தாதர் எக்ஸ்பிரசும் குழம்(/ப்)பிய ரயில்வேயும்
மும்பையிலிருந்து நான் மட்டும் தனியே வந்துகொண்டிருந்தேன். தாதர்-சென்னை எக்ஸ்பிரஸ், கிட்டத்தட்ட 24 மணி நேரப் பயணம். சென்னையிலிருந்து அதிகபட்சம் 12 மணி நேரம் மட்டுமே பயணம் செய்து பழக்கப்பட்டிருந்த நமக்கு இந்தப் பயணம் புதுசு. அதுவும் தெற்கு நோக்கி மட்டுமே பயணம், இரவு தூங்கி எழுந்தால் ஊர் வந்திருக்கும். ஆனால் இங்கு மூன்று வேளைச் சாப்பாட்டைப் பார்க்கவேண்டியது இருக்கும். அதாவது பரவாயில்லை, மும்பை போகும்போது பகலில் நிம்மதியாகப் பயணம் செய்யவே முடியாது, அதுவும் ஆணாக இருந்தால் முதல் பயணம் விழி பிதுங்கி விடும்.
பிச்சைக்காரர்கள் வரிசையாக வந்துகொண்டே இருப்பார்கள், பிச்சையிடுவதே வெறுத்துவிடும். ஒரு சிலர் பரவாயில்லை, தரையைத் தூய்மை செய்துவிட்டு காசு கேட்பார்கள். அதிலும் கொடுமை ஒன்று இருக்கிறது, நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல, பிடுங்கும் கூட்டம், அரவாணிகள். அவர்கள் வந்தால் தனியே வந்திருக்கும் அல்லது இள வயது ஆண்கள் பாடு திண்டாட்டம்தான். ஐந்து ரூபாய் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். அதுவும் கேட்காமலேயே கொடுத்துவிட்டால் அதிகம் கேட்கும். சில நேரம் சில்லரை இல்லாமல் மாட்டிக்கொண்டால், அங்கே இங்கே கையை வைக்கும், பாவாடையைக் கூட தூக்கும் அபாயம் உண்டு. அடுத்த முறை செல்லும்போது ஒரு 100 ரூபாயை மாற்றி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்துவிட்டேன்.
மேலும், பொது வகுப்புப் பயணிகள், படுக்கை வகுப்புக்குள் வந்து கிடைக்கும் இடத்தில் அமர்ந்துகொள்வர். சிலர் சொல்வது கேட்டு சென்று விடுவர், சிலர் என்ன சொன்னாலும் அசைக்க முடியாது. அவரவர் இஷ்டம்தான். அதிலும் சிலர் குழந்தையுடனும், வயதானவர்களுடனும் வந்தால் நாமாகவே இடம் கொடுக்கும் சூழ்நிலையும் உருவாகும். என்ன ஒன்று, சட்டி பொட்டியைப் பார்த்துக்கொண்டே முழித்திருக்க வேண்டும். இப்படியான பகல் நேரப் பயணத்தில் சாப்பிடுவதற்கு விதவிதமான, என்னவென்றே தெரியாத ஐட்டங்கள் வந்துபோகும். சாப்பிடுவதா வேண்டாமா என்று யோசித்து யோசித்தே நேரம் போய்விடும்.
ஒரு வழியாக சென்று சேர்ந்தாயிற்று. நல்ல மழை. வெளியில் அதிகம் செல்ல முடியவில்லை. ஒரு வழியாக திரும்பும் நாள் வந்தது. வரும்போது பரவாயில்லை, தேர்டு ஏ.சி. யில் டிக்கட் போட்டிருந்தேன். ஏறியது இரவு நேரம். ஒரு குடும்பம் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக என்னையும், என்னருகில் இருந்த இன்னொரு இளைஞரையும் இன்னொரு இடத்திற்குப் பந்தாடியது. நானாவது பரவாயில்லை, அவர் ஏற்கனவே ஒரு இடத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்டவர். ஒரு வழியாக இரவு உணவு முடிந்து அவரவர் இடத்தில் முடங்கிப் படுத்தோம் அடுத்த நாள் நடக்கப்போகும் கூத்துக்கள் தெரியாமலேயே.
பொழுது புலர்ந்து எவ்வளவு நேரம் ஆனது என்பது சத்தத்திலிருந்தும், அங்கு குழுமியிருந்த மணத்திலிருந்தும் தெரிந்தது. காலை உணவு நேரம். நமக்கு எதுக்கு இதெல்லாம், நேராக மதிய உணவில் பார்த்துக்கொள்ளலாம் என அப்படியே இருந்துவிட்டேன். இரவு எட்டு மணிக்குப் போய்ச் சேர்ந்துவிடும். எங்கேயோ நின்றுகொண்டிருந்தது. சிறிது நேரம் தூங்கி எழுந்து பார்த்தேன் அப்போதும் நின்றுகொண்டே இருந்தது. எழுந்து விசாரித்ததும் முதல் இடி விழுந்தது.
இப்போது ரயில் நிற்கும் இடம் குண்டக்கல். அதற்கு மேல் செல்ல முடியாது. ஏனென்றால் சற்று தொலைவில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டுவிட்டது. சில செக்கச்செவேர் என்றிருக்கும் குடும்பங்கள் தங்களது பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தனர். அவர்களெல்லாம் திருப்பதி செல்லும் பக்தர்களாம். வடக்கிலிருந்து இவ்வளவு பேர் திருப்பதி நோக்கிச் செல்வதைப் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் ரேணிகுண்டாவில் இறங்கிச் செல்லவேண்டியவர்களாம். அருகில் இருந்த இளைஞர்தான் சொன்னார்.
அவர் ஒரு முஸ்லீம் இளைஞர். பெயர் XXXகலாம். பேரைக் கேட்பதற்கு முன்பே கணித்துவிடலாம், அந்த முகமும், நிறமும், மீசையில்லாத தாடியும் அப்படி. 24 வயது இருக்கும், ஒல்லியான உருவம். சிரித்த முகம், அனைவரிடமும் சீக்கிரமே பழகி விடுகிறார். துபாயில் வேலை, ஒரு வருடத்திற்குப் பின் வீட்டிற்குச் செல்கிறார். நிறைய பேசிக்கொண்டே வந்தார், நிறைய கதைகள் சொன்னார் அவர், அனைவரிடமும்.
மேலும் சொன்னார், இதற்கு மேல் போக முடியாதாம், ரயில் அப்படியே வந்த வழியே திரும்பிச் சென்று, பின்பு செகுந்திராபாத் சென்று ஒரு வழியாகச் சுற்றி சென்னை சென்று சேருமாம், மறுநாள். எனக்கு கிர்ர்ர்ர் என்று சுற்றியது. 24 மணி நேரத்தை நினைத்தாலே எரிச்சலாய் இருக்கும். இப்போது அதற்கும் மேலேயா? ஏசி வேறு நின்றுவிட்டது, எப்போது கிளம்பும் எனத் தெரியாமல் வெளியே நடந்துகொண்டும், பேசிக்கொண்டும், அவ்வப்போது ஆங்காங்கே அமர்ந்துகொண்டும் பொழுதைக் கழித்தோம். திருப்பதி செல்பவர்கள், தங்களது பொருட்களை பிலாட்பாரத்தில் வைத்து விட்டு, விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.
திடீரென திருப்பதி பார்ட்டிகள் மறுபடியும் பொருட்களை உள்ளே அள்ளிப் போட்டனர். விசாரித்தோம். ரயில் கிளம்பப் போகிறதாம், சுற்றிச் செல்லும் வழியில் குடூர் என்ற இடத்தில் இறக்கிவிடுவார்களாம், அங்கிருந்து அவர்கள் திருப்பதி செல்லலாமாம். நிறைய இடங்கள் காலியானதே, கொஞ்சம் ஃப்ரீயாகப் போகலாம் என்றிருந்த எனது எண்ணத்தில் மீண்டும் இடி. மீண்டும் கிளம்பியது, எப்போது சென்று சேருவோம் என்று தெரியாமலேயே.
வண்டி கிளம்பியதும் ஏ.சி. வேலை செய்தது. அதற்குள் நமது தமிழர்கள் ஆங்காங்கே அறிமுகம் ஆகியிருந்தார்கள். நானும் அந்த கலாமும் அனைவரிடமும் அறிமுகம் ஆகியிருந்தோம். ஆளாளுக்கு கதைகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்தோம். புத்தகங்கள், சார்ஜர்கள், நொருக்குத்தீணிகள், எண்ணங்கள் இடம் மாறிக்கொண்டிருந்தன. மதிய சாப்பாட்டை முடித்த பிறகு ஒரு தூக்கம். பின்பு செகுந்திராபாத் வந்து சேர்ந்தோம் இரவு நேரம்.
எதிர்ப் பக்கம் அப்பர் பெர்த்தில் இருந்த மாமிக்கு வயது 50 இருக்கும், அவரது கணவரோடு வந்திருந்தார். இவர் ஒரு மூலையில் அவர் ஒரு மூலையில், அவ்வப்போது வந்து பேசிச் செல்வார். அவர்களது உறவினர் செகுந்திராபாத்தில் இருந்திருக்கிறார், பார்க்க வந்தார் இட்லிகளுடன். அவர்களுக்கு அமர்ந்து பேச எங்களது இடங்களைக் கொடுத்துவிட்டு பிலாட்பாரத்தில் இறங்கி வேடிக்கை பார்த்தோம். பிரியானி வியாபாரம் அமோகமாக நடந்துகொண்டிருந்தது. எனக்குச் சாப்பிடவே பிடிக்கவில்லை. இந்நேரம் போய்ச் சேர்ந்து ஒரு பீரைப் போட்டுவிட்டு படுத்திருக்கலாமே என்ற நிராசைகள் அலைமோதின, இரவு எப்படி தூங்கப்போகிறேன் என்ற பயம் இருந்தது. கலாம் அவர் பங்குக்கு ஏதோ வாங்கி வைத்துக்கொண்டார். நான் பிரெட்டும் தண்ணீரும் வாங்கிக்கொண்டேன்.
சிறிது நேரத்தில் வந்த மாமி, எங்களை அழைத்து அவர்கள் வைத்திருந்த இட்லியைச் சாப்பிடச் சொன்னார். முதலில் மறுத்தேன், விடாப்பிடியாக இருந்தார். சரி என சாப்பிடலானோம். அவருக்கு உதவி செய்ததால் எங்களைப் பிடித்துவிட்ட்டதெனத் தோன்றியது. இட்லியும், மிளகாய்ப்பொடியும், ம்ம்ம்ம் அருமை. காய்ந்துபோய்த் தூங்க வேண்டிய நாங்கள் அருமையான இட்லியுடன் இரவை முடித்தோம். மீண்டும் பிலாட்பாரம். பல மணி நேரங்கள் கழித்து மீண்டும் பயணம் துவங்கியது. வாங்கி வைத்திருந்த இதழ்கள் அனைத்தையும் படித்தாயிற்று, மேலும் மூவர் உட்பட. மீண்டும் தூக்கம்.
இரண்டாவது சூரிய உதயம், அதே ரயிலில். ரயில் ஓடிக்கொண்டுதான் இருந்தது. சந்தோசம். ஏதோ ஒரு புதிய உற்சாகம் என்னுள் இருந்ததை உணர்ந்தேன், அதே உற்சாகம் மற்றவர்களிடமும் இருந்தது. காலை உணவு ஏதோ முடிந்தது. மீண்டும் அரட்டை. எப்படியும் மதியம் போய்ச் சேர்ந்துவிடுவோம் எனச் சொன்னார்கள். எதிரே இருந்த கல்லூரி மாணவன் ஒருவன் PSP ஒன்றை வைத்திருந்தான், கேட்டவர்களிடம் அதைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தான். அவன் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன். பூர்வீகம் தமிழ், வளர்ந்தது ஆந்திரா, இப்போது மும்பையிலிருக்கும் அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டு வந்துகொடிடுக்கிறான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்தும் பேசுகிறான். சில ஹிந்திக்காரர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு போன் செய்து லேட்டாகிறது என்பதை சொல்வதற்கும், பதில் பெறுவதற்கும் அவனையே நாடினர், ஏனெனில் எதிர்ப்பக்கம் தெலுங்கில் மட்டுமே பேசியதாம். அன்று காலை கல்லூரிக்குச் செல்லவேண்டிய அவன், இந்தத் தாமத்தால் செல்ல முடியாமல் பயணித்துக்கொண்டிருக்கிறான்.
அந்த உற்சாகத்தைக் குலைக்கும் வகையில் மீண்டும் ஒரு இடி. திடீரென்று ஆங்காங்கே பரபரப்பானார்கள், சன்னல்கள் வழியே வெளியே பார்த்து ஒருவருக்கொருவர் புலம்பினார்கள். திருப்பதி செல்பவர்களை இறக்கி விடுவதாகச் சொன்ன குடூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் தொடர்ந்து ரயில் சென்றுகொண்டிருந்ததே இதற்குக் காரணம். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தார்கள், நாங்களும்தான். சிறிது தூரம் சென்று திடீரென ரயில் நின்றுவிட்டது, யாரோ அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்திருக்கவேண்டும்.
நின்ற இடம் ரயில் நிலையத்திலிருந்து சற்று தொலைவில், சுமார் இரண்டு கிலோமீட்டர் இருக்கும். கற்களும் முட்செடிகளுமாய் இருந்தது. மழை பெய்து பூமியெல்லாம் ஈரம், ஆங்காங்கே தண்ணீர், மந்தமான வெளிச்சம், சிறிது தூரல். திருப்பதி செல்லும் குடும்பங்கள் அவரவர் மொழியில் புலம்பியவாறே பொருட்களுடன் இறங்கினர். பிலாட்பாரம் இல்லாத அந்த இடத்தில், வயதானவர்களும் பெண்களும் இறங்க மிகவும் சிறமப்பட்டனர். நாங்கள் சிலர் அவர்களுக்கு உதவி செய்தோம். சாரை சாரையாக, எல்லா பெட்டிகளில் இருந்தும் மக்கள் இறங்கி ஊருக்குள் நடக்கலாயினர். அந்தத் தூரலில் அழகான பெண்கள் சோகமாக நடந்து செல்வது மனதை ஏதோ செய்தது. நிறிது நேரம் அப்படியே நின்றபின் ரயில் நகரத்தொடங்கியது, பின்னோக்கி.
ரயில் அப்படியே பின்னோக்கிச் சென்று நிற்காமல் சென்ற குடூர் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. வழக்கம்போல் இறங்கி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். ரயில் நிலைய அதிகாரியுடன் ஒரு குடும்ப உறுப்பினர்கள் மிகவும் ஆக்ரோசமாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன். மொழி தெரிந்தவர்கள் அருகே சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
திடீரென சில கேமராக்கள் ஓடி வந்தன. அங்கே வாக்குவாதம் செய்தவர்களுடன் பேசி, பேட்டி எடுத்தனர். சிறிது நேரத்தில் அந்த வாக்குவாதம் செய்த கும்பல் பயங்கரமாக குதூகலித்துக் கொண்டாடியது. இது அடுத்த இடி. அவர்கள் கேட்டுக்கொண்டபடி மீண்டும் சுற்றி ரேனிகுண்டா செல்லுமாம் ரயில். அப்படிச் செல்வதானால் இன்னும் ஒரு நாள் ஆகலாம் சென்னை செல்ல. ஒரு பக்கம் கேமராக்கள் சூழ பரபரப்பான பேட்டிக்கள் ஓடிக்கொண்டிருந்தன, அவரவர் கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தனர். இன்னும் இரண்டு மணி நேர தூரத்தில் சென்னை, என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்போதுதான் அந்தக் கல்லூரி மாணவன் சொன்னான். சென்னைக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இந்த நிலையம் வழியே செல்லுமாம். இப்போது சென்னை செல்லும் மக்கள் அடித்துப் பிடித்து எங்களது பொருட்களை இறக்கினோம். ரயில் நிலைய அதிகாரியிடம் எங்களது டிக்கட்டிகளைக் கொடுத்து கையொப்பமும் சீலும் வாங்கிகொண்டோம். அந்த ரயிலுக்கு டிக்கட் எடுக்கவேண்டியதில்லை.
கொடுமையிலும் கொடுமையாகத் தெரிந்தது. குண்டக்கல்லில் இறங்கிய திருப்பதி செல்பவர்களை, குடூரில் இறக்கி விடுகிறேன் என ஏற்றி வந்து நிறுத்தாமல் சென்றது எப்படி என்றே தெரியவில்லை. அவர்களில் பலர் இறங்கி ஊருக்குள் சென்றுவிட்டனர். அங்கு வாதாடியது ஒரே ஒரு குடும்பம் மட்டுமே. அவர்களுக்காக ஒரு ரயிலையே திருப்பி விடுவதா? இவ்வளவுக்கும் திருப்பதி செல்லும் இன்னோரு ரயில் அடுத்த பிலாட்பாரத்திலேயே நின்றுகொண்டிருந்தது. இருந்த கொஞ்ச பேரை அந்த ரயிலில் ஏற்றி நேரே திருப்பதிக்கே அனுப்பியிருக்கலாம். சில பேருக்காக, சென்னை செல்லவேண்டிய பல பேர் இறங்கி நின்றோம். பெரும்பாலான வெற்றுப் பெட்டிகளுடன் அந்த ரயில் வந்த வழியிலேயே திரும்பிச் சென்றது. அதில் எத்தனை சென்னை செல்பவர்கள் தெரியாமல் சென்றுகொண்டிருந்தார்களோ, அந்த ரயில் எபோது சென்னை வந்து சேர்ந்ததோ தெரியவில்லை.
நாங்கள் ஒரு வழியாக சென்னை செல்லும் அந்த ரயிலைப் பிடித்து ஏறி அமர்ந்தோம். சிறிது நேரம் ஒரு வித அமைதி நிலவியது அனைவரிடமும். பின்பு வழக்கம்போல அரட்டைதான். சென்னை வந்ததும் அனைவர் முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சி இருக்கிறதே, பார்க்கப் பார்க்க நமது மகிழ்ச்சி கூடியது. சரியாக விலக்காத பல்லைக் காட்டிக்கொண்டு சந்தோசமாகக் கை குலுக்கிப் பிரிந்து சென்றோம். எனக்குள் நினைப்பெல்லாம், இன்னொரு முறை இவர்களில் எவரையாவது பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும் அந்த சந்திப்பு?
-அதி பிரதாபன்.
6 ஊக்கங்கள்:
என்னங்க இது கொடுமை:(
எப்படியோ பத்திரமாக சென்னை வந்தீங்களே!
படிக்கும்போதே படு டயர்டா இருக்கு.
ஒண்ணு கூட விடாமல் எழுதி இருப்பது பாராட்டுக்கூரியது.
//அதிலும் கொடுமை ஒன்று இருக்கிறது, நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல, பிடுங்கும் கூட்டம், அரவாணிகள். அவர்கள் வந்தால் தனியே வந்திருக்கும் அல்லது இள வயது ஆண்கள் பாடு திண்டாட்டம்தான். ஐந்து ரூபாய் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். அதுவும் கேட்காமலேயே கொடுத்துவிட்டால் அதிகம் கேட்கும். சில நேரம் சில்லரை இல்லாமல் மாட்டிக்கொண்டால், அங்கே இங்கே கையை வைக்கும், பாவாடையைக் கூட தூக்கும் அபாயம் உண்டு.//
எங்களுக்கும் இந்த அனுபவம் உண்டு.
கொடூரமான பயணம்ங்க.
சுவாரசியமான பயணம். :-))
ஒரு வழியா வந்து சேந்தேங்க.
நன்றி துளசி கோபால்.
//படிக்கும்போதே படு டயர்டா இருக்கு.//
எனக்கு எப்படி இருந்திருக்கும்?
நன்றி கே.ரவிஷங்கர்.
உங்களுக்கும் இந்த அனுபவங்கள் உண்டா.
நன்றி அன்பரசன்.
உங்களுக்கு இது சுவாரஸ்யமா இருக்கா? இருக்கட்டும்.
நன்றி குறும்பட இயக்குன்ர் ஆதி அவர்களே.
Post a Comment