கோவா - உண்மையிலேயே சரியான பெயர்தான். இரண்டு முறை இதுவரை கோவா சென்றிருக்கிறேன். அதில் ஒரு தடவை குடும்பத்துடன். ஹ்ம்ம்ம். இன்னொரு தடவை கல்லூரி நாட்களில், அதகளம். போனதும் தெரியவில்லை வந்ததும் தெரியவில்லை. ஆனா திரும்பி வரும்போது ஜாலியா இருந்ததா ஒரு ஞாபகம். காசெல்லாம் ’தண்ணியா’ செலவாகி வெறுங்கையா இருந்தது அந்தப் பயணம். ஆனா வெறுமையா இல்லை. சரி கோவா படத்துக்கு வருவோம். ஏற்கனவே வெங்கட்டோட படங்கள் இரண்டு பாத்ததுனால, கதை இருக்காதுன்னு தெரிஞ்சுதான் போனேன். என்னோட எதிர்பார்ப்பை சரியா பூர்த்தி பண்ணியிருக்கிறார் இயக்குனர். இடைவேளை வரை கதையே இல்லை, அதுக்கு அப்றம் மட்டும் இருக்கான்னு கேட்டீங்கன்னா, அதுவும் இல்லை.
இந்த இயக்குனரிடம் எனக்குப் பிடிச்சதே இதுதான். கதையம்சம் இல்லாத படம் எடுப்பது. அல்லது, ஒரு கதையை கதையே இல்லாத மாதிரி எடுப்பது. அப்புறம் ஏன் இது பிடித்திருக்கிறது? ஆரம்பம் முதல் முடியும் வரை சிரித்துக்கொண்டே இருக்க வைக்கிறார் என்னை, அதுதான். இந்த மாதிரி ஒட்டுமொத்த திரையரங்கும் விழுந்து விழுந்து சிரித்ததை வெகு நாட்களுக்குப் பின் பார்த்தேன். படம் ஆரம்பிக்கும்போதே இது ஒரு நகைச்சுவைப் படம் மட்டுமே என்ற மனநிலையை ஏற்படுத்திக்கொண்டதும் இதற்குக் காரணமாய் இருக்கலாம். எனது அருகில் இருந்தவர் மட்டும் திட்டிக்கொண்டே இருந்தார், என்ன மனநிலை அவருக்கோ தெரியவில்லை.
முதலில் டைட்டில் சாங். கிராமத்துப் பின்னணி, மஞ்சள் நிற எழுத்துக்கள், எங்க ஊரு நல்ல ஊரு ரேஞ்சுக்கு ஒரு கிராமத்துப் பாட்டு. பழைய ராமராஜன் படம்தான் ஞாபகத்துக்கு வந்தது. படம் ஆரம்பிக்கும்போதே பஞ்சாயத்தில் ஆரம்பிக்கிறது, கூடவே நக்கலும். அப்படியே நக்கல் தொடர்வண்டி மாதிரி போய்க்கொண்டே இருக்கும். வழக்கம்போல கதாநாயகன் என்பதே கிடையாது. எல்லோருக்கும் சம வாய்ப்பு. இதன் பிறகு கதை? தேவையில்லை. காட்சிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. நாங்கள் சிரித்துக்கொண்டே இருந்தோம். சின்னச் சின்ன விசயங்கள்தான். கவனிக்கத் தவறினால் சிரிப்பு வராது. சில நேரங்களில் சிரிப்பலை அடங்க நேரம் ஆகி அதன் தொடர்ச்சியாக வரும் நக்கல் வசனக்கள் கேட்காமலேயே போய்விட்டது. அதிலும் ஒருவர் கவனித்து ரசித்ததை இன்னொருவர் கவனிக்காமல் போய்விட வாய்ப்பு உள்ளது. ஒரே ஆள் வாத்தியார், போலீஸ், பஞ்சாயத்து ஆட்களில் ஒருவர், பைலட் என பல்வேறு கெட்டப்புகளில் வந்ததை எனது நண்பன் கவனித்திருக்கிறான், நான் கவனிக்கவில்லை. வெள்ளைக்காரியின் கல்யாணத்தில், தாலி கட்டும்போது அப்பா அழுவது, நண்பனுடைய வீட்டில் பின்னணியில் வெள்ளைக்காரியுடன் இருக்கும் போட்டோக்கள் இன்னும் சில விசயங்களை நான் கவனித்திருந்தேன், நண்பனுடைய கண்ணுக்கு சிக்கவைல்லை. ஜெய் ஆங்கிலம் இன்னொரு கலாட்டா. அந்த ஹோமோ காதலர்களின் வாழ்க்கை - நண்பனுக்கு சிரிப்பாகத் தெரிந்தது, ஆனால் உன்னிப்பாகக் கவனித்தால் அதிலிருக்கும் உண்மை புரியும்.
இப்படிச் சின்னச் சின்ன காட்சிகள் நகரும்போது கடைசிவரை நெளியாமல் உட்கார்ந்திருக்க முடியுமா என்றால் சந்தேகம்தான். படத்தில் கதை இருக்காது. அந்த மாதிரி ஏதாவது எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும். தனியாக சிரிக்கத் தெரியாதவர்கள் தனியாகப் போனாலும் வேலைக்காகாது. நண்பர்களுடன் சென்றால் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது. இன்னும் முக்கியமாக, இதில் பல காட்சிகள் முந்தைய தமிழ்ப்படங்களை நக்கல் செய்வதால், அந்தப் படங்களில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு சிரிப்பு வருவது சந்தேகமே. அதே போல, சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் அதிகமாக இருக்கும். சிறிது கண்ணை திரையை விட்டு நகர்த்தும்போது மற்ற அனைவரும் சிரிக்கக் கண்டு, அருகில் இருப்பவரிடம் ‘என்ன ஆச்சு’ என்று கேட்கும் வாய்ப்பு அதிகம் வருவதால் சிலருக்கு எரிச்சலைத் தரலாம். அதிலும் அருகே இருப்பவர் பதிலே சொல்லாமல் சுவாரஸ்யமாகத் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தால் அந்த எரிச்சல் அதிகமாக வாய்ப்புண்டு. மொத்தத்தில் கோவா சிரிக்க முடிந்த ஆண்களுக்கு மட்டும்.
-அதி பிரதாபன்.

Read More!