ஒரு கதை பல கோணங்கள்
சமீபத்தில் INCEPTION படம் பார்த்தேன். பிரமித்துப் போனேன். இப்படியொரு இடியாப்பச் சிக்கலான கதையை, கண் முன்னே தெரியும்படி, நம்பும்படி, முக்கியமாக புரியும்படி எடுத்திருக்கும் இப்படக் குழுவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. சிறு நேரம்கூட திரையை விட்டு நம் கவனத்தைத் திருப்பினால் படம் வேறுவிதமாகப் புரிந்துவிடும். நல்ல வேளை பக்கத்தில் இருந்த மனைவி தொந்தரவு செய்யாதது எனது பணத்தை மிச்சப்படுத்தியது. இருந்தாலும் இன்னும் இரண்டு முறை பார்க்கவேண்டும். அது என்ன இரண்டு முறையா? சொல்கிறேன்.
கதைப்படி, ஒரு கனவை உருவாக்கி அதற்குள் ஒருவரை நுழைத்து அவருடைய ஞாபகங்களைத் திருடலாம் (அல்லது ஒரு ஞாபகத்தை ஆழ் மனதில் விதைக்கலாம்). இதைப் பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது. ஒரு கனவுக்குள் அதே போன்ற இன்னொரு அமைப்பையும் உருவாக்கலாம், கனவுக்குள் கனவு. நிஜ வாழ்வில் கடக்கும் ஐந்து நிமிடத்தில், கனவுக்குள் ஒரு மணி நேரம் வாழ்வு, உண்மையிலேயே அப்படித்தான். கனவுக்குள் இறந்தால் கனவு கலைந்து நிஜ உலகத்திற்குள் வந்துவிடலாம். நாயகனிடம் ஒரு சிறிய பம்பரம் இருக்கிறது. அதை சுற்றிவிட்டு நிகழ்காலம் கனவா இல்லையா என்பதை அறிந்துகொள்வான் நாயகன், விழுந்தால் நிஜ உலகம், விழாமல் சுற்றிக்கொண்டே இருதால் கனவு. (இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கனும்).
இப்படிப்பட்ட சாத்தியங்கள் இருக்கும் பட்சத்தில், நாயகனும் நாயகியும் ஒரு நீண்ட கனவுலகில் வாழ்கின்றனர். நாயகன் அங்கிருந்து மீண்டு வரும் முடிவு செய்து, ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து, செத்து, நிஜ உலகத்திற்கு வருகின்றனர். மீண்டு வந்த பிறகும் தான் இருப்பது ஒரு கனவுலகமே, இங்கு தற்கொலை செய்துகொண்டால் மீண்டு நிஜ உலகில் முழித்துக்கொள்வோம் என நம்பி நாயகி தற்கொலை செய்துகொள்கிறாள். (இதையும் ஞாபகம் வச்சுக்கனும்).இதன் பழி நாயகன் மீது, அவன் நாட்டை விட்டு தப்பியோடி சுற்றிக்கொண்டிருக்கிறான். அடுத்தவர் நினைவுக்குள் புகுந்து திருடுவதே வேலை.
இந்த சூழ்நிலையில் ஒரு மிகப்பெரிய ஒரு நினைவை விதைக்கும் வேலையை முடித்தால் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பிச்சென்று தனது குழந்தைகளுடன் வாழலாம் எனும் வாய்ப்பு வருகிறது. அது ஒரு அசாத்தியமான வேலை, கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள் கனவாக இருக்கும். உள் கனவுக்குள் செத்தால் கோமா நிலைக்கு தள்ளப்பாடு சுய நினைவே வராமல் போகும் வாய்ப்புள்ள ஆபத்தான முயற்சி. பல கட்ட கனவுகளின் காட்சியமைப்பு பிரமிப்பு. ஒரு வழியாக வேலை முடிந்து தனது நாட்டிற்குத் திரும்பி குழந்தைகளைப் பார்க்கிறான். பம்பரத்தைச் சுற்றி விட்டுவிட்டு குழந்தைகளுடம் போகிறான்.
பம்பரம் சுற்றுகிறது... சுற்றுகிறது...லேசாக ஆடுகிறது.. சுற்றுகிறது... அப்படியே படம் முடிந்து விடுகிறது. அது விழுந்ததா இல்லையா என்பதைக் காட்டவில்லை. அதுவரை அமைதியாகப் படம் பார்த்துக்கொண்டிருந்த மனதும் மூளையும் அபோதிருந்து செயல்படத்துவங்கியது. இதுதான் இயக்குனரின் வெற்றியாகக் கருதுகிறேன். யோசித்துக்கொண்டே இருக்கிறது... பம்பரம் விழுந்துவிட்டால் நிஜ உலகு. அப்படியென்றால் நாயகி தவறாக எண்ணி நிஜமாக இறந்துவிட்டாள். பம்பரம் விழவில்லையென்றால் அது கனவு. ஆனால் எந்தக் கனவு என்பது இன்னொரு கேள்வி. இதற்குள் பல கிளைக் கேள்விகள் முளைக்கின்றன. ஒருவேளை மனைவி சொன்னது உண்மையாக இருக்குமோ? அவள் கீழே குதித்து தற்கொலை செய்து நிஜ உலகுக்குப் போயிருப்பாளோ? இந்தப் பம்பர விசயமே பொய்தானோ? இதில் இன்னொரு கோணம் வேறு வந்து வாட்டுகிறது. மனைவி நிஜ உலகுக்குப் போகிறேன் என்று குதித்தாளே, அவள் போன உலகாவது நிஜமாக இருந்திருக்குமா? அல்லது அதுவும் ஒரு கனவாக இருந்திருக்குமா?
சிந்தனையைப் பல கோணங்களில் சிதறடித்த படம். இதே போன்றதோரு படத்தை, இதறகு சில நாட்களுக்கு முன் பார்த்தேன். Shutter Island. என்ன ஒற்றுமை, அதே நாயகன். துப்பறியும் போலீஸ் அதிகாரியாக ஒரு தீவுக்கு வருகிறான் நாயகன், ஒரு துணை அதிகாரியுடன். அந்தத் சிறிய தீவில், மனநலன் பாதிக்கப்பட்ட கொடிய குற்றவாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை இருக்கிறது. ஒரு கொடிய, தனது மூன்று குழந்தைகளைக் கொன்ற, பெண் குற்றவாளி ஒருவர் தப்பித்ததைப் பற்றி விசாரிக்கவே வருகிறார். ஒவ்வொருவராக விசாரிக்கையில், சில மர்மமான விசயங்கள் பற்றி தெரிய வருகிறார். இவரையும் மனநலன் பாதிக்கப்படவராக அங்கேயே அடைக்க முயற்சி நடக்கிறது. உண்மையைக் கண்டிபிடிக்கப் போராடுகிறார். கடைசியில் தலைமை மருத்துவர் அவருக்குச் சில விசயங்களைச் சொல்கிறார்.... அட போங்கப்பா. நடந்ததெல்லாம் இன்னொரு கோணத்தில் சொல்லும்போது திரும்ப முதலில் இருந்தே பார்க்கவேண்டுமெனத் தோன்றுகிறது. என்னதான் பார்த்தாலும் இரண்டு கோணங்களும் உண்மையாகத்தான் தெரிகின்றன. இது முந்தைய படம் மாதிரி இல்லை. இரண்டு கோணங்கள் மட்டும்தான் தெரிகின்றன.
இவற்றைப் பற்றி எழுதலாம் என்றிருக்கையில் இன்னொரு படம் பார்க்க நேர்ந்தது. The Ghost Writer. பிரிட்டனின் முன்னால் பிரதமரின் சுயசரிதையை எழுதித் தொகுத்துக்கொண்டிருந்த அவருடைய ஆஸ்தான எழுத்தாளர் இறந்துபோகிறார். அந்த இடத்தில் இருந்து அந்த வேலையை முடிக்கச் செல்கிறார் நாயகன். அமெரிக்காவில் இருக்கும் ஒரு தீவில் உள்ள பிரதமரின் கடல் ஒட்டி அமைந்த அழகான வீட்டிற்குச் சென்று வேலையை ஆரம்பிக்கிறார் நாயகன். இறந்த எழுத்தாளர் முடித்து வைத்திருக்கும் கத்தையான தாள்களைத் தொகுத்து, சிறிது மாற்றி, மிகச் சொற்ப காலத்திற்குள்ளாகவே முடிக்கவேண்டிய சூழ்நிலை.
அதே நேரத்தில் முந்தைய, இறந்த எழுத்தாளர் சாவில் மர்மம், இந்தப் பிரதமர் மேல சந்தேகம் என போக்கு மாறுகிறது. அவர் எழுதிவைத்துபோன பக்கங்களில் அவர் கண்டுபிடித்த மர்மங்களை மறைமுகமாகப் பதிவு செய்துள்ளார், கொலை செய்யப்பட்டுவிட்டார், அந்த பக்கங்களில் உள்ள மர்மத்தை விடுவிக்க முயற்சிக்கிறார் நாயகன். அதன் காரணமாக இவரும் துரத்தப்பட, ஒரு சூழ்நிலையில் அந்தப் பிரதமர் கொலை செய்யப்படுகிறார். இவர் கண்டுபிடித்த மர்மங்களை விட்டு விட்டு, அந்தப் புத்தகத்தை முடித்து வெளியீட்டு விழா நடக்கிறது. அந்த கடைசி நேரத்தில் அந்தப் புத்தகத்தில் மறைந்துள்ள உண்மையான மர்மம் அவருக்குத் தெரிகிறது. முடியல... முதலில் இருந்து பார்த்த கோணமே வேறு, திரும்பவும் முதலில் இருந்து இந்த கோணத்தில் பார்த்தால் சரியாக இருக்கிறது. மற்ற படங்களைபோல அல்லாமல், இதில் சரியான கோணம் சொல்லப்படுவதால் அதிகம் மண்டையைப் போட்டுக் குழப்ப வாய்ப்பில்லை.
இதேபோன்ற, முதலில் இருந்து இரு குழப்பமான உண்மையைச் சொல்லக்கூடிய, கடைசியில் கூட எது உண்மை என்று சரியாக உணர முடியாத இன்னொரு படத்தை நேற்று பார்த்தேன். After Life. இந்த படத்தில்... ஹ்ம்ம்ம், ஒரே பதிவில் எத்தனை கதைதான் எழுதுவது, இதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இதில் கடைசி வரை ஒரு தெளிவு கிடைக்கவேயில்லை. கடைசியாக பார்த்த நான்கு படங்களும் ஏன்தான் இப்படி வந்து சேர்ந்ததோ தெரியவில்லை. ஆனால், படம் பார்த்து முடித்த பின்னும் முந்தைய காட்சிகளை அசைபோட வைக்கும் அல்லது திரும்பவும் பார்க்க வைக்கும் படங்கள் இவை. அதிலும் Inception கொஞ்சம் அதிகமாகவே கிறங்கடித்த படம்.
-அதி பிரதாபன்.
5 ஊக்கங்கள்:
படிக்கும் போதே பிரமிப்பாக இருக்கின்றது. பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது.
அடடா மீண்டும் பதிவெழுத தொடங்கியாச்சா..சொல்லவே இல்லை. அட்டகாசமான படங்கள் ஆவ்ரர் த லைப் பார்த்துவிட்டேன் மற்றவைகள் பார்க்கனும். நன்றி.
லிஸ்ட்ல சேர்த்துட்டேன் மாப்பி. பார்த்துடுறேன்.
நன்றி தமிழ் பிரியன்.
வாங்க ஜனா, இடைவெளியைக் குறைக்க சில பதிவுகள் இடுவதுண்டு. நன்றி.
நன்றி ஆதவா.
அட மாப்பி... சூப்பர் போ... கண்டிப்பா பார்க்கனும்...
Post a Comment