நாணயம்
எந்த எதிர்பார்ப்புமில்லாது சென்ற படம். ஆரம்பம் முதலே திரையில் பயங்கர ரிச்னஸ். வந்த இடங்கள் எல்லாம் என்னைப் போன்ற சாமானியர்கள் பார்க்காத இடங்கள். ஆனால் கதையின் ஓட்டத்திற்குள் தானாக சென்றுவிட்டேன். ஒரு பெரிய வங்கியில் வேலை பார்க்கும் இளைஞன் பிரசன்னா. உலகத்திலேயே பாதுகாப்பான பெட்டக வசதியை வடிமைத்து அந்த வங்கியில் செயல்படுத்துகிறார். சொந்தமாகத் தொழில் தொடங்க இரண்டு கோடி வங்கி கடனுக்காக காத்திருக்கிறார், அதே வங்கியில். திடீரென முளைக்கும் காதல். காதலிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்தாகி இருக்கிறது. பழைய கணவனால் பிரச்சனை வந்து அடிதடி ஆகிறது. மறுநாள் அவன் பிரசன்னா காரில் பிணமாய். அந்த சண்டைக்காட்சிகளைப் போட்டோ எடுத்து மிரட்டுகிறது வில்லன் கும்பல். வில்லன் சிபிராஜ், அசத்தல். பிரசன்னா வடிவமைத்த அதே பாதுகாப்புப் பெட்டகத்தை திறந்து கொள்ளை அடிப்பதுதான் அவர்கள் கேட்பது. வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை. திட்டமும் ஆரம்பிக்கிறது. அதன்பிறகு அனைத்தும் வேகம் + சுவாரஸ்யம். அதே சமயம் பிரசன்னா இவர்களிடமிருந்து தப்பிக்கவும் திட்டம் போடுகிறார், ஆனால் எல்லாம் தவிடுபொடி. இறுதியில் மிகப்பெரிய எதிர்பாராத திருப்பங்கள். உண்மையிலேயே நகைச்சுவை இல்லாமல் கடைசிவரை உட்காரவைத்த படம். பாடல்கள்தான் வெறுப்பேற்றுகின்றன. முதல் இரண்டு பரவாயில்லை. காக்கா பாடலும் கொஞ்சம் ஈர்க்கிறது. தைரியமாகப் போய் பார்க்கலாம்.
சிபிராஜ் - அப்படியே பழைய வில்லன் சத்யராஜை ஞாபகப்படுத்துகிறார். அமைதியாக மிரட்டும் வில்லன், கொஞ்சம் நக்கலுடன். இவர் வில்லனாகவே நடிக்கலாம், நல்லாவே பொருந்துகிறது.
படம் ஆரம்பிக்கும்போதே ஒரு ஆங்கிலப்படம் ஞாபகத்திற்கு வந்தது. அதிலும் முதலில் ஒரு காமிராவில் படம்பிடிப்பது போலத்தான் தொடங்கும். நினைத்தது சரிதான். ஒரு ஆங்கிலப்படத்தின் கதைதான். ஆனால் யோகியைப் போல அப்படியே சுட்டுவிடவில்லை. அதிலிருக்கும் ஒரு சின்ன கருவை மட்டுமே இங்கே உபயோகித்திருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை அப்படியே வேறு. அதைச் சுற்றி வெவ்வேறு கதைகளைப் பிணைத்து அழகாகச் செதுக்கியிருக்கிறார்கள். தெரிந்த கதைதான் என்றாலும், என்னைக் கடைசிவரை சுவாரஸ்யமாய் உட்கார வைத்ததற்காக இயக்குனரைக் கட்டாயம் பாராட்டனும்.
மேலும், படத்தின் பெயர் முதலில் ஆங்கிலத்தில், பின்புதான் தமிழில். அதன்பிறகு எல்லாமே ஆங்கிலத்தில்தான். பல ஆங்கிலப் படக் காட்சிகளின் தாக்கம், அதிலும் அந்த ஆங்கிலப் படத்தை ஒரு காட்சியில் சிபிராஜ் டிவியில் பார்ப்பது போன்றே வரும்.
பாதி படத்திற்கு மேலே திடீரென்று கதவைத் திறந்து ஒருவர் வந்து, கதவருகே நின்று படத்தைப் பார்த்தார். திரையரங்கில் வேலை பார்ப்பவர் போலும். ஹீரோயின் நீச்சலுடையில் நீந்தி வெளியே வரும் காட்சி, அதிரடி பின்னணி இசை, நன்றாகத்தான் இருந்தது. ஒரு நிமிடம் கூட இருக்காது, முடிந்ததும் சென்றுவிட்டார். ஹ்ம்ம்ம்.
மேலும், உதயம் தியேட்டர் சமோசா அருமையாக இருக்குமென்று நண்பர் சொன்னார், ஆறு ரூபாய்தான், மிக மிக அருமை. உதயம் சென்றால் கண்டிப்பாக நாலு வாங்கி சாப்பிடுங்கள்.
வந்தவுடன் அந்த மூலக் கதையைத் தேடினேன், அது The Bank Job, இதைவிட சுவாரஸ்யமாக இருக்கும். மீண்டும் பார்க்கவேண்டும்போல இருந்தது. விக்கியில் தோண்டியதில் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
The Bank Job
இந்தப் படத்தின் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. பேக்கர் தெரு கொள்ளை - ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளைகளில் முக்கியமானது மற்றும் வில்லங்கமானதும் கூட. 1971 செப்டம்பர் 11, லண்டன் பேக்கர் தெருவிலுள்ள, லாய்டு வங்கி கிளையின் பாதுகாப்பு பெட்டகம் கொள்ளையடிக்கப்பட்டது. வங்கியிலிருந்து இரண்டாவது குடியிருப்பிலிருந்து தரைவழியே 50 அடி நீளத்திற்கு வங்கி வரை குழி தோண்டி கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
கொள்ளை நடந்த அன்று, கொள்ளையர்களில் ஒருவன் மொட்டை மாடியிலிருந்து உள்ளே இருப்பவர்களுக்கு ஒரு ரேடியோ சாதனம் மூலம் தகவல் தந்துகொண்டிருந்திருக்கிறான். அந்த ரேடியோ பேச்சுக்களை ஒருவர் வீட்டிலிருக்கும் ரேடியோ கருவி மூலம் கேட்டிருக்கிறார், அதனைப் பதிவும் செய்திருக்கிறார். உடனே காவல்துறைக்குத் தகவலும் தந்திருக்கிறார். பிரச்சனை என்னவெனில் அந்த ரேடியோ அலைபேசி கிடைத்த சுற்றுவட்டாரத்திற்குல் 700க்கும் மேற்பட்ட வங்கிகள் இருந்திருக்கின்றன. அனைத்து வங்கிகளையும் காவல்துறை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது. அந்த கொள்ளை நடந்த வங்கிக்கும் வந்திருக்கிறது. துரதிஷ்டம், சரியாக சோதிக்காமல் சென்றுவிட்டனர் காவலர்கள்.
நான்கு நாட்களுக்குப் பின் அரசாங்க பாதுகாப்பு கருதி இதைப் பற்றிய செய்திகள் எதுவும் போட வேண்டாமென பத்திரிக்கைகளை அரசாங்கம் கேட்டுக்கொண்டது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே தெரியாத மர்மான கொள்ளையாகவே இன்றும் இருக்கிறது இந்த பேக்கர் தெரு கொள்ளை. கொள்ளையர்களைப் பிடித்தாயிற்று, அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது என்று ஒரு செய்தி. கொள்ளையர்களைப் பிடிக்கவே இல்லை என்கிறது இன்னொன்று. அந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த பல வில்லங்கமான, அரசு உயரதிகாரிகள், அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களின் தகவல்கள், தடயங்கள் காணாமல் போய்விட்டதால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது இன்னொன்று. அரசாங்கமே முக்கிய தடயங்களை அழிக்க அந்தக் கொள்ளையை அரங்கேற்றம் செய்தது என்றும் ஒரு சேதி உண்டு. ஆனால் உண்மையான உண்மை இன்றுவரை உறுதிசெய்யப்படவில்லை.
ஆனால், இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் நம்மை திக் என அதிர வைக்கிறது. இந்த மாதிரி தைரியமாக நம்ம ஊரில் சொல்ல முடியுமா என யோசித்துப் பார்க்கக்கூட முடியவில்லை. சுவாரஸ்யமான திரைக்கதை, திடுக் திருப்பங்கள் என அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது. இதனுடன் நமது நாணயத்தை ஒப்பிட்டால், காப்பியடித்திருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது, எதையுமே சுடவில்லை என்றும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு திரைக்கதையில் மாற்றம் இருக்கிறது. ஆரம்பம்தான் அதே மாதிரி இருக்கிறதே தவிற அதன்பிறகு அனைத்துமே மாற்றப்பட்டிருக்கிறது. மேலே சொன்னதுபோல, ஏற்கனவே இந்த பேங்க் ஜாப் படம் பார்த்திருந்தாலும் நாணயம் பார்க்கும்போது சுவாரஸ்யத்திற்கு குறைவிருக்காது என்பது உறுதி.
---
சென்ற பதிவில் 2009 - IMDB - டாப் படங்களில் குறிப்பிடாத, ஆண்டு இறுதியில் வெளிவந்த அவதார் இப்போது (2009 படங்களில்) முதல் இடத்தில் இருக்கிறது. மொத்தத்தில் 37வது இடம். இரண்டு கோல்டன் க்ளோப் அவார்டுகளைப் பெற்றிருக்கிறது.
-அதி பிரதாபன்.
18 ஊக்கங்கள்:
Super Thalaiva
Sorry to type in English.
Thank you for your review. I'll watch it soon.
You may like "The Inside Man" also. Denzil Washinton & Clive Owen film. Very good film.
- Kiri
இனிமேதான் தல பாக்கணும். பாத்துட்டு சொல்றேன். விவரிப்புக்கு நன்றி.
தேங்கஸ்ங்கண்ணா.. ஆங்கில பட DVDகளை இந்தப்பக்கம் வர சொல்லோ தள்ளிவிட்டு செல்லவும் :)
உங்களோட விமர்சனத்த பார்கிறப்ப படத்தை கண்டிப்பா பார்க்கனும் போல இருக்கு. நன்றி
சமோசா ஆறு ரூபாயா?அநியாயமாக்கீதே..அந்த பேங்கலதான் கொள்ளையடிக்கணும் போல..விலைவாசியை பார்த்தால்..(மேஜிக் மூமெண்ட்ஸ் நு ஒரு வோட்கா..விலை 135 ரூபாதான்)
//மேஜிக் மூமெண்ட்ஸ் நு ஒரு வோட்கா..விலை 135 ரூபாதான்//
இளைஞர்களான நாங்களே 70+2 ரூ சரக்குக்கே அல்லாடவேண்டியது இருக்கு.. இந்த பெரிய ஆளுங்க 135 பத்தி பேசறாங்க... என்ன ஒரு ஏற்ற தாழ்வு இந்த சமூகத்தல
இதுவும் பின்நவினத்துவமா?
அந்த சமோசாவை ரெகமண்ட் செய்த நண்பர் யாரு..?
பெஸ்கி, வைகுண்ட ஏகாதசி போல ஒரே டிக்கெட்டில் இரண்டு படங்கள்..
அருமை..
சமோசா போச்சே...
வெகு நேர்த்தியான விமர்சனம் மாப்ள!
படம் பார்த்ததோட 'கடமை' முடிஞ்சிட்டதா நினைக்காம வீட்டுக்கு வந்தும் ஆங்கில பட மூலத்தை தேடினீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க நீங்க!
இது ஏதோவொரு படம் என்றிருந்தேன். பார்க்காமல் போய்விடவும் வாய்ப்புண்டு. டிவிக்காரர்களின் விளம்பர அலையில், பாராபட்சமான விமர்சனங்களில் இது போன்ற படங்கள் அமுங்கிப் போய்விடும் வாய்ப்பு நம்மூரில் மிக அதிகம்.
இந்த விமர்சனத்தில் உங்கள் விஸில் சப்தம் கேட்கிறது. ஊக்கமான விமர்சனத்து நன்றி!
விமர்சனத்தால் நல்விளைவும் நிகழும் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி.
"அந்த ஒரு நிமிடம்" வந்து பார்த்த ரசிக கண்மணி பற்றிய இடம் ரசித்தேன்..
//உதயம் சென்றால் கண்டிப்பாக நாலு வாங்கி சாப்பிடுங்கள்//
என்னது.. நாலா??
நன்றி முரளிகண்ணன்.
நன்றி அனானி,
இன்சைட் மேன், நல்ல படம்தான். சொன்னவுடன் ஞாபகத்திற்கு வருவது டைட்டில் போடும்போது வந்த ஏ.ஆர்.ரகுமானின் சைய்ய சைய்யா பாடல்தான்.
நன்றி புலவன் புலிகேசி.
நன்றி அசோக்(டா.இ.ஆ.ச),
//ஆங்கில பட DVDகளை இந்தப்பக்கம் வர சொல்லோ தள்ளிவிட்டு செல்லவும்//
பக்கத்துலதான் இருக்கீங்க... வீட்டுக்கு வந்து அல்ட்டுப் போங்கோ. :)
நன்றி ராமசாமிகண்ணன்,
கண்டிப்பாக பாருங்கள், இரண்டையும்.
நன்றி தண்டோரா,
என்ன சொல்றீங்கன்னு யோசிச்சுட்டு இருக்கேன்...
ஆறுக்கும் ரூபாய்க்கும்
இடையே இருக்கும்
இரண்டு எண்டர்கள்
ஏதோ சொலவ்து போலவே
இருக்கின்றன.
(கேபில்ஜி அருகில் இல்லை)
அந்த மேஜிக் மூமண்ட்ஸுடன் இந்த சமோசா சேர்ந்தால் உண்மையிலேயே மேஜிக் மூமண்ட்ஸ் ஆகும்.
காலங்காத்தாலயே இப்படி மூட் அவுட்/ஆன் ஆக்குறீங்களே...
அசோக்,
விளக்கமெல்லாம் யோசிச்சா மண்ட காயிது... அண்ணன்கிட்டயே நேரடியா கேட்டுக்கலாம்.
நன்றி கேபில்ஜி,
//அந்த சமோசாவை ரெகமண்ட் செய்த நண்பர் யாரு..?//
அத வெளிய சொல்லக்கூடாதுன்னு அவரே சொல்லியிருக்குறாரு... அதனால கப்சிப்.
நன்றி சூர்யா,
//சமோசா போச்சே...//
ஹி ஹி ஹி...
நன்றி ஜெகநாதன்,
ஒரு சில படங்கள்தான் இப்படி திரும்பவும் பார்க்கத் தோன்றும்.
உண்மைதான். ஒன்னுமில்லாத படத்துக்கே அவ்வளவு விளம்பரம் செய்யும்போது, இது போன்ற நல்ல படங்களுக்கு விளம்பரமே செய்யாமல் இருப்பது வருந்தத்தக்கது. என்னதான் திறமைமேலே நம்பிக்கை இருந்தாலும், கொஞ்சம் தில்லாலங்கடி வேலைகளும் செய்தால் இன்னும் நல்ல ரிசல்ட்டைப் பார்க்கலாம்.
நன்றி மோகன்குமார்,
அந்த ரசிகக் கண்மணி ரசித்த கண்மணியும் நன்றாகத்தான் இருந்தது.
//என்னது.. நாலா??//
உங்களுக்கு ஆறு.
:)
நாணயம் அலசல் சூப்பர்....
நான் சாந்தி தியேட்டரில் படம் பார்த்தபோது ரெண்டு ரூபாய் சமோசாவை பத்து ரூபாய்க்கு விற்று கொண்டு இருந்தனர்...
அதனால் வாங்க வில்லை
இன்ஸ்பையர் ஆகியிருக்கார் போல. தப்பில்ல. நான் இன்னும் பார்க்கல. பார்த்திடுறேன். நன்றி. :)
படம் பாக்காமலேயே வில்லன் யாருன்னு யூகிச்சுட்டேன் :)
நல்ல விமர்சனம்.
சமோசா, நீச்சலுடைக் காட்சியை பார்க்க வந்தவர் என்று வேறு சில செய்திகளும் சுவாரஸ்யம்! ;-)
Post a Comment