவன்


சென்ற மாதம், ஒரே இடங்களில் மதிய உணவு சாப்பிட்டு அலுத்துவிட்டது என நண்பன் கூற, கிளம்பினோம் ஒரு தேடலுக்கு. அதில் பிடித்த இடம்தான் இந்த மீனாட்சி பவன்.


மீனாட்சி பவன் - ஜி.என்.செட்டி சாலையில், ஜெமினி மேம்பாலத்திலிருந்து திநகர் செல்லும் வழியில், புதிய மேம்பாலத்திற்கு கீழே இடதுபுறம் இருக்கிறது.

View My Fav Hotels in a larger map



அளவு சாப்பாடு 40 ரூபாய். அளவான சாதம், ஒரு சப்பாத்தி, குருமா, சாம்பார், ரசம், காரக் குழம்பு, தயிர், பாயாசம், இரண்டு கூட்டு, அப்புறம் ஒரு கிழியாத அப்பளம்.


சாப்பாடு ஆஹா, ஓஹோ என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், நல்லாயிருக்கும். பிறகு எது என்னை இங்கே எழுதத் தூண்டியது?

#டோக்கன் முதலிலேயே வாங்கிவிட வேண்டும், அதனால் டிப்ஸ் பத்தி கவலையே வேணாம், அதுவா?
#டிப்ஸ் கிடையாது எனத் தெரிந்தும் நன்றாக கவனித்த சர்வர்களின் கனிவா?
#சுத்தமான, குளிரூட்டப்பட்ட, பெரிய, இடைஞ்சலில்லாத இடமா?
#நாற்றமடிக்காத கைகழுவும் இடமா?
#பெயருக்கேற்றார்போல எங்கும் நிறைந்திருக்கும் பச்சை நிறமா?
#சுவர் முழுக்க அலங்கரிக்கும், மஹாத்மாகாந்தியின் கருப்பு வெள்ளைப் படங்களா?
#வண்டிக்குச் சேதமில்லாமல் விடக் கிடைத்த பைக் பார்க்கிங்கா?
#தமிழிலேயே நிறைந்திருக்கும் (கைகழுவும் இடம், பொட்ட்லம் வாங்கும் இடம், #சுட்டிக்காட்டும் குறைகள் கொட்டிக்கொடுக்கும் பரிசு, தரமான உணவு தாயாரின் கனிவு என்பன போன்ற) பலகைகளா?

என்னவென்று தெரியவில்லை. ஆனால், சென்று வெளியே வரும்போது ஒரு நிம்மதி, திருப்தி இருந்தது. குடும்பத்துடனும், நண்பர்களுடனும், தனியாகவும் சென்று மதிய உணவு சாப்பிட அருமையான இடம் என்பது மட்டும் உறுதி.

---

-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

நம்ம வூட்டு சமையல்-பாகம் 1

காளான் கூட்டு

தேவையான பொருட்கள்

பட்டன் காளான் -200 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாதூள் - ஒரு தேக்கரண்டி(வறுத்து பொடித்தது)
கரம் மசாலா தூள் -அறை தேக்கரண்டி
ஜீரக தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
பச்ச மிளகாய் - ஒன்று(சற்று பெரியது)
கொத்து மல்லி தழை - சிறிது
எண்ணை - 50 மில்லி



செய்முறை

1. பட்டன் காளானை தண்ணீரில் மஞ்சள் பொடி போட்டு கழுவி நறுக்க வேண்டும்.கழுவும் போது காளானின் வெள்ளை பாகங்களில் கருப்பு புள்ளிகள் தெரிந்தால், அதை உபயோகிக்கக்கூடாது

2, வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. ஓரு வாயகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது ஜீரகம் போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கருகாமல் நன்கு பொன் முறுவலாக வதக்கவும்.

4. இஞ்சி பூண்டு வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

5. பிறகு பட்டன் காளானுடன், எல்லா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி குறைந்த தீயில் (சிம்மில்) வேகவிடவும்.

6. நன்கு வெந்து கூட்டானதும் மல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.


அப்புறம் முடிஞ்சா சாப்பிடுங்க. இல்லைன்னா எனக்கு அனுப்பி வைங்க.

குறிப்பு:-

பட்டன் காளானுக்கு பதிலாக ஆட்டு கிட்னி சேர்த்தும் செய்யலாம்


---கி.கி



Share/Bookmark
Read More!

புரோட்டா ஸ்டால்

சென்னை வந்த பிறகுதான் நம்ம ஊரு புரோட்டாவின் அருமை தெரிந்தது. வந்த புதிதில் பல இடங்களில் சாப்பிட்டிருப்பேன். ஆனால் எதிலுமே திருப்தி இல்லை. கொஞ்ச நாளில், இனி இங்கு புரோட்டா வாங்கி சாப்பிடவே கூடாது என முடிவு செய்தாயிற்று.

திருச்செந்தூரில், பள்ளி காலங்களில், ஏஒன் புரோட்டாதான் நம்ம ஃபேவரிட். அதுவும் பார்சல்தான். பிச்சுப்போட்டு சால்னா ஊத்தி வாங்கி வருவோம். வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தால், புரோட்டா சால்னாவுக்குள் ஊறிப்போய், பார்க்கவே அமிர்தமாய் இருக்கும். திண்றால்.... ம்ம்ம்ம்.

சிறிது வளர்ந்து வெளியூர் செல்ல ஆரம்பித்த பின், காயல்பட்டிணம், ஆறுமுகனேரி, தூத்துக்குடி என சுவை பார்க்கும் ஏரியாவின் சுற்றளவு கூடியது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அதிலும் தூத்துக்குடி சுவை மறக்க முடியாதது.

எனது காலத்தில், தூத்துக்குடியில், சத்யா ஏஜன்சி அருகிலிருக்கும் ஆழ்வார் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் ஆண்டவர் அனைவரும் அறிந்த பேமஸ் புரோட்டா கடைகள். இப்போதும் (தண்ணியடித்தால்) தேடிப்போய் சாப்பிடும் மற்றொரு கடை, ஆறுமுகனேரி ரமா ஹோட்டல்.

தூத்துக்குடியில் அடிக்கடி சாப்பிடும் இடமென்றால் அது பழைய பேருந்து நிலையம் வெளியே இருக்கும் முக்குக் கடை (இதுவரை அதன் பெயர் தெரியாது, நாங்கள் அழைப்பது அப்படித்தான்). எப்போதெல்லாம் தூத்துக்குடியைக் கடக்கிறேனோ அப்போதெல்லாம் இங்கு ஒரு விஜயம் உண்டு. ‘சுக்கா செட்டு’ என்று சொன்னால் போதும், இரு பொரித்த புரோட்டாக்களை நொருக்கிப் போட்டு, அதில் மட்டன் சுக்காவை ஊற்றி, ஓரத்தில் கொஞ்சம் நறுக்கிய பச்சை வெங்காயத்துடன் வாழை இலையில் ஒரு படையல் கிடைக்கும். இத்துடன் ஒரு அரைவேக்காடு சேர்த்தால்.... ஸ்ஸ்ஸ். இந்த முறை அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. (படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்)




இப்போது புரோட்டாவை நொருக்குவதற்கு தனி இயந்திரமே இருக்கிறது!


பின்பு, சனிக்கிழமை சிவகாசி சென்ற போது நண்பர் ஒரு புரோட்டா கடைக்கு கூட்டிச் சென்றார். இங்கு பொரிப்பதில்லை, கல்லில் போட்டு எடுத்த புரோட்டா.

படையல் ஆரம்பம்.


உச்சகட்டம்.

அங்கிருந்த கல்லூரி நாட்களில் நான் வழியல் விரும்பி சாப்பிடுவதை மறக்காத அவர், எனக்காக பிரத்யோகமாய் செய்யச் சொன்னார்.

இதுதான். வெங்காயத்தை கல்லில் நன்றாக வதக்கி, பின் அதை வைத்து ஒரு பக்க ஆம்லெட் போட்டால், அதுதான் வழியல். இதன் சுவையை வார்த்தைகளால் ஜொள்ள இயலவில்லை. (சிவகாசி தவிற வேறெங்கும் இந்த வகை முட்டை நான் கண்டதில்லை).

நீங்களும் பாத்துட்டு ஏதாவது ஜொள்ளிட்டுப் போங்க. என்ன இருந்தாலும் நம்ம ஊரு புரோட்டா கடை சுவை எங்குமே கிடைக்காது.
---

மேலும் கொஞ்சம் கொசுறு க்ளிக்குகள்...

இந்த தடவ அம்மா குடுத்த ஸ்பெசல் - ஆப்பம் வித் தேங்காப்பால்.


மஞ்சள், பச்சை நிறங்கள்.


சிவகாசி பூனை... நல்லா பாத்துக்குங்க.


தூத்துக்குடியில் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் மேம்பாலம் அடியில் - புதிய பேருந்து நிலையம் அருகே.


-ஏனாஓனா.

Share/Bookmark
Read More!

மீன் சாப்பாடு

நேற்று மதியம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் அருகே வேலை. எங்கு சாப்பிடுவதென்று தெரியவில்லை, தேடினேன். பேருந்து நிறுத்தம் பின்னாலேயே ஒரு சைவ உணவகம், வெரைட்டி ரைஸ் மட்டுமே இருந்தது. அருகிலேயே ஒரு அசைவ ஏசி உணவகம், பார்த்தவுடனேயே விலை அதிகம் என ஒதுங்கிகொண்டேன். பின் நண்பர் ஒருவருக்குப் போன் செய்து விசாரித்ததில் தெரிந்துகொண்ட இடம் இது.



பேருந்து நிருத்தத்திற்கு சற்று தள்ளி, ஓட்டல் மேரியாட்டுக்கு நேர் எதிரே மீன் வளத்துறை அலுவலகம் உள்ளது. அதன் முன்னே சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட FISH STALL உள்ளது. அதன் உள்ளே செல்லவில்லை. வலது கடைசியில் ஒரு சிறிய வழி. உள்ளே வெட்டவெளியில் நான்கு மேசைகளும் அவற்றிற்கு குடைகளும் போடப்பட்டுள்ளன.


முதலிலேயே பணம் செலுத்தி, பின் சாப்பட்டைப் பெற்றுக்கொள்ளவேண்டும். 40 ரூபாய் சாப்பாடு. பிளஸ்டிக் தட்டில் சோறு, ஒரு துண்டு மீனுடன் குழம்பு, ரசம், மோர், அப்பளம் மற்றும் ஊறுகாய். கூட்டு என்று எதுவும் கிடையாது; பொரித்த மீன், மீன் 65 என ஏதாவது வாங்கிக்கொள்ளலாம். உட்கார நாற்காலி ஏதும் கிடையாது, நின்றுகொண்டுதான். சாப்பாடு, மீன் குழம்பு, மீன் 65 அருமை; அதிலும் ஊறுகாய் மிக மிக அருமை.


ஃபிஸ் 65


விலைப்பட்டியல் (03-ஜூலை-2009 ல்) மற்றும் திறந்திருக்கும் நேரம்



எனக்கு, சென்னையில் ஒரு சில உணவகங்களையே மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யத்தோன்றும். அவற்றுள் இதுவும் சேர்ந்துவிட்டது. அதிலும் அரசு நடத்தும் இது போன்ற இடங்களில் காணப்படும் தரம் உண்மையிலேயே வியக்க வைக்கிறது.

தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம், நெய்தல் வளாகம் - நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள்.

Share/Bookmark
Read More!