(2) வீட்டு புரோக்கர்

வீடு தேடுதல் (1) ன் தொடர்ச்சி...

அடுத்து புரோக்கர்கள். இவர்களை நான் விரும்புவதே இல்லை. நான் பார்த்த பல புரோக்கர்களில் இருவரைத்தான் மனிதர்களாகப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இவர்கள் வாயைத் திறந்தால் வார்த்தைக்குப் பதிலாக பொய்தான் வந்து விழும். அதிலும் ஒரு மாத வாடகையை கமிசனாகக் கேட்பார்கள். அதற்குத் தகுந்த உழைப்பு இருக்கிறதா என்றால், இல்லை. மனதிற்குப் பிடித்தமான சரியான வீட்டைக் காண்பித்து, நல்ல விலைக்கு முடித்துக் கொடுத்தால் இவர்கள் கேட்கும் விலை நியாயமானதுதான். ஆனால் இவர்கள் செய்வதோ தலைகீழ். நமது தேவைக்கேற்ற வீட்டைக் காட்டவும் மாட்டார்கள், விலையையும் நன்றாக ஏற்றிவிடுவார்கள். பின் எதற்குத்தான் இந்த பெருந்தொகைக் கமிசனோ தெரியவில்லை.
இவர்களிடம் முதல் பிரச்சனை, நமது தேவைக்கேற்ற வீட்டைக் காட்டமாட்டார்கள். பார்க்கிங், தண்ணி வசதி, எத்தனை அறைகள், அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என அரை மணி நேரம் மூச்சு விடாமல் சொல்லியிருப்போம். இருந்தாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அவர்கள் கையில் இருக்கும் அனைத்து வீட்டிற்கும் ஊர்வலம் கூட்டிச் செல்வார்கள். நாமோ ஆபீஸில் பெர்மிசனோ, லீவோ போட்டு வந்திருப்போம். தேவையில்லாமல் நமது நேரத்தை வீணடிப்பார்கள். இரண்டாவது வீட்டுக்குப் போன பின் நமக்கே கண்ணைக் கட்டும். ”நான் சொன்ன மாதிரி வீடு இருக்கா இல்லையா?” என்று கொஞ்சம் முகம் கடுப்பாகும் நமக்கு. “அடுத்த வீடு கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் சார்”, என்று மனசாட்சியே இல்லாமல், திரும்பவும் மொக்கையாக ஒரு வீட்டைக் காட்டுவார் பாருங்கள், அப்படியே அந்த வீட்டு நிலையில் முட்டிக்கலாம் போலத் தோனும்.

சிலர் இதற்குக் கூட கமிசன் கேட்பார்கள். இவ்வளவுக்கும் நமது வண்டியில்தான் வந்திருப்பார். முதலில், சொந்தமாக ஒரு வண்டியில்லாமல் நமது வண்டியில் தொற்றிக்கொள்ளும் புரோக்கரை நம்பவே வேண்டாம். பின், முதலிலேயே கண்டிப்பாக சொல்லிவிடனும், லீவு போட்டுட்டு வரேன், நான் சொன்ன மாதிரி வீடு காட்டலைனா நீதான் என் சம்பளத்தைத் தரனும் என்று. அவ்வாறு தர மாட்டார் என்றாலும் தேவையில்லாத அலைச்சலைத் தவிர்க்கலாம். வீடு முடிந்தால்தான் கமிசன் என்பதையும் முதலிலேயே பேசிவிடவேண்டும். இதெல்லாம் சரிவராது சார், வேற ஆளப் பாத்துக்க சார் என்றெல்லாம் படம் காட்டுவார்கள். யோசிக்கவேண்டாம், தாராளமாக வேறு ஆளைப் பார்க்கலாம். அந்த ஏரியாவில் யாரைப் பார்த்தாலும் இவரும் கூட வருவார்.

மேலும் கமிசன் தொகை ஒரு மாத வாடகை என வழக்கமாகச் சொல்வார்கள். அதை நாம் குறைத்துப் பேசலாம். சிலர் மட்டுமே அதற்கு ஒத்துப்போவார்கள். சிலர் குழுவாக அமைந்து வீடுகளைப் பார்த்துவைத்துக்கொண்டு நமக்குக் காட்டுவார்கள். சில புரோக்கர்கள் இப்படிக் குழுவாகச் செயல்படாமல் தனித்து இருப்பர். இந்த மாதிரி இருப்பவர்கள் விலையைக் குறைத்துக்கொள்வார்கள். இவர்கள் நேர்மையாகவும்ம், சரியான வீட்டைக் காட்டும் வாய்ப்பும் அதிகம்.
பெரும்பாலான புரோக்கர்கள் பகுதி நேரமாக இதைச் செய்வார்கள். சிலர் முழு நேரமாகச் செய்தாலும் அலுவலகம் என்றெல்லாம் எதுவும் இருக்காது. ஆனால், சில ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர்கள் அவர்களுக்கென ஒரு அலுவலகம் வைத்திருப்பார்கள். இடம், வீடு வாங்குவது மற்றும் விற்பது முதன்மையாக இருந்தாலும் வாடகை வீடு பிடித்துக் கொடுப்பதும் சிறிய அளவில் செய்வார்கள். நான் பார்த்தவரையில் இவர்களை நம்பலாம். தேவைக்கேற்ற வீட்டைக் காட்டுவார்கள், கமிசனும் பேசிக்கொள்ளலாம். ஆனால், இவர்கள் யாரையாவது கைகாட்டி அனுப்பினால் நம்ப இயலாது.

பெரும்பாலும் புரோக்கர்களைத் தவிர்த்துவிடவேண்டும். முந்தைய பதிவில் சொன்ன வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடித்தாலே வீடு கிடைத்துவிடும். அப்படிக் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அவசரமான சூழ்நிலையில் மட்டுமே புரோக்கர்களை நாடிச் செல்லலாம்.

இப்போது நாம் பார்க்கும் வீடுகளில் ஒன்று பிடித்துப் போகிறது. அதன்பின்பு என்னவெல்லாம் கவனிக்கவேண்டும் என்பதை அடுத்து பார்க்கலாம்.

-பெஸ்கி.

Share/Bookmark

3 ஊக்கங்கள்:

Unknown said...

புரோக்கர்களை எப்போதும் தவிர்ப்பதே நலம் ...

குறை ஒன்றும் இல்லை !!! said...

நீரா ராடியா மாதிறி புரோக்கர் கிட்ட முயற்சி செய்திருக்கலாம் இல்ல ... அட வீடு வாடகைக்கு தாங்க !!!! தப்பு உங்க பக்கம் சாதாரண புரோக்கர் கிட்ட போக வேண்டியது அப்பறம் புலம்ப வேண்டியது !!!!

Beski said...

நன்றி செந்தில்,
சரிதான், ஆனால் அவசரம் எனும்போது என்ன செய்ய முடியும்?


நன்றி ராஜ்,
இதுல சாதா, பெசல் சாதா எல்லாம் இருக்கா? எனக்கு கொஞ்சம் சொல்லிக்குடுங்க.