ஒரு வழியா ஊருக்குப் போனேன்

வலையுலகில் மேய்ந்துகொண்டிருக்கும்போது சில நேரங்களில் ஓரங்களில் வரும் கிளப் மகிந்த்ரா அல்லது வேறு ஏதாவது டூர் விளம்பரத்தைப் பார்ப்பேன். நமக்கு மட்டும் ஏன் இது மாதிரி சுற்றுலா செல்ல வாய்ப்பு அமைவதில்லை என எண்ணியதில்லை. இப்போதுதான் புரிகிறது. வீட்டிலிருப்பவர்கள்தான் வெளியே செல்ல திட்டமிட வசதியாய் இருக்கும். வெளியே இருக்கும் நமக்கு விடுமுறை கிடைத்தால் வீட்டிற்குச் செல்லத்தான் திட்டமிடத்தோன்றுகிறது. வீட்டைவிட்டு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன, திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன, ஆனால் நான் மாறவேயில்லை. இப்போதும் விடுமுறை வந்தால் பெற்றோர் இருக்கும் இடத்திற்குத்தான் செல்லத்தோன்றுகிறது.

சென்னையில் ஐந்து வருடங்களுக்கு மேல் குப்பை கொட்டியாகிவிட்டது. இப்போது பெஙளூரிலிருந்து. சென்னையிலிருந்து ஊருக்குச் செல்வது எவ்வளவு சுலபமென்று இப்போதுதான் தெரிகிறது. இங்கு வந்தும் இரு முறை சென்று வந்துவிட்டேன். ஆனால், இந்த முறை பல சிரமங்கங்களுக்கிடையே செல்ல நேர்ந்தது.

முதலில் ரயில் டிக்கட். நான்கு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தாகிவிட்டது, அப்போது காத்திருப்பு 24ல் இருந்தது. எப்படியாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. சனிக்கிழமை கிளம்பவேண்டும், இரவு 9.30 க்கு ரயிலேறவேண்டும். வெள்ளிக்கிழமையே டாக்சி பதிவு செய்தாகிவிட்டது. சனிக்கிழமை மதியம் முதல் PNR நிலை பார்க்கிறேன். காத்திருப்பு 6ல் இருந்து நகரவேயில்லை. 

ரயில் கிளம்ப 4 மணி நேரத்திற்கு முன்பு இறுதிப் பட்டியல் தயாராகும், அப்போது கணிசமான முன்னேற்றம் இருக்கும், உறுதியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. எல்லாம் எடுத்து வைத்தாகிவிட்டது. இரவு உணவும் திட்டமிட்டு வேலை நடந்துகொண்டிருக்கிறது. நான் மீண்டும் மீண்டும் PNR பார்த்துக்கொண்டிருக்கிறேன். மாலை நான்கு மணிக்கு ரயில் மைசூரிலிருந்து கிளம்பிவிடும். 2 மணிக்கே இறுதிப்பட்டியல் வந்திருக்கவேண்டும். ஆனால் 5 மணிக்குக் கூட வரவில்லை. வழக்கமாக IRCTC டிக்கட் முன்பதிவு செய்யும்போதுதான் காலை வாரிவிடும். ஆனால் இன்று இந்த விசயத்தில் விளையாடுகிறது. 

மாலை 6 மணி, டாக்சி பதிவு செய்த இடத்திலிருந்து அழைப்பு, டாக்சி இல்லை, தங்களது பதிவை உறுதி செய்ய இயலாது, மன்னித்துவிடுங்கள் என்றார்கள். வழக்கமாகக் கூப்பிடும் ஆட்டோக்காரருக்கு முயற்சி செய்தேன், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். ஒரு வழியாக 7 மணிக்கு இறுதிப்பட்டியல் தயாராகியிருந்தது, இரண்டு டிக்கட்டுகளில் மனைவியினுடையது RAC, என்னுடையது WL1. என்ன செய்வதென்றே புரியவில்லை. எப்போதும் உறுதியான பயணச்சீட்டுடனேயே பயணம்செய்து பழக்கப்பட்ட எனக்கு இந்த நிலையில் ரயிலேறி முயற்சி செய்ய நம்பிக்கை இல்லை. 

இந்த முறை ஊருக்குச் செல்வதில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. வீட்டிலிருந்து ரயில் நிலையம் 1-2 மணி நேரம், ரயிலேறி 12-13 மணி நேரம், அப்புறம் இறங்கி 1 மணி நேரம் கார் பயணம் என்ற சோம்பேறித்தனம். தங்கமணிதான் மிகவும் ஆசைப்பட்டார், 2 வாரம் அவளுக்கு விடுமுறை அல்லவா. அதனால் கிளம்பியாயிற்று, நண்பர்களுக்காக மூவாயிரம் ரூபாய்க்கு உற்சாக பானம் வேறு வாங்கி வைத்தாயிற்று. ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன், அவ்வ்ளவு ஏன், என் பொண்ணு சொன்னாக்கூட கேக்க மாட்டேன். இன்னும் அவள் பேச ஆரம்பிக்கவில்லை, அது வேறு விசயம். அதனால் வேறு வழி செய்து கண்டிப்பாக போயே ஆகவேண்டுமென ஒரு முடிவு மனதிற்குள்.

Redbusல் தேடினேன். மதுரைக்கு ஒரு பேருந்தில் இடம் இருந்தது. வழக்கமாகச் செல்லும் பேருந்து இல்லை, இன்றுதான் ஏற்பாடு செய்திருப்பார்கள் போலிருந்தது, அதனால்தான் இருக்கையும் இருந்தது. இவ்வளவு பைகளையும் பெட்டிகளையும் வைத்துக்கொண்டு மதுரையிலிருந்து மறுபடி பேருந்து ஏறிச்செல்ல முடியாது, மதுரையிலிருந்து திருச்செந்தூர் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும். அப்பாவுக்குப் போன் செய்து, மதுரைக்குக் காரை எடுத்துக்கொண்டு வரமுடியுமா எனக் கேட்டேன். இந்தப் பேருந்து மதுரைக்கு 7 மணிக்குப் போகும், எனவே அவர் விடிகாலை 4 மணிக்கே கிளம்பவேண்டும். சரியென்றார். ஒரு வழியாக மதுரை பேரூந்தில் டிக்கட் எடுத்தேன்.

அடுத்து, வீட்டிலிருந்து மடிவாலா செல்லவேண்டும். சில டாக்சி சேவையில் 4 மணி நேரத்திற்கு முன்பாகப் பதிவு செய்யவேண்டும். அப்போது 8 மணி, 11 மணிக்குள் மடிவாலா போகவேண்டும். Justdialல் தேடினேன், ஒரு கால் டாக்சியில் அனுப்புவதாகச் சொன்னார்கள். சில நிமிடங்களில் ஓட்டுனரிடமிருந்து அழைப்பு வந்தது. அவருக்கு கன்னடம் தவிற எதுவும் தெரியவில்லை. இதற்கு முன்பு வரை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் சமாளித்து வந்தேன். அதுவும் முடியவில்லை என்றால் மனைவி ஹிந்தியில் பேசிவிடுவாள். இந்த மூன்றுக்குள் இதுவரைக்கும் காரியத்தை முடித்து வந்தோம், இன்று முடியவில்லை. அதுவும், எங்களது முகவரி எளிதாகக் கண்டுபிடித்து வரக்கூடிய முகவரி. ஆனால், அந்த ஓட்டுனரோ எங்கள் ஏரியா அருகிலேயே வரவில்லை. கொஞ்சம் தள்ளி ஓர் இடம் வந்து நின்றுகொண்டு வழி கேட்கிறார், கொஞ்சம் அருகே வந்து கேட்டால்கூட பரவாயில்லை.
\
கால் டாக்சி நிறுவனத்தை அழைத்து நிலைமையைச் சொன்னேன். ஒரு வழியாக சிறிது நேரம் கழித்து இன்னொரு வண்டியை அனுப்பி வைத்தார்கள். இவர் அழைக்கவே இல்லை, நேரடியாக வீட்டிற்கே வந்துவிட்டார், மணி 9.30. 10.30 மணிக்கு பேருந்து ஏறும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். நிம்மதியடைந்தேன், ஆனால் அப்போது தெரியாது இன்னும் கொஞ்சம் கவலைகள் மிச்சமிருக்கின்றன என்று.

பதினோரு மணிக்கு மேல் பேருந்து வந்தது. ஏற்கனவே பாதி நிறைதிருந்தது. எங்களுக்கென்றிருந்த இருக்கையில் இன்னொருவர் உட்கார்ந்திருந்தார். அவருக்கும் அதே இருக்கை எண்தான் ஒதுக்கப்பட்டிருந்தது. நடத்துனர் வந்து ஒரு வழியாகப் பேசி, மாற்றிவிட்டு அமரச்செய்தார். அடுத்த இடத்திலும் இதே பிரச்சனை. எவருக்கும் சரியாக இருக்கை எண் வழங்கப்படவில்லை. அனைவரையும் மாற்றி மாற்றி அமரவைத்தாகிவிட்டது. கடைசியாக ஓசூரில் ஒரு குடும்பம் ஏறியது.

கணவன், மனைவி மற்றும் இரு சிறு பெண் குழந்தைகள். ஆனால் இருக்கைகள் ஆங்காங்கே தனித்தனியாய் இருக்கின்றன. ஓட்டுனர் நமக்கு ஒன்றும் தெரியாது என ஒதுங்கிக்கொண்டார். சிறிது நேரம் கத்திப் பார்த்த கணவர் கொந்தளித்துவிட்டார். எப்படி வண்டியை எடுக்குறன்னு பாக்குறேன் என தடாலென ஒரு குண்டைப் போட்டுவிட்டு இறங்கினார். நமக்கோ மனதிற்குள் பக் பக். ஏற்கனவே தாமதம், இப்போது கிளம்பினால்கூட மதுரைக்கு 8க்குத்தான் செல்ல முடியும். ஒரு வழியாக, அந்த கிளை அலுவகத்தில் ஒருவர் வந்து தனித்தனியாக வந்திருப்பவர்களை மாற்றி உட்காரச்செய்து, சரிசெய்தார். 

பேருந்து கிளம்பியும் தடால் பார்ட்டி விட்டபாடில்லை. ”ரெண்டு இடத்துலயாவது உன்னை ஃபைன் கட்டவைக்கிறேனா இல்லையா பார்” என்று கனன்றுகொண்டிருந்தார். மனைவி ஏதோ சொன்னார், ”எப்படியும் காலைல ஃபங்சனுக்குப் போகப்போறதில்ல, எத்தன மணிக்கிப் போய்ச் சேந்தா என்ன?” என்றார். நமது நிலைமையைச் சொல்லி, ஒன்னும் பண்ணிடாதீங்க சார், ஊருக்குப் போகனும்னு சொல்லலாம்னு நினச்சேன். ஆனா, ”இப்படியே ஒருத்தரும் கேக்காம விட்டுத்தான் நீங்கள்லாம் இப்படி ஆடுறீங்க, ஒருத்தராவது கேக்கனும்”னு அப்பப்போ கத்தினார். உடனே நமக்குள்ள ரொம்ப நாளா தூங்கிட்டு இருந்த அந்த காமன் மேன் முழிச்சிக்கிட்டான். சரி, இவராவது கேக்கட்டுமேன்னு சும்மா இருந்துட்டேன். பின்னே, பல மடங்கு விலை, ஏசி பஸ்ல போத்துறதுக்கும் ஒன்னும் தரல, சீட்டு பிரச்சனை. இதே கல்யாணத்து முன்னன்னா நானும் இப்படித்தான் இருந்திருப்பேன். இவர் பரவாயில்ல, கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படி இருக்காரேன்னு கொஞ்சம் சந்தோசமாவும் இருந்தது.

யார் யாருக்கெல்லாமோ போன் போட்டுச் சொன்னார். வண்டி எண்ணெல்லாம் சொன்னார். எனக்கு முந்தின இருக்கைதான் அவருக்கு. ஆனா, ஓசூர் வருவதற்கு முன்பே ஒரு இடத்தில் நிறுத்து வசூல் செய்தாகிவிட்டது. 3500 ரூபாய் ஃபைன் என்று கேள்வி. பெர்மிட் இல்லாத வண்டியல்லவா? ஆனால் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை.


இன்னொரு கொடுமை, பெங்களூரிலிருந்து மதுரைக்கு திருச்சி வழியாக வந்தது. இடையே ஒரு இடத்தில் கூட நிறுத்தவில்லை. இதையாவது நாம் கேட்போமே என்று எண்ணுகையில் இன்னோரு காமன் மேன் முந்திக்கொண்டார். ”என்னய்யா இது, நீங்க மட்டும் நிறுத்தி டீ குடுச்சுக்கிறீங்க, பொம்பளங்கள்லாம் என்னய்யா பண்ணுவாங்க, அடுத்து ஒரு ஓட்டல்ல நிறுத்துங்க” என்றார். ”சார், இந்த ரூட்டு புதுசு சார், ஓட்டல் எங்க இருக்கும்னு தெரியாது, உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க”, அப்டின்னார் ஓட்டுநர். 

ஒரு வழியாக திருச்சி வந்தது, 6 மணிக்கு மேல். பேருந்து நிலையம் அருகே நிற்கும்போது ஓட்டுநரை ஒரு பயலும் கேட்கவில்லை. அவரவர் இஷ்டம்போல இறங்கி அவரவருக்குத் தேவையான இடத்தைத் தேடிச்சென்றனர். தங்கமணியை அருகே இருந்த குடும்பத்துடன் அனுப்பிவிட்டு நான் பாப்பாவைப் பார்த்துகொண்டேன். ஓட்டுநர் பாவம், ஒரே ஆள்தான், ஒரு நடத்துனர். வழக்கமாக அவர்கள்தான் அங்கே போகாதீங்க, இங்கே போகாதீங்கன்னு கத்திக்கொண்டு இருப்பார்கள். அன்று எல்லாமே தலைகீழ்.

ஒரு வழியாக மீண்டும் பேருந்து கிளம்பியது. காலை 9 மணிக்கு மதுரைக்குப் போய்ச்சேர்ந்தோம். அப்பா, காலை 7 மணியிலிருந்தே காத்திருந்தார், அவருக்குப் பேத்தியைப் பார்க்கும் ஆர்வம். மதுரையிலிருந்து கிளம்பினோம், பைபாஸ் தாண்டவே இல்லை, யாரோ விஐபி வருகிறார் என்று நிறித்திவிட்டார்கள். அதன்பின் கிளம்பி, ஒரு ஓட்டலில் பல் துலக்கி, சாப்பிட்டு ஊருக்குக் கிளம்பினோம். மதியம் 1 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். இவ்வளவு சிரமத்திற்கிடையே வந்தாலும், நம்ம ஊரு எஞ்சாய் நம்ம ஊரு எஞ்சாய்தான்.



கீழைஈரால் சீனிவாசன் கடை சேவு, சோத்து மிட்டாய்
கைசுத்து முறுக்கு

கரண்ட் இல்லாவிட்டாலும் ஓடக்கூடிய மின்விசிறி

உடன்குடியில் இருக்கும் குரும்பூர் கடை - கேக் பரோட்டா
என்ன இருந்தாலும் சுகமா ஊருக்குப் போய் எஞ்சாய் பண்றதுக்கும், கஷ்டப்பட்டு ஊருக்குப் போயி எஞ்சாய் பண்றதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது!

-பெஸ்கி.


Share/Bookmark

3 ஊக்கங்கள்:

tssarun said...

Hi Beschi,

After long time you posted in atho.com. Why you can direct this story as a movie...

அமுதா கிருஷ்ணா said...

பஸ்ஸில் தூரமாய் போவதென்றாலே டென்ஷன் தான்.

qfurn Ananth said...

சோத்து முட்டாய் என்றால் என்ன? எதில் செய்தது?