ஒரு தீவிரவாதியின் மறுபக்கம் - Flugten (The Escape)

கடந்த வாரத்தில் கிடைத்த ஒரு மாலை ஓய்வு நேரத்தில் படம் பார்க்கலாமே என்று நினைத்தபோது, கண்ணில் பட்டதுதான் இந்தப் படம். Flugten (The Escape). டென்மார்க் படம்.



போஸ்டரைப் பார்த்தவுடனேயே மனதில் ஒரு கதை ஓடிவிட்டது. நம்ம கதாநாயகியை தீவிரவாதிகள் பிடித்துக்கொண்டு போய்விட, அவள் தப்பி வருவதுதான் கதை போல இருக்குமென்று. படம் ஆரம்பித்தவுடனே அது போலவே நடந்தது. ஆனால் அடுத்த 20 நிமிடத்தில் நாம் நினைத்த திரைக்கதை அனைத்தும் தவிடுபொடி.

டென்மார்க் நிருபர் நமது கதாநாயகி ரிக்கி. ஆப்கானிஸ்தானில் வேலை செய்யும்போது தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறாள். ஒரு மலைப் பகுதியில் சிறைவைக்கப்படுகிறாள். டென்மார்க்கிற்கு சில நிபந்தனைகளை வைக்கிறார்கள் தீவிரவாதிகள். டென்மார்க் கண்டுகொள்ளவில்லை. அடுத்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விரலாக வெட்டுவோம் எனச் சொல்கிறார்கள் தீவிரவாதிகள் (வீடியோவில்). சொன்னபடி முதல் நாள் ஒரு விரல் வெட்டப்படுகிறது, நாசிர் எனும் சிறுவன் மூலம் (வயது 15 இருக்கும்).

இந்த நாசிர் தனது தந்தையை இழந்தவன். அப்பாவி ஆசிரியரான இவரது தந்தையை வெளிநாட்டு ராணுவத்தினர் அவனது கண் முன்னாலேயே நடு ரோட்டில் சுட்டுக் கொல்கிறார்கள். தீவிரவாதி மாமா, இந்த காரணத்தையே பயன்படுத்தி, வெறி ஏற்றி, நாசிரை தீவிரவாதத்திற்குள் கொண்டுவந்துவிடுகிறார். இப்போது நாசிர் பயிற்சியிலிருக்கும் ஒரு தீவிரவாதி. இந்த கடத்தலில் உதவி செய்துகொண்டு இருக்கிறான்.



அவனைத்தான் விரலை வெட்டச்சொல்கிறான் மாமா தீவிரவாதி. தயங்கும் அவனை பலவிதமாகப் பேசி, உசுப்பேற்றி வெட்ட வைக்கிறான். இது அவனை மிகவும் பாதித்துவிடுகிறது. அன்று இரவே ரிக்கியை திட்டமிட்டு தப்பிக்கச் செய்கிறான். தப்பிக்கும் முன், வெளியே சென்று தான் தப்பிக்க விட்டதாகச் சொன்னால் தன் உயிர் போய்விடும், அதனால் தன்னை அடித்துவிட்டு, அவளாகவே தப்பி வந்ததாக வெளியில் சொல்லுமாறு சொல்கிறான்.



ரிக்கியும் தப்பி விடுகிறாள். இனிமேல்தான் கதையே. தப்பி வரும் ரிக்கி மறுபடியும் டென்மார்க் வருகிறாள்.வரும் ரிக்கிக்கு பலத்த வரவேற்பு. வந்தவள் பேட்டி கொடுக்கிறாள், தப்பித்தவற்றைப் பற்றி பத்திரிக்கைகளில் எழுதுகிறாள், பின்பு ஒரு புத்தகமே எழுதுகிறாள். பெரிய பிரபலமாக உருவாகிறாள், டென்மார்க்கின் ஜெஸிகா லின்ச் என்று சொல்லப்படும் அளவுக்கு (இந்த ஜெஸிகா லின்ச் என்பது தனிக் கதை). ஏனெனில், ஆப்கன் தீவிரவாதிகளிடமிருந்து யாரும் எளிதாக, அவர்களாகவே (யாருடைய உதவியும் இல்லாமல்) தப்பி வந்தது கிடையாது.

அப்படியே இவளது வாழ்க்கை போகிறது. மற்றொரு புறம், ஆப்கானிஸ்தானில் நாசிர். இவள் தப்பிய பிறகு, சந்தேகப்படும் தீவிரவாதி மாமா அடிக்கிறார். ஆனால் நாசிரும் அவளாகவே தப்பித்துப்போய்விட்டாள், நான் உதவி செய்யவில்லை என மறுக்கிறான். மாமா நம்பாவிட்டாலும் அவனை ஒன்றும் செய்யவில்லை. ஒரு நாள் வீதியில் செல்லும்போது வெடிகுண்டு விபத்தில் இவனது மாமா மற்றும் சிலர் காலியாகிறார்கள். அப்போது தப்பிக்கும் நாசிரும் அவனது கூட்டாளியும் ஈராக் வருகிறார்கள். கஷ்டப்படும் நாசிர் நண்பனுடன் டென்மார்க் செல்ல முடிவு செய்கிறான், ரிக்கி தனக்கு உதவி செய்வாள் என்று. ஒரு வழியாக ஒரு ட்ரக்கில் நாசிர் மட்டும் ஏறி டென்மார்க் வந்ததும் அகதிகள் முகாமில் சிக்கிக்கொள்கிறான்.



மறுபுறம், ரிக்கியின் பழைய காதலனுடன் மீண்டும் தொடர்பு, மகிழ்ச்சி, மோகம், மற்றும் பிரபலமான சந்தோசம், கிடைக்கும் மரியாதை, கூடவே கிடைத்த பொறாமை மற்றும் எதிரிகள் என அவளது வாழ்க்கை சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

நாசிரின் வாழ்க்கை முகாமில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சந்தர்பத்தில் முகாமை விட்டு தப்பிக்கும் நாசிர், நள்ளிரவில் அவளுக்கு போன் செய்கிறான். காதலனுடன் இருக்கும் ரிக்கி, அவனையும் அழைத்துக்கொண்டு வந்து பார்க்கிறாள். உன் உயிரைக் காப்பாற்றிய என்னைக் காப்பாற்று என்று சொல்லும் நாசிர் முன்னே. தானாக தப்பி வந்ததாகச் சொன்னதை நம்பிய நாடு பின்னே.


அந்த இடத்தில்தான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இவன் இங்கிருப்பது தெரிந்தால் அரசாங்கம் அகதி முகாமுக்கோ, மறுபடி ஆப்கானுக்கோ அனுப்பிவிடும். அங்கே சென்றால் சாவு நிச்சயம். இங்கே இவளுடன் ஒரு ஆப்கன் தீவிரவாதி இருப்பது வெளியே தெரிந்தால் பிரச்சனை. ஏன் எதற்கு என்ற கேள்வி எழும். தானாக தப்பி வரவில்லை, இவன் உதவியுன்தான் வந்தேன் என்று சொல்லவேண்டியது இருக்கும், சொன்ன பொய்யினால் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். ஒன்று, பிரபலமாக இருப்பதே நலம் என்று இவனை போலீசில் பிடித்துக் கொடுக்கலாம், அல்லது தன் உயிரைக் காப்பாற்றிய நாசிரை எங்காவது வாழ வழி செய்ய வேண்டும், அந்த முயற்சியில் உண்மையின் பிடியில் சிக்கவும் செய்யலாம். என்ன செய்வாள் அவள்?

தீவிரவாதிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள் எனச் சித்தரிக்கும் படங்களுக்கு மத்தியில் இது ஒரு வித்தியாசமான படம். தந்தை சாவையே காரணம் காட்டி தீவிரவாதியாக்க முயற்சி செய்தும், தீவிரவாதியாகப் பிடிக்காமல் ஊரைவிட்டே ஓடிப்போகும் ஒரு முஸ்லிம் சிறுவன். எங்கு சென்று வாழ்வது? நாட்டிற்குள் இருக்கவும் முடியாமல், வெளியே சென்று வாழவும் வழி இல்லாமல்... கொடுமை. அதிலும் வேறு வழியே இல்லை, நம்மால் ரிக்கிக்கு ரொம்ப கஷ்டம் என்று தற்கொலைக்கே செல்லும் நாசிர், தீவிரவாதப் பிடியின் இன்னொரு பக்கம்.

அருமையான படம். பெரிய பெரிய விளக்கங்கள் இல்லாமால் வேகமாக ஓடும் கதை. கதாப்பாத்திரங்கள் அறிமுகமே இல்லாமல் நமது மனதில் விளங்கி விடுவார்கள். கதையின் பெரிய பெரிய கட்டங்கள் எல்லாம் சின்னச் சின்ன காட்சிகளாக ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு காட்சி விட்டுவிட்டால் கூட நன்றாக இருந்திருக்காது. கதையின் மையத்தையே படம் சுற்றாமல் ஒரு இயல்பான வாழ்க்கையாக செல்வது, கடைசி கட்டத்தில் சுவாரஸ்யம் ஏற்றுகிறது. அதே போல, வாழ்வின் அழகான சின்னச் சின்ன விசயங்களும் அப்படியே கதையோடு கலந்து தூவப்பட்டிருக்கிறது. இப்படி பல காட்சிகளைச் சொல்லலாம்... வேண்டாம். பாருங்கள்.

இயக்குனர் கேத்தரின் வின்ஃபீல்ட்க்கு இது முதல் படம்! இதற்கு முன் சில டி.வி.தொடர்களை இயக்கியுள்ளார். பெண் இயக்குனரான இவரிடமிருந்து இன்னும் சில நல்ல படங்களை எதிர்பார்க்கலாம். இந்த எஸ்கேப், முஸ்லீமாகப் பிறந்து தீவிரவாதத்தின் பிடியிலிருந்து தப்பித்து, மனிதனாக வாழ நினைக்கும் ஒரு சிறுவனின் முயற்சி.

-அதி பிரதாபன்.

Share/Bookmark

15 ஊக்கங்கள்:

அகல்விளக்கு said...

அருமையான ஒரு அலசல். மிகத்தெளிவான விமர்சனம்.

கதைக்களமும் நன்றாக உள்ளது நண்பா....

பகிர்வுக்கு நன்றி...

(மேடி மேரேஜ் வருவீங்களா???)

Ashok D said...

அகல்விளக்கை வழிமொழிகிறேன்.. அதி பிரதாபன்

Kolipaiyan said...

Nice post and good review. Keep it up! Its inspiring to watch this movie.

jothi said...

படம் நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் என தெரியவில்லை. ஆனால் உங்கள் விமர்சனம் அருமை.

கலக்குங்க,..

Thamira said...

கதை நல்லாயிருக்கிறது. படம் பார்த்துவிட வேண்டியதுதான்.!

Cable சங்கர் said...

சரி ரைட்டு.. நான் வேற வேலைய பாக்க வேண்டியதுதான்..

ஷங்கி said...

என்ன அதி பிரதாபன் சாப்பாட்டுக் கடை விமர்சனம்தான் போட்டுக்கிட்டிருந்தீங்க. கேபிள் கூட ரொம்ப சுத்தறாதால சினிமா பக்கமும் திரும்பிட்டீங்களோ?
ஒலகப் படம்லாம் பாக்குறாருப்பா!

Beski said...

நன்றி அகல்விளக்கு,
கல்யாணத்திற்கு வர இயலவில்லை.
இன்னேரம் கிகி அங்கே இருப்பார் என நினைக்கிறேன்.

நன்றி அசோக்.

நன்றி கோலிப்பையன்.

நன்றி ஜோதி.

நன்றி ஆதி.

நன்றி கேபிள்ஜி,
நீங்க டைரக்டர் ஆய்டுங்க, அதுக்கப்புறம் இந்த வேலைய நான் பாத்துக்கறேன்.

நன்றி ஷங்கி,
திடீர்னு எல்லாம் திரும்பல. நமக்கும் பல படங்களை தேடிப் பிடித்துப் பார்க்கும் பழக்கம் சில வருடங்களாக இருக்கிறது. வீட்டில் நிறைய படங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால் எனக்கும் கேபிளுக்கும் பிணைப்பை ஏற்படுத்தியதே இந்தப் பட ஆர்வம்தான்.
பின்பு ஒரு நாள், விமர்சனம் எல்லோரும் எழுதுறாங்களே, நான் எழுதினா யாரு கண்டுக்கப் போறாங்கன்னு கேபிள் கிட்ட பேசிட்டு இருந்தேன். அதெல்லாம் தப்பு, ஆயிரம் பேரு எழுதினாலும் உன்னோட பார்வையை உன்னோட நடையில எழுதனும், அப்படி இப்படின்னு கேபிள்தான் ஊக்கம் கொடுத்தார். அதிலிருந்துதான் பார்க்கும் படங்களைப் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டேன்.
இந்த மாதிரி உசுப்பேத்தி விட்டு அவர் உருவாக்கிய ஆளுங்க பல பேர்.

ஷங்கி said...

வாழ்த்துகள் அதி பிரதாபன். விமர்சனம் நல்லாத்தான் எழுதியிருக்கீங்க!

CS. Mohan Kumar said...

ஓஹோ.. இந்த விமர்சனத்துக்கு பின்னாடி கேபிள் இருக்காரா? அப்பா அவரை தான் ஒரு வழி பண்ணனும்.

சும்மா கலாய்தேன்.. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. தொடர்ந்து எழுதவும். குறிப்பாய் நல்ல படங்களை அறிமுக படுத்துங்க.

butterfly Surya said...

நல்லாயிருக்கு பெஸ்கி.

நம்ம கடையை திறக்கறதா... வேண்டாமா...??ன்னு யோசிக்கிறேன்...

Nathanjagk said...

//அந்த இடத்தில்தான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்//
மாத்திப்​போடு மாப்ள..! நிமிந்து உக்காந்​தோம்!!
//கதாப்பாத்திரங்கள் அறிமுகமே இல்லாமல் நமது மனதில் விளங்கி விடுவார்கள்.//
அந்த மாதிரி படம் எடுக்கிறவன் ​பேருதான் டயிரடக்கடரு!!!

Nathanjagk said...

எனக்​கொரு உண்ம்ம்​மை ​தெரிஞ்சா​கோணும்.. யார் யா​ரெல்லாம் உங்ககூடப் படத்துக்கு வந்தாங்க.. ஒருத்தர் ​பேர் விடாம ​சொல்​லோணும்

கிரி said...

பெஸ்கி படம் நல்லா இருந்தது... நேற்று தான் பார்த்தேன், அதோட உங்க விமர்சனமும் மெச்சூர்டாக இருந்தது..வாழ்த்துக்கள்

Beski said...

நன்றி ஷங்கி.

நன்றி மோகன்குமார்,
உண்மையிலேயே நல்ல படங்களாக இருந்தால் இந்த மாதிரி தனி பதிவாகப் போட்டுவிடுகிறேன்.

நன்றி சூர்யா,
அட, இன்னுமா திறக்கல? அலுவலக வேலைகள் இன்னும் முடியலயா?

நன்றி ஜெ மாம்ஸ்,
நீங்களும் பாத்தீங்களா? நல்லது.
இப்படி பாத்தவங்க வந்து நல்லா எழுதியிருக்கன்னு சொல்லும்போதுதான்(அல்லது தப்பா எழுதியிருக்கன்னு சொல்லாதபோது)கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு.

அப்றம் நான் வீட்டுல தனியா வொக்காந்துதான் பாத்தேன். எதுக்கு இந்த திடீர் சந்தேகம்?

நன்றி கிரி,
//மெச்சூர்டாக இருந்தது//
இதையே திரும்பத் திரும்ப வாசித்துப் பார்க்கிறேன். முன்னாடி அ இல்லை. அப்பாடா.