எந்திரனும் எனது பார்வைகளும்


எந்திரன் எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்த படம். எதிர்பார்ப்பா, அப்படி என்ன எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம்? ஒரு சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக, சினிமா விரும்பியாக, இயக்குனர் ஷங்கரின் ரசிகனாக? அல்லது இப்படி, ரஜினி படம் சொதப்பவேண்டும் என்ற எண்ணத்துடன்? கேப்புக்கு கேப்பு விளம்பரம் போட்ட சன் பிக்சர்ஸ் மேல் உள்ள வெறுப்பில் கவுந்து போகட்டும் என்ற எதிர்பார்ப்பில்? இருக்கலாம். அனைத்தும் ஒரு எதிர்பார்ப்பே. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சன் பிச்சர்ஸின் எதிர்பார்ப்பு மட்டும் நன்றாக ஈடேறியிருக்கிறது. மற்ற எல்லாம் அவுட்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் துவக்கினார்கள் ரஜினி ரசிகர்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்னமே அபிஷேகம், வெடி, குத்தாட்டம் என களை கட்டியது திரையரங்கு. கதவைத் திறந்து விட்டதும் ஒரே தள்ளுமுள்ளு, கூட்டத்தை அடக்கப் பாடுபட்ட போலீசை நினைத்தால் பாவமாக இருந்தது. ரசிகர்கள் வரிசையில் வர அவ்வளவு அடம் பிடித்தனர். ஒரு வழியாக உள்ளே சென்று படத்தை ஆரம்பித்தாயிற்று. ரஜினி வரும் நேரத்தில் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் தியேட்டரே அதிர்ந்தது. மேலும் பாடல்களுக்குக் கூட ஆட்டங்கள் அவ்வளவாக இல்லை, காரணம் இவை அந்த மாதிரிப் பாடல்கள் இல்லை.

ஹீரோ ரஜினி - நிச்சயமாக ஒரு ரசிகன் எதிர்பார்த்து வந்த தலைவர் இவர் இல்லை. என்ன செய்வது என்றிருந்த வேளையில் கலாபவன் மணியைக் கண்டு ஓடும் ஹீரோ. நிச்சயம் வெறுத்திருப்பார்கள். ஏதோ, உடைந்த மனதையெல்லாம் ஒட்டிச் சரிசெய்தார் ச்சிட்டி. வில்லன் ரஜினி மட்டும் இல்லையென்றால் திரையரங்கு காலியாகியிருக்கும் என்றே தோன்றியது. வில்லன் குறும்புகள் அட்டகாசம். இதேபோல்தான் சந்திரமுகியும் இருந்ததாக உணர்கிறேன். ரஜினி பாதி படத்திற்கு மேல் இருக்கவே மாட்டார். நம்ம ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு ஆக்கம் அது. ஆனால் கடைசியில் வந்த வேட்டையன் மொத்தத்திற்குத் திருப்திப்படுத்தியதால் ரசிகர்கள் மனது குளிர்ந்தது. அதுபோலதான் இதுவும். மேலும் சிவாஜியில் வில்லத்தனமான மொட்டை ரஜினியையும் மறக்க முடியாது. இதுதான் உண்மை, ரஜினியை ஹீரோவாக இரண்டு மணி நேரம் பார்ப்பது, வில்லனாக அரை மணி நேரம் பார்பதற்குச் சமம். என்னாஆஆ வில்லத்தனம்?

அடுத்து இயகுனர் ஷங்கர். முந்தைய படங்களில் பொதுநல வாக்கில் கருத்துக்களைப் புதைக்கும் போக்கு இப்படத்தில் குறைவாகவே தெரிகிறது. ஒரு சாதாரண சினிமா விரும்பியும் விரும்புவது இதுதான். ஒரு பொழுதுபோக்கு. சில லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றனதான். ஆனால் ஒட்டுமொத்த படத்தின் ஆக்கத்தையும் ஒப்பிடும்போது, விலகியே இருக்கின்றன. கிராபிக்ஸ் அமைப்பில் தமிழ் சினிமா அடுத்த கட்டத்தை எட்டிவிட்டது என சொல்ல வைத்திருக்கிறார். இது வழக்கமான ஷங்கர் படம் மாதிரியும் தெரியவில்லை, அவருக்கான ஒரு புதிய கதவாக இந்தப் படம் இருக்கிறது. அவருக்கு மட்டுமல்ல, தமிழ்/இந்திய சினிமாவுக்கே இது ஒரு புதிய கதவு. இனி வரும் படங்களில் ஹாலிவுட் கிராபிக்ஸ் குழுவின் உதவியோடு பல பிரம்மாண்ட படைப்புகளைக் காணலாம் என எதிர்பார்க்கிறேன். இந்தப் படம், சில ஷங்கர் ரசிகர்களை கொஞ்சம் அதிகமாகவே திருப்திப்படுத்தும் என்பது எனது கணிப்பு.

சன் பிச்சர்ஸ், வென்றுவிட்டார்கள் என்றே சொல்லலாம். வழக்கமாக அதிருப்தியை ஏற்படுத்தும் விளம்பர உத்தியை இதிலும் கையாள்கின்றனர் என்று எல்லோராலும் பேசப்பட்டது. எந்திரன் இசை வெளியீட்டு விழா, அதன் ஆக்கம் என மற்ற விசயங்களிலேயே கணிசமான கல்லா கட்டுகிறது. இது கொஞ்சம் ஓவர் என்று பலர் சொன்னாலும், இது வழக்கமான சன் பிச்சர்ஸின் விளம்பர உத்திதான். முதலில் இடைவேளைக்கு இடைவேளை விளம்பரம் காட்டப்பட்டது. பின்பு படக்குழுவினர் பேட்டி என்று போனது. கடைசியாக தில்லாலங்கடி இசை வெளியீடு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்படி ஒவ்வொரு படத்திற்கும் புதுப்புது விளம்பரப் பாணியைக் கையாள்வது சன் டிவியின் வழக்கம்தான். அதையும் ஒரு நிகழ்ச்சியாகப் போட்டு, படத்திற்கும் விளம்பரமும் ஆச்சு, அதில் வரும் விளம்பரங்களுக்கு காசும் ஆச்சு என முயற்சிகள் தொடர்கின்றன.

இந்த விளம்பர முயற்சிகளில் எந்திரனில் அடுத்த படிக்கு ஏறியிருக்கின்றனர். பிரமாண்ட இசை வெளியீட்டு விழா, அதன் ஒளிபரப்பு, அதன் ஆக்கம், டிரைலர் வெளியீட்டு விழா - இப்படி புதுப்புது விளம்பரங்கள். வழக்கம்போல நம் மக்கள் அடுத்து போஸ்டர் வெளியீட்டு விழா என்று கிண்டலடித்தார்கள். ஆனால் சன், இசை வெளியீட்டு விழா மறு ஒளிபரப்பு என்று நம் மக்கள் யோசிக்காத ஒன்றைத் தூக்கி வைத்தார்கள். இதுதான் சன், நாம் யோசிக்கும் அடுத்த படிக்குச் சென்று விடுவார்கள். இதேபோல, சன் தலைப்புச் செய்திகள் என பஸ்ஸில் ஒரு லிஸ்ட் போட்டேன். “எந்திரன் திருட்டு விசிடி விற்றவர் கைது” என்பது அதில் ஒன்று. அவர்கள் ஒரு படி மேலே போய், “திருட்டு விசிடி விற்ற கடை ரசிகர்களால் சூறையாடப்பட்டது” என்றே சொல்லிவிட்டார்கள், இதை செய்தியாகவும் கொள்ளலாம்...

இப்படி அடித்து ஆடினால் எந்தப் படம்தான் ஓடாது? ஆனால், எந்திரன் இதனால்தான் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது. ஏன், இதெல்லாம் இல்லாமல் சந்திரமுகி ஓடவில்லையா? இந்த விளம்பர யுத்திகளிம் தாக்கம் இந்தப் படத்தைப் பொறுத்தவரை யூகிக்க முடியாததாகவே தோன்றுகிறது. சன் பிச்சர்ஸைப் பொறுத்தவரை லாபம், லாபம், லாபம்.

மொத்தத்தில் ஷங்கர் வென்றிருக்கிறார், சூப்பர் ஸ்டாரின் உதவியுடன். இந்த வில்லன் கதாப்பாத்திரத்தின் வெளிப்பாடு வேறு நடிகர்கள் நடித்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். படம் பப்படமாகும் என்றவர்களின் எண்ணத்தில் புழுதிப் புயல். வசூல் ரீதியாக மட்டுமல்ல, மக்களின் விருப்பத்திலும் வெற்றிபெரும் இந்தப் படம்.

Share/Bookmark

4 ஊக்கங்கள்:

CS. Mohan Kumar said...

DIffererent review Beski; Review is more about the marketing of Sun, Shankar & Rajini.

தீப்பெட்டி said...

:)

வெடிகுண்டு வெங்கட் said...

தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்

Beski said...

நன்றி மோகன்குமார்.

நன்றி தீப்பெட்டி.

அருமையான தகவல் சேகரிப்பு, நன்றி வெ.வெ.